Feb 4, 2014

சிக்கினால் சிதைத்துவிடுவார்கள்

வெள்ளிக்கிழமைகளில் சூரியன் அடங்கும் முன்பாக வீடு திரும்புவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. ரசனை என்றெல்லாம் ஒன்றுமில்லை. வெளிச்சம் இருக்கும் என்பதால் சினிமா சுவரொட்டிகளை ரசித்துக் கொண்டே மெதுவாக வீடு திரும்பலாம். நம் ஊரில்தான் வெள்ளிக்கிழமைதோறும் புதுச் சுவரொட்டிகளை ஒட்டுவார்களே. அன்றைய தினத்தின் காலை நேரத்தில் சுடு தண்ணீரைக் காலில் ஊற்றியது போல ஆத்திரமாக இருக்கும். அதனால் மாலைதான் பொருத்தமான நேரம். 

அதுவும் பெங்களூர் மாதிரியான நகரங்களில் பன்மொழி போஸ்டர்கள் உண்டு. காத்ரீனா கைஃப்பும் இருப்பாள்; ப்ரணீதாவும் உண்டு; தமன்னாவும் இருப்பாள். ஹன்சிகாவும் உண்டு. நம் ராசிபலனில் பன்னிரெண்டு கட்டங்களும் உச்சமடைந்திருந்தால் இவர்கள் அத்தனை பேரின் போஸ்டர்களையும் ஒரே சமயத்தில் ஒட்டுவார்கள். இல்லையென்றால் நட்சத்திர பலன்களுக்கு ஏற்ப யாராவது ஓரிருவர்தான். இப்படித்தான் நேற்று மேய்ந்து கொண்டு வந்த போது ஹன்சிகாவும், ப்ரணீதாவும் தட்டுப்பட்டார்கள். ஏதோ தெலுங்குப்படம் போலிருக்கிறது. மோகன்பாபுவின் மகனுக்காக இவர்கள் ஆடைக்குறைப்பு செய்திருந்தார்கள். அவரைப் பார்க்காதவர்கள் ஒரு முறை மன்ச்சு மனோஜ் என்று தேடிப்பார்த்துவிட்டால் என் பற்களின் நறநறப்பை துல்லியமாக உணர முடியும்.

நறநறத்துக் கொண்டு வந்த வழியில்தான் கொஞ்சம் கூட்டமாக நின்றிருந்தார்கள்.

அருலூரிலிருந்து கூட்லு கேட் வருவதற்கு ஒரு குறுக்கு வழி இருக்கிறது. அது குறுகலான வழியும் கூட. பெரும்பாலும் பன்றிகள் மேய்ந்து கொண்டிருக்கும். சாலை விளக்கு அவ்வளவாக இருக்காது. குருட்டு நிதானத்தில்தான் வண்டியை ஓட்ட வேண்டும். பன்றி மீது மோதிவிட்டால் உடனடியாக வண்டியை விற்றுவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் சற்று பயத்தோடுதான் ஓட்டுவேன். இந்தக் குறுக்குச் சாலையில் வண்டி ஓட்டுவது சிரமம் என்றாலும் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பதால் இந்த வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம்.

அந்தச் சாலையில் ஒரு அநாதையான வீடு உண்டு. பாழடைந்த வீடு. அந்த வீட்டுக்கு பதினைந்து அடிகள் தள்ளி பத்துப் பேர்கள் நின்றிருந்தார்கள். இரவு வெளிச்சத்தை தின்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த இடத்தில் கூட்டம் சேர்வது அதிசயம்தான். வண்டியை ஓரம் கட்டினால் கன்னடத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டிருக்கவில்லை. ஒருவனை பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். ஏதோ விவகாரம் நடந்திருக்கிறது. எனக்கு காதுகள் விடைத்துக் கொண்டன.

இவர்கள் காய்ச்சிக் கொண்டிருந்த போதே எங்கிருந்தோ ஒரு ஆஜானுபாகுவான மனிதர் வந்தார். புல்லட் வண்டியில். அனேகமாக அந்த ஏரியாவின் பெரிய மனுஷனாக இருக்க வேண்டும். கழுத்து நிறைய தங்கம் அணிந்திருந்தார். அவரது தோற்றத்துக்கு அது தோதானதாக இருந்தது. எனக்கெல்லாம் ஏதேனும் தண்டனை அளிக்க வேண்டுமானால் அந்த நகைகளை கழுத்தில் போட்டுவிட்டு அரை மணிநேரம் நிற்ககச் சொன்னால் போதும். கழுத்து முறிந்துவிடும். அந்த ஆள் அசராமல் இரண்டு சட்டை பட்டன்களை கழட்டி விட்டிருந்தார். கைகள் இரண்டும் கிட்டத்தட்ட கர்லாக்கட்டைகளை ஒத்திருந்தன. ஈட்டி மரத்தில் செதுக்கிய கர்லாக்கட்டைகள்.

