Mar 17, 2014

மலையை அசைக்கும் சுண்டெலி

அரவிந்த் கெஜ்ரிவாலின் சமீபத்திய நடவடிக்கைகளாலும், அவரால் உருவாக்கப்பட்ட தலைப்புச் செய்திகளினாலும் நரேந்திர மோடிக்கான மிகச் சரியான போட்டியாளராக இவர்தான் இருப்பார் என்கிற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக ராகுலையும், காங்கிரஸையும் ஒதுக்கிவிட்டு மோடியா அல்லது கெஜ்ரிவாலா என்று பேசத் துவங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் இந்த ஓரங்கட்டுதலை எதிர்பார்த்திருக்காது என்றாலும் மோடிக்கான counter attack நிச்சயமாக காங்கிரஸை மகிழ்ச்சியடைச் செய்திருக்கும்.

பிரதமர் பதவிக்கான போட்டிக்கு கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மோடி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். குஜராத் அரசின் சாதனைகள் தேசிய நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்களாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. ஊடகங்களில் மோடிதான் அடுத்த பிரதமர் என்பதான பேச்சு தொடர்ந்து இடம்பெறும்படி பார்த்துக் கொண்டார்கள். இணையத்தளங்களில் மோடிதான் நெம்பர்.1 ஆக இருந்தார். இப்படி சாமானிய மக்களுக்கே தெரியாமல் ‘மோடிதான் அடுத்தது’ என்ற எண்ணத்தை விதைத்திருந்தார்கள். 

என்னதான் இத்தகைய செயல்பாடுகளால் மோடியின் பெயர் பரவலாக்கப்பட்டிருந்தாலும், இதுவரையிலும் அவரது பாதையில் தடைக்கற்களை புரட்டிப்போடுவதற்கான எதிர்ப்பாளர் இல்லையென்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை எண்ணான 272+ ஐ மோடி சுலபமாக அடைந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. காங்கிரஸின் மீதான வெறுப்பு, மன்மோகன்சிங் ஆட்சியின் அவலங்கள், மாநிலக்கட்சிகளின் ஊழல்கள் மற்றும் காங்கிரஸின் உறுதியற்ற தலைமை ஆகியவற்றின் காரணமாக கிடைத்திருக்கக் கூடிய எதிர்ப்பு வாக்குகளின் மூலமாக 200+ என்ற எண்ணிக்கையை பா.ஜ.க தாண்டியிருக்கக் கூடும்.

ஆனால் இப்பொழுது அந்த எண்ணிக்கையிலும் கெஜ்ரிவால் ஒரு ஓட்டையை போட்டுவிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பா.ஜ.கவுக்கு சென்றிருந்தால் பா.ஜ 200+ அடைந்த்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பின் மீது போடுவதற்கு ஒரு பெரிய பாறாங்கல்லை குல்லாவுக்கு மேலாக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பா.ஜவோடு பங்கிட்டுக்கொள்ள பங்காளிகள் வந்துவிட்டார்கள். இதைத்தான் மோடி எதிர்ப்புக் கட்சிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி, லாலு பிரசாத் யாதவ், திமுக அபிமானிகள் போன்றவர்கள். 

அரவிந்த் கெஜ்ரிவாலால் பிரதமர் ஆக முடியாது என்று இவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். இது கெஜ்ரிவாலுக்கும் தெரியும். ஆனாலும் அவரைக் கொண்டாடுவதற்கான காரணம், மோடியின் வளர்ச்சியைத் தடுக்க இவர்கள் யாராலும் முடியவில்லை என்பதுதான். ‘மோடிக்கு யாருமே தடையில்லை’ என்று உருவாக்கப்பட்டிருந்த ஒரு பிம்பத்தை நொறுக்குவதற்கு குண்டாந்தடியோடு ஒருவர் வருகிறார் என்றால் இவர்களுக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும். தடியைத் தூக்கிக் கொண்டு வருபவர் யானையாக இருந்தால் என்ன? சுண்டெலியாக இருந்தால் என்ன?

அரவிந்த் கெஜ்ரிவால் 272+ இடங்களில் முழுமையாக வென்று ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்றால் அவரை மனப்பூர்வமாக ஆதரிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அது நல்ல விஷயமும் கூட. ஆனால் அது நடக்காது என்பதுதான் நிதர்சனம். டெல்லியில் நடந்ததைப் போலவே- தொங்கு பாராளுமன்றத்தை- வெற்றிகரமாக உருவாக்கிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் கெஜ்ரிவால் உருவாக்கிவிடுவார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜதான் தனிப்பெரும் கட்சியாக உருவாகியிருந்தது. ஆனால் அவர்களால் ஆட்சியமைக்க முடியவில்லை. அதே போன்றதொரு நிலைமை மத்தியிலும் வர வாய்ப்பிருக்கிறது. பா.ஜ. தனிப்பெரும் கட்சியாக வரக் கூடும். ஆனால் மெஜாரிட்டி இருக்காது. 200+ என்ற எண்ணிக்கை இருந்தால் ஆட்சியமைப்பதில் பா.ஜவுக்கு பெரிய சிரமம் இருக்காது. அதிமுக, சரத்பவாரின் தேசியவாதக் கட்சி போன்ற கட்சிகளை இணைத்து ஒட்டி ஆட்சியை அமைத்துவிட முடியும். ஆனால் கெஜ்ரிவால் மற்றும் அவரை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளினால் பா.ஜவின் இருபது முப்பது தொகுதிகளை காலி செய்யப்பட்டு பா.ஜ வென்ற மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 150-170 என்ற எண்ணிக்கையில் வந்து நின்றால்தான் பெரும் சிக்கல். 

பா.ஜவுக்கான அந்த அடியைத்தான் மோடி எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பா.ஜவால் எதுவும் செய்ய இயலாது. பா.ஜ. ஒரு மதவாதகட்சி என்று ஒதுக்கிவிடுவார்கள். மோடியின் கனவில் ஒரு லாரி மண்ணைக் கொட்டிவிட்டு அடுத்த சாத்தியங்களுக்கான வாய்ப்பைத் தேடுவார்கள். மதச்சார்பற்ற சக்திகளின் கூட்டணி என்று உதிரிகள், இடதுசாரிகள், காங்கிரஸ் அனைத்தும் சேர்ந்து ஒரு ஆட்சியை உருவாக்குவார்கள். ‘ஓடுகிற வரைக்கும் ஓடட்டும்’ என்று காலத்தை நகர்த்துவார்கள். சரியான சமயம் கிடைக்கும் போது ஆட்சியைக் கலைத்துவிட்டு இன்னொரு தேர்தலைச் சந்திப்பார்கள். 

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு என தேர்தல் கமிஷன் கணக்குப் போட்டு வைத்திருக்கும் செலவு தொகை ரூ.3500 கோடி. இந்தத் தொகையில் பாதுகாப்புக்கான செலவு கணக்கில் வராது. அது போக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் செய்யும் செலவும் இந்தக் கணக்கில் இல்லை. அதையெல்லாம் சேர்த்தால் குறைந்தபட்சம் நாற்பதாயிரம் கோடிகளாவது ஆகக் கூடும். பணம் இரண்டாம் பட்சம். இவர்கள் எதிர்பார்க்கும் அஸ்திவாரமற்ற ஆட்சிதான் பெரிய சிக்கலைக் கொண்டு வரும்.

ஸ்திரமற்ற ஆட்சியமைந்தால் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கும், புதிய முதலீடுகள் தாமதப்படுத்தப்படும், பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் இருக்கும் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் சாதாரண மனிதனை அவனுமறியாமல் மூச்சுத் திணறச் செய்யும். இடைக்கால ஆட்சியாளர்கள் ‘இன்னைக்கோ நாளைக்கோ, சுருட்டும் வரை சுருட்டு’ என்றிருப்பார்கள். இதெல்லாம் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் நாம் எதிர்பார்க்க ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது. அப்படித்தான் இன்றைய அரசியல் நிகழ்வுகள் இருக்கின்றன.

இதையெல்லாம் எழுதினால் மோடி ஆதரவாளன் என்று குத்துவார்கள். அப்படியில்லை- இன்றைய சூழலில் மோடி வரவில்லையென்றாலும் அதைப்பற்றிய விசனம் எதுவும் இல்லை- இவர்கள் குட்டையைக் குழப்பி அடுத்த சில ஆண்டுகளுக்கு தள்ளாடும் மத்திய அரசை அமைக்காமல் இருந்தால் போதும். ஒருவேளை  அப்படி நிலையற்ற அரசு அமைந்தால் அதன் விளைவையும் வலியையும் 2020 ஆம் ஆண்டில் உணரத் துவங்குவோம்.

25 எதிர் சப்தங்கள்:

Itsdifferent said...

I think you reflect a popular opinion. Most also believe that Modi is a good choice, given his records and achievements in Gujarat. But he has an unbalanced and biased Media, for some reason too supportive of Congress so far, and now popping up AK. Congress in their two terms have proven that they are so weak, and ran out of ideas on every front. There are too many opportunities, that India has slipped up to other countries, at a huge cost, hampering India's development. We still have opportunities coming India's way, which needs an able administrator and/or a system to leverage to prosper. Congress has also corrupted our system beyond repair, for which we need an alternative.

Raja M said...

இந்தத் தேர்தல் முடிந்து நிலையில்லாத ஆட்சி வருவதை நீங்கள் ஒரு பெரும் பிரச்னையாகக் கருதுகிறீர்கள் எனத் தெரிகிறது. இதை நீங்கள் ஏன் எதிர்மறையான ஒன்றாகப் பார்க்க வேண்டும்?

திமுக, அதிமுக, போன்ற பிராந்தியக் கட்சிகளின் உதவியால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. தமிழ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் (திமுக/அதிமுக/பாமக) பலருக்கு இந்தியாவைப் பற்றிய பொது பிரச்னைகளில் அவ்வளவு கவனம் இருந்த்தில்லை. தம் மாநிலத்துக்கான கவலைகளைத் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு குழுவாக மட்டுமே செயல்பட்டு வந்தனர் என்பது நடைமுறை உண்மை. ஆம் ஆத்மி கட்சியை இப்படிப்பட்ட ஒரு குழுவாக பார்க்கலாம் என்பது என் கருத்து – ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ள ஒரு குழுவாக.
இந்தியாவில், புவியியல் பிரச்னைகள் சார்ந்த குறுகிய பிரதி நிதித்துவம் இல்லாமல், கருத்தியல்/நல்லாட்சி போன்ற அரூபமான கொள்கைகளை முன்னிருத்தும் ஒரு குழுவாக ஆம் ஆத்மி கட்சியைப் பார்க்கலாமே? இப்படிப் பார்த்தால், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல், இடதுசாரி அரசியலைப் போன்றது – அதன் கோட்பாடுகள்/சித்தாந்தங்கள் சார்ந்த பளுவின்றி இருக்கும் ஒரு அரசியல்.

ஆம் ஆத்மி கட்சி ஒரு இருபது இடங்களைப் பிடிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஐந்திலிருந்து-ஏழு சதவிகித வாக்குகளை பெரு நகரங்களில் பெருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வாக்குகள், ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தில், காங்கிரஸ்/பிஜேபி என்ற இரண்டில் ஒன்றுக்கு வாக்களித்தால் தான், நிரந்தரமான ஆட்சி அமைக்க முடியும் என்ற வலுக்கட்டாயத்திற்கு ஒத்துப் போகாத வாக்களார்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு. இத்தகைய கொள்கை சார்ந்த குழுக்கள் இந்தியாவெங்கும் போட்டியிடுவது, பிற கட்சிகளிடையேயும் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம். இத்தகைய கொள்கை சார்ந்த வாக்கு வங்கிகள் இந்தியாவில் உருவாவது அவசியம். அது ஒரு முதிரும் ஜன நாயகத்தின் அறிகுறியும் கூட.

gnani said...

//ஸ்திரமற்ற ஆட்சியமைந்தால் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கும், புதிய முதலீடுகள் தாமதப்படுத்தப்படும், பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் இருக்கும் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் சாதாரண மனிதனை அவனுமறியாமல் மூச்சுத் திணறச் செய்யும். இடைக்கால ஆட்சியாளர்கள் ‘இன்னைக்கோ நாளைக்கோ, சுருட்டும் வரை சுருட்டு’ என்றிருப்பார்கள்.// இது தவறான கற்பிதம். மன்மோகன் ஆட்சி நிலையான ஆட்சியாக பத்தாண்டுகள் இருந்தது. பொருளாதாரம் அடிவாங்கியிருக்கிறது. ராசாமுதல் கல்மாடி வரை சுருட்டோ சுருட்டு என்று சுருட்டியிருக்கிறார்கள். சாதாரண மனிதன் மூச்சு திணறியதே நி......லையான ஆட்சியில்தான்.

Vaa.Manikandan said...

பத்தாண்டு காலம் காங்கிரஸ் ஆண்டது என்று சொல்லும் உதாரணமும் சரியானது இல்லை. பெயருக்குத்தான் மன்மோகன் சிங் பிரதமர் என்பது அனைவருக்குமே தெரியும். அவருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதும் லகான் அவர் கையில் இல்லை என்பதும் தான் இத்தனை அவலங்களுக்கும் அடிப்படை. பல கட்சி ஆட்சி இருப்பதிலும் கூடத் தவறில்லை ஆனால் வலிமையான பிரதமரை உருவாக்குகிறோமா என்பதுதான் மிக முக்கியமானதாகப் படுகிறது.

Vaa.Manikandan said...

மாற்று சக்தி வருவதை முழுமனதோடு வரவேற்கலாம். ஆனால் அது விஸ்வரூபமாக இருக்க வேண்டும். மிகச் சிறிய சலனத்தோடு, ஒரு பொத்தலை உருவாக்குவதால் ஒரு வலுவான அரசு அமைய வாய்ப்பில்லாமல் செய்துவிடக் கூடாது என்பதுதான் பிரச்சினை. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஒரு வலுவான அரசு காலத்தின் தேவை. அது எந்தக் கட்சி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளட்டும்.

ரெங்கசுப்ரமணி said...

காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் அடி வாங்குவது உறுதி. மோடியின் பிம்பம் கொஞ்சம் அளவிற்கு அதிகமாகவே மீடியாக்களால் ஊதப்படுகின்றது என்பது உண்மைதான். பணம் வாங்கிக்கொண்டு செய்கின்றார்கள் என்று நம்பவில்லை, அவர்களுக்கு தேவை அப்போதைய ஹாட் டாபிக். நேற்று கேஜ்ரிவால் இன்று மோடி. காங்கிரஸின் மீது உள்ள கோபத்தை முழுக்க அறுவடை செய்து கொள்ள நினைத்த பா.ஜ.கவிற்கு, அம் ஆத்மியும் போட்டிக்கு வந்துள்ளது. மோடி அலை என்பதை விட, காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதுதான் உண்மை. மோடியை பிடிக்காமல் ஆனாலும் காங்கிரஸுக்கு பதில் இவர் பரவாயில்லை என்று ஓட்டு போட நினைத்த பலரை இக்கட்சி திசை திருப்பும்.

ஆனால் கேஜ்ரிவால் இதே போல் போன இடத்திலெல்லாம் ரகளை செய்துவந்தால் அந்த யோசனையும் போய்விடும். அவர் எதையும் உருப்படியாக செய்வார் என்ற நம்பிக்கை வரவில்லை. வாய்ச்சவடால்தான் அதிகம் உள்ளது. ஊழல் ஊழல் என்று கட்சி ஆரம்பித்தவர், சமீப காலங்களில் காங்கிரஸ் பற்றி பேசவே காணோம். மோடி மோடி என்று பாய்கின்றார். வாய்க்கு வந்த படி குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுகின்றார். ஆதாரம் எங்கே என்றால், மறுபடி இன்னொரு குற்றச்சாட்டு. இவரின் பின்னால் காங்கிரஸ் இருக்குமோ என்ற எண்ணம் பலமாகிக் கொண்டே போகின்றது.

மகாபாரதத்திலோ எங்கேயோ ஒரு கதை உண்டு, ஒரு கிளி ஒன்று அரசனை வாய்க்கு வந்த படி திட்டிக் கொண்டிருந்தது, அதை சமாதானப்படுத்த நினைத்த அரசன் அதற்கு பழங்கள் எல்லாம் தந்தான் அதை தின்று விட்டு, எனக்கு பயந்து அரசன் என்னை கெளரவிக்கின்றான் என்று பேசியது, கடுப்பான அரசன் அதை அடித்து துரத்த நான் பேசியது பிடிக்காமல் அரசன் என்னை துரத்திவிட்டான் என்று பேசியது. ஒழிந்து போ என்று அதை கண்டு கொள்ளாமல் விட்டாலும், என்னை கண்டு அரசன் பயந்து போய் ஒதுங்கி ஓடுகின்றான் என்றது. அது மாதிரி ஆகிவிட்டார் இவர். கோ படம்தான் நினைவில் வருகின்றது. கூட இருப்பவர்கள் ஏதோ மாற்றம் வருமென்று இவர் பின்னாடி வந்தாலும், இவர் செய்வது சுத்த அடாவடித்தனம்தான்.

ஜீவ கரிகாலன் said...

very good analysis Mani..

Anonymous said...

நிலையான ஆட்சி ஆட்சி மட்டுமே தேவை இல்லை. ஊழல் அற்ற ஆட்சி தேவை. அது மிகவும் அவசியம்.
மோதியின் மீது 2007 தேர்தலில் ஒரு குற்றச்சாட்டு வைக்கப் பட்டது. அதுவும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு. அவர் 200 குர்தா பைஜாமா செட் வைத்திருக்கிறார் என்பதே அது. இவ்வளவு ஆண்டுகளில் அவர் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு இது மட்டுமே. இதை அவரே துக்ளக் ஆண்டு விழாவில் தெரிவித்தார்.
கெஜ்ரிவால் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது. அவருக்கு பீகார் தெரியவில்லை. அங்கு சென்று ஏழைகளின் நிலை குறித்து அவர் பார்க்கவில்லை; ஒரிஸா கண்ணில் பட வில்லை; மேற்கு வங்காளம் தெரியவில்லை; ஏன் தமிழ் நாடு தெரியவில்லை; அங்கு ஊடும் சாராய ஆறும் அதில் கலந்துள்ள ஏழைப் பெண்களின் ரத்தமும் தெரியவில்லை. மோடி மட்டும் தெரிகிறார்.
எதிர்மறை அரசியல் செய்து சுலபத்தில் பேர் வாங்கலாம் என்று அவர் நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது.
49 நாட்கள் ஆட்சி செய்து அவர் செய்த சாதனை என்ன ? 48 நாட்கள் வீதியில் அமர்ந்திருந்தார். அதுவே அவரது சாதனை.
உட்டாலக்கடி வித்தைகள் செய்வது, அரை மணி நேரம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தமிழர் நலன் காப்பது போன்றவை தமிழ் நாட்டில் தான் சாத்தியம் என்று நினைத்திருந்தேன். தில்லியிலும் அப்படியே தான் என்று நிரூபித்துள்ளது கெஜ்ரிவாலின் சாதனையே.
ஒரு விருந்துக்கு 30,000 தலை ஒன்றுக்கு வாங்குபவர்கள் ஏழைப் பங்காளர்கள் என்று நம்ப வேண்டியது நமது தலை எழுத்து போல.
ஆமருவி
www.amaruvi.com

Muthuram Srinivasan said...

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் கேஜ்ரிவால் பற்றிய பிம்பமும் கணிசமாக சரிந்து கொண்டு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.

Muthuram Srinivasan said...

மிகவும் சரியான கருத்து.

Muthuram Srinivasan said...

100% உண்மை..கேஜ்ரிவாளுக்கு பின்னால் காங்கிரஸ் இருக்கிறது என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுக்கிறது.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! சரியான அலசல்! இப்போதுள்ள நிலையில் தொங்கு பாராளுமன்றம்தான் அமையும் போலிருக்கிறது 96 மீண்டும் திரும்புகிறதோ என்றும் தோன்றுகிறது!

radhakrishnan said...

அருமையான அலசல் மணி. ஞானி ஏன் இப்படி விழலுக்கு நீர் இறைக்கிறார் என்று தெரியவில்லை ஆக்க பூர்வமாக
அவர் ஏதுமே சொல்வதில்லை.மோடி(-தீவிர இந்துத்வா இல்லாத மோடி) என்று கட்டாயப்படுத்தினால் நலம் பயக்கும்
என்று நினைக்கிறேன்

இரா திலீபன் said...

இதைத்தான் எங்க ஊர்ல அப்பட்டமான சந்தர்ப்பவாதம்னு சொல்லுவாங்க...

நாம களத்துல இறங்கி வேலை செய்ய மாட்டோம் உக்காந்து நல்லா வியாக்கியானம் செய்வோம் யாராவது ஒருத்தர் ஊழலை ஒழிக்கிறேன்னு இல்ல வேற ஏதாவது சொல்லி வந்து “நின்னுட்டாங்கன்னா” அப்புறம் சொல்லுவீங்க அவரு வந்துட்டா ஆதரிக்கறதுல எனக்கு தயக்கம் இல்லை அப்டின்னு சொல்லுவிங்க இல்ல... ஏன்னா நாமெல்லாம் இலக்கிய வாதி இல்லையா.....?
“ஒரு ஏழைத்தாயை பற்றி உருக்கமாக ஒரு கதை எழுதி காசாக்குறது முக்கியம் இல்ல அந்த தாயின் வாழ்க்கை நிலையை உயர்த்த என்ன செஞ்சோம்ன்றது தான் முக்கியம் இலக்கிய வாதி அப்டிங்கார மேடை மேல நின்னு எல்லோரையும் பாத்துட்டு இருந்தா நம்ம செட்ட தவிர மீதி எல்லாம் அற்பமாதான் தெரியும்”
சரி அப்புறம் வலுவான பிரதமரு வேணும் இல்ல.... மோடியின் கடந்த கால வாழ்க்கையை வசதியா மறந்துட்டு இப்ப அவர முன்னிறுத்தலாம் மோடி அலைனு சொல்லலாம்.
இருப்பதி சிறந்ததை பார்க்கிறேன். இருக்கறதுல மோடி பெஸ்ட் அப்டின்னு சொல்றதெல்லாம் சந்தர்ப்பவாதம்னு சொல்லாம என்னன்னு சொல்லறது.

Raja M said...

மணிகண்டன், நீங்கள் சொல்லும்படி, விஸ்வரூபம் எடுக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த கட்சிகள் தாம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இருந்தால், புதிய கட்சிகள் தேர்தலில், அதுவும் பாராளுமன்றத் தேர்தலில், போட்டியிடவே முடியாது.

இரண்டாவதாக, தேர்தல்களில் போட்டியிடுவதால் மட்டுமே, ஒரு புதிய கட்சி தனக்குரிய வாக்காளர்களைக் கண்டடைய முடியும்; வளர முடியும் - அந்தத் தேர்தல்களில் படு தோல்வி அடைந்தாலும். தேர்தலில் போட்டியிடாத கட்சிகளைப் பற்றி, வாக்காளர்கள் ஏன் கவலைப் பட வேண்டும்?

கடைசியாக, ஆம் ஆத்மி கட்சியின் உதவியுடன் தான் மத்தியில் ஒரு ஆட்சி அமைக்க முடியும் என்றே வைத்துக் கொள்வோம். ஆம் ஆத்மியின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள, ஆட்சியமைக்கும் எந்தக் கட்சியும், கொஞ்சமாவது ஊழல் பற்றிய விழிப்புணர்வோடு நல்லாட்சி செயும் வாய்ப்பும் உள்ளதல்லவா? கூட்டாட்சி ஏன் வலுவில்லாத ஆட்சியாக இருக்கும் என்று இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள். ஐரோப்பாவில் உள்ள, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, போன்ற எல்லா நாடுகளிலும் கூட்டாட்சி தானே (multi-party) நடக்கிறது? இவையெல்லாம், வலுவில்லாத நாடுகள் அல்லவே?

Muthuram Srinivasan said...

I couldn't understand whats your take on this...If modi is an opportunist then who else is genuine? குட்டையை குழப்பி விட்டு மட்டும் போய் விடுதல் கெட்டிக்காரத்தனம் இல்லை. மோடியை கடந்த கால நிகழ்வுகளை கருதி ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அந்த கடந்த கால நிகழ்வுகள் என்ன?
மோடி வேண்டாம் என்றால் நீங்கள் யாரை பரிந்துரைக்கிறீர்கள் ? ஏன்?

Muthuram Srinivasan said...

கெஜ்ரிவால் காங்கிரஸ்சின் பினாமி என்பதில் இப்போது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவர் ஊழலை மட்டும் எதிர்த்து நிற்கிறார் என்றால் நடப்பு அரசின் ஊழல் பட்டியலை ஒரு முறை வாசித்து முடிக்கவே 1 வருடம் ஆகும். ஆனால் அண்ணன் இப்போதெல்லாம் காங்கிரஸ், சோனியா, ராகுல் பற்றியெல்லாம் பேசுவதை நிறுத்தி விட்டார். மோடியை மட்டுமே குறி வைத்து தாக்குகிறார். இவர் வகுக்கும் வியூகங்கள் எல்லாம் மோடிக்கு ஆப்பு வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இது காங்கிரஸ்சுக்கு மட்டும்தான் நன்மை செய்யும் என்பது நமக்கே தெரியும் போது அவருக்கு தெரியாதா?...அவருடைய நோக்கம் அதுதான் என்று சொல்வதை விட அவருக்கு இட்ட பணி அதுதான் என்று கூறுவதே சரி...

Raja M said...

ஒரு வலுவான பிரதமர், நல்லாட்சியை அளிப்பார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உலக அரசியலில், வலுவான பிரதமர்கள்/அதிபர்கள், நல்ல ஆட்சியை அளிப்பது அபூர்வமாகத் தான் நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் பெரும் கொடுமைகள் செய்த அனைத்துத் தலைவர்களும், ‘வலு’வான ஆட்சியாளர்களே! அவர்களில் பலர் தத்தம் நாடுகளில் தேர்தலில் வெற்றியடைந்தவர்களும் கூட.
அரசியல் அதிகாரம் மக்களிடம் இருந்து தலைவர்களுக்குச் செல்கிறது – தேர்தல்கள் மூலமாக. இதில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரின் தனி மனித குணங்கள், மற்றும் அவர் முன்னிருத்தும் கொள்கைகள் இரண்டும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டும். ‘வலுவான’ தலைவர்கள் வெகு குறுகிய காலத்திலேயே தவறான பாதையில் வெகுதூரம் ஒரு வளர்ந்த ஜன நாயக நாட்டை இட்டுச் செல்ல முடியும் (ஜார்ஜ் புஷ் ஜூனியர்) என்பது அன்மைய வரலாறு.

நீங்கள் மோடிக்கு வாக்களிப்பது தான் சரி என்று நினைத்தால், அதற்கான காரணங்களை நேரடியாக முன் வையுங்கள். விவாதிக்கலாம். இப்படி, கொள்ளைப் பக்கம் வழியாக அவரை முன் நிறுத்தத் தேவையில்லை.

Tamil Indian said...

//இருக்கறதுல மோடி பெஸ்ட் அப்டின்னு சொல்றதெல்லாம் சந்தர்ப்பவாதம்னு சொல்லாம என்னன்னு சொல்லறது.//
I believe Manikandan has the right to voice his opinion.

radhakrishnan said...

சரியாகச் சொன்னீர்கள் முத்துராம்.எந்தவழியுமில்லாமல் அந்தரத்தில் தொங்கினால்தானே குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்கலாம்

Anonymous said...

இந்தியாவின் முதல் கூட்டணி ஆட்சியின் பிரதமர் வி.பி.சிங், தன் ஒரு வருட கால ஆட்சியில்தான் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்திய மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தினார்.
உங்களுடைய எழுத்து நான் மோடிக்கு ஆதரவாக எழுதவில்லை என்றாலும் உங்களுடைய உள்ளம் மோடியால்தான் நிலையான ஆட்சி தரமுடியும் என்று நம்புகிறது. அந்த நம்பிக்கையைத்தான் எப்படியோ ஆரம்பித்து இறுதியாக மோடிதான் நமக்கான தலைவர் என்று நிறுவியிருக்கிறீர்கள்.
இந்தியா வல்லரசாக இப்போதைய தேவை ஒரு ஹிட்லர், மோடி என்கிற ஹிட்லர். அவருக்கே வாக்களியுங்கள்.

Muthuram Srinivasan said...

ஒரு நாடு நல்ல நிலையை அடைவதற்கு அதனை ஆள்பவர்களுக்கு அந்த நோக்கம் இருக்க வேண்டும்.நல்ல இலக்குகள் இருக்க வேண்டும். இலக்குகள் சரியானவையாக இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் மனித வளம் கொட்டி கிடக்கும் இந்த நாட்டின் முன்னேற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இங்கு தலைவர்கள் நம்மை சுரண்டியே பழகி விட்டனர். மக்கள் மன்குனியாகி விட்டனர். எதையும் தட்டி கேட்கும் தைரியம் இழந்து விட்டனர்.
ஆனால் இவை அனைத்திற்கும் காரணம் பொது மக்களாகிய நாம்தான் என்பதை யாரும் ஒத்துக்கொள்வதில்லை. ஒரு மோசமான அரசியல் தலைவரைக்காட்டிலும் அபாயகரமான விஷயம் திருவாளர் பொது ஜனத்தின் இன்றைய மன நிலைதான்.
நமக்காக போராட ஒரு காவிய புருஷன் நமக்கு எப்போதும் வேண்டும். எங்கு யாருக்கு அநியாயம் நடந்தாலும் அவன் அங்கு வந்து தட்டிக்கேட்க வேண்டும். நம் பொருட்டு அவன் போராட வேண்டும், நமக்காக அவன் குடும்பம் நடுத்தெருவில் கூட நிற்கலாம் தவறில்லை.அவன் கொல்லப்பட நேரிட்டால் கூட தவறில்லை. ஆனால் நாம் இணைய தளத்திலும் அல்லது நம் அடையாளம் வெளிப்படாத ஒரு தளத்திலும் இருந்து கருத்துகள் மட்டும் தெரிவிப்போம்.லஞ்சம் தரக்கூடாது என்று சொல்வோம்.ஆனால் நம் வேலை என்று வரும் போது என்ன விலை கொடுத்தாவது யாருக்கும் தெரியாமல் "காரியத்தை சாதித்துக்கொள்வோம்" அதுதானே புத்திசாலித்தனம்.தேவைப்பட்டால் நான்காம் படையாக மாறி நாமே காட்டி கூட கொடுப்போம். இந்த மனோநிலை மாறும் வரை நாட்டில் எதுவும் மாறாது. மற்றபடி மேலே குறிப்பிட்ட தகுதிகள் கொண்ட தலைவராக நாம் கடைசியாக பார்த்தது இயேசு பிரான் மட்டும் தான் என்று எனக்கு தோன்றுகிறது.(நமக்காக மரித்தார் என்று விவிலியம் கூறுகிறது)
ஆகவே இங்கு சொல்லப்படும் கருத்துகள் அனைத்துமே ஓட்டுப்போடும் மக்கள் தம்மளவில் சுத்தமாய் (குறைந்த பட்சம் ஐம்பது சதமாவது) இருந்தால் மட்டுமே பொருள்படும். மற்றபடி எல்லா தலைவர்களும் ஒன்றுதான்.ஏனென்றால் அவர்களை நாம்தான் உருவாக்குகிறோம்.

Muthuram Srinivasan said...

மிகவும் சரி

இரா திலீபன் said...

இது குட்டையை குழப்புதல் அல்ல... இந்தியாவை ஆள்வது இது வரை மன்மோகன் சிங்கோ இல்லை நீங்கள் சொல்வது போல் இனிமே மோடியோ அல்ல டாடா பிர்லா அம்பானி அதாணி மிட்டல் போன்றவர்களே இந்த அரசு என்ற சிஸ்டத்துக்குள்ள யார் வந்தாலும் முடியாது எப்படி வந்தாலும் முடியாது. இந்த மேட்டர்ல இவங்க எல்லாத்தவிடவும் ஒரு கேடுகெட்டவர் மோடி ஹிந்துத்வா பி‌ஜெ‌பி ஆர்எஸ் எஸ் இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம மோடி மோடி மோடி மோடி அவர் இல்லாட்டி போடி வேற யாரு இருக்கா சொல்லுடி னு சொன்னா என்னத்த சொல்றது. எப்போதிலிருந்து மோடி மீது உங்களுக்கு பற்று ஏற்பட்டதுணு கொஞ்சம் யோசிச்சு பாருங்க இந்த ஊடகங்கள் மோடியை காச வாங்கிட்டு உயர்த்தி பிடிச்சதுக்கு அப்புறமா இல்ல மோடி அஞ்சு வருஷம் முன்னாடியே குஜரத்துக்கு நல்லது பண்ணப்பவே ஏன் ஊடகங்கள் சொல்லல நீங்க ஏன் நெனைக்கல,……

Venkat said...

In fact a country's economic my is mature only if does not depend on govt stability. So whether a govt is stable or not is immaterial. The intention of the govt is important. Japan is an example