Mar 10, 2014

பொறியில் சிக்காத எலிகள்

வீட்டை ஒட்டி சாலையோரமாக ஒரு செடி பாத்தி வைத்திருக்கிறோம். பெரிய பாத்தி இல்லை. இருக்கும் இடத்தில் வரிசையாக நான்கைந்து செடிகளை வைக்கலாம். அவ்வளவுதான். குரோட்டன்ஸ் செடிகள் வைப்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் அப்பா ஊரிலிருந்து வந்த பிறகு குரோட்டன்ஸ் செடிகளை எல்லாம் அழித்துவிட்டு காய்கறிச் செடியாக வளர்த்துக் கொண்டிருக்கிறார். கத்தரிக்காய், தக்காளி என்று சில செடிகள் இருக்கின்றன. அந்தச் செடிகளுக்கு ஏகப்பட்ட பாங்கு செய்வார். பாங்கு என்றால் பராமரிப்பு/பாதுகாப்பு. அவருக்கு அதுதான் பொழுது போக்கு. பாத்தியைச் சுற்றி வேலி அமைப்பதிலிருந்து ஏரியிலிருந்து மண் எடுத்து வந்து நிரப்புவது, பால்காரர் வீட்டிலிருந்து ஆட்டு புலுக்கைளை அள்ளி வந்து கொட்டுவது, வெங்காயச் சருகு அது இது என்று போட்டு எப்படியோ செடிகளை படு செழிப்பாக்கிவிட்டார். கத்தரிக்காய் காய்த்ததிலிருந்து நாங்கள் ஒவ்வொருவரும் செடியை போய் பார்த்துவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பார்க்காதவர்களை முறைத்துக் கொண்டிருந்தார். காய்களை பறிக்கவும் இல்லை. விதைக்காக அந்தக் காய்களை விட்டு வைத்திருந்தார். பழுத்த பிறகு பறித்துக் கொள்ளலாம் என்பது அவரது திட்டம்.

ஆனால் சாலையில் வளர்க்கும் செடிகளை வைத்து இத்தனை கனவு காண முடியுமா? கனவு நொறுங்கிப் போனது. வேறு யாரும் பறிக்கவில்லை. எலிகள்தான் வேலையைக் காட்டிவிட்டன. அப்பா படு டென்ஷனாகிவிட்டார். எலிகள் எங்களிடம் சேட்டை செய்வது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக வீட்டில் நிறுத்தியிருந்த கார் ஏசிக்குள் புகுந்து குட்டி போட்டுவிட்டது. அந்தக் குஞ்சுகளின் கெட்ட நேரம் ஏசிக்குள்ளேயே மண்டையை போட்டுவிட்டன. அந்தக் கெட்ட நேரம் எனது பர்ஸுக்கும் இடம் மாறி மொத்தமாக ஒன்பதாயிரம் ரூபாயை மொட்டையடித்துவிட்டது. விட்டகுறை தொட்டகுறையாக அவ்வப்போது துர்நாற்றம் வேறு. அதன் பிறகு வெகுநாட்களுக்கு ப்ளேக் வந்துவிடுமா, அந்த நோய் வந்துவிடுமா என கிலி கிளம்பிக் கொண்டிருந்தது.

அதெல்லாம் தொலையட்டும். 

இந்த முறை அப்பாவுக்கு பயங்கர கோபம். உரக்கடையில் ஐடியா கேட்டிருக்கிறார். தக்காளியில் ஊசி வழியாக விஷத்தைச் செலுத்தி பாத்திகளுக்குள் வீசிவிட்டால் எலிகள் தின்று செத்துவிடும் என்று கடையில் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டதும்தான் தாமதம். அப்பா வெலவெலத்து போய்விட்டார். இதே கான்செப்டைப் பயன்படுத்தி தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் பெரும் ரணகளம் ஆகிவிட்டது. அதுவும் மிகச் சமீபத்தில்.

அவர் விவசாயி- சுமாரான விவசாயம். தக்காளி, வாழை என்று காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கால் ஏக்கரில் தக்காளி விளைவித்தால் எலியோ, கோழியோ வந்து மொத்தமாக முடித்துவிடுகின்றன. பக்கத்து வீட்டுக்காரர்களிடமெல்லாம் கோழியைப் பிடித்து கட்டி வைக்கச் சொல்லியும் பயனில்லை. பொத்தல் பொத்தலாக இரவோடு இரவாக முடித்துவிடுகின்றன. மழையும் இல்லை புயலும் இல்லை- இருக்கிற தண்ணீரில் காலம் ஓட்டலாம் என்றால் நிலைமை இப்படி ஆகிவிடுகிறது.  ‘இன்று ராத்திரி விஷம் வைக்கப் போகிறேன் கோழிகளையெல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு தக்காளியில் விஷம் ஏற்றியிருக்கிறார்.

உள்ளூர் உரக்கடையில்தான் இந்த ஐடியா கொடுத்திருக்கிறார்கள். கோழியாக இருந்தாலும் சரி; எலியாக இருந்தாலும் சரி- தக்காளியில் வாய் வைக்கும் என்பதால் அதுதான் best source of சங்கு என்று சொன்னார்களாம். இவரும் பண்ணையாள் ஒருவனும் ராத்திரியோடு ராத்திரியாக அரைகிலோ தக்காளியில் விஷம் ஏற்றி தோட்டம் முழுவதும் வீசிவிட்டார்கள். ‘சாவட்டும் சனியன்கள்’என்று வீட்டில் வந்து படுத்திருக்கிறார். விடிந்த போது பெரிய இடி வந்து இறங்கியிருக்கிறது. பண்ணையாள் ஓடி வந்து சொல்லியிருக்கிறான். வீசிய தக்காளியில் எலியும் சாகவில்லை; கோழியும் சாகவில்லை. மயில்கள் இறந்துவிட்டன. அதுவும் நான்கைந்து மயில்கள்.

சோலி சுத்தம். வனவிலங்கு தடுப்புச் சட்டம் பாய்ந்தால் கதை கந்தல். 

வெளியே வருவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். முன்பெல்லாம் வனப்பகுதியோரமாக இருக்கும் தோட்டங்காடுகளில்தான் இந்தப் பிரச்சினை இருக்கும். மின்வேலி அமைத்து வைப்பார்கள். காட்டுப்பன்றி அல்லது யானை வந்து விழுந்துவிடும். நம் ஆட்களுக்குத்தான் பொறாமை என்பது பிறவிக்குணம் அல்லவா? பக்கத்து தோட்டத்துக்காரன் சிக்கிக் கொண்டான் என்று தெரிந்தால் அடுத்த வினாடி வனத்துறைக்கு தகவல் போய்விடும். அவர்கள் வந்து ஆளை அமுக்குவார்கள். தோட்டங்காட்டை விற்று வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும். அத்தனை செலவு ஆகும். செலவு என்ன செலவு? லஞ்சம்தான்.

இப்பொழுதெல்லாம் வனப்பகுதிகள் என்றில்லை- ஊர்ப்பகுதிகளிலேயே இந்தச் சட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பாக மயில்கள் கண்ணில்படுவதே பெரிய ஆச்சரியம். இப்பொழுது அப்படியில்லை. தாறுமாறாக பெருகிவிட்டன. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை விட மயில்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. காகங்களை விட மயில்கள் கூட்டமாக மேய்கின்றன. கூட்டம் கூட்டமாக விளைநிலங்களில் இறங்குகின்றன. ஒரு காட்டை காலி செய்துவிட்டு அடுத்த காட்டுக்குள் நுழைகின்றன.

விவசாயி தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

தக்காளி விவசாயிகளின் நிலைமைதான் பரிதாபம். ஒரே தக்காளியை முழுமையாகத் தின்றால் கூட தொலையட்டும் என்று விட்டுவிடுவார்கள். ஒவ்வொரு தக்காளியிலும் ஒரேயொரு கொத்து போட்டுவிட்டு அடுத்த தக்காளிக்கு போய்விடுகின்றன. கொத்து வாங்கிய அந்தத் தக்காளி எந்தவிதத்திலும் பிரயோஜனமாகாது. விவசாயிகள் என்னதான் செய்வார்கள் ? கடலை, வாழை, கத்தரிக்காய் என்று எந்த விவசாயமாக இருந்தாலும் இப்படித்தான். மக்காச்சோளத்தைக் கூட விட்டு வைப்பதில்லை.

வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடினால் தவறு என்று சொல்லலாம். ஊருக்குள் வந்து குடியானவனின் பிழைப்பில் மண் அள்ளிப் போடும் இந்த ஜீவன்களை என்ன செய்வது? கொன்றுவிடலாம் என்றால் சூழலியல் ஆர்வலர்கள் சண்டைக்கு வருவார்கள். ஏற்கனவே வறட்சி தாண்டவமாடுகிறது. இந்த நிலைமையில் இந்தக் கொடுமைகள் வேறு. மயில்களின் பிரச்சினைகளைப் பற்றி விவசாயிகளிடம் கேட்டுப்பாருங்கள். கதை கதையாகச் சொல்கிறார்கள்.

அந்த மயில்கள் இறந்து போன தகவல் தெரிந்த போது அந்த விவசாயி நிலைமையை பார்த்திருக்க வேண்டும். அவர் மட்டும் இதய நோயாளியாக இருந்தால் அப்படியே நெஞ்சைப் பிடித்துவிட்டு அமர்ந்திருப்பார். அத்தனை பயம். அத்தனை பதற்றம். அவரும் மயில்களைக் குறிவைக்கவில்லை. ‘நான் கோழிகளுக்கும் எலிகளுக்கும்தான் விஷத்தை வைத்தேன்’ என்று சொன்னால் வனத்துறையினர் விட்டுவிடுவார்களா? 

