Mar 15, 2014

தோட்டிகள் இன்னமும் இருக்கிறார்களா?

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறதா? தமிழகத்தில் ஒழித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது. பாம்பே டைப் கழிவறைகளில்- அதை பாம்பே டைப் என்றுதான் சொல்வார்கள்- வெளிப்புறமாக ஒரு தகரம் வைத்து மறைத்திருப்பார்கள். காலை நேரத்தில் பஞ்சாயத்து போர்டிலிருந்து ஆட்கள் வருவார்கள். அவர்கள் கையில் நுனியில் மடக்கப்பட்ட ஒரு தகரம் இருக்கும். நாகபாம்பு படம் எடுப்பது போன்ற தோற்றத்தில் அந்தத் தகரம் மடக்கப்பட்டிருக்கும். கழிவறையின் மறைப்புத் தகரத்தை தூக்கிவிட்டு தங்களிடமிருக்கும் பாம்புத் தகரத்தில் மலத்தை சுரண்டி எடுத்து வாளியில் போட்டுக் கொள்வார்கள். 

அந்தக் காலங்களில் அவர்களின் முகத்தைப் பார்ப்பது கூட அருவெருப்பான செயல் என்று சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் வரும் போதே வீதியில் துர்நாற்றம் வருவதான ஒரு பாவனையில் இருப்பார்கள். அதனால் அவர்கள் வரும் போது முகத்தைச் சுளித்தபடியே விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தை இடமாற்றுவது எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு வாடிக்கையாக இருந்தது. அவர்களின் முகம் கூட எதுவும் இப்பொழுது ஞாபகத்திற்கு வரவில்லை. அவர்களை ஏறெடுத்து பார்த்திருந்தால்தானே ஞாபகம் இருக்கும். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அவர்களின் பாம்புக்கரண்டியும், மலம் நிரம்பிய வாளிகளும்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இன்னொரு விஷயமும் ஞாபகம் இருக்கிறது. மழைக்காலங்கள். அத்தகைய கழிவறைகள் புழக்கத்தில் இருந்த காலத்தில் மழை வந்துவிட்டால் வீதியில் கால் வைக்க முடியாது. அதுவும் அடைமழைக்காலங்களில் வீட்டில் வெளியவே விடமாட்டார்கள். வீதிகள் அத்தனை அவலமாகக் இருக்கும். காலங்காலமாக ஊர்களைச் சுத்தம் செய்த அவர்கள் இப்பொழுது எங்கே போய்விட்டார்கள், அவர்களின் வாரிசுகள் என்னவாகியிருப்பார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை. எங்கள் ஊரில் ‘பன்னியாண்டி’களும் உண்டு. பன்றி மேய்ப்பவர்கள். சாக்கடைகளில் மேயும் பன்றிகள் உறங்குவதும் இவர்கள் உறங்குவதும் ஒரே குடிசையில்தான் இருக்கும். பாவப்பட்ட ஜென்மங்கள். அவர்கள்தான் கழிவறை சுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள் என்று மங்கலாக ஞாபகம் இருக்கிறது. 

ஊரில் இன்னமும் பன்றிகள்  இருக்கின்றன. நல்லவேளையாக பன்னியாண்டிகள் என்ற அடைமொழி யாருக்கும் இல்லை.

பொடியன்களாக இருக்கும் போது தலை கலைந்து கிடந்தாலோ, உடலில் அழுக்கு அப்பிக் கிடந்தாலோ அடி விழும் போதெல்லாம் ‘மேலும் காலும் பாரு..பன்னியாண்டிப்பசங்க மாதிரி’ என்றுதான் விழும். அது வீட்டில் அடி விழுந்தாலும் சரி; பள்ளியில் ஆசிரியரிடம் அடி விழுந்தாலும் சரி. ஒரே வசவுதான். பன்னியாண்டிப் பையன்கள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள்; சுத்தமாக இருக்க மாட்டார்கள்; பன்றிகளோடு பன்றிகளாகத் திரிவார்கள்; மண்ணில் விளையாடுவது போலவே மலத்திலும் விளையாடுவார்கள். இப்படித்தான் சொல்லித் தந்தார்கள். நாங்களும் அப்படித்தான் நம்பியிருந்தோம்.

அவர்களும் மனிதர்கள்தான் என்ற ஒரு எண்ணமே மனதில் இருந்ததில்லை. ஜந்துக்கள். அப்படித்தான் மனதுக்குள் பதிந்து போய் கிடந்திருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்து அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அதற்கு காரணமிருக்கிறது.  நேற்றுதான் ‘தோட்டியின் மகன்’ என்ற நாவலை வாசித்து மூடி வைத்தேன். மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்டு தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்திருக்கிறார். இந்நாவல் 1940 ஆம் ஆண்டுகளிலேயே எழுதப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட அப்பொழுதே -1950 வாக்கில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சரஸ்வதி’ இதழில் தொடராகவும் வந்திருக்கிறது. 

பதினைந்து வருடங்களுக்கு முன்புதான் புத்தக வடிவம் ஆக்கப்பட்டிருக்கிறது. எழுதிய இத்தனை வருடங்களுக்குப் பிறகு படித்தாலும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. இன்னமும் ஐம்பது வருடங்கள் கழித்து வாசித்தாலும் அப்படியேதான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி காலாகாலத்துக்கும் சாஸ்வதம் பெறுகிறது அல்லவா? இதைத்தான் க்ளாஸிக் என்கிறார்கள். இந்த நாவலை தாராளமாக க்ளாஸிக் என்று சொல்லிவிடலாம்.

ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதும் போது கதையைச் சொல்லிவிடாமல் இருப்பது நல்லது. அதனால் கதையெல்லாம் சொல்லவில்லை. கேரளாவின் ஆலப்புழை முனிசிபாலிட்டியில் அந்தக் காலத்தில் தோட்டிகளாக இருந்த குடும்பங்களைப் பற்றிய கதை இது. அந்தக் குழுவில் சுடலைமுத்து என்ற தோட்டியின் மகனும், அவனது மனைவியான வள்ளிக்குமான காதல், உறவு, அவர்களுக்குத் தங்கள் மகன் மீதான பாசம் ஆகியவற்றின் ஊடாக தோட்டிகளின் பிரச்சினைகள், மேல் வர்க்கத்தினரின் சுரண்டல்கள், அந்தக் காலத்தின் கொள்ளை நோய்கள் என எல்லாவற்றையும் துல்லியமாகவும் கச்சிதமாவும் நூற்றியருபது பக்கங்களில் எப்படி அடக்க முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன்பிருந்த பன்னியாண்டிகளும் தோட்டிகளுமே மிக மிகப் பாவப்பட்டவர்கள் என்றால் அறுபது வருடங்களுக்கு முந்தைய தோட்டிகளின் நிலை எப்படியிருந்திருக்கும் என்பதை இந்த நாவல் தத்ரூபமாக சித்திரப்படுத்தியிருக்கிறது. இது ஒரு துன்பியல் நாவல்தான். கசக்குவதே தெரியாமல் நமது மனதை கசக்கும் நாவல்.

டேனியலின் ‘எரியும் பனிக்காடு’ நாவலிலும் தேயிலைக் காடுகளில் பணிபுரிவதற்குத் தேவையான அடிமைகளை திருநெல்வேலிப்பக்கத்திலிருந்துதான் அழைத்துச் செல்வார்கள். இந்த நாவலிலும் ஆலப்புழைக்குத் தேவையான தோட்டிகளை நெல்லைச் சீமையிலிருந்துதான் அழைத்துச் செல்கிறார்கள். அந்தக் காலத்தில் நெல்லை ஏழைகள்தான் பாவப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் போலிருக்கிறது.

சு.ராவின் மொழிபெயர்ப்பை பற்றியும் சொல்லி விட வேண்டும். ஒரு கூர்மையான கத்தியை வெண்ணைக்கட்டியில் இழுப்பது மாதிரியாக கீறிக் கொண்டே போகிறது. ஏதோ ஒரு கட்டுரையில் மொழிபெயர்ப்பு பற்றியும் அதன் செம்மைப்படுத்துதல் பற்றியும் குறிப்பிடும் போது ‘நூறாவது தடவை வாசிக்கும்போது கூட ஏதாவது தவறு கண்ணில் படும்’ என்று சு.ரா எழுதியிருப்பதாக சமீபத்தில்தான் படித்தேன். எழுத்தைப் பொறுத்தவரையிலும் தனது ஒவ்வொரு செயலையும் மிகச் சிரத்தையுடன் செய்த மனிதர் சு.ரா. அதை இந்த நூலிலும் காட்டியிருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

மொத்த புத்தகத்தையும் மூன்றரை மணிநேரத்தில் முடித்துவிடலாம். அப்படித்தான் நான் முடித்தேன். முடித்துவிட்டு விடிந்த பிறகு இன்னொரு முறையும் வாசித்துவிட்டேன். அவ்வளவு பிரமாதமான நாவல் இது.  

தோட்டியின் மகன் நாவலை ஆன்லைனில் வாங்கலாம்.

11 எதிர் சப்தங்கள்:

P.A.A.PRAGASAM said...

தூப்புக்காரி-----கிட்தட்ட இதே மாரித்தான் இருக்கும்னு நினைக்கிறன்

MMESAKKI said...

உங்கள் எழுத்து மிகவும் பிடிக்கும் மொபைலிலே
உங்கள் தளத்தை படிக்கிறேன். நன்றி. உங்களிடம் போனில் பேசலாமா. காத்திருக்கிறேன். இசக்கி திருநெல்வேலி.

thanthugi said...

//மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறதா? தமிழகத்தில் ஒழித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது// - மணிகண்டன், தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இந்தக் கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எந்தவொரு ரயில்நிலையத்தையும் தெருவையும் கடப்பவர் எளிதில் காணக்கூடியதே இந்த அவலம். கூகிளில் manual scavenging in tamilnadu என்று பாருங்கள், வண்டிவண்டியான பீக்குவியலுக்குள் மனிதர்களைக் காணமுடியும்.
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/manual-scavenging-goes-on/article2160133.ece
http://www.kractivist.org/gujarat-ahmedabad-has-188-manual-scavengers-says-census-11/

Vaa.Manikandan said...

எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம் இசக்கி :)

Vaa.Manikandan said...

சரிதான் சார். ஈரோடு ரயில் நிலையத்தில் கூட பார்த்த ஞாபகம் வருகிறது.

aavee said...

இன்னும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது.. "தூப்புக்காரி" எனும் புத்தகத்தில் மலர்வதி அவர்கள் நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் சொல்லியிருப்பார்.. "தோட்டியின் மகன்" இன்னும் படிக்கவில்லை..படிக்க வேண்டும்..

Anonymous said...

ஒரு பக்கம் 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி' என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம்.இன்னொரு புறம் இம்மாதிரி சமூக அவலங்கள் தொடர்கின்றன. சமூக நீதி என்று சொல்லிக்கொண்டு மூன்று தலைமுறை அரசியல் நடந்து முடிந்துவிட்டது. அவரவர்கள் சொத்து சேர்த்தது மட்டுமே கண்ட பலன். ஒரு பக்கம் 'ஹிந்தி எதிர்ப்பு' என்று சொல்லி மூன்று தலைமுறை முடிந்தது. ஆனால் அந்தப் போராட்டத்தின் மூலம் ஆதாயம் அடைந்த தலைவர் தனது பேரனை மத்திய அமைச்சராக்குகிறார். கேட்டால் 'அவனுக்கு ஹிந்தி தெரியுமே' என்று கூறுகிறார். ஒரு மாதிரி சுரணை குறைந்துவரும் சமூகமாக மாறி வருகிறோமோ என்று தோன்றுகிறது.
ஆமருவி ( www.amaruvi.com)

”தளிர் சுரேஷ்” said...

இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது! தூப்புக்காரி, தோட்டியின் மகன் இரண்டும் வாசிக்க வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

இராஜிசங்கர் said...


துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றி பாடம் இதழில் வந்த கட்டுரையின் இணைப்பு: http://www.readwhere.com/read/210215/Paadam/Paadam-Oct13#dual/26/2

சுராகா/SURAKA said...

வெகு நாட்களுக்கு முன்னர் படித்தது.. இப்பதிவு ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்காததனாலேயே இன்னும் நினைவிருக்கிறது.. http://kolandha.com/2012/03/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தோட்டிகள் தமிழ்நாட்டில் இன்னும் பல கிராமங்களில் உள்ளனர் போலுள்ளது, 16/03/2014 நீயா நானா நிகழ்ச்சியில், நாட்டாண்மைகள், பஞ்சாயத்தைக் கூட்ட,வீடுவீடாக செய்தி சொல்ல தோட்டிகளையும் அனுப்புவதாகக் கூறினார்கள்.