Mar 4, 2014

கெட்டவனைத் திருத்துதல்...

பதின்கவனகர் ஒருவர் இருக்கிறார். கனக சுப்புரத்தினம் என்று பெயர். எட்டாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளிக்கு வந்திருக்கிறார். அவர் மேடையில் பதின்கவனகம் பற்றி பேசிக் கொண்டும் திருக்குறளில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பார். கேள்வி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். 247வது குறளை தலைகீழாகச் சொல்லுங்கள்; தக என்று முடியும் குறள்கள் மொத்தம் எத்தனை? - இப்படி எப்படி பவுன்ஸ் போட்டாலும் சிக்ஸராக வெளுப்பார். இந்த கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு பையன் அவரது முதுகில் அவ்வப்போது வந்து பூக்களால் ஒத்தடம் கொடுத்துவிட்டுப் போவான். அதன் எண்ணிக்கையை நினைவில் வைத்துக் கொள்வார். இன்னொருவர் அவ்வப்போது மணி அடிப்பார். எத்தனை முறை மணி அடிக்கப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வார். இன்னொரு பக்கம் குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றிற்கு தீர்வு சொல்வார். இப்படி பத்து, பதினாறு விஷயங்களை ஒரே நேரத்தில் கவனத்தில் வைத்துக் கொண்டு பட்டையைக் கிளப்புவதால் அவருக்கு பதின்கவனகர் என்று பெயர். தசாவதானி.

அந்தக்காலத்தில் நூற்றுக்கணக்கான விஷயங்களை நினைவில் வைத்துச் செய்பவர்களும் இருந்தார்களாம். சதாவதானி. இப்பொழுது நமது பிற பாரம்பரியக் கலைகளைப் போலவே அதுவும் அழிந்துவிட்டது. கனகசுப்புரத்தினத்தின் அப்பா ராமையா அந்தக் காலத்திலேயே பதின்கவனகராக இருந்தவர். அவர் இறந்த பிறகு ‘உன் மரணத்திற்கு பிறகு இந்தக் கலை மரணித்துவிடும்’ என்று அஞ்சலிக் குறிப்பை ஒரு கவிஞர் எழுதியிருக்கிறார். கலையை மரணிக்கவிடமாட்டேன் என்று ஒரே வருடத்தில் சுப்புரத்தினம் இதை பயிற்சி செய்து மேடையேறிவிட்டார். 

அவர் இப்பொழுது வேதாத்ரி மகரிஷியின் ‘மனவளக்கலை’யில் ஈடுபடுகிறார் போலிருக்கிறது. அந்த பயிற்சி பற்றி அவர் பேசும் நல்லதொரு சி.டி. இருக்கிறது. மாமனார்தான் கொடுத்தார். மாமனார் தியானம், ஆன்மிகம், யோகாசனம் என்றிருக்கக் கூடியவர். இதுவரை அதையெல்லாம் பயிற்சி செய் என்று என்னிடம் சொன்னதில்லை. அதுவரைக்கும் நல்லது என்று நானும் அதுபற்றியெல்லாம் அவரிடம் பேசியதில்லை. அவர் கொடுத்த போது எதற்காக இந்த சிடியைக் கொடுக்கிறார் என்று புரியவில்லை. என்னவோ பிரச்சினை செய்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

இதற்கு முன்பாக சில யோகா புத்தகங்கள், வாழும் கலை புத்தகங்களை எல்லாம் கண்ணில்படும்படியாக வைத்திருந்தார். ஆனால் அவற்றை நான் புரட்டிக் கூட பார்க்கவில்லை. ஒருவேளை அதன்காரணமாகத்தான் வலுக்கட்டாயமாக சிடியைக் கொடுக்கிறார் என்று நினைத்தேன். 

யோகா கற்றுத் தருகிறேன், தியானம் கற்றுத் தருகிறேன் என்று சொல்லும் ஆன்மிகவாதிகளைப் பார்த்தாலே எனக்கு அலர்ஜி. காததூரம் ஓடிவிடத் தோன்றும். இதில் எல்லாம் ஆர்வம் தானாக உருவாக வேண்டும். பிறர் சொல்கிறார்கள் என்பதற்காகவோ அல்லது ‘நான் ஒரு ஆன்மிகவாதி’ என்று காட்டிக் கொள்வதற்காகவோ இவர்களிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு சமயத்தில் அதுவாகத் தோன்றினால் இதையெல்லாம் முயற்சித்து பார்க்கலாம் என்றுதான் இருந்தேன்.

இந்த சிடி கேட்பதற்கு நன்றாக இருந்தது. நிறைய குட்டி குட்டி விஷயங்களை பேசியிருக்கிறார். உதாரணமாக, விலங்குகளை ஏன் விலங்கு என்கிறோம் என்பதற்கு ஒரு காரணம் சொல்கிறார். ‘அவை தங்களது அறிவுக்கு விலங்கிட்டிக் கொண்டிருக்கின்றன. தங்களைத் தாண்டி வேறு விஷயங்களைச் சிந்திக்காதவை. அறிவுக்கு இடப்பட்ட விலங்கின் காரணமாக அவற்றை விலங்கு என்கிறோம்’- இப்படியான தகவல்கள். இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றன.

இந்த சிடியை கேட்டு முடித்த பிறகு இன்னொரு புத்தகத்தை தருவதாகச் சொன்னார். அதுவும் ஏதோ இந்த வாழும் கலை வகையறாதான். கொஞ்சம் ஜெர்க் ஆகியிருந்தேன். இதையெல்லாம் தெரிந்து கொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் எதற்காக இந்த திடீர் மாறுதல்கள்தான் என்று புரியவில்லை. இரண்டு நாட்களாக படு குழப்பம். மனைவியிடம் கேட்டிருந்தேன். அவள் சர்வசாதாரணமாகச் சொன்னாள். ‘அதுவா உங்க கதைகளையெல்லாம் அப்பா படிச்சுட்டாராம்’ என்றாள். விளங்கிவிட்டது. ஏற்கனவே ஜி.நாகராஜனின் ‘குறத்திமுடுக்கு’ நாவலை மறந்து மாமனார் வீட்டிலேயே விட்டுவிட்டேன். அதையும் அவர் படித்திருக்கக் கூடும். இப்பொழுது எனது கதைகளையும் வாசித்துவிட்டார். வேறு என்ன காரணம் வேண்டும்? கிட்டத்தட்ட என்னை டெரரிஸ்டாக முடிவு செய்து கொண்டார் என நினைக்கிறேன். மகளை இவனுக்குக் கொடுத்துவிட்டேனே என்று தனியாக புலம்பியிருக்கக் கூடும். இவன் ஒரு சரியான கிரிமினல் என்றோ காமாதிபதி என்றோ அல்லது ஸ்த்ரீலோலன் என்றோ முடிவு செய்திருக்க வேண்டும். இவனைத் திருத்துவதற்கான அஸ்திரமாக தியானத்தையும் யோகாவையும் மகரிஷியையும் எடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

இனிமேல் திருந்திவிடுவேன் என்று நம்புகிறேன். 

0 எதிர் சப்தங்கள்: