Mar 5, 2014

நெய்யறதை விட்டுவிட்டு நினைவெடுத்தவன்

பணம் சேர்ப்பதுதான் இருப்பதிலேயே சிரமமான காரியம் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் அது கூட பெரிய வேலையாகத் தெரியவில்லை. எது எளிய வேலை என்று நம்புகிறோமோ அதுதான் கண்களில் விரல் விட்டு ஆட்டுகிறது. அறுபதாயிரம் ரூபாய் கைவசம் இருக்கிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா பத்தாயிரம் ரூபாய்க்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கான புத்தகங்கள். ஒரு க்ரியா தமிழ் அகராதியும் நல்லதொரு ஆங்கில அகராதியும் வாங்கினால் எப்படியும் ஆயிரம் ரூபாய் ஆகிவிடும். இதில் ஒரு சிறந்த அட்லஸையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆக, மிச்சமிருக்கும் வெறும் ஒன்பதாயிரம் ரூபாய்களுக்கு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தால் போதும்.

அதுவே கஷ்டம்தான். 

குழந்தைகளுக்கான புத்தகம் என்று எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கணக்கு எடுத்தால் மொத்தமாக ஆயிரம் ரூபாயைக் கூட தாண்டவில்லை. இவ்வளவுதான் இந்தத் துறையில் எனது லட்சணம் . வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் வெட்கப்பட்டால் வேலைக்கு ஆகுமா? மார்ச் முப்பத்தியொன்றாம் தேதிக்குள் பள்ளிகளுக்கு புத்தகங்களைக் கொடுத்துவிடுவது நல்லது. இல்லையென்றால் விடுமுறை விட்டுவிடுவார்கள். அதனால் ஜூன் ஒன்றாம் தேதி வரைக்கும் காத்திருக்க வேண்டும்.

புத்தகங்கள் கொடுப்பதோடு மட்டும் இல்லாமல் புத்தகங்கள் வாசிப்பது பற்றிய சிறு நிகழ்ச்சியை அந்த மாணவர்களிடையே நடத்தும் எண்ணமும் இருக்கிறது. அது வெறும் உரையாக இல்லாமல் ஒரு சிறு செயல்பாடாகச் செய்யலாம். மாணவர்களில் ஒருவரை புத்தகத்தை உரக்க வாசிக்கச் செய்வது, புத்தகங்களில் இருந்து ஒரு கதையை வாசிக்கச் சொல்லி பிறகு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மற்ற மாணவர்களிடம் வாசித்த கதையை சொல்லச் சொல்வது, அடிப்படையான அறிவியல் தத்துவங்களை மாணவர்களையே விளக்கச் சொல்வது, அகராதியைப் பயன்படுத்தும் முறையைச் சொல்லித் தருவது போன்ற சில காரியங்களைச் சேர்த்து ஒரு நாள் அல்லது அரைநாள் வொர்க்‌ஷாப் மாதிரியாக திட்டமிடலாம் என்று யோசனை இருக்கிறது. அதற்கு அந்தந்தப் பள்ளிகளின் ஒத்துழைப்பு தேவைப்படும். விருப்பமிருக்கும் சில நண்பர்களையும் சேர்த்து சனி,ஞாயிறு மாதிரியான நாட்களில் இதைச் செய்யலாம். 

அறக்கட்டளையாக பதிவு செய்து இது போன்ற காரியங்களைச் செய்யலாம்தான். அப்படித்தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ஆனால் எந்த ஒரு காரியத்தையும் நிறுவனமயமாக்கும்(Institutionalize) போது அதற்கான வழிமுறைகள், எதிர்கொள்ள வேண்டிய விமர்சனங்கள், அதற்கான அரசியல் என்று நம்மைச் சிக்க வைத்துக் கொள்ள வேண்டும். எதற்கு இந்த வம்புகள்? எந்த நிர்பந்தமும் இல்லாமல் நம்மால் முடிந்ததை இயலும் சமயங்களில் செய்ய வேண்டும். அவ்வளவுதான். கமிட்மெண்ட் இல்லாமல் விரும்பும் போது விரும்பிய காரியத்தைச் செய்து கொண்டிருப்பதில் ஒருவிதமான சுதந்திரம் இருக்கிறது. அதனால் இப்படியே இருந்துவிடலாம்.

