Mar 6, 2014

சொக்கா சொக்கா

அலுவலகத்தை டொம்ளூருக்கு மாற்றிவிட்டார்கள். இது இன்னும் செளகரியம். வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் குறைவு. பெங்களூரில் ஆறு கிலோமீட்டர் குறைவு என்பது சாதாரணமில்லை. கிட்டத்தட்ட முப்பத்தைந்து நிமிடங்களை மிச்சம் பிடித்துவிடுகிறேன். எங்கள் அலுவலகம் சிறியது. ஆட்களும் குறைவு. அதனால் இடம் மாற்றுவது அவர்களுக்கு பெரிய காரியமில்லை. குறைந்த வாடகையில் ஒரு நல்ல கட்டிடம் கிடைத்தால் மாற்றிவிடுவார்கள். இந்த முறையும் அதற்குத்தான் மாற்றியிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

முன்பு ஒரு மாதம் டொம்ளூரில் இருந்திருக்கிறேன். அப்பொழுது எனக்கு பெரிய வேலை இல்லை. மனைவியும் உடனில்லாமல் தனியன். அதனால் மாலை நேரங்களில் இந்தப் பகுதியைச் சுற்றுவதுதான் வேலையாக இருந்தது. இங்குதான் பெங்களூரின் மிகப்பழமையான கோவில் இருப்பதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சொக்கநாதசாமி கோவில். பெயர்தான் சொக்கநாதன். ஆனால் இது பெருமாள் கோவில். சோழர்கள் யலகங்கா நாட்டை பிடித்த போது கட்டி வைத்ததாகச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் யலகங்கா ஒரு நாடு போலிருக்கிறது. இப்பொழுது சுருங்கி பெங்களூரின் ஒரு ஏரியா ஆகிவிட்டது.

நம் ஊரிலும் தேடினால் இப்படி ஏகப்பட்ட ஊர்களைப் பிடித்துவிட முடியும். அந்தக் காலத்தில் பெரிய ஊராகவும், நாடாகவும் இருந்த ஊர்கள் எல்லாம் சுருங்கி கிராமமாகவோ அல்லது இல்லாமலோ போயிருக்கின்றன. கொங்குநாட்டை இருபத்து நான்காக பிரித்திருந்தார்கள். அதில் ஒரு நாடு காஞ்சிக் கோவில் நாடு. இப்பொழுது காஞ்சிக்கோவில் சுருங்கிப் போன ஒரு மிகச் சிறிய கிராமம். 

அதை விடுங்கள்.

சோழர்கள் சிவனைக் கும்பிடுபவர்கள் அல்லவா? ஆனால் ஏன் பெருமாள் கோவிலைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று யாரோ கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது சிவன் கோவிலாகத்தான் இருந்ததாம். யலகங்கா நாட்டுக்காரர்கள் வைணவர்கள் என்பதால் பெருமாளை உள்ளே வைத்து கோவிலின் பெயரை அப்படியே வைத்துவிட்டார்களாம். இந்த ‘சாமி மாற்று’ வரலாறு உண்மையா என்று தெரியவில்லை. 

கோவில் இப்பொழுது தாறுமாறாக மாறிவிட்டது. நம் ஆட்கள்தான் சிதைத்துவிடுவார்கள் அல்லவா? அப்படித்தான். மிகப் பழைய கோவில் என்பதற்கான பல அடையாளங்களை அழித்துவிட்டார்கள். அவிநாசியில் அம்மன் கருவறையை விட்டு வெளியே வந்தவுடன் பார்த்தால் கல்வெட்டுக்கள் இருக்கும். ஆனால் குங்குமத்தால் ‘ஸ்வஸ்திக்’ குறிகளைப் போட்டு நம்மவர்கள் எழுத்துக்களை மறைத்து வைத்திருக்கிறார்கள். எங்கள் அமத்தா ஊரில் இருக்கும் நடுகல்லில் ஏதோ குறிப்பு இருக்கிறது. ஆனால் அதில் காலங்காலமாக சுண்ணாம்பு அடித்து அடித்து ஒரு எழுத்தைக் கூட தெரியாமல் மறைத்துவிட்டார்கள்.

வரலாறு எப்பவும் அப்படித்தான். தெரிந்தோ தெரியாமலோ கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துவிடும் அல்லது வலுக்கட்டாயமாக சிதைக்கப்பட்டுவிடும்.

