ஊர்ப்பக்கத்தில் ஒரு கிடாவிருந்துக்கு அழைப்பு வந்திருந்தது. எங்கள் ஊரில் இல்லை. பக்கத்து ஊர். மாரியம்மனுக்கு கிடா வெட்டியிருந்தார்கள். மாரி+அம்மன். மழைக்கான அம்மன். வழக்கமாக சித்திரை, வைகாசியில்தான் மழை வேண்டி திருவிழா நடக்கும். இந்த வருடம் நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம். மாசி மாதமே வெட்டிவிட்டார்கள். பொங்கல் வைத்து கிடாவெட்டி திருஷ்டி கழித்துவிட்டால் ஊரில் மழை பெய்யும் என்று நம்புகிறார்கள். வேறு எந்த நம்பிக்கையை வேண்டுமானாலும் பழித்துவிடலாம். ஆனால் விவசாயியின் எந்த நம்பிக்கையையும் பழிக்கக் கூடாது என நினைக்கிறேன். அவனைப் போன்ற பரிதாபமான ஜீவன் வேறு யாரும் இல்லை.
விருந்துக்குச் சென்றிருந்தோம்.
எங்கள் ஊரிலும் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. தாத்தா இருந்த வரையில் அவர்தான் மாவிளக்கு ஊர்வலத்தில் கிடா வெட்டுவார். அவர் ஒத்தைநாடி மனுஷன். அசோகமித்திரனின் உடல்வாகைப் பார்த்தால் எங்கள் தாத்தாவின் ஞாபகம்தான் வரும். கிடாவின் கழுத்தில் அவர் நடுங்கிக் கொண்டே அரிவாளை கடைசியாக இறக்கியது ஞாபகம் இருக்கிறது. அதன் பிறகு பங்காளிகளுக்கிடையே பிரச்சினை வந்துவிட்டது. அதனால் கோவில் திருவிழாவே நடக்காமல் இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த மழையில் கோவிலே இடிந்து விழ அப்புறமாக பணம் வசூலித்து கோவில் கட்டினார்கள்.
கட்டியதோடு நிறுத்தாமல் மீசையில்லாத சாமிகளையும் கோவிலுக்குள் உள்ளே வைத்துவிட்டார்கள். நவகிரகங்கள், விநாயகர் எல்லாம் கோவிலுக்குள் வந்த பிறகு கிடாவெட்டுவதற்கு தடா விதித்துவிட்டார்கள். அதனால் இப்பொழுதெல்லாம் மாவிளக்கு ஊர்வலத்தில் எங்கள் அப்பா பூசணிக்காயை வெட்டுகிறார். ஓங்கி வெட்டிய பிறகு அதன் இரண்டு பக்கமும் குங்குமத்தை பூசி எடுத்து வீசிவிடுவார்கள். அந்தக் குங்குமம்தான் ரத்தம். மாரியம்மனுக்கு ரத்தம் காட்டியாகிவிட்டது. மீசையில்லாத சாமிகளுக்கும் கோபம் வராமல் செய்தாகிவிட்டது. அத்தனை அறிவு எங்களுக்கு.
எங்கள் ஊரில் வாய்க்கால் உண்டு. பவானிசாகர் அணையில் தண்ணீர் இருக்கும் போதெல்லாம் விவசாயம் செழிப்பாக இருக்கும். கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பெரிய வறட்சி வந்ததில்லை. வருடம் முழுவதும் ஊர் பசுமையாக இருக்கும். இப்பொழுது அப்படியில்லை. காய்கிறது. பாதிக்கு மேலான நாட்கள் வறட்சிதான். எங்கள் ஊர் கூட பரவாயில்லை. ஊத்துக்குளி, குன்னத்தூர் நிலைமைதான் படு மோசம். அந்த ஊர்ப்பக்கத்தில் இருந்துதான் கிடா விருந்துக்கான அழைப்பு. மழை வேண்டியிருப்பார்கள் போலிருக்கிறது. இந்த வருடமும் மழை பொய்த்துவிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். எத்தனை வெயில் கருக்கினாலும் நின்று விளையாடும் பனைமரமே கருகுகிறது. தென்னைமரமெல்லாம் எம்மாத்திரம்? ஓலைகள் கருகி கீழே விழுந்துவிட மொட்டை மொட்டையாக நிற்கின்றன. பரிதாபமாக இருக்கிறது.
புற்கள் காய்ந்து சருகாகிவிட்டன. வேளாண்மை எவ்வளவுதான் பொய்த்தாலும் விவசாயிகளை கால்நடைகள் காப்பாற்றிவிடும். இந்த வறட்சி அதற்கும் பெரிய எமனாக வந்திருக்கிறது. மாடுகளுக்கு தீவனங்களும் இல்லை- குடிப்பதற்கு நீரும் இல்லை என்பதால் கால்நடைகளை கொள்வாரும் இல்லை, வைப்பாரும் இல்லை. சந்தைகளில் மாடுகளுக்கும் எருமைகளுக்கும் விலையே இல்லை.
ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகள் தங்களின் ஆழ்துளைக் குழாய்களில் ஊற்றும் சொற்ப தண்ணீரில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளின் நிலைமைதான் பரிதாபம். நிலங்களில் புல் பூண்டு கூட இல்லை. மதியவாக்கில் அந்தப் பகுதிகளில் நடப்பதற்கே தயக்கமாக இருக்கிறது. காய்ந்து கிடக்கும் நிலத்தை பார்க்கும் போது பதற்றமாக இருக்கிறது. விவசாயத்தை எங்கள் தேசத்தின் முதுகெலும்பு என்றெல்லாம் அளந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் விவசாயிகளை எல்லாவிதத்திலும் திணறடிக்கிறோம். என்ன செய்வான் அவன்?
இப்பொழுது தண்ணீர் ட்ராக்டர்களை ஊர்ப்பக்கங்களில் சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது. ஒரு ட்ராக்டர் தண்ணீரை நானூறு ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள். வெகுதூரத்திலிருந்து தண்ணீரைப் பிடித்து வந்து கொடுத்து விற்கிறார்கள். அதிகபட்சம் குடிப்பதற்கு வாங்கலாம். அவர்களது பொருளாதார நிலைமை அவ்வளவுதான். ஆனால் மரங்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் வாங்குமளவிற்கு எந்தக் குறுவிவசாயியும் காசுக்காரன் இல்லை.
கைவிட்டுவிட்டார்கள்.
பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்கள் எல்லாம் பொசுங்குகின்றன. மழை இல்லை; விவசாயம் இல்லை; வருமானம் இல்லை. இந்த மண்ணின் வெக்கையிலும் கோடையிலும் மூச்சடைத்துக் கிடக்கிறார்கள் குடியானவர்கள்.
இந்த மாதிரி சமயங்களில் ஒரு நல்ல சட்டை பேண்ட் அணிந்து செல்வதற்குக் கூட கூச்சமாக இருக்கிறது. மாதம் முழுவதும் ஏ.சி அறையில் குளிர்ந்து கொண்டு சம்பளம் வாங்கும் நாம் இவர்களின் முன்னால் ஜம்பத்தைக் காட்டினால் அதைவிட பாவச் செயல் வேறொன்றும் இல்லை. அந்த ஊருக்குள் நுழையும் போதே அத்தனை குரூரமாக இருந்தது. காகம் கரைவதைக் கூட கேட்க முடியாத அமைதி. உச்சி வெயிலில் சரளைக் கற்களில் பாதம் புதைய வீட்டை அடைந்தோம்.
சாவுக்களையோடு இருந்த அந்த ஊரின் ஒரு பெரிய வீட்டில் பந்தியில் இலை போட்டிருந்தார்கள். நாங்கள் செல்வதற்கு முன்பாகவே இரண்டு பந்தி முடிந்திருந்தது. நாங்கள் மூன்றாவது பந்தி. அமர்ந்துவிட்டோம். உணவே இறங்கவில்லை. அத்தனை துக்கமாக இருந்தது. ஒரு கிடா விருந்தின் எந்தக் கொண்டாட்டமும் இல்லாத விருந்து அது. அரைகுறையாக உண்டுவிட்டு எழுந்து கை கழுவச் சென்றோம். அந்தத் தொட்டியில் தண்ணீர் இல்லை. இந்த விருந்துக்காக டிராக்டரில்தான் வாங்கியிருக்கிறார்கள். பாதித்தண்ணீரை சமையலுக்கும் குடிப்பதற்கும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தண்ணீரை சிமெண்ட் தொட்டியில் கை கழுவுவதற்காக ஊற்றி வைத்திருந்தார்களாம். முதல் இரண்டு பந்தியிலே தண்ணீர் தீர்ந்துவிட்டது. மூன்றாவது பந்திக்காரர்களுக்கு கைகழுவ தண்ணீர் இல்லை. டிராக்டருக்கு சொல்லியிருந்தார்கள். அது வந்தபாட்டைக் காணவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. குடிக்க வைத்திருந்த தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கைகழுவிக் கொண்டோம். அடுத்த பந்தியில் உண்பதற்காக சிலர் காத்திருந்தார்கள். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வாங்கிவருவதற்காக ஒரு பையன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் வரும் வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும்.
கிளம்பும் முன் வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு வருவதற்காக உள்ளே நுழைந்த போது அந்த வீட்டிலிருந்த மூதாட்டி அழுது கொண்டிருந்தார். அடக்க முடியாத அழுகை அது. தனது வாழ்நாளின் மிகக் கொடுமையான வறட்சியை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். விருந்தினர்களுக்கு தண்ணீர் கூடத் தர முடியாத வறட்சி. அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. தனது முந்தானையை வாயில் பொத்திக் கொண்டு தள்ளாடியபடியே இன்னொரு அறைக்குள் சென்றுவிட்டார். எதுவும் பேசாமல் திரும்பினோம். யாரிடமும் பேசுவதற்கு சொற்கள் இல்லை.
திரும்பிய போதும் அதே அமைதி. காகம் குருவி இல்லாத மயான அமைதி. சரளைக் கற்களினூடாக பாதம் புதைந்தது. இப்பொழுது அந்த மூதாட்டியின் அழுகைச் சத்தம் சரளைக் கற்களில் இருந்து வந்து கொண்டிருந்தது.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment