Mar 7, 2014

யார் காரணம்?

"பனைமரமே கருகுது தென்னைமரம் எப்படித் தாங்கும்?" பதிவை வாசித்தேன். இந்த விவசாயி-மழை-பஞ்சம்-வாழ்க்கை பிரச்சினை பற்றி என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தற்போது நான் சென்னையில் பணியாற்றினாலும் அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை, அண்ணன், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பொறியியல் கல்வியினால் விவசாயத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். என் மனைவி மகப்பேற்றுக்காக  அவளுடைய சொந்த ஊரான சூலூரில் இருப்பதால் நான் ஒவ்வொரு வாரக்கடைசியிலும் சென்னையில் இருந்து சூலூருக்கும் என் சொந்த ஊரான செஞ்சேரிமலை என்னும் கிராமத்துக்கும் சென்று வந்து கொண்டு இருக்கிறேன். ஊருக்கு செல்லும் போதெல்லாம் என்னால் முடிந்த விவசாய வேலைகளை செய்வேன். அதில் எனக்கு நல்ல ஆர்வமுண்டு. 

எங்கள் கொங்கு மண்டலத்தை வாட்டி வரும் முக்கியமான பிரச்னை மழையின்மை. சென்ற 10 வருடங்களாக நல்ல மழையில்லை. இதுவரைக்கும் இருப்பதை வைத்து எப்படியோ ஒட்டி விட்டோம். என் அப்பா இந்த விஜய வருடத்தில் நல்ல மழை பெய்யும் என்று பஞ்சாங்க பலனைப் பார்த்து விட்டு சொன்னார். எனக்கும் இந்த அலுவலக வாழ்க்கை சலிப்பை உண்டாக்கியிருந்தது. வேறு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் சென்ற ஆண்டின் பாதியில் வந்தது. அதையும் இதையும் செய்து மாட்டிக்கொள்ளாமல் முதல் இரண்டு வருடம் விவசாயம் செய்து வரவு செலவு அனுபவத்தையும் கொஞ்சம் ஊர் பழக்கவழக்கத்தையும் தெரிந்து கொண்டு பின்னர் ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்.

"அதுதான் மழை கொட்டும் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறார்களே. விவசாயம் செய்து பொருளீட்டி தொழில் தொடங்கி விக்கிரமன் படம் போல ஒரே பாட்டில் பெரும் வியாபார காந்தம் ஆகிவிடலாம்" என்று கணக்கு போட்டேன். முதல் வேலையாக மேலாளர் வேலையை விட்டுவிட்டு ஊருக்கே போய்விட்டேன்.  நான் போனது செப்டம்பரில். அக்டோபர் பிறந்தது முதல் வானத்தை பார்க்க ஆரம்பித்தேன். வானம் வைத்தது ஆப்பு. மழையைக் காணோம்.

ஊரில் பார்த்தவர்களெல்லாம் " ஏன்டா இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்த?" என்று கேட்க ஆரம்பித்தார்கள். எனக்கும் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு விட்டோமோ என்று பயமாகி விட்டது. அதிர்ஷ்ட வசமாக நான் முன்பு ஒரு முறை வேலை செய்த நிறுவனத்தில் இருந்து " வருகிறாயா?" என்று கேட்டார்கள். ஓடோடி வந்து விட்டேன். இது என் கதை.

நான் எப்படியோ தப்பி விட்டேன். என் குடும்பத்தையும் காப்பாற்றி விடுவேன். ஆனால் விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் எத்தனையோ குடும்பங்கள் என்ன செய்யும் என்று எண்ணும் போது பயமாக இருக்கிறது. 10 ஏக்கர் தென்னந்தோப்பு இருந்தால் வருடத்தில் 5 லட்சம் லாபம் பார்க்கலாம். ஆனால் அந்த 10 ஏக்கர் தோப்பை காப்பற்ற 10 லட்சம் ரூபாய்க்கு போர் போட்டும் 3 லட்ச ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி ஊற்றிய பிறகும் கூட காப்பாற்ற முடியாமல் மரத்தை காய விட்ட விவசாயிகளை கேள்விப் படுகிறேன்.

எங்கள் பகுதியில் பரம்பிக்குளம் கால்வாய் வருகிறது. ஆயக்கட்டுத் தீர்வை செலுத்தி அந்தக் காலத்தில் உரிமை பெற்றவர்களுக்கு அந்த தண்ணீர் பாயும். பலர் ஆனால் அந்த தண்ணீர் எட்டாத எங்களைப் போன்றவர்கள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்து தான் எங்கள் மரங்களை காப்பாற்றி வருகிறோம். இதுவும் கூட இன்னும் ஒரு மாத காலம் தான். அணையில் தண்ணீர் தீர்ந்து விட்டது என்கிறார்கள். அதற்கு பிறகு என்ன என்பது அந்த வருண பகவானுக்கே வெளிச்சம். மழை வந்தால் மட்டுமே தப்புவோம். இல்லை என்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை குளிர்ச்சியாகக் காட்சியளித்த தென்னை மரங்கள் வைகாசி மாதத்தில் மொட்டையாகிவிடும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை.

இந்த நிலைக்கு யாரைச் சொல்லி நோவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு வகையில் விவசாயிகளும், பல வகைகளில் அரசாங்கமுமே இதற்கு காரணம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவுக்கு தென்னை மரங்கள் எங்கள் பகுதியில் இருந்ததில்லை. அப்போது விவசாயம் என்றால் காய்கறி, மஞ்சள், பயறு வகைகள் மற்றும் நெல். அதாவது தண்ணீர் நிறைய இருந்தால் நெல்லும் மஞ்சளும். தண்ணீர் இல்லை என்றால் பயறும் காய்கறியும். தண்ணீர் செலவு என்பது குறைவாக இருந்தது. ஏனென்றால் விவசாயம் செய்திருந்தால் மட்டுமே தண்ணீர் தேவை. அறுவடை முடிந்து அடுத்து பயிர் செய்யும் வரை தண்ணீர் தேவை இல்லை. போர்வேல் என்பதே கிடையாது. வெறும் கிணறு மட்டுமே. நாங்களெல்லாம் கிணற்று மேட்டிலிருந்து கிணற்றுக்குள் குதித்து நீச்சல் பழகினோம்.

இப்படிப்பட்ட விவசாயத்திற்கு தண்ணீர் குறைவு. ஆனால் ஆள் செலவு அதிகம். அப்போது வேலை செய்ய ஆட்கள் இருந்தார்கள். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல கூலி ஆட்கள் குறைய ஆரம்பித்தார்கள். நூல் மில்களும் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளும் வேன் அனுப்பி கூலித்தொழிலாளர்களைக் கவர்ந்து கொண்டார்கள். கூலித்தொழிலாளர்களும் " வேன் வருது. நிழல்ல வேலை. எவன் போய் இந்த வெயில்ல காட்ல வேலை செய்யறது?" என்று ஆர்வமாக ஆலைகள் பக்கம் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

பார்த்தார்கள் விவசாயிகள். எந்த விவசாயத்திற்கு ஆள் குறைவாக பிடிக்கும் என்று. அகப்பட்டது தென்னை மரம். பிடித்து ஊன்றி தள்ளி விட்டார்கள். கொஞ்சம் நஞ்சமில்லை. வெறும் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கூட அதையும் தோப்பாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்த்தார்கள். கொஞ்சம் கூட வெறும் நிலம் வைத்திருக்காம இருப்பதையெல்லாம் தோப்பாக மாற்றி வைத்திருப்பவர்கள் மட்டுமே எங்கள் பகுதியில் அநேகம் பேர்.

உங்களுக்கே தெரிந்திருக்கும். தென்னைக்கு எவ்வளவு நீர் தேவை என்று. அதுவும் கொஞ்சம் நாட்கள் கூட இடைவெளி விட முடியாது. மழை பெய்தால் தவிர தண்ணீரை ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த நிலைமையில் மழை குறைய ஆரம்பித்தது. போர் வண்டிகள் தென்பட ஆரம்பித்தன. கடந்த பத்து வருடங்களில் நிலத்தை சல்லடையாக்கி விட்டார்கள். மரத்துக்கு ஒரு போர் போடுவது மட்டும் தான் பாக்கி. அந்த அளவுக்கு போர்வெல்கள் எங்கள் பகுதியில் உண்டு. 60 அடி கிணற்றில் தண்ணீர் ஊறியது போய் 500 அடி தாண்டி 800 அடியைத் தொட்டு இப்போது 1300 அடி போடுகிறார்கள். போர்வெல் போட 1.5 லட்சம். அதில் தண்ணீர் எடுக்க மேலும் 1.5 லட்சம் செலவாகும். போகிற வேகத்தில் இன்னும் சில ஆண்டுகளில் போர்வெல்லில் பெட்ரோலோ எரிமலை குழம்போ வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பிறகு வந்தது மின்சாரப் பஞ்சம். நம் அரசாங்கம் ஒரு மின் திட்டத்தை கூட செயல்படுத்தாமல் ஹூண்டாய், போர்டு, நிஸ்ஸான் என்று பல நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை அளிக்கிறார்கள். ஆனால் மின்சாரத்தை எங்கிருந்து கொடுப்பது? இருக்கவே இருக்கிறார்கள் விவசாயிகள் என்னும் இளிச்சவாயர்கள். இங்கே பிடுங்கி அங்கே கொடுத்து விட்டார்கள். நான் சிறுவனாக இருந்த போது 14 மணி நேரம் மும்முனை மின்சாரமும் 10 மணி நேரம் இருமுனை மின்சாரமும் வரும். பல பகுதிகளில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் இருக்கும். இப்போது கோடைகாலங்களில் ஒரு நாளில் 3 மணி நேரம் மும்முனை மின்சாரமும், 10 மணி நேரம் இருமுனை மின்சாரமும் வருகின்றன. மற்ற நேரங்களில் மின்கம்பிகள் மட்டுமே  இருக்கும். மின்சாரம் இருக்காது. ஆக கோடைகாலங்களில் உங்கள் போர்வெல்லில் தண்ணீர் இருந்தாலுமே ஓட்ட முடியாது.

இந்த கோடை காலத்தை எப்படி ஓட்டப் போகிறோம் என்பதை நினைத்தாலே நெஞ்சம் கலங்குகிறது. எங்கள் தோப்புகளை வெறும் மொட்டை மரங்களாக கற்பனை செய்து பார்த்தாலே கண்ணீர் வருகிறது. அரசாங்கமோ இந்த பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி விட்டது. நீங்களே சொல்லுங்கள். இந்த பிரச்சினைக்கு யார் காரணம். வருணனா?? விவசாயிகளா? இல்லை அரசாங்கமா??

சு.கெளரிசங்கர்.
sangar.eee@gmail.com
                                                           ***

கெளரிசங்கரின் இந்தக் கடிதம் முக்கியமானதாகப்படுகிறது. கேரளாவை ஒட்டிய கோவை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளையும் அதன் அடிப்படையான காரணங்களையும் அலசுகிறார். சுவாரசியமாகவும் இருக்கிறது. அவரிடம் அனுமதி கேட்காமலே பிரசுரிக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்னும் நம்பிக்கையில்.

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

என் தலைமுறையில் நிஜமாகவே பனைமரம் கருகுகிறதை கண் கூட பார்கிறேன். :(