Mar 13, 2014

எவ்வளவு சம்பளம் வேண்டும்?

ஊரில் ஒரு பையன் பொறியியல் படிப்பின் இறுதியாண்டில் இருக்கிறான். சுமாரான குடும்பம். இதுவரையிலும் கேம்பஸ் இண்டர்வியூ எதிலும் தேர்வாகவில்லை. ‘அடுத்து என்ன செய்யலாம்’ என்று விசாரித்தான். சரியான பதிலைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஐடி தவிர்த்து வேறு ஏதேனும் வேலை பற்றியும் யோசித்திருக்கிறான். ஆனால் சம்பளம் குறைவாக இருப்பதாகச் சொன்னான். அது வாஸ்தவம்தான். ஒப்பீட்டளவில் பிற துறைகளில் சம்பளம் குறைவாகத்தான் கொடுக்கிறார்கள்.

வேறு என்ன செய்வது?

எம்.டெக் படித்துக் கொண்டிருந்த போது ஐடி துறையில் வேலைக்குச் சேர்வதில்லை என்று இன்னும் சிலரோடு சேர்ந்து கங்கணம் கட்டியிருந்தேன். அந்தச் சமயத்தில் மென்பொருள் நிறுவனங்களில் ஆட்களுக்கு ஏகப்பட்ட தேவையிருந்தது. அள்ளியெடுத்தார்கள். ஒரே கல்லூரியில் டிசிஎஸ் எந்நூறு பேர்களை வேலைக்குத் தேர்ந்தெடுத்தால், சிடிஎஸ் தொள்ளாயிரத்துச் சொச்சம் பேர்களை தேர்ந்தெடுத்தது. விப்ரோ, ஹெச்.சி.எல் என்று எந்த நிறுவனமும் சளைக்கவில்லை. இறுதியாண்டு படிப்பு தொடங்கிய முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட அத்தனை மாணவர்களும் கையில் வேலையை வைத்திருந்தார்கள். நாங்கள் பத்து இருபது பேர் தழுங்கி போயிருந்தோம். அதுவும் கூட கங்கணத்தினால்தான். இல்லையென்றால் வத்தலோ, தொத்தலோ- ஒரு வேலை வாங்கியிருக்கலாம். அதன் பிறகு ஓரிரு மாதங்களுக்கு ஐடி சாராத நிறுவனங்களே (non-IT) வளாக நேர்முகத் தேர்வுக்கு வரவில்லை. கொஞ்சம் பயப்படத் தொடங்கினோம். ஒருவேளை, வேலை எதுவும் கிடைக்கவில்லையென்றால் போட்டித் தேர்வுகள் எழுதலாம் என்று தயாரிப்புகளில் ஈடுபடத் துவங்கிய போது கெட்ட நேரம் பீடித்துக் கொண்டது. ஹைதராபாத்திலிருந்து ஒரு நிறுவனம் வேலையில் ஆள் எடுக்க வந்திருந்தது. அது பெரிய நிறுவனம்தான். மின்மாற்றிகள் (Transformer) தயாரித்துக் கொண்டிருந்தார்கள். வருடத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு கோடிகளில் வர்த்தகம் நடைபெறும் நிறுவனம்.

ஆள் பிடிக்க வந்திருந்த இரண்டு பேரும் லாரல்-ஹார்டி போலிருந்தார்கள். எடுத்த உடனேயே எழுத்துத் தேர்வு. வெறும் பத்துப் பேர்கள்தான் எழுத்துத் தேர்வை எழுதினோம். எழுதிய அனைவருமே அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெற்றுவிட்டதாகச் சொன்னார்கள். அடுத்த சுற்று குழு விவாதம். அதிலும் அத்தனை பேரும் தேர்வு பெற்றுவிட்டதாகச் சொன்னார்கள். சிரமமே இல்லாமல் சுற்றுக்களை தாண்டிக் கொண்டிருக்கும் போதே விழித்திருக்க வேண்டும். ம்ஹூம். நேர்முகத் தேர்வில் வரிசையாக அழைத்தார்கள். 