தொம்மளூர்- கோவில் கல்வெட்டில் தொம்மளூர் என்றுதான் இருக்கிறது- சொக்கநாதசுவாமி கோவில் பத்தாம் நூற்றாண்டுக் கோவில். இதில் முக்கியமான விஷயம் கோவில் கல்வெட்டில் தமிழ்தான் கோலோச்சுகிறது. இதை வெளிப்படையாக அங்கு நின்று பேசினால் கன்னடர்கள் கடுப்பாகிவிடக் கூடும். கன்னடர்கள் ஆகிறார்களோ இல்லையோ ஆந்திரர்கள் ஆகிவிடுவார்கள். மொத்த தமிழர்களையும் குடிசைக்கு இடம்மாற்றிவிட்டு அவர்கள்தான் ஏக்கர் கணக்கில் பங்களா கட்டி குடியிருக்கிறார்கள்.

நம் ஆட்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. முதன்முதலாக அந்தக் கோவிலுக்குச் சென்றிருந்த போது ஒரு ஹிந்திக்காரனை வைத்து பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். காரணம் தெரியவில்லை. ஆனால் மொக்கு அடிகளாக விழுந்து கொண்டிருந்தன. பெங்களூரைப் பொறுத்தவரைக்கும் குடிசைவாசிகள் ஏதேனும் ஒரு தாதாவுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருப்பார்கள். அந்த தாதாக்கள்தான் குடிசைகளின் பாதுகாவலர்களாகவும் இருபபார்கள். கரண்ட் வசதி, ரேஷன் போன்றவற்றை கவுன்சிலர் அல்லது எம்.எல்.ஏக்களைப் பிடித்து குடிசைவாசிகளுக்கு வாங்கித் தந்துவிடுவார்கள். மொத்தமாக நூற்றுக்கணக்கான வாக்குகள் விழுந்துவிடும் என்பதால் அரசியல்வாதிகளுக்கும் இது பிடித்தமான ஏற்பாடு. அப்படியானதொரு தாதா அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார். ஆனால் அவர் எதுவுமே தெரியாதது போல புகைத்துக் கொண்டு ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். சில தமிழ் இளைஞர்கள்தான் அந்த ஹிந்திக்காரனை அடித்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய அடிப்பொடிகள்.

நல்ல வெளிச்சத்திலேயே இந்த மொத்து மொத்துகிறார்களே என்று பம்மியபடியே கோவிலுக்குள் நுழைந்துவிட்டேன். பெருமாளைக் கும்பிடுவதற்கு பதிலாக ஹிந்திக்காரனின் பினாத்தல்கள்தான் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தன. ஒருவன் அடி வாங்குவதைப் பார்க்கும் போது நமக்கு ஒரு பதற்றம் வந்துவிடும் அல்லவா? அந்தப் பதற்றம்தான். உதடுகள் வறண்டிருந்தன. கால்கள் சத்தமேயில்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தன. எவ்வளவுதான் இயல்பாக இருக்க முயன்ற போதும் முடியவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு பிறகு வெளியே போன போது குடிசைவாசிகளின் கூட்டம் குறைந்திருந்தது. ஆனால் ஹிந்திக்காரனை சாய்த்திருந்தார்கள். சாகவில்லை. ஆனால் சாவடி- சாவு அடி. 

தூக்கிக் கொண்டு போவதற்கு 108 வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். பிரச்சினையைப் பற்றி கேட்டதற்கு யாருமே பதில் சொல்லவில்லை. பெங்களூரில் பட்டப்பகலில் இப்படியெல்லாம் நடப்பது அதிசயமான நிகழ்வு என்று சொன்னார்கள். நான்கைந்து வருடங்கள்தான் ஆகியிருக்கும். இப்பொழுது அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. சாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது. நேற்றுக் கூட ஒரு பெண் கவுன்சிலரின் கணவரை கே.ஆர்.புரத்தில் உள்ள முடிதிருத்தும் கடையில் புகுந்து வெட்டியிருக்கிறார்கள். சொல்லக் கூடாதுதான். ஆனால் சொல்லிவிடலாம்- இவரும் ரெட்டிதான். ரியல் எஸ்டேட் செய்து கொண்டிருந்தாராம். பகலிலேயே வெட்டியிருக்கிறார்கள். இன்று அவரது மகளுக்கு எட்டாவது பிறந்தநாளாம். இந்நேரம் தந்தையின் உடல் மீது புரண்டு கதறிக் கொண்டிருப்பாள். இந்தச் செய்தி ஹிந்திக்காரனை ஞாபகப்படுத்திவிட்டது. 

இன்று சொக்கந்தாத சுவாமி கோவிலுக்கு இன்னொரு முறை செல்கிறேன்.

0 எதிர் சப்தங்கள்: