தமிழுக்காக நான் உருவாக்கிய சொற்களை கையாளாமல் இன்று எவருமே தமிழில் ஒரு நல்ல கட்டுரையை எழுதிவிட முடியாது என்று ஜெயமோகன் சொல்லியிருக்கிறாராம். இதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இனி வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை ஆசான் எழுதுவதைப் படிக்கவே செலவிட வேண்டும் போலிருக்கிறது. எப்போ படித்து? எப்போ எழுதி...ம்ம்ம்
மூச்சிரைக்க ஜெமோ பக்கத்திற்கு ஓடிப்பார்த்தால் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். அக்னிக்குண்டம் என்பதற்கு தமிழ்ச் சொல்லாக எரிகுளம் என்று கண்டுபிடித்ததை விளக்கியிருக்கிறார். விஷ்ணுபுரத்திலும், வெண்முரசிலும் இப்படி ஏகப்பட்ட சொற்களை உருவாக்கியிருக்கிறாராம். நல்ல விஷயம்தான். செய்யட்டும். யார் செய்கிறார்கள் இதையெல்லாம்? நம் அதிர்ஷ்டம்- இவர் வந்ததால் தமிழ் பிழைத்துக் கொண்டது. இல்லையென்றால் பாரதியின் பாடையோடு சேர்ந்து தமிழும் போயிருக்கும். இந்நேரம் நாமெல்லாம் ஆங்கிலத்திலேயே தமிழை எழுதிக் கொண்டு இருந்திருப்போம்.
நல்லவேளையாக இழுத்துப் பிடித்து எரிகுளம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் மனுஷன். இனி நாமெல்லாம் குதிப்பதுதான் பாக்கி. ஆசானின் இந்த வரியைப் படித்துவிட்டு ஜெமோவுக்கு ‘தலைக்கனம்’ ஜாஸ்தி என்று எழுதத்தான் கை நீண்டது. எதற்கு வம்பு? இப்படியான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் போய்விடுவதுதான் நல்லது. இல்லையென்றால் போகிற போக்கில் ‘கருத்துலக விவாதத்துக்கான அறிவுத்தகுதி இல்லாதவர்கள், வெறுமே அரைகுறைவாசிப்பு மற்றும் செவிப்பழக்கம் கொண்டு செய்யும் வெட்டிவேலை அது’ என்று புற மண்டையிலேயே ஓங்கி அடிப்பார். என் அரைகுறைத் தமிழும் குமட்டிக் கொண்டு வெளியே வந்துவிடும். பிறகு சிகிழ்ச்சைக்கு ஓட வேண்டும்- எழுத்துப்பிழையெல்லாம் இல்லை- சிகிழ்ச்சையேதான்.
தேவையா எனக்கு? அதனால் தலைக்கனம் என்பதற்கு பதிலாக ஜெமோவுக்கு கெத்து ஜாஸ்தி என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும்.
அரைகுறைத் தமிழ் என்று சொன்னேன் அல்லவா? அதை வைத்துக் கொண்டு மகனுக்குத் தமிழ் எழுத்துரு சொல்லித் தரத் தொடங்கியிருக்கிறேன். கர்நாடகத்தில் இருப்பதால் நாம் தமிழ் சொல்லிக் கொடுத்தால்தான் உண்டும். இருபது வருடங்களுக்கு முன்பாக இங்கு ஏகப்பட்ட தமிழ்ப் பள்ளிகளும், தமிழ்க் கல்லூரிகளும் இருந்திருக்கின்றன. அரசியல் அழுத்தங்களாலும், பெற்றோர்களின் வரவேற்பின்மையினாலும் இப்பொழுது ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கின்றனவாம். அதுவும் எங்கள் வீட்டிலிருந்து வெகுதூரங்களில். அதனால் வாயில் நுழையாத பெயருடைய பள்ளியில் வரிசையில் நின்று இடம் வாங்கியிருக்கிறோம்.
‘குருவியோட மூக்குக்கு இங்கிலீஷ்ல என்னங்கப்பா?’ என்றான். இப்படி திடீரென்று கேட்டால்? பிதுங்கப் பிதுங்க பார்த்தேன். ‘Beak' என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். அவன் பதில் தெரியாமல்தான் கேட்கிறான் என்று நினைத்தேன். என் ஆங்கில அறிவை குப்பையில் கொட்டி வேடிக்கை பார்ப்பதற்காகக் கேட்டிருக்கிறான். அரை டிக்கெட். அவனுக்கு வெண்பா எழுதத் தெரிய வேண்டியதில்லை- ஆனால் எழுத்துக் கூட்டி புத்தகங்கள் வாசித்துவிடுமளவுக்கு கற்றுத் தந்துவிட்டால் போதும் என நினைக்கிறேன்.
ஆசானின் ‘எரிகுளம்’ என்ற சொல் நேற்றிரவிலிருந்து உள்ளுக்குள் பினாத்திக் கொண்டிருந்தது.
யோசித்துப் பார்த்தால் எழுத்துத் தமிழைவிடவும் நம் பேச்சு வழக்கு முக்கியமானது என்று தோன்றுகிறது. முன்னோர்களிடமிருந்து நாம் தெரிந்து வைத்திருக்கும் ஐம்பது சதவீதச் சொற்களையாவது அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட்டால் போதும். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் வட்டார வழக்கையும், பழஞ்சொற்களையும் துளித்துளியாக அழித்துக் கொண்டிருக்கிறோம். முதன் முதலாக கல்லூரி விடுதிக்குச் சென்ற போது ‘வட்டல் எடுத்துட்டு வர்றேன்’ என்றேன். உடனிருந்தவர்கள் சிரித்தார்கள். அதிலிருந்து என்னையுமறியாமல் ‘ப்ளேட் எடுத்துக்கிறேன்’. வட்டல் என்ற சொல்லே என்னிலிருந்து பிரிந்துவிட்டது. இது ஒரு சாம்பிள். உடனடியாக இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் இப்படி நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். இப்படி ஒவ்வொரு இடத்திலும் அமத்தாவிடமிருந்தும் அப்பத்தாவிடமிருந்தும் வாங்கிய சொற்களை புதைத்துக் கொண்டிருக்கிறோம். அப்பாரும், அப்பிச்சியும் சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலுமா பேசிக் கொண்டிருந்தார்கள்? அக்னிக்குண்டம் என்பதை அவர்கள்தானே பூக்குழி என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதை மறந்ததுவிட்டோம். எரிகுளம் என்று கேள்விப்படும் போது புளகாங்கிதம் அடைகிறோம்.
பெரிய காரியம் ஒன்றுமில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோண்டிப்பார்த்தாலும் செத்துப் போன அல்லது செத்துக் கொண்டிருக்கும் ஓராயிரம் சொற்களையாவது பிடித்துவிட முடியும். அத்தனை இல்லையென்றாலும் ஆளுக்கு சராசரியாக நூறு சொற்களையாவது எடுத்துவிடலாம். பிறகு எதற்கு ஜெமோ உருவாக்கும் தமிழ்ச் சொற்களுக்காக தமிழ்க் கட்டுரைகள் தட்டு ஏந்தி நிற்க வேண்டும்?
இதை ஜெமோவை விமர்சிப்பதற்காக எழுதவில்லை. அவர் மீது அதிகப்படியான மரியாதை உண்டு. ஆனால் அவரது சொற்களை வைத்துதான் நல்ல கட்டுரையை எழுத வேண்டும் என்று சொல்வதெல்லாம் டூ மச். நல்ல அனுபவம் நிறைந்த எழுத்தாளன் தனது அமத்தா, அப்பிச்சிமார்களின் வார்த்தைகளிலிருந்தே அட்டகாசமான கட்டுரைகளை எழுதிவிட முடியும். சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிற எந்த எழுத்தாளனையும் விட நம் முன்னோர்கள் ஒரு படி உயர்ந்த மொழியறிவு கொண்டவர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. உங்களுக்கு இருக்கிறதா?
32 எதிர் சப்தங்கள்:
சரி. 'சிகிழ்ச்சை'ன்னா என்னா வாத்தியாரே . வெள்ளையானையில கூட இக்குது.
a good read...
http://www.sivakasikaran.com/2013/12/blog-post_12.html
பூக்குழி நெருப்பு தணல் , அக்னி குண்டம் எரியும் நெருப்பு .
தமிழ் உரைநடையில் சமஸ்கிரதம் ஆதிக்கம் அதிகம்.
ஜெயமோகன் என்ன என்ன வார்த்தை உருவாக்கி இருக்கிறார் என்று தெரியாமல் சும்மா பொதுவாக குற்றம் சாட்டுவது சரியில்லை.
ஒரு ஆழமான தலைப்பு எடுத்து சுமார் பத்து பக்கம் கட்டுரை எழுதி அப்புறம் கேள்வி கேட்பது தான் முறை.
அவருக்கு நன்றாக தெரியும் இணையத்தில் கமெண்ட் அடிக்கும் யாருக்கும் அந்த உழைப்பு கிடையாது என்று.
ஜெயமோகன் சும்மா வாய்க்கு வந்தபடி பேசுபவர் அல்ல
எழுத்து இல்லாத மொழி சீக்கிரம் அழிந்து விடும், பேச்சு வழக்கு அதிக காலம் தாங்காது.
மணி,
பூக்குழி-ன்னா கோயில் தீமிதி களம் இல்லையோ ? எங்க ஊர்ல நாங்க அப்படித்தான் சொல்வோம்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
மணி,
வாய்ச்சொல் வீரர்களுக்கு இடையில் ஒரு செயல் வீரரைப் பாருங்கள்.
http://valavu.blogspot.in/
இராம.கி அய்யா அவர்கள் இதுவரை வழங்கிய சொற்களுக்கான தொகுப்பு.
http://thamizhchol.blogspot.in/
சொல் உருவாக்கத்தை தவறு என்று சொல்லவே இல்லை...‘என் வார்த்தைகள் இல்லாமல் நல்ல கட்டுரை எழுத முடியாது’ என்று சொன்னதைத்தான் குறிப்பிட விரும்பினேன். இன்னொரு விஷயம்- பெரும்பாலான சொற்கள் புழக்கத்தில் இருந்திருக்கக் கூடும். அவற்றை ஏன் தொலைத்துவிட்டோம் என்பதையும் யோசிக்கலாம் என்றும் எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி, என் உழைப்பு பற்றி எனக்குத் தெரியும். அது போதும் என நினைக்கிறேன்.
வட்டார சொல்லின் ஓசை உரைநடை தமிழ் ஓசையுடன் ஒத்துபோகுமா என்பது சந்தேகம்.
வட்டார சொற்கள் பொதுவாக எளிமையான சொற்கள் ஆழமான கட்டுரைக்கு பயன்படாது. உதாரணம் யதேஷ்டம் போன்ற சொல்லுக்கு வட்டார தமிழில் சொற்கள் இருக்குமா என்பது சந்தேகம்
உழைப்பை பற்றி சொன்னது பொதுவானது. உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
ஆமாம். அதேதான். குண்டத்தை அப்படித்தானே சொல்லுவாங்க
பிராயசித்தம் -பிழையீடு நல்ல சொற்பதம். Personality ஐ குறிக்கும் ஆளுமை ஜெ உருவாக்கியதாக கூறியிருக்கிறார். எரிகுண்டம் தற்போது பொருந்தாமல் தெரியலாம் பரவலாக பயன்படுத்தப் படும்போது சரியாகிவிடும்.
ஜெயமோகனை சாரு திட்டுவதில் தப்பேயில்லை?
//வாய்ச்சொல் வீரர்களுக்கு இடையில் ஒரு செயல் வீரரைப் பாருங்கள்.
http://valavu.blogspot.in/
இராம.கி அய்யா அவர்கள் இதுவரை வழங்கிய சொற்களுக்கான தொகுப்பு.
http://thamizhchol.blogspot.in///
என்னைப் பொறுத்தவரையில் ஆக்கபூர்வமான, கருத்துச் செறிந்த தமிழ்ச் சொல் உருவாக்கத்துக்காக தமிழர்களால் பாராட்டப்பட வேண்டிய, மதிக்கத்தக்கவர் திரு. இராமகி .ஐயா அவர்கள் தான். அவர் எந்த வித ஆர்ப்பாட்டமும், வாய்ப்பந்தலும் இல்லாமல் தாய்த்தமிழுக்கு வளம் சேர்க்கிறார்.
>முதன் முதலாக கல்லூரி விடுதிக்குச் சென்ற போது ‘வட்டல் எடுத்துட்டு வர்றேன்’
வட்டல் ஒரு அருமையான சொல். வட்டில் என்பதது இதன் மருவிய வடிவவமா இருக்கலாம். (இலங்கையில் சில பகுதிகளில் கேட்ட ஞாபகம். யாழ்ப்பாணத்தில் இல்லை)கேள்விப்பட்டிருக்கிறேன் பாவனையில் இல்லை. இலங்கையில் எனக்குப் பரிச்சயமானது யாழ்ப்பாணத் தமிழ். அதிலும் என் ஊர்த் தமிழில் இன்னும் தனித்துவமான வார்த்தைகள் உண்டு. இதெல்லாம் இருக்க பொதுவான தமிழையே மறந்து விடுகிறோம்.
உன் தமிழ் (என் பதிவுகளில்) எனக்குப் புரிவதில்லை என் "சாட்சாத்" என் ஊரில் பிறந்தவர்களே சொல்ல பதிவு எழுவதே தேவையில்லை என ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். (என் சோம்பேறித்தனமும் ஒரு காரணம்).
இதில் மெட்ராஸ் தமிழர் பண்ணும் அழிச்சாட்டியம் இன்னொரு கதை. "நீங்கள் சொல்வது விளங்கவில்லை" ஒரு முறை சொல்ல "புரியல்லீங்க" என்றார். (!). பிறகு கதைத்ததில் "விளங்குவது" தனக்குத் தெரியாது என்றார்.
"இளங் கிளியே, இன்னும் விளங்கலீயே.." என்று ஒரு சினிமாப் பாட்டு உள்ளதென்றேன். அரைகுறை மனதாக "சில இடங்களில் இருக்கலாம்" என்றார். (அவர் கிண்டல் பண்ணியதாகவே இப்ப நினைக்கிறன்)
நல்ல விமர்சனம்!! ஏனெனில் இதனால் இன்னும் இரண்டு தமிழ் வார்த்தைகள் தெரியவந்ததே !! சமீபத்தில் கவிஞர் makudeswaran பகிர்ந்தது திட்டதிறனுரு !! Project ன் தமிழாக்கம் எனக்கென்னவோ புதிய வார்த்தைகளுக்கு தமிழாக்கம் கண்டு பிடித்தாலே போதுமானது,தமிழ் தடதடவென்று வளரும்.
ஒருமுறை என் நண்பனோடு ஹோட்டலுக்கு சென்றிருந்தேன்.சாப்பாடு தான் ஆர்டர் பண்ணோம்.சாப்பிட்டுவிட்டு மறு சாதம் கேட்பதற்காக சோறு கொஞ்சம் கொடுங்க என்று கேட்க, என் நண்பன் சிரிக்கிறான்.அதென்ன சோறு...ரைஸ்னு கேட்கவேண்டியது தானே....இப்படித்தான் தமிழ் வார்த்தைகள் மறைகின்றன ஆங்கில மோகத்தால்......
நல்ல ஒரு பதிவு இது. ஜெயமோகன் வழக்கப்படுத்தியுள்ள தமிழ்ச் சொற்கள் அதிகம் தான். அதே நேரம் அவரது பேச்சிற்கு அதிகமான எதிர்ப்பும் எதிர்பார்க்கப் பட வேண்டியது தான். இதையே ஒரு இடது சாரி / 'முற்போக்கு' எழுத்தாளர் சொல்லியிருந்தால் அது பற்றி இவ்வளவு எதிர்ப்பு கிளம்பி இருக்காது. இது தமிழ் நாட்டு நடைமுறை அவலங்களில் ஒன்று. ஜெயமோகன் 'எழுத்துரு மாற்றம்' பற்றிப் பேசிய போது ஏதோ தமிழ் மொழியே போய்விட்டது போல் ஒரு பிரமை உருவாக்கப்பட்டது. ஆனால் அண்ணா பல்கலையின் பழைய துணை வேந்தர் குழந்தைசாமி அவர்கள் முன்னமேயே சொல்லி இருந்தார்கள். பெரியார் தமிழ் எழுத்துக்களை எளிமைப் படுத்த வேண்டும் என்று சொல்லி அதன் னமது 'னை' , 'லை' போன்றவை தோன்றின. ராஜராஜன் காலத்து வட்டெழுத்துக்களைத்தான் நாம் இன்னமும் பயன் படுத்துகிறோமா என்ன ? இவர்களுக்கெல்லாம் இல்லாத எதிர்ப்பு ஜெயமோகனுக்கு ஏற்பட்டது. அவரை 'மலையாளி' என்றும் அன்னியப்படுத்தினர். இப்படியெல்லாம் சொல்லித் தமிழ்ச் சமுதாயம் தன் ஆழ்மன எண்ணங்களை வெளிப்படுத்தியது.
இது ஒரு புறம் இருக்கட்டும்.
தமிழில் புதிய சொற்களை உருவாக்க வேண்டாம் என்பது என் கருத்து. தேவாரம், ஆழ்வார் பசுரங்கள் முதலியவற்றீலும், சங்கப் பாடல்களிலும் பல அருமையான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. சுஜாதா இவற்றில் பல சொற்களை எடுத்துத் தன் கட்டுரை ஒன்றில் சொல்லி இருக்கிறார். நாம் தான் இவற்றீன் அருகிலேயே செல்வதில்லையே. இவை 'பக்தி' என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளனவே. நம்மிடம் உள்ள சொத்தின் மதிப்பு தெரியாமல் நாம் வெளியே நோக்கிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வைணவ இல்லங்களில் 'ரஸம்' என்ற சொல்லில் பயன் படுத்துவதில்லை. 'சாத்துமுது' - என்று பயன் படுத்துகிறார்கள். 'சாறு + அமுது' என்பதின் மருவு இது. அது போல் 'பாயசம்' என்பது இல்லாமல் 'திருக்கண்ணமுது' ( திரு + கண்ணன் + அமுது') என்றும் சொல்வார்கள். ஏனெனில் அனைத்து உணவுகளும் ஆண்டவனுக்குப் படைத்த பின்னரே உண்ணப் படுவதால் அவற்றுக்கு 'அமுது' என்று சேர்த்து சொல்வது வழக்கம். ஸ்மார்த்த பிராம்மணர்களின் தாக்கத்தால் 'நைவேத்யம்' என்ற சொல் வழக்கில் உள்ளது. வைணவர்கள் வீடுகளில் 'அம்சேப் பண்றது' என்று பேசப்படுகிறது. 'பெருமாளுக்கு அம்சே பண்ணியாச்சா' என்பது வழக்கமான பேச்சு. 'அமுது செய்யப் பண்ணுவது' என்பதின் மருவு அது. பெரியவர்களை 'வந்து அமருங்கள்' என்று சொல்லாமல், 'தேவள் ஏள்ளப் பண்ணணும்' என்பார்கள் ( 'தேவரீர் எழுந்தருளப் பண்ண வேண்டும்' என்பதின் மரூவு ). 'உடல் நலம் எப்படி இருக்கிறது' என்பதை 'திருமேனி பாங்கா?' என்று கேட்பது வழக்கம் ( 'தேவரீர் திருமேனி பாங்காக எழுந்தருளியிருக்கிறீர்களா?' என்பதன் மரூவு)
நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். பழையன எல்லாமே தவறு என்று கடந்த 100 ஆண்டுகளில் நமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. இதுவே நமது சொற்கள் பற்றாக்குறைக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
புதிய அறிவியல் சொற்கள் தவிர மற்ற வழக்கமான, புழக்கத்தில் உள்ள தமிழ் அல்லத மொழிச் சொற்களுக்கு நம்மிடம் உள்ள பண்டைய தமிழ்ச் சொற்கள் போதுமானவை. அவை பற்றிய ஒரு விழிப்புணர்வும், அவற்றை எந்த துவேஷமும் ( காழ்ப்புணர்ச்சியும் ) இல்லாமல் தமிழ் எழுத்தாளர்கள் பயன் படுத்த வேண்டும். செய்வார்களா ?
முடிவாக - 'சிகிழ்ச்சை' என்பது தமிழ் மட்டும் அல்ல என்று நினைக்கிறேன். 'சிகித்ஸாலயா' என்பது சாதாரணமாக இந்தியில் / வட மொழியில் உள்ள ஒரு சொல்.
நீண்ட பதிவிற்கு மன்னிக்கவும்.
ஆமருவி
www.amaruvi.com
தமிழ் எந்த ஒரு தனிமனிதனின் சொத்துமல்ல. அதே சமயம் ஒவ்வொரு தமிழனுக்கும் புதுச் சொற்களை உருவாக்கித் தன் மொழியை வளப்படுத்தும் கடமையும் உரிமையும் உண்டு. முடியாதவர்கள் மனம் புழுங்குவது தேவையில்லாதது. ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் தாக்கி எழுதுவது இணையத்தில் சிலருக்கு ஓர் fad ஆக உள்ளது. சாதனையைச் சாதனையால் தான் வெல்ல முடியுமே தவிர, காழ்ப்புணர்ச்சியால் அல்ல என்பதைக் காலம் உணர்த்தும். (2) நம்மிடமுள்ள பழைய தமிழ் நூல்களைப் படித்தாலே எவ்வளவோ நல்ல சொற்களை நாம் பயன்படுத்தாமலே அழித்துவிட்டோம் என்று தெரியும். (3)வட்டார வழக்குகளால் அதிக காலம் நீடிக்க முடியாது. எழுத்தில் பயன்பாடு செய்யப்பட சொற்களே நிலைத்துநிற்கும். (4) நம் முன் இன்றுள்ள முக்கிய செய்தி, ஆங்கிலத்தால் தமிழ் அழிந்துகொண்டு வருவதே. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு நம் முழு சக்தியையும் பயன்படுத்தவேண்டிய நேரம் இது. ஜெயமோகனைப் பிறகு எதிர்த்துக் கொள்ளலாம்.
அதே போல் உணவருந்துதல், நிப்பாட்டு போன்ற வார்த்தைகளையும் மாற்ற வேண்டும். உணவு உண்பது என்பதே சரி. நிறுத்து என்பதே சரி.
புதிய தமிழ் சொற்களை யார் உருவாக்கினால் என்ன பாராட்டப் பட வேண்டியவைகள் தான். தமிழ் சொற்களை உருவாக்கும் போது பண்டித சிகாமணிகள் சிலர் உட்கார்ந்து கொண்டு எதாவது ஒரு நீளமான சொல்வதற்கு கடினமான காரணப் பெயர்களை உருவாக்கி வருவதால் தான் சாமான்யர்கள் பலருக்கும் தமிழ் என்றாலே மிகவும் கடினம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. சொல்லப் போனால் எளிமையான பல சொற்கள் வட்டார வழக்குகளில், கிராமங்களில், பாமரர்கள் இடையில், ஏன் தமிழின் இணை மொழியான மலையாளத்திலும் உள்ளன. ஆனால் அவற்றை தொகுத்து, ஆராய்ந்து கலைச் சொல்லாக்கம் செய்யத் தவறியதன் பயனாக கடினமான கட்டை கட்டை சொற்களை உருவாக்கி அதுவும் அனைத்தும் காரணப் பெயராக இருக்க வேண்டும் என்று எவன் சொன்னானோ, அதனையே செய்து வருவதால் தான் பொது மக்களிடம் இருந்து தமிழ் அந்நியப்பட்டு வருகின்றது. ஆங்கிலச் சொற்களைப் பாருங்கள் புதிய புதிய சொற்களும் சொல்லுவதற்கு மிக எளிமையானதாக உள்ளது, அதனால் ஆங்கிலச் சொற்களையே நாமும் சொல்ல தலைபட்டுள்ளோம்.
பூக்குழி என்ற சொல் பரவலாக அக்னி குண்டத்துக்கு பயன்படும் சொல் தான், எரிகுளம் என அப்படியே வார்த்தைக்கு வார்த்தை உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதையும் பண்டித சிகாமணிகள் உணர வேண்டும்.. !
சிகிழ்சை என்பது நல்லதொரு தமிழ் மயமாக்கப்பட்ட வடசொல். இதனைத் தான் சிகிட்சை, சிகிச்சை என்றும் நாம் பயன்படுத்துகின்றோம்.. !
சில சமயங்களில் தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்கு தமிழில் வழங்கும் வடசொற்களையும், திசைச் சொற்களையும் ஏற்றுக் கொள்ளலாம்.
பண்டித சிகாமணிகள் உருவாக்கிய சைக்கிள் என்பதற்கான ஈர் உருளி என்பதை விட, சாதாரண பாமரன் பயன்படுத்திய மிதிவண்டி பயன்பாட்டில் உள்ளது. தொடர் உந்து என ரயில் வண்டிக்கு பயன்படுத்திய சொல்லை விட தீவண்டி என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது ( மலையாளத்திலும் )... !
இஸ்லாமிய தமிழ் வாணிகர்கள் செல்போனுக்கு பயன்படுத்திய அலைபேசி இன்று புழக்கத்துக்கு வந்துவிட்டது எனலாம். இஸ்லாமிய மக்களிடம் இருந்தே Snacks என்பதற்கான நொறுக்குத் தீனி என்ற சொல்லை பழகினேன். இன்று நான் நொறுக்கி தீனி என்பதை சர்வசாதாரணமாக பயன்படுத்துகின்றேன். ஈழத்தமிழர்களிடம் இருந்து தான் subject என்பதற்கான வார்த்தையான விடயம் என்பதை பழகினேன். எழுத்துக்களில் அவற்றை தாராளமாக பயன்படுத்தியும் வருகின்றேன்.
கலைச்சொல்லாக்கம் மக்களிடம் இருந்து வரவேண்டும். ஏன் நாங்கள் சில தோழர்கள் சேர்ந்து டாய்லட் என்பதற்கு இருக்களை என்று உருவாக்கினோம், பயன்பாட்டில் இருக்கோ இல்லையோ, இருக்களை என்ற சொல் ஒதுங்கிடம் கழிவறை என்பதை விட சுலபமாகவும், மங்கலமாகவும் இருக்கின்றது தானே. :)
இந்நேரம் நாமெல்லாம் ஆங்கிலத்திலேயே தமிழை எழுதிக் கொண்டு இருந்திருப்போம்// super Mani Ji...//
பத்து வருடங்களுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திாி தற்ேபேோது g.h என்று அகிவிட்டது
பதிவும் பின்னூட்டங்களும் மிகவும் நன்றாக உள்ளன. ஜெ.மோ. கட்டுரைகளை விடவும். அங்கு, Ulsoor, Cox Town, Vivek Nagar and Rajaji Nagar I Block ஆகிய இடங்களில் தமிழ் கற்றுக் கொள்ள வசதி உள்ளதே. சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கூட்டிச் சென்று, தமிழ் படிக்க உங்கள் மகனுக்கு உதவுங்கள்.
எழுத்தாளன் தலைவிதியை எப்போதுமே தானே எழுதி கொள்ள இறைவன் அனுமதித்து இருக்கிறாரோ என்னவோ ?
ஒருவேளை அவர் தமிழுக்காக எதாவது செய்து கொண்டு இருக்கிறேன் என்ற தமிழ் கனம் (தலை கனம் இல்லை ) வந்து இருந்தால் அவரை வரவேற்ப்போம் .ஆனால் அவர் உட்பட பல தமிழ் எழுத்தாளார்கள் புத்தகத்தை காசு கொடுத்து மட்டுமல்ல இரவல் வாங்கி படிக்கும் ஒவ்வொரு வாசகனும் தமிழுக்கு நன்றி சொல்லிகொண்டும் அதை வளர்த்து கொண்டும் இருக்கிறான் என்பதை ஒரு குறிப்பிட்ட உயரம் போன பின் மறந்து விடுகிறார்கள் .இந்த உலகில் அவர்கள் தனியே உலாவுவதாக கற்பித்து கொள்வது வேண்டாமே .
போர்வை என்று சொன்னால் என் மகன்கள் சிரிப்பாங்க....பெட்ஷீட்ன்னு சொல்லணுமாம்.தமிழ் சொற்களை பேசினால் பட்டிக்காடுன்னு நினைக்கிறார்கள்.
எனேக்கேனவோ சமீப காலத்தில் தமிழுக்கு புதிய சொற்கள், சொற்றொடர்கள் தந்ததில் முதன்மையானவர் வடிவேலு என தோன்றுகிறது. "வடை போச்சே".
மணி, இந்த வட்டல் மேட்டர் எனக்கும் நடந்தது, ஆனால் எனக்கு நடந்த இடம் நம் பள்ளிதான்.. என்னை வட்டல் என்றே சில நாட்கள் கிண்டல் அடிச்சாங்க... அப்ப மறந்தது இப்ப வரைக்கும் அதைப்பயன்படுத்தவே இல்லை... அந்த அளவுக்கு கலாச்சிட்டாங்க..
@Venkateshan, 1000 repeat.. :)
அவர் சொன்னதை அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. 'அவரது சொற்களைப் பயன்படுத்தி எழுதியவை மட்டுமே நல்ல கட்டுரைகள்' என்று புரிந்துகொள்ளவேண்டும்...
Hello all,
Sorry for typing in English, Still I am learning Tamil typing.I want know how these words came into our normal life, for example "Call panni"
"Pannitiya".This was torturing my mind when I was asking my North Indian friend about his skills in Tamil Language.He told he knows one word that is "Panni". I was shocked and got angry but after listening his other words realized that it was our mistake . Think friend's what we shared with others. If anyone knows how this word came . Please let me know.
"ஓள" என்கின்ற ஒற்றை சொல் வார்தையை பிரபல படுதியதும் அவர்தான்.
அது பண்ணி; பன்னி அல்ல. கோபம் பண்ண வேண்டியதில்ல
பண்ணு-செய், பண்ணி-செய்து
காதல் பண்ணி, தப்பு பண்ணி .....
ஏதோ ஒரு தமிழ் படத்துல ஒரு பெண் 'கோபம் பண்ணி' -னு சொல்லுவா. ஹேராம்-ராணி முகர்ஜின்னு நெனக்கிறேன்
நீங்கள் கூறியிருப்பது போல் ஒரு மொழி உயிரோடு இருக்க வேண்டுமானால் பேச்சு வழக்கு தான் மிகவும் முக்கியம். இலக்கிய வளம் மிகுந்த லத்தீனும், சமஸ்கிருதமும் பேச்சு வழக்கில்லாததால் இன்று வழக்கொழிந்து போயின. கூடுமானவரை ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல் மிகவும் முக்கியம். தமிழர்களே தமிழில் பேசுவதைக் கேவலமாகக் கருதும் நிலை என்று மாறுமோ தெரியவில்லை. அருமையான கட்டுரைக்கு வாழ்த்துக்கள்!
என்ன சார்... ரொம்ப நாளா ஆளையே காணோம்?
பாஸ், நாளையோட 10 நாள் ஆக போகுது. Vacation முடிச்சிட்டு சீக்கிரம் duty ல join பண்ணுங்க....
Post a Comment