“எவ்வளவு சம்பளம் வேண்டும்?” இதுதான் முதல் கேள்வியே. ஐடியில் வேலை வாங்கியிருந்தவன் ஒவ்வொருவனும் குறைந்தபட்சம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கப் போகிறான். இது எலெக்ட்ரிக்கல் நிறுவனம்; அதிகமாகக் கேட்டால் நம்மை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என்று பயந்து கொண்டே “பதினைந்தாயிரம் கொடுங்க சாமீ” என்றேன். அவ்வளவுதான் நேர்காணல் முடிந்துவிட்டது. அடுத்துப் போனவன் என்னைவிட பயந்தாங்கொள்ளி “பத்தாயிரம் கொடுங்க சாமீ...போதும்” என்றிருக்கிறான். அவனையும் அந்த ஒரு கேள்வியோடு அறையைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். கடைசியில் எங்கள் இரண்டு பேரையும் ஹைதராபாத் வரச்சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள். கலந்து கொண்ட பத்து பேரில் எங்கள் இருவரிடமும் அதிகமான மதிப்பெண்கள் இருந்ததால் நாங்கள் சிக்கிக் கொண்டோம். மற்ற எட்டு பேருக்கும் பயங்கரக் கடுப்பு- தேவையில்லாமல் ஒவ்வொரு சுற்றிலும் கலந்து கொள்ள வைத்துவிட்டார்கள் என்று. 

ஹைதராபாத்தில் சுந்தரத் தெலுங்கு இல்லை- கொச்சைத் தெலுங்குதான். ஆனால் ‘இப்புடு சூடு’ என்ற ரஜினியின் டயலாக் தவிர வேறு ஒரு வார்த்தையும் எனக்குத் தெலுங்கில் தெரியாது. பயந்துகொண்டுதான் சபரி எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கினேன். நிறுவனத்தைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டிய வேலை இருக்கவில்லை. ரயில்வே ஸ்டேஷனுக்கே கார் அனுப்பியிருந்தார்கள். பெருமையாக இருந்தது. அதோடு நிறுத்திக் கொண்டார்களா? ஹைதராபாத்தின் புகழ்பெற்ற பிரியாணியான பாரடைஸ் பிரியாணி வாங்கிக் கொடுத்தார்கள். அவ்வளவுதான். இந்த இரண்டு செயல்களும் போதும். ‘வேலைக்குச் சேர்ந்தால் இங்கேதான் சேர வேண்டும்’ என்று முடிவெடுத்துக் கொண்டோம். 

எங்கள் ஆயாவின் கடைசிக்காலம் அது. ஊர் முழுக்க பெருமையடித்துத் திரிந்திருக்கிறார். ‘ஹைதராபாத் போறானாம்..இப்போ பாஞ்சாயிரம் சம்பளம்...அடுத்த வருஷத்துலருந்து முப்பதஞ்சாமா’- இதில் கடைசி வரி ஆயாவே சேர்த்துக் கொண்டது. உண்மையில் முதல் ஒரு வருடத்திற்கு பத்தாயிரம்தான் சம்பளம். அடுத்த வருடத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆக்கப்படும் என்றுதான் கடிதம் கொடுத்திருந்தார்கள். அதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வருத்தம்தான். பி.ஈ முடித்தவுடனே வேலைக்குச் சென்றிருந்தாலும் கூட இவ்வளவு சம்பளம் வாங்கியிருக்க முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் அதை அவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

படிப்பு முடிந்தவுடன் பெட்டி படுக்கையெல்லாம் கட்டிக் கொண்டு இன்னொரு முறை ஹைதைக்கு கிளம்பிப் போனோம். முதல் நாள் அனைத்துச் சான்றிதழ்களையும் கொண்டு வரச் சொன்னார்கள். சுத்தபத்தமாக குளித்து நெற்றியில் ஒரு கீற்று திருநீறோடு சென்றிருந்தேன். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு பத்திரத்தை நீட்டினார்கள். ‘நான்கு வருடம் இதே நிறுவனத்தில் பணிபுரிவேன்’ என்பதற்கான உறுதிமொழி அது. இப்பொழுதுதான் முதல் அடி- அதுவும் பொடனியிலேயே விழுந்தது. ‘இப்படியெல்லாம் முன்பு சொல்லவே இல்லையே’ என்றோம். ‘இதுதான் நிறுவனத்தின் பாலிஸி. யாராக இருந்தாலும் இந்த உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும்’ என்றார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. கூட வந்திருந்தவன் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. கையெழுத்து போட்டுவிட்டான். அவனது அம்மா அப்பா அந்த ஊரில்தான் இருந்தார்கள். அதனால் அவனுக்கு பிரச்சினை இல்லை. எனக்குத்தான் நடுங்கியது. நான்கு வருடம் சிக்கிக் கொண்டால் தமிழ்நாட்டுக்கும் நமக்கும் தொடர்பே இல்லாமல் போய்விடுமோ என்று பயந்தேன்.  

‘உங்கள் வேலையே வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் போகவும் தைரியம் இல்லை. செலவு செய்து இவ்வளவு படிக்க வைத்துவிட்டார்கள்.  ‘வேலை இல்லை’ என்று எப்படி அம்மா அப்பா முகத்தில் முழிப்பது? அந்த பயத்திலேயே கையெழுத்திட்டுவிட்டேன். அவர்கள் சான்றிதழ்களையாவது திருப்பித் தந்திருக்கலாம். அதெப்படி தருவார்கள்? அதுதான் அவர்களுக்கு பிடி. வேலையை விட்டு வெளியேறும் போது சான்றிதழ்களை திரும்ப வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். விநாயகமுருகனின் துக்கம் தொண்டையை அடைப்பது பற்றி 2005 ஆம் ஆண்டே உணர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட தருணம் அது.

அதன் பிறகுதான் அத்தனை அடிகளும் பொடனி அடியாகவே இருந்தன. முதல் மாதச் சம்பளம் 6500 ரூபாய்கள். இதயம் நின்றுவிடும் போலிருந்தது. சாப்பாட்டுச் செலவுக்கு, போக்குவரத்துச் செலவுக்கு, பி.எஃப் என பிடித்தம் போக அவ்வளவுதான் வருமாம். லாரல்-ஹார்டியில் ஹார்டி மட்டும் சிக்கிக் கொண்டார்.  “இவ்வளவுதான் தருவீர்கள் என்றால் வந்திருக்கவே மாட்டேன். வீட்டிற்கு எதை அனுப்புவது?” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அழுகை பொத்துக் கொண்டது. மனம் இறங்கியிருப்பார் போலிருக்கிறது. அடுத்த மாதத்தில் கூடுதலாக இரண்டாயிரம் சேர்த்துக் கொடுத்தார்கள். அப்பவும் அழுகைதான். ஆனால் எனக்குள்ளேயே அழுது கொண்டிருந்தேன்.

இந்தப் பணத்தில் வீட்டு வாடகை, காலை-இரவு உணவுச் செலவு என முக்கால்வாசி கரைந்துவிடும். ஒரு முறை ஊருக்கு வந்துவிட்டு போனால் மிச்சமும் காலி. வெறுப்பாக இருந்தது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு உடன் படித்தவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் பேசினால் முதல் கேள்வி அல்லது இரண்டாவது கேள்வியாக என்ன வரும் என்று தெரியும். அந்தக் கேள்விக்கு பயந்தே பம்மிக் கொண்டிருந்தேன். அங்கு சம்பளம் மட்டும் பிரச்சினை இல்லை. அங்கு இருந்த சூழலும், வீட்டை விட்டு பிரிந்த துக்கமும், தொடர்புகளற்ற தனிமையும் பிழிந்து கொண்டிருந்தன. 

ஒரு வருடம் எட்டு மாதங்கள் கழிந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கிருந்து சொல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டேன். தொலைபேசியில் அழைத்தார்கள். பதில் சொல்லவில்லை. மூன்றாம் நாளே வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார்கள். அது நோட்டீஸ் இல்லை. மிரட்டல் கடிதம். காணாமல் போய்விட்டதாக காவல்துறையில் புகார் அளிப்போம் என்று சொல்லியிருந்தார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மா பயந்து போனார். மீண்டும் போய் அவர்களிடமே சேர்ந்து கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கோபியில் அப்புசாமி என்றொரு வக்கீல் இருந்தார். அவர்தான் ‘விடு தம்பி பார்த்துக்கலாம்’ என்று தேற்றினார். என்ன தைரியத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனாலும் பயம் உள்ளுக்குள் கிடந்து அலைகழித்துக் கொண்டிருந்தது. இரண்டு வாரங்கள் கழித்து இன்னொரு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். உள்ளூர் தபால்காரரிடம் சொல்லி ‘வீடு காலி செய்யப்பட்டிருக்கிறது’ என்று திருப்பி அனுப்பச் சொன்னோம். அவரும் உதவினார். அதோடு சரி. சனியன் தொலைந்தது. அதன் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. ஒரிஜினல் சான்றிதழ்கள் போனது போனதுதான்.

ஓரிரு வாரங்கள் கழித்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புது நிறுவனத்தில் சேர்ந்தேன். அப்படி சேர்ந்த புது நிறுவனம்தான் ஐடிதுறையில் கால் விடுவதற்கான முதல்படி.

இந்தக் கதையை முதல் பத்தியில் கேள்வி கேட்ட பையனுக்கு பதிலாகச் சொன்னேன். குழம்பாமல் இருப்பானா? 

‘அப்படீன்னா non-IT வேண்டாமாண்ணா?’ என்றான்.

‘நான் அப்படிச் சொன்னேனா முருகேசா?’ 

‘வேற என்ன அர்த்தம்?’

‘சேரலாம். non-IT நிறுவனங்களில் சேர்வதால் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் சேரும் போது நல்ல நிறுவனத்தில் சேர்கிறோமா? என்று விசாரிப்பது நெம்ப முக்கியம். வேலை கிடைக்கிறதே என்பதற்காக பொக்கனாத்தி கம்பெனிகளில் சிக்கிக் கொண்டால் அவ்வளவுதான். சோலி முடிந்துவிடும்’ என்றேன். அவனுக்கு புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ‘அப்புறம் பேசுகிறேன்’என்று துண்டித்துவிட்டான். மீண்டும் அழைப்பான் என்று நம்பிக்கையில்லை. ஒருவேளை அழைத்தால் non-IT நிறுவனங்களில் இருக்கும் நல்ல விஷயங்கள் பற்றிச் சொல்வதற்கு ஒரு கதை வைத்திருக்கிறேன்.

29 எதிர் சப்தங்கள்:

அரவிந்தன் said...

சான்றிதழ்களை திரும்ப பெற முயற்ச்சிக்கவில்லையா?

Anonymous said...

ha what a nativity in your story :) First time i read your blog. Its really Nice :)

rajakvk said...

ஒவ்வொரு முறையும் பள்ளி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சிபாரிசோடு வேலைக்கு உதவி கேட்டு அணுகும் கல்லூரி முடிந்த குழந்தைகளின் தொலைபேசி அழைப்பை எடுக்கும் முன் மனம் குழம்பி போகிறது அவர்களை விட.

Shankari said...

Well narrated... waiting to know whether u got ur original certificates,,,,,

Thomas Ruban said...

//non-IT நிறுவனங்களில் இருக்கும் நல்ல விஷயங்கள் பற்றிச் சொல்வதற்கு ஒரு கதை வைத்திருக்கிறேன்.//

சூப்பர்..)

Vaa.Manikandan said...

சான்றிதழ்களை அவர்களிடமிருந்து பெற முடியவில்லை. ஆனால் அதற்கு வேறு ஒரு கதை இருக்கிறது. சமயம் வரும் போது சொல்லிவிடுகிறேன்.

Dhilbas said...

வருடத்திற்கு 1500கோடிக்கு வர்த்தகம் பண்ற Transformer கம்பெனி எது?..

Vaa.Manikandan said...

இவ்வளவு சொல்லியிருக்கேன்..இதைக் கண்டுபிடிக்க முடியாதா? :)

-தோழன் மபா, தமிழன் வீதி said...

ஒரிஜனல் சர்டிஃபிகெட் இல்லாம(ல்), வேற வேலை தேடுனது கஷ்டமா இருந்திருக்குமே....?

எம்.ஞானசேகரன் said...

அட! கமென்ட் பகுதிய ஓபன் செஞ்சிட்டீங்களா? நல்லதாப் போச்சி. மெயிலுக்கெல்லாம் கருத்தை அனுப்ப சிக்கல் இருக்குங்க.

அப்ப சான்றிதழ்கள் எல்லாம் போயிந்தா..........

ArViNd said...

இன்றும் இது தொடர்கிறது ..... பெங்களூர் உள்ள பல NON IT Company இதை செய்து கொண்டு தான் உள்ளது ...

natarajan said...

ப்ரோ.. நாங்க உங்ககிட்ட கதை கேக்கல!! ஆமா.. இல்லைன்னு பதில் சொல்லுங்க போதும்! அதெப்படி ப்ரோ ஒரிஜினல் சான்றிதழே இல்லாம வேற ஒரு கம்பெனில சேந்தீங்க.. பெரிய ஆளா இருப்பீங்க போல

Vaa.Manikandan said...

ஒரிஜினல் இல்லையென்றால் படிக்கவே இல்லையென்று அர்த்தமா? பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்களின் பிரதிகளை வாங்குவதற்கு வழிகள் இருக்கின்றன.

ராஜி said...

கருத்துரைப் பெட்டி திறாந்தாச்சா!? நான் விரும்பி படிக்கும் தளம் உங்களுது! நல்லாவும் எழுதுறீங்க!! அப்புறாம் ஏன் கருத்துப் பெட்டியை மூடி வைக்குறீங்க சகோ!

ராஜி said...

இப்போ பாஞ்சாயிரம் சம்பளம்...அடுத்த வருஷத்துலருந்து முப்பதஞ்சாமா’
>>
இப்படித்தான் எல்லாப் பெத்தவங்களும் கதை விடுறாங்களா!?

Suresh said...

I am following you last one month. So nice your writings.

அமுதா கிருஷ்ணா said...

இப்படி போடப்படும் காண்ட்ராக்டுகளை வைத்து கொண்டு கம்பெனிகளால் நம் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்றும் சொல்கிறார்களே???

எண்ணச்சிதறல்கள் said...

Even though i enjoy your blog for a long time, it is so much fun to read with comments.

Anonymous said...

இன்றைய நிலையில் தமிழகத்தில் அதிகளவு இளைஞர்கள் எந்த துறையில் கல்வி கற்றிருந்தாலும், எந்த துறையில் திறமையும் ஆர்வமும் இருந்தாலும் ஐடி துறைக்குள் செல்கின்றனர், செல்ல நினைக்கின்றனர். பெற்றோர், உற்றோர் எனப் பலரும் தொழில்நுட்ப துறைக்குள் போனால் கைநிறைய கொத்தலாம், அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்காவுக்கு போகலாம் என்ற கனவின் மிதப்பில் போய் விழுகின்றனர். பின்னர் அதில் இருந்து வெளியே வருவது என்பது இயலாக் காரியமாகி விட்டது.

தமிழகத்தில் இப்போது எல்லாம் கல்லூரி விரிவுரையாளர் இடங்கள் கூட பற்றாக்குறையாகி வருகின்றது. எனக்குத் தெரிந்த தோழி ஒருத்தி ஆங்கிலம் MA, MPhil முடித்துவிட்டு ஒரு கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட 30, 000க்கும் மேல் சம்பாதிக்கின்றாள். கிட்டத்தட்ட பல கல்லூரிகளில் நல்ல விரிவுரையாளர்களை வலை போட்டு தேட வேண்டிய நிலை வந்துவிட்டது.

மற்றது தொழில்நுட்பம் சாராத Core Field என்பதில் நுழையும் போது ஆரம்பத்தில் சம்பளம் குறைவாகவே இருக்கும், ஆனால் ஆரம்ப காலங்களில் அனுபவத்தை பெறுவதே நல்லது. என்னோடு பள்ளியில் படித்த நண்பன் ஒருவன் தொழில்நுட்பத்துக்குள் நுழையாமல் Mechanic Engineering படித்துவிட்டு பத்தாயிரம் சம்பளத்தில் ஜார்க்கண்டில் வேலைக்கு சேர்ந்தான். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஜார்க்கண்ட், ஆந்திரா, கருநாடக என பணியாற்றி விட்டு, தற்சமயம் வட மாநிலம் ஒன்றில் நல்ல நிறுவனத்தில் பணியில் உள்ளான், சம்பளம் கிட்டத்தட்ட 40, 000க்கும் மேல்.

அனுபவம் இல்லாத நிலையில் அந்த தருணத்துக்கு ஏற்ப சம்பளத்தை Demand செய்யலாம், அதே சமயம் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க சம்பளத் தொகையை அதிகமாக கோரலாம், தராத பட்சத்தில் நல்ல வேறு நிறுவனங்களில் விண்ணப்பத்து முயலலாம். ஆனால் எல்லோருக்கும் எளிதாக நோகாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஐடி துறைக்குள் போய்விடுகின்றனர்.

தாங்கள் சொல்வது போல நல்ல நிறுவனங்களில் சேர்வது தான் புத்திசாலித்தனம், அதே சமயம் அனுபவமும், வேலையில் முதிர்ச்சியும், தொழில் ஞானமும் கூட தேவைப்படுகின்றது. புதிதாக வருவோருக்கு சம்பளத்தை விடவும் மேற்கொன்ன மூன்று விடயமும் அதிமுக்கியமானவை. அவற்றை பெற்றுக் கொண்டால் சம்பளத்தை தானாகவே பெருக்கிக் கொள்ளலாம்.

பாலா said...

என்னங்க இது கேனத்தனமா இருக்கு M Tech படிச்சுட்டு இப்பிடி ஒரிஜினல் குடுத்துட்டு வந்துட்டேன் ஈஸியா சொல்றீங்க ,நாலாம் போட்டோ கப்பியே குடுக்கமாட்டேன், படிச்சது டிப்ளமா தான் ஹிஹிஹி

Sendil said...

Alstrom

GANESAN said...

Thanks for opening comment box.

மணிமகன் said...

Enna Boss solla varinga, appa IT-la irukarvanga ellam velaiye seiyama sambalam vangurangala enna? Illa college mudichittu vela thedravanga appadi nenaikarangala?

Muthuram Srinivasan said...

எப்புடிங்க டெய்லி ஒரு போஸ்ட்டாவது போட்டுடுறீங்க அதுவும் சுவராசியமான விஷயங்களோட.... சூப்பருங்க..

Unknown said...

I am following your blog last 1 year. Very nice & natural writings. Keep it up...
Thanks for opening for command box...

-Kavitha Saran

Vijayashankar said...

சுவையான எழுத்து. நீங்க சேர்ந்த கம்பெனி என் பெயர் கொண்ட கம்பெனி தானே? இப்போ என்ன பண்ணுறீங்க. இந்தியாலே தான் எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் எல்லாம். அமெரிக்காவில் வேலை செய்தால் ரெபரென்ஸ் மட்டும் தான் (!) மேலும் கணக்கு முடித்த விபரம் காட்டலாம். நானும் நான் ஐ டி போகலாம் என்று தான் நினைத்து, முதல் கம்பெனி ஆப்பர் ப்ரோக்ரேம்மிங் வேலைக்கு கொடுத்தும்... ( கேம்பஸில் ஒருவருக்கு ஒரு வேலை மட்டுமே ) சிஸ்டர் கம்பெனிக்கு ஐ டி சப்போர்ட்டுக்கு மாற்றி விட்டனர். ப்ரோக்ரேம்மிங் வேலைக்கு மாற ஒரு வருடம் மேல் ஆனது... நல்லதாகவே போனது. அமெரிக்காவில் மாஸ்டர் டிக்ரீ பண்ண போகவே இல்லை, நேரா மூன்று வருடத்தில் அங்கு...

Paramasivam said...

வேலைக்கு சேருமுன் உங்கள் தெருவில், அல்லது பள்ளியில் அல்லது உறவினர்களில் ஒருவரோடும் பேச்சு வார்த்தையே இல்லையா? கல்லூரி சீனியர்களிடம் சண்டையா? Atleast, guidance teacher உடன் கூட சண்டையா. என்ன இது. M Tech படித்து, நீட்டிய காகிதத்தில் கையெழுத்திட்டேன் என்கிறீர்கள். உடன், சொல்லாமல் கொள்ளாமல், வேலையை விட்டுட்டு ஓடி வந்து விட்டேன் என்கிறீர்கள்?

Unknown said...

Bro ... Semma... Veettuku Oru aaya :) :) //எங்கள் ஆயாவின் கடைசிக்காலம் அது. ஊர் முழுக்க பெருமையடித்துத் திரிந்திருக்கிறார். ‘ஹைதராபாத் போறானாம்..இப்போ பாஞ்சாயிரம் சம்பளம்...அடுத்த வருஷத்துலருந்து முப்பதஞ்சாமா’- இதில் கடைசி வரி ஆயாவே சேர்த்துக் கொண்டது//

J A G A N said...

Definitely, facing the same here.