செத்த மயில்களை மொத்தமாக மூட்டை கட்டி கண் காணாத இடத்திற்கு தூக்கிச் சென்று சருகுகளையும் விறகுகளையும் போட்டு எரித்துவிட்டு நேராக பழனி சென்று மொட்டையடித்துவிட்டு வந்திருக்கிறார். என்ன இருந்தாலும் முருகனின் வாகனம் அல்லவா? மன்னிப்புக் கோரல். மாட்டிவிட்டுவிட வேண்டாம் என்ற கெஞ்சுதலும் கூட. முருகன் காப்பாற்றிவிட்டார் போலிருக்கிறது. ஒரு மாதம் ஆகிவிட்டது. சத்தத்தை காணவில்லை. இனிமேல் பிரச்சினை இருக்காது என்று நம்பலாம்.

உரக்கடைக்காரன் அதே ஐடியாவைச் சொன்னதும் அப்பாவுக்கு இந்த மயில் விவகாரம் ஞாபகம் வந்துவிட்டது. பெங்களூரில் மயிலும் இல்லை; குயிலும் இல்லை என்றாலும் அவருக்கு பயம். விஷமும் வேண்டாம் தக்காளியும் வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடி வந்துவிட்டாராம். இப்பொழுது பொறியை வைத்து எலிக்கு காத்திருக்கிறார். பொறிகளில் மாட்டுமளவுக்கு எலிகள் முட்டாள்களா என்ன? வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் கத்தரிக்காயிலும் தக்காளியிலும் வாய் வைத்துவிட்டுப் போகின்றன. இனி அப்பா பாத்திக்கு அருகில் பாய் போட்டு படுத்துக் கொண்டால்தான் உண்டு. போகிற போக்கை பார்த்தால் அப்படித்தான் செய்வார் போலிருக்கிறது.

14 எதிர் சப்தங்கள்:

Gopinath Jambulingam said...

தவளை குறைந்துவிட்டதால் கொசு அதிகரித்துவிட்டது என்கிறார்கள். மயில் பெருகிவிட்டதால் விவசாயிகள் கதறுகிறார்கள். அவரவர் கஷ்டம் அவரவருக்கு. அரசுக்கு என்ன, (தேசியப் பறவைகளை கொல்லக் கூடாதென) சட்டம் போட்டதுடன் அதன் வேலை முடிந்துவிடுகிறது.

ஃபாத்திமா பாபு said...

சுவாரசியமான கதை

ஃபாத்திமா பாபு said...

interesting story and informative too on farmers' plight

sankagiri rajkumar said...

arumai

silviamary.blogspot.in said...

வெட்டி பிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருந்த அனுபவங்களையும் போட்டிக்கு வந்த சிறுகதைகள் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாமே மணிகண்டன்!

Aba said...

சார், இருக்கும் காடுகளையெல்லாம் பட்டா போட்டு விற்றுவிடுகிறோம். புற்றுநோயெனப் பெருகும் ஜனத்தொகைக்கு வடித்துக்கொட்ட காடுகளை வெட்டி களனியாக்குகிறோம், மல்டிப்ளெக்ஸ் கட்டுகிறோம். இப்படி காட்டுவிலங்குகளின் நிலங்களுக்குள் நாங்கள் படையெடுத்தால் அவை என்ன செய்யும்? வேறுவழியில்லாமல் நகருக்குள் வந்தால் அங்கும் விஷம் வைத்து கொல்வது மட்டுமில்லாமல் அவற்றை மட்டுமே குறைகூறிக் கொண்டிருக்கிறோம்.

MANO நாஞ்சில் மனோ said...

மயில்களினால் இப்படி பிரச்சினை இருக்குன்னு இப்போதானே தெரியுது !

radhakrishnan said...

அன்பின் மணி,
கமென்ட் பாக்ஸின் வருகை பெரும் உவகை அளிக்கிறது. உடனுக்குடன் உங்களைத் தொடர்பு கோள்ள முடிகிறதே.
பலவகைப்பட்ட பதிவுகள் நன்றாக உள்ள.ன தொடரவாழ்த்துக்கள்.உயரவும்தான்.

Shankari said...

Those who have kitchen garden has the same problem.
And, explained well about farmer's plight. Pity for them.

அரவிந்த் குமார்.பா said...

திரு. மணிகண்டன்,
உங்களின் எழுத்துகளில் எனக்குப் பெரிய பிரியம் என்னவென்றால்.. அனுபவங்களின் கோர்வைகளை சமயம் பார்த்து தகுந்த நேரத்தில் இயல்பாக வெளிப்படுத்துவீர்களே.. அதுவேதான்..

”தளிர் சுரேஷ்” said...

பாவம் விவசாயிகள்! நல்லதொரு பதிவு! நன்றி!

Unknown said...

Superb........

சேக்காளி said...

Unknown said...

enna koduma sir idhu :P
http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140320_pakistanpeacock.shtml