Mar 2, 2014

இணையதளத்தை முடக்க முடியுமா?

சவுக்கு இணையதளத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சவுக்கு தளத்தின் சார்பாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையிடப் போகிறார்களா அல்லது தொழில்நுட்ப ரீதியில் இந்தச் சவாலை எதிர்கொள்ளப் போகிறார்களா என்று தெரியவில்லை. அது அவர்கள் பிரச்சினை.

ஆனால், டெக்னிக்கலாக இந்த முடக்கம் சாத்தியமே இல்லை என்றுதான் நினைக்கிறேன். கணினியின் தகவல்கள் யாவுமே intangible. அதாவது கைகளால் பிடித்துவிட முடியாத ஐட்டங்கள். எப்பவுமே இத்தகைய intangible ஐட்டங்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. இன்னமும் தெளிவாகச் சொன்னால் ‘சுலபம் இல்லை’ என்பதைவிடவும் ‘சாத்தியமே இல்லை’என்பதுதான் சரி.

இதுவே Tangible ஆன ஐட்டங்களைப் பொறுத்தவரையில் முடக்கம் என்பது மிக எளிது. அதாவது ஒரு குதர்க்கமான ஆள் சிக்கினால் அவனைப் பிடித்து சிறையில் அடைக்கலாம். ஒரு அடங்காத குதிரை சிக்கினால் லாயத்தில் கட்டலாம். அச்சு பத்திரிக்கையாக இருந்தால் கைப் பற்றி அவற்றை தீயிட்டு எரிக்கலாம். ஆனால் கைகளால் பிடிக்க முடியாத இணைய விவகாரங்களை என்ன செய்வது? ஒரு தளத்தை முடக்கினால் அதை அச்சு அசலாக பிரதியெடுத்தது போல நூறு தளங்களை சர்வசாதாரணமாக உருவாக்கிவிட முடியும். நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக என்றாலும் கூட இப்படியான முடக்கங்களால் அந்தத் தளத்தை நடத்துபவருக்கு சில பிரச்சினைகளை உருவாக்க முடியும். உதாரணமாக ஒரு தளத்தை முடக்கினால் அவர் இன்னொரு புதிய தளத்தை உருவாக்கி அதன் சுட்டியை(URL) பலருக்கும் தெரியப்படுத்தி அதன்மூலம் பழைய அளவிலான வாசகர்களின் எண்ணிக்கையை அடைவதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆனால் இப்பொழுது அதுவும் பிரச்சினை இல்லை- பத்துப் பேர்களின் துணை இருந்தால் போதும். ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் ஆகிய சமூக ஊடகங்கள் வழியாக புதிய சுட்டியைப் பரப்பி ஒரே நாளில் பாப்புலர் ஆக்கிவிடலாம்.

பிறகு முடக்குவதால் என்ன பயன்? இந்தக் கேள்வியைக் கேட்டால் என் துளியூண்டு ஐடி மூளை பிதுங்கப் பிதுங்க முழிக்கிறது.

இது போன்ற நீதிமன்ற விவகாரங்களால் தளத்தினால் பாதிக்கப்பட்டவர்களைவிடவும் தளத்தின் உரிமையாளருக்குத்தான் லாபம் அதிகம். ‘சவுக்கா? அப்படீன்னா?’ என்று இந்தப்பெயரை இதுவரை கேள்விப்படாத ஆட்கள் கூடத் தேடத் துவங்குவார்கள். பிபிசி தமிழில் இந்த விவகாரத்தை எழுதியிருக்கிறார்கள்; ஹிந்து ஆங்கில இதழில் தனிச் செய்தியாக வந்திருக்கிறது. இன்னும் எங்கெங்கெல்லாம் வந்திருக்கிறதோ தெரியவில்லை. ஆக மொத்தம் பாப்புலராக்கிவிட்டார்கள்.

இன்று காலையில் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு ‘ஓர் இணையதளத்தை முடக்க முடியுமா’ என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்கு கணிணித்துறையில் என்ன சந்தேகம் வந்தாலும் என்னிடம்தான் கேட்பார். பதில் தெரியாவிட்டாலும் கூட எதையாவது உளறி வைத்து விடுவேன்.

அவர் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அ.முத்துலிங்கம் தனது புத்தகத்திற்கான முன்னுரை ஒன்றில் எழுதியிருந்த விவகாரம்தான் ஞாபகத்திற்கு வந்தது. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமான இடையிலான எல்லைக்கு ஒரு முறை முத்துலிங்கம் சென்றிருக்கிறார். அங்கு ஒரு மரத்தை கைது செய்து வைத்திருக்கிறார்களாம். அதைப் பார்த்த முத்துலிங்கத்திற்கு படு ஆச்சரியம். விசாரித்திருக்கிறார். விவகாரம் ரொம்ப சிம்பிள். பிரிட்டிஷ்காரன் காலத்தில் ஒரு வெள்ளைத் துரை அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். வந்த மனுஷனுக்கு மிகுந்த போதை. அப்பொழுது இந்த மரத்தைப் பார்த்திருக்கிறார். அவருக்கு மரம் ஓடுவது போலத் தெரிந்திருக்கிறது. கோபம் அடைந்த அவர் அருகிலிருந்த சிப்பாயை அழைத்து அந்த மரத்தை கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டுவிட்டார். அவனும் கர்மமே கண்ணாக மரத்தை கைது செய்து அதற்கு அருகிலேயே ‘இந்த மரம் கைது செய்யப்பட்டிருக்கிறது’ என்ற பலகையும் வைத்துவிட்டான். துரைக்கு சந்தோஷம். போய்விட்டார். அவருக்கு மரத்தை கைது செய்துவிட்டதாகத் திருப்தி. சிப்பாய்க்கோ துரையின் உத்தரவை நிறைவேற்றிவிட்ட சந்தோஷம். ஆனால் அந்த மரம் எப்பவும் போலவேதான் இருந்திருக்கிறது. இப்பொழுது அந்தத் துரை பரலோகம் போய்ச் சேர்ந்துவிட்டார். சிப்பாயும் இல்லை. ஆனால் அந்த மரம் மட்டும் இன்னமும் அப்படியே இருக்கிறது. துளி கவலை இல்லாமல். இணையத்தளத்தை முடக்குவது என்பதும் மரத்தை கைது செய்வது போலத்தான்.

இது போன்ற டெக்னிக்கல் பிரச்சினைகளால்தான் கணினித்துறை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் மென்று தண்ணீர் குடிக்கின்றன. இந்தியாவில் என்றில்லை- உலகம் முழுவதிலுமே இப்படித்தான். சைபர் விவகாரங்களில் ஒருவனைச் சிக்க வைப்பது என்பதும், அவனை முடக்குவது என்பதும் லேசுப்பட்ட காரியமில்லை. முதல் பிரச்சினை ‘இவன்தான் அந்த சுள்ளான்’ என்று கை நீட்ட முடியாது. அப்படியே கண்டுபிடித்து கொண்டு வந்து கோர்ட்டில் நிறுத்தினாலும் ‘நான் அவன் இல்லை’ என்று பாடிவிட்டு போய்விடுவார்கள்.   

சரி இதற்கு என்னதான் வழி?

நம் காலத்தில் இணையத்தைப் போன்றதொரு அசுரன் அல்லது பேய் என்று வேறு எதுவும் இல்லை. அதை எவ்வாறு முடக்குவது என்பதற்கான வழிமுறைகளை/சாத்தியங்களை எல்லாம் புரிந்து சட்டமியற்றி பிறகு தீர்ப்பு எழுதும் போது அந்த அசுரன் வேறொரு வடிவம் எடுத்திருப்பான். அசுரப்பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கும் இணையத்திற்கு கடிவாளம் என்பதெல்லாம் தற்சமயத்தில் வாய்ப்பே இல்லை என்றுதான் நம்புகிறேன்.

இப்போதைக்கு எனக்குத் தெரிந்து இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று எழுதுபவனாக பார்த்து அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு சாத்தியம் இல்லை என்றால் இன்னொரு வழி இருக்கிறது- நம் விவகாரம்  எதுவுமே ‘லீக்’ ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு வழிகள்தான் எனக்குத் தெரிகிறது.

டெக்னிக்கலாக சவுக்கு தளத்தை முடக்க முடியுமா இல்லையா என்பது ஓரமாக இருக்கட்டும். கருத்துரிமை, எழுத்துரிமை என்று எப்பொழுதும் தொண்டைத் தண்ணீர் வறண்டு போகக் கதறும் ஏகப்பட்ட போராளிகள் இந்த விவகாரத்தில் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? நீதிமன்ற விவகாரத்தில் நமக்கு எதற்கு பொல்லாப்பு என்று நினைத்திருக்கலாம்; சவுக்கு தளத்தின் கட்டுரைகள் மீதான வெறுப்பாக இருக்கலாம் அல்லது சவுக்கினால் நமக்கு என்ன பிரயோஜனம் என்ற நினைப்பாக இருக்கலாம் அல்லது சவுக்கை ஆதரித்து எதற்கு பலரின் வெறுப்பை அள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதாக இருக்கலாம். எப்படியோ போகட்டும்.

இதில் நாம் கூட கருத்துச் சொல்லலாம்தான். ஆனால் திமிங்கலங்களே அமைதியாக இருக்கின்றன. விலாங்கு மீன்களுக்கு என்ன வந்தது? நீதி மன்றங்கள் வாழ்க! நீதியரசர்கள் டபுள் வாழ்க! என்ற கோஷத்தை சேர்த்துக் கொள்வதுதான் உசிதம்.

0 எதிர் சப்தங்கள்: