Mar 18, 2014

சின்னச் சின்ன கடவுள்கள்

கடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவன் யாரையாவது இறைதூதர்களாக அவ்வப்போது அனுப்பிக் கொண்டேயிருப்பான். அப்படி அனுப்பட்ட சில இறைதூதர்கள் அவ்வப்போது நம் கண்களில் பட்டுவிடுவார்கள். பட்டுவிட்டால் நாம் புண்ணியவான்கள். ஏதாவதொருவிதத்தில் அவர்களுக்கு உதவி நாமும் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.

அப்படித்தான் இந்த வாழை அமைப்பினரும். மினியேச்சரைஸ்டு கடவுளர்கள். 

வாழை அமைப்பினர் அடுத்த ஆண்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வரும் ஆண்டிற்கான வழிகாட்டிகளைத்(Mentor) தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்வு ஏப்ரல் மாதத்தில் பெங்களூரில் நடக்கிறது. சென்னையிலும் இதே போல நடக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு வழிகாட்டிக்கும் ஒரு மாணவரை ஒதுக்குவார்கள். அடுத்த ஓராண்டுக்கு அந்த மாணவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் என்றால் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பவர்களோ அல்லது நகர்புற மாணவர்களோ இல்லை. தர்மபுரி மாவட்டத்தின் ஒரு மூலையில் கிடக்கும் ஏரியூர் என்ற கிராமத்துப் பள்ளியின் மாணவர்கள். அந்தப் பள்ளியிலும் கூட கண்ணில்படும் அத்தனை மாணவர்களையும் தேர்ந்தெடுப்பதில்லை. வசதி என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அம்மாவும் அப்பாவும் ஆந்திராவிலோ அல்லது கர்நாடகத்திலோ குவாரிகளில் வேலை செய்து கொண்டிருக்க இங்கே தனித்து விடப்பட்டிருக்கும் குழந்தைகள், நசிந்து கிடக்கும் குடும்பங்கள், குடிகாரத் தந்தையினால் சீரழிந்து போன பிள்ளைகள், இன்றோ நாளையோ குடும்பச்சூழலால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் என்று விளிம்பிலும் விளிம்பில் இருக்கும் பிள்ளைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த தேர்வு முறையைப் பார்ப்பதற்கு நீங்கள் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வெயில் காந்தும் தருமபுரி மாவட்டத்தின் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து அந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாகச் சென்று தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் தடவை அவர்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கச் செல்லும் போது வாழை அமைப்பினரோடு சேர்ந்து சுற்றலாம் என்றிருக்கிறேன். 

இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அந்த மாணவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு வழிகாட்டப்போகும் நல்ல இதயங்களைத் தேர்ந்தெடுக்கத்தான் இந்த கலந்தாய்வை நடத்துகிறார்கள். 

இந்த வழிகாட்டிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஏரியூரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் கூடுவார்கள். அங்கு அந்த மாணவர்களும் வந்திருப்பார்கள். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் அந்த மாணவர்களோடு சேர்ந்து விளையாடி, படித்து, கற்பித்து என்று அவர்களை படிப்பைத் தாண்டியும் ஒரு மனிதனாக உருமாற்றுகிறார்கள்.

ஆகச் சிறந்த செயல் இது. 

எந்த விளம்பரமும் இல்லாமல் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் மீது வெளிச்சம் விழுவதைக் கூட விரும்பாத இவர்களைப் போன்றவர்களால்தான் இன்னமும் அவ்வப்போது மழை தூறுகிறது என நினைத்துக் கொள்வேன்.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சிறுவர்களோடு நேரடியாக பேசுவது போக இந்தச் சிறுவர்களோடு அவ்வப்போது தொலைபேசி வழியாகவும் வழிகாட்டிகள் உரையாடுகிறார்கள். தொலைபேச வசதியில்லாதவர்களிடம் அஞ்சல் வழியில் தொடர்பில் இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சுக்கரங்கள் தங்களின் வழிகாட்டிகளுக்கு ‘அன்புள்ள அண்ணன்’ என்றோ அல்லது ‘அன்புள்ள அக்கா’ என்றோ தங்கள் வாழ்வின் முதல் கடிதத்தை எழுதுகிறார்கள்.

ஒரு நிகழ்ச்சியில் இந்த அமைப்பினரோடு இருந்திருக்கிறேன். நெகிழச் செய்துவிடுகிறார்கள். இவர்கள் செய்து கொண்டிருப்பது அத்தனை புனிதமான பணி. இன்றோ நாளையோ படிப்பை நிறுத்திவிட்டு குவாரி வேலைக்குச் சென்றுவிடக் கூடியவனை கல்லூரி வரைக்கும் இழுத்துவிடுகிறார்கள். பள்ளியை முழுகிவிட்டு வீட்டை கவனிக்கச் செல்லவிருக்கும் பெண்ணைத் தாங்கிப்பிடித்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிவிடுகிறார்கள்.

எழுத்தறிவிப்பவன் இறைவன் அல்லவா? இந்த அமைப்பினர் ஒவ்வொருவருமே இறைவன்தான். இதைச் வெற்றுப்புகழ்ச்சிக்காக எழுதவில்லை. ஒரு முறை இவர்களை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். நம்பத் தொடங்குவீர்கள்.

இருக்கட்டும்.


இந்த ஆண்டிற்கான வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வு பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடக்கிறது. எப்படியும் ஐம்பது அல்லது அறுபது வழிகாட்டிகள் வாழைக்குத் தேவைப்படுவார்கள் என நினைக்கிறேன். வழிகாட்டியாகிறோமோ இல்லையா என்பது இரண்டாம்பட்சம். அவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காகவது தமிழ்ச்சங்கத்திற்குச் சென்றுவரலாம். ஏப்ரல் ஆறாம் நாள் நான் செல்லவிருக்கிறேன். நீங்களும் கலந்து கொள்ளுங்கள். பிற பெங்களூர் நண்பர்களிடம் இந்தத் தகவலைச் சேர்க்க முடியுமானால் ஒரு துளியூண்டு உதவியை இந்த தன்னலமற்ற அமைப்பினருக்கு நாம் செய்வது போல. முதல் பத்தியில் சொன்னது போல ‘புண்ணியம் தேடிக் கொள்ளுதல்’.

17 எதிர் சப்தங்கள்:

Deiva said...

Good Effort Vaazhai and Mani Kandan. Keep it up.

Ravindran VRK said...

Thanks mani anna for writing about Vazhai. Of course we need around 40+ mentor in both Chennai and Bangalore regions. Interested ppl can apply in our web or dial 9945349702 or other local contacts in web itself.
-ravindran vrk

Ravindran VRK said...

Thanks for writing about Vazhai again. We r not gods na.:)).. The ppl who want to return our responsibility in education. Anyhow your appreciation really motivating us and makes us more responsible..

Ravindran VRK said...

Of course we need around 40+ mentors in Chennai and Bangalore region. Getting female mentors is a real challenge for us. Unable to take more girl children. Also v need supporters too. Local contacts are given in web WWW.Vazhai. org. . interestd ppl can Either register there or call them.
- Team Vazhai

Anonymous said...

மேற்சொன்ன நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்தும் வந்து கலந்துக்கொள்ளலாமா?

Vaa.Manikandan said...

சென்னை குழுவினர் விழுப்புரம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு எந்த ஊர் (பெங்களூர் அல்லது சென்னை) செகளரியமோ அந்த ஊரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் ரமேஷ். சென்னைக்கான தொடர்பு எண் +91-9962284228

தருமி said...

எனக்கும் இந்த நல்ல கடவுள்கள் மேல் நம்பிக்கையிருக்கின்றது. வாழையடி வாழையாக இந்த வாழைகள் வாழட்டும்; வளரட்டும்.

பா.பாலகுமார் said...

அருமையான வரிகள் மணி. உங்களைபோன்றவர்களின் அங்கீகாரம் எங்களுக்கு புதிய உத்வேகத்தையும் , உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. நன்றிகள் உங்களுக்கு.

Vaa.Manikandan said...

நான் யாருங்க அங்கீகாரம் தருவதற்கு? உங்களின் செயல்பாடு போதும் காலாகாலத்திற்கும் நிற்கும். வாழ்த்துகள்

Anonymous said...

வாழை போன்ற நல்ல உள்ளங்கள் மன நிறைவு அளிக்கின்றன. இதே விஷயமாக எனது நண்பர் திரு.கோவிந்த் அவர்கள் செய்துவரும் பணி பற்றியும் நீங்களும் உங்கள் வாசகர்களும் தெரிந்துகொள்வது நல்லது என்று நினைக்கிறேன். தான் ஒருவனாக இவர் இதைச் செய்து வருகிறார். அவரையும் வாழையுடன் பேசச்சொல்லி மின் அஞ்சல் எழுதுகிறேன். அவரைப்பற்றிய ஒரு பதிவு இது :
http://amaruvi.com/2013/11/30/vaazhga/

இராஜிசங்கர் said...

Dear Ravindran,

I'm Rajee, working in Bangalore. I'm interested on this greatest effort.

Before joining us volunteer, I have some basic questions. For that, May I get your mail id?

Regards,
RajeeSankar

vijayan said...

தகவுலுக்கு மிகவும் நன்றி,6 தேதி தமிழ் சங்கத்திற்க்கு வருகிறேன்,

”தளிர் சுரேஷ்” said...

வாழை அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

Itsdifferent said...

Good job Vaazhai and team, good luck on your activities.

Unknown said...

Hello Rajee,

Our hearty welcome :)

Contact details:

Mail : sagubart@gmail.com
Phone : 8050080088(Sagubar)

Also refer our website http://www.vazhai.org/

Thanks,
Arthy Rajagopal :)

சேக்காளி said...

//அவ்வப்போது மழை தூறுகிறது//
மழை மட்டும் தூறவில்லை மணி.வாசிக்கும் போது கண்களின் ஓரத்தில் நீர் கூட துளிர்த்தது.இதை சொல்ல வெட்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது.

நாடோடிப் பையன் said...

Hats off to this team of mentors.