பள்ளிகளில் நடத்தும் இத்தகையை வொர்க்‌ஷாப்புகளுக்கு பெரிய செலவு எதுவும் ஆகாது. சனிக்கிழமை காலையில் பள்ளிக்குச் சென்று மாலை வரை மாணவர்களிடம் இருந்து இதைச் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பிவிடலாம். உடன் வரும் ஒன்றிரண்டு பேருக்கு மதிய உணவு மட்டும்தான் செலவு. அதனால் பெரிய பிரச்சினை இல்லை. அடுத்த வருடத்திலிருந்து இதை ஒன்றிரண்டு பள்ளிகளிலாவது முயன்று பார்க்க வேண்டும். புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை பார்த்துவிட்டு ‘வெறும் புத்தகங்களை மட்டும் கொடுத்துவிட்டு வந்தால் அவர்கள் வாசிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’ என்று சொன்னவருக்கு பதிலாக இந்த ஐடியா முளைவிட்டிருக்கிறது.

இதையெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருப்பது சுயவிளம்பரம் ஆகிவிடாதா என்று தோன்றுகிறது. ஆமாம், அப்படியான பிம்பம் உருவாகிவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்தச் செயல்களை தனியாளாக செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. பணமும் தேவை, உழைப்பும் தேவை. இப்படி நாம் செய்ய விரும்புவதை எழுதும் போது நண்பர்கள் உதவுகிறார்கள். அதற்காகத்தான் எழுதிவிடுகிறேன். மற்றபடி, இத்தகைய காரியங்களில் எனக்கு தனிப்பட்ட எந்த க்ரெடிட்டும் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன். இந்தச் சமூகம் நமக்குத் தந்திருப்பதில் ஒரு பங்கை மற்றவர்களின் உதவியால் திருப்பித் தரும் சிறு முயற்சி. அவ்வளவுதான்.

அதே சமயம், பிறரிடம் உதவி பெறும் போது அடுத்த திட்டம் என்ன? இப்போது திட்டமும் செயல்பாடும் எந்த நிலையில் இருக்கிறது என்பதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லிவிடுவதுதான் நல்லது. அதனால்தான் இத்தைய பதிவுகள் அவ்வப்போது எழுத நேர்கிறது. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

‘நெய்யறத விட்டுட்டு நினைவெடுத்தான் கைக்கோளன்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அப்படித்தான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு வேறு எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  புத்தகங்களின் பட்டியலைத் தயாரிப்பதில் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் வாசித்த குழந்தைகளுக்கான நல்ல புத்தகங்களின் பெயரைத் தந்து உதவ வேண்டும். புத்தகம் மற்றும் பதிப்பகத்தின் பெயரை அனுப்பி வைத்தால் பேருதவியாக இருக்கும். குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்கள், புனைவுகள், எளிமையான ஆங்கில புத்தகங்கள், கணித புத்தகங்கள் என்று பரவலான விஷயங்கள் இருப்பது நல்லது. ஆளாளுக்கு ஒன்றிரண்டு புத்தகங்களின் பெயரைத் தந்தால் கூட போதும். பத்து இருபது பேர் பரிந்துரைக்கும் புத்தகங்களில் இருந்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கான பட்டியலைத் தயாரித்துவிட முடியும்.

நம்பிக்கைதானே நமது ஒவ்வொரு முயற்சிக்குமான ஊன்றுகோல்?

vaamanikandan@gmail.com

0 எதிர் சப்தங்கள்: