பெங்களூரில் ஆங்காங்கே பிரச்சாரம் துவங்கிவிட்டது. போஸ்டர், பேனர் எதுவும் இல்லை. ஆட்டோக்களில் கிளம்புகிறார்கள். ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே தலையில் கொடி கட்டிய இளைஞர்கள் நடனமாடுகிறார்கள். கட்சிக்காரர்கள் கைகூப்பியபடியே செல்கிறார்கள். வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டால் இவர்களின் நரம்புகளில் இன்னமும் முறுக்கு கூடிவிடும். இங்கு பா.ஜ.கவுக்கும் காங்கிரஸூக்கும்தான் போட்டி என்றாலும் பல தொகுதிகளில் தேவகெளடாவின் ஜனதா தளம் பிரிக்கும் வாக்குகளும் முக்கியமானவைதான். இவர்கள் கர்நாடகத்தின் மூன்றாவது சக்தி.
அரசியலைப் பொறுத்த வரையில் மூன்றாவது ஆளை பெரிய ஆளாக வளர விடமாட்டார்கள் அல்லவா? பா.ஜ.க அல்லது காங்கிரஸ், திமுக அல்லது அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் அல்லது இடது சாரிகள். இப்படித்தான். மூன்றாவதாக ஒருவன் முளைத்தால் முதலில் இடம்பிடித்து வைத்திருக்கும் இரண்டு பேரும் சேர்ந்து மூன்றாமவனை காலி செய்துவிடுவார்கள். மீறி வர வேண்டுமானால் ஏற்கனவே இருக்கும் இரண்டு பேரில் ஒருவனை அழித்தால்தான் மூன்றாமவனுக்கு இடம்.
தேவகெளடாவின் மகன் குமாரசாமி இப்போதிருக்கும் மற்ற கன்னட அரசியல்வாதிகளைக் காட்டிலும் ஒரு பங்கு நல்லவர் என்று பிறர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எடியூரப்பாவுடன் செய்து கொண்ட ‘நீ ஆறுமாதம்; நான் ஆறுமாதம்’ ஒப்பந்தத்தை சொதப்பியதில், குட்டி ராதிகாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதில் உருவாக்கிக் கொண்ட பிம்பம் என அடி மேல் அடி வாங்கி இப்பொழுது வெறும் மூன்றாவது சக்தியாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
கர்நாடக விவகாரத்தைப் பற்றி எழுதுவதற்காக இதை ஆரம்பிக்கவில்லை.
எழுத்தாளர் ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துவிட்டார். அநேகமாக பாராளுமன்றத் தேர்தலில் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் போலிருக்கிறது. ஞாநியை பாராட்டுபவர்களுக்கும் வாழ்த்துபவர்களுக்கும் இணையாக சமூக ஊடகங்களில் கிண்டலடிப்பவர்களும் தாக்குபவர்களும் அதிகம். ‘எத்தனை லட்சங்கள் வாங்கினார், எத்தனை கோடிகள் வாங்கினார்’ என்று கூச்சமே இல்லாமல் எழுதுகிறார்கள். நோட்டுக்கு விழும் மனிதராக இருந்திருந்தால் அவர் எப்பொழுதே பெரும் கோடீஸ்வரராகியிருக்கக் கூடும்.
ஞாநியின் அரசியல் செயல்பாடுகள் இன்றுதான் ஆரம்பித்திருக்கின்றன என்று நம்பிக் கொண்டிருப்பவர்களின் விமர்சனங்கள் இவை. ஞாநிக்கு அரசியல் புதிதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசியல் களங்களில் மிகத் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார் என்பதுதான் உண்மை. ரிட்டையர்ட் ஆன காலத்தில் பதவிக்கு ஆசைப்படுகிறார், பணத்துக்காக அரசியலுக்கு வருகிறார் என்பதெல்லாம் வெறுமனே அவர் மீது புழுதி வாரி வீசுவதற்காக எழுதப்படும் வாசகங்கள். ஞாநி அப்படிப்பட்ட ஆள் இல்லை.
நமது அரசியல் சார்புகளையும், கட்சி சார்ந்த விருப்பங்களையும் ஒரு வினாடி ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ஞாநி போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை நிச்சயமாக வரவேற்போம் என நினைக்கிறேன். எந்தவொரு அரசியல்வாதியைவிடவும் ஞாநி ஒரு துளியாவது மேன்மையானவராக இருப்பார் என முழுமையாக நம்பலாம். அவரது கருத்துக்கள் நமக்கு எவ்வளவுதான் எதிர்ப்புடையவையாக இருந்தாலும் அவர் மிக நேர்மையான மனிதர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் தேவையில்லை.
தனக்கு என்ன தோன்றுகிறதோ, தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேசக் கூடிய மிகச் சில கருத்தாளர்களில் ஞாநி மிக முக்கியமானவர். இங்கு யாருடைய கருத்தை அத்தனை பேரும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள்? ஒருவர் வெளிப்படையாகச் சொல்வதை நான்கு பேர் ஏற்றுக் கொண்டால் எட்டுப்பேர் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஞாநி பேசுவதை பதினாறு பேர்கள் எதிர்க்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அதற்காக அவர் எந்தக் காலத்திலும் ஒதுங்கிக் கொண்டது இல்லை என்பதுதான் முக்கியம்.
ஞாநி தனது மோடி எதிர்ப்பு பேச்சுகளுக்காகவும், கருணாநிதி எதிர்ப்பு அரசியலுக்காகவும்தான் தற்போது மிகத் தீவிரமான விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவை ஒரு பக்கம் கிடக்கட்டும்.
ஞாநி போன்ற உரத்த சிந்தனையாளர்கள், வெளிப்படையான கருத்தாளர்கள், தயக்கமில்லாமல் பொதுவெளியில் ஒரு விவாதத்தை உருவாக்குபவர்கள் தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு முக்கியமான செயல். அடுத்து வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான விவாதம் என்றால் என்ன என்பதையும், பணமில்லாத வாக்குகள் சாத்தியம் என்பதையும் வெளிக்காட்டுவதற்கேனும் இத்தைகைய தேர்தல் பங்கேற்புகளை நாம் ஆதரிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
பெரும் அரசியல் கட்சிகளின் பிரச்சார பலம், அவர்களிடம் இருக்கும் தொண்டர்கள் மற்றும் ஊடக பலத்திற்கு மத்தியில் இவரது தேர்தல் போராட்டம் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஞாநியின் வயது, அவரது உடல்நிலை, தேர்தலுக்கு இருக்கும் மிகக்குறைந்த கால அவகாசம், பாராளுமன்றத் தொகுதிக்காக பிரச்சாரம் செய்ய வேண்டிய பரந்த நிலப்பரப்பு ஆகியனவற்றையும், அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஸ்டண்ட்கள், ஆம் ஆத்மியின் சரிந்து கொண்டிருக்கு இமேஜ் போன்றவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் ஞாநி வெல்வது லேசுப்பட்ட காரியம் இல்லை.
வெல்கிறார் அல்லது தோற்கிறார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். வெற்றி பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அரசியல் பலன்களுக்காகவும் அதிகார ஆதாயங்களுக்காகவும் பணம் கொழிக்கும் கட்சிகளை அண்டி நிற்காமல், எந்தவிதமான உள்கட்டமைப்பும் இல்லாத கட்சியில் சேர்ந்து களம் இறங்கும் ஞாநிக்கு நமது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.
27 எதிர் சப்தங்கள்:
என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி மணிகண்டன். நிச்ச்யம் அதற்குத்தக உழைப்பேன். அன்புடன் ஞாநி
மிக சரி.மோடியை கடுமையாக எதிர்ப்பவர்கள் இவரையும் எதிர்ப்பார்கள்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பதெல்லாம் இவர் விசயத்தில் WORK OUT ஆகாது.
ரொம்ப நாளா படிக்கிறேன்.comment box இப்பதான் கண்ணுல பட்டுது.
வாழ்ததுகள் ஞாநி சார்......
மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு.ஞாநி !!
Gnani,
He will be Common man's voice No doubt in that .I read one of his article about Kamaraj Governance .In that he explained why his governance was not golden period in Tamilnadu. Hats off to your points eventhough I am not accepting all of his views. As Kamaraj showed how to run a goverment, Gnani should show how to represent a common man in Parliament .
இப்படி பல்வேறு துறையினரும் அரசியலுக்குள் குதித்தால் தான் அரசியலில் உள்ள சகதிகள் வெளியெறும்
மக்களுக்கு சிறிதளவாவது தீமைகள் குறையும்.
வாழ்த்துக்கள் ..........!!!!!!
எங்கேயாவது பாராட்டி எழுதியதும் உடனே வந்து
பதில் எழுதி விடுகிறார்.
இதே வேகம் இவரிடம் கேட்கப்பட்டுள்ள
நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும் இருக்க
வேண்டுமல்லவா ?
http://vimarisanam.wordpress.com/2014/03/05/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/
-ல் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஞாநியின்
விளக்கங்களைச் சொன்னால், நீங்கள் பாராட்டும்
நேர்மையை மற்றவர்களும் புரிந்து கொள்ளலாம்..!
இல்லையேல், உங்கள் பாராட்டுக்களுக்கு அவர்
தகுதி உடையவர் ஆக மாட்டார்..
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Vazhthukkal gnani sir. Its a good start. Atleast we as a comman man can have some hope and belief in election process if you kind of people come directly into contest
ம்ம்ம்ம் தயாநிதி மாறனை எதிர்த்து நிற்கிறார், அவர்கள் பணத்தை பாதாளம் வரைக்கும் வாரி இரைப்பார்கள், இருந்தாலும் ஞாநி அவர்களின் முயற்சி மலையை கட்டி இழுக்கும் முயற்சிதான், வந்தா மலை போனால் அது, அம்புட்டுதான்...
முயற்சியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் !
ஞாநி அவர்கள் 70, 80-களிலேயே பலதரப்பட்ட தீவிர அரசியல் வெளியில் இயங்கியவர் என கேள்விப்பட்டதுண்டு. அவை எல்லாம் போக அவரது எழுத்துக்களை அதிகம் வாசித்திருக்கின்றேன். தெளிவான பார்வையும், முதிர்ச்சியடைந்த சிந்தனையும் நிறையவே இருக்கின்றன. அவற்றின் தாக்கம் தான் என்னை எல்லாம் கூட எழுதத் தூண்டியது என சொல்லலாம். கடந்த சில பல ஆண்டுகளாக வெறுமனே அரசியல் விமர்சகராக மட்டும் அறியப்பட்டும் வந்திருக்கின்றார்.
சொல்லப் போனால் ஆரோக்கிய அரசியல் வெளியில் நல்ல சிந்தனாவாதிகள் நுழைய வேண்டும். ஆனால் இந்திய அரசியல் சூழலில் நல்லவர்களுக்கு எங்கே இடம் இருக்கின்றன என்ற நிலையில் பலரும் ஒதுங்கியே இருந்தனர். ஆனால் மரபார்ந்த ஊழல்வாத, மதவாத, அடக்குமுறைகள் நிறைந்த, குடும்ப அரசியல் செய்யும் என பலதரப்பட்ட ஓட்டை உடைச்சல் கட்சிகள் உல்ல தேசத்தில், ஆம் ஆத்மி போன்ற சமூக அக்கறையையும், வெளிப்படைத் தன்மையையும் கொண்ட கட்சியில் ஞாநி, உதயகுமார் போன்றோர் இணைந்திருப்பது நம்பிக்கை தருகின்றன. குறிப்பாக வளர்ந்து வரும் கட்சியில் தீர்க்கமான ஞானமுடையவர்கள் இணைந்து கொள்ளும் போது, அதன் கொள்கைகள், செயல்பாடுகளில் ஆழ்ந்த தாக்கத்தை இவர்களால் ஏற்படுத்த இயலும். இது நல்லதொரு வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும்... அந்த வகையில் ஞாநி, உதயகுமார் உட்பட சமூக ஆர்வலர்கள் அரசியலுக்குள் வருவதும், அவர்களை மக்கள் பிரதிநிதித்துவம் செய்வதிலும் தான் நாளைய இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் நற்பயனாய் அமையும்.. !
all the best sir
//நமது அரசியல் சார்புகளையும், கட்சி சார்ந்த விருப்பங்களையும் ஒரு வினாடி ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ஞாநி போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை நிச்சயமாக வரவேற்போம் என நினைக்கிறேன். எந்தவொரு அரசியல்வாதியைவிடவும் ஞாநி ஒரு துளியாவது மேன்மையானவராக இருப்பார் என முழுமையாக நம்பலாம். அவரது கருத்துக்கள் நமக்கு எவ்வளவுதான் எதிர்ப்புடையவையாக இருந்தாலும் அவர் மிக நேர்மையான மனிதர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் தேவையில்லை. //
மிக உண்மை ...
அத்துடன் வேறுபட்ட சிந்தனையுடையோரும் அரசியலில் ஈடுபாடு காட்டவேண்டும்.
I am under the impression that Gnani returned his voter ID card on Kudankulam problem. If it is so how can he stand in the election? Moreover he is known for his NOTA. NOTA can be applied against him also.
Jayakumar
ஞாநி வேறொரு பதிவில் எழுதியிருந்த கமெண்ட் இது...
ஞாநி சங்கரன்: வேட்பாளர்கள் யாரும் சரியில்லை என்று கருதினால் இப்போதும் ஓ (நோட்டா) போடலாம். என் தொகுதியிலும் கூட நான் உட்பட யாரும் சரியில்லை என்று நீங்கள் கருதினால் அங்கேயும் நோட்டா போடுவதை நான் ஆதரிக்கிறேன். ஒரு வேட்பாளர் தகுதியானவர் என்று கருதினால் அவரை ஆதரியுங்கள். அந்த அடிப்படையில் ஆதரவு கேட்டுத்தான் நான் தேர்தலில் நிற்பேன்.
நேர்மையான மூத்த பத்திரிகையாளருமான ஞானிக்கு மனபூர்வமான வாழ்த்துக்கள் :)
மத்திய சென்னை தொகுதி மக்கள் இந்த நல்ல வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டால் நல்லது .
Slowly we can expect a good MP's in the upcoming elections...All the best sir.
ஞாநி போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை நிச்சயமாக வரவேற்போம்.
உடன்படுகிறேன். அவருக்கு வாழ்த்துகள்.
மணிகண்டன் சார், பின்னோட்டப் பெட்டியை திறந்ததற்கு முதலில் உங்களுக்கு வாழ்த்துகள் ! :-)
ஞாநியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி கூறணும்னா,
"ஞாநி போன்ற உரத்த சிந்தனையாளர்கள், வெளிப்படையான கருத்தாளர்கள், தயக்கமில்லாமல் பொதுவெளியில் ஒரு விவாதத்தை உருவாக்குபவர்கள் தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு முக்கியமான செயல்."
என்ற உங்கள் கருத்தோட அப்படியே ஒத்துப்போகிறேன்.
ஞாநி சாருக்கும் எனது வாழ்த்துகள் !
நம்ம தருமி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு!
அரசியல் என்னும் சாக்கடையை சுத்தம் செய்ய ஞாநி அய்யா தன்னாலான முயற்சியை தொடங்கி இருக்கிறார் வாழ்த்துக்கள் ஐயா.
திரு.ஞாநி பற்றிய தங்கள் கூற்று மெய்யே. நல்ல மனிதர் அவர். அவர் தேர்தலில் நிற்பது பற்றிய எனது பதிவு கீழே.
http://wp.me/p3e0T5-1iA
Thanks for providing the opportunity for leaving a feedback.
I am following Mr Gnani was several years now. He may be a controversial person, but , surely not a hypocrite. Cho is a popular person, But he makes many compromises if and when necessary. Unlike him, Gnani stands up on his views.The Indian political election system is currently not in favor of choosing mavericks like him. But, after the AAP tsunami in Delhi elections, it had offered us a glimmer hope. May his tribe increase.
ஞாநி ஒரு துளியாவது மேன்மையானவராக இருப்பார்.Thank you Manikandan & Congrats Gnani Avarkale!
ஞாநி போன்றவர்கள் தேர்தலில் நிற்பதும் வெல்வதும் இன்றைய அவசிய தேவை. அவரை ஆதரிப்பது கண்டிப்பான சமூக மற்றும் ஜனநாயக கடமையும் கூட. வெறுமனே ‘எவன் யோக்கியன்’ என்று புலம்பாமல் கட்சி அபிமானத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இவரை ஆதரிப்பது முக்கியம்.
"விமர்சனம்" காவேரி மைந்தனை வழி மொழிகிறேன்.
Post a Comment