என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் நமக்கென்று யாராவது ஒருவர் மாட்டிக் கொள்கிறார். தமிழ்க்காரர் ஒருவர் நின்றிருந்தார். விசாரித்த போது அவருக்கும் பெரிய இன்பம் ‘நமக்கும் ஒருத்தன் சிக்கினாண்டா’ என்று உற்சாகமாக விவரிக்கத் தொடங்கிவிட்டார். பெரிய விவகாரம் இல்லை. சங்கிலி பறிப்பு. 

பெங்களூரில் இது சர்வசாதாரணம். 

எங்கள் அம்மா இனிப்பானவர். உடம்பு பூராவும் சர்க்கரை இருக்கிறது. அதனால் தினமும் காலையும் மாலையும் தாறுமாறாக நடந்து கொண்டிருக்கிறார். பெங்களூர் வந்த புதிதிலேயே சொன்னோம்- நகைகளை கழட்டி வைத்துவிட்டு நடக்கச் செல்லுங்கள் என்று. கிழவன் சொல்வதையெல்லாம் கிண்ணாரக்காரன் கேட்பானா? ஏதோ விதண்டாவாதம் பேசினார். ‘தாலியைக் கழட்டி வைக்க மாட்டேன்’ என்று செண்டிமெண்ட்டும் கலந்திருந்ததால் அடங்க வேண்டியதாகிவிட்டது. ஆனால் வெளியே நகையோடு யார் நடைப்பயிற்சி செய்தாலும் ரோந்து வரும் போலீஸ்காரர்களுக்கு மூக்கு வியர்த்துவிடும். அவர்களும் அம்மாவை எச்சரித்திருக்கிறார்கள். கண்டுகொள்ளாமல் இருந்தார். அடுத்த முறை பார்த்த போது காக்கிச்சட்டையார் கண்களை உருட்டியிருப்பார் போலிருக்கிறது. இப்பொழுதெல்லாம் வெறும் மஞ்சள் கயிற்றோடு நடந்துவிட்டு வந்து தாலியை அணிந்து கொள்கிறார்.

எங்கள் பகுதியில் காலை, மாலை வேளைகளில் சங்கிலிப் பறிப்பு சர்வசாதாரணமாக நடைபெறுவதாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் நேரில் பார்த்த ஒருவரையும் யாருமே பார்த்ததில்லை.‘அவர் பார்த்தாராம், இவர் பார்த்தாராம்’ என்று யாரையாவது கைநீட்டுவார்கள். அவரை விசாரித்தால் அவர் இன்னொருவரை கைநீட்டுவார். செயின் பறிப்பை பொறுத்தவரைக்கும் இப்படி அடுத்தவரை கை நீட்டுவது ஒரு செயின் ரியாக்‌ஷன்.

ஒருவேளை போலீஸ்காரர்களே கிளப்பிவிட்டிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். யார் கிளப்பிவிட்டார்கள் என்பது முக்கியமில்லை- பெங்களூரில் சங்கிலிப் பறிப்பு சாதாரணம் என்பதுதான் முக்கியம்.

இப்பொழுது நேரில் பார்த்தாயிற்று. அந்தப் பெண் நடந்து போயிருக்கிறாள். மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்திருக்கிறார்கள். வந்தவர்களில் கடைசியில் அமர்ந்திருந்தவன் கழுத்தில் கை வைத்திருக்கிறான். அந்தப் பெண்ணின் அப்பா அவளுக்கு அனேகமாக ஜாக்கிசானி என்று பெயர் வைத்திருக்க வேண்டும். துளி கூட யோசிக்காமல் செயினை இழுத்தவனின் சட்டையைப் பிடித்து இழுத்திருக்கிறாள். அவர்களின் பைக்குக்கும், இவளது வேகத்துக்கும் கடைசியான் ஈடுகொடுக்க முடியாமல் மல்லாக்க அடித்திருக்கிறான். மற்ற இருவரும் அவனைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள் ஆனால் அந்த வழியாக யதேச்சையாகச் சென்ற இரண்டு பைக்காரர்கள் சேர்ந்துவிட அவர்கள் தப்பித்தால் போதும் என்று பைக்கை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கிறார்கள்.

இப்பொழுது கடைசியானுக்கு பொங்கல் நடக்கிறது. மிஸ்டர். ஆஜானுபாகு பொங்கலை ஆரம்பிக்கும் போது எனக்கு முழுத்தகவலும் கிடைத்தாகிவிட்டது. 

ஏற்கனவே அவனது மண்டை உடைந்திருந்தது. இப்பொழுது விழும் அடியைப் பார்த்தால் ஆள் முடிந்துவிடுவான் போலிருந்தது. சற்று பாவமாக இருந்தது. 

‘சற்று’ என்பதை விளக்குவதற்கும் எங்கள் அம்மாவை குறிப்பிட வேண்டியிருக்கிறது. அவர் கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் பணியில் இருந்த போது கிராமத்தில் இப்படி ஒரு சங்கிலிப்பறிப்பு நடந்தது. ஏழு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியவனை ஊர்க்காரர்கள் பிடித்துக் கொண்டார்கள். விட்டிருந்தால் அவர்களே அடித்து துவைத்திருப்பார்கள். இவர் சட்டம், சம்பிரதாயம் என்று போலீஸ்காரர்களை அழைத்துவிட்டார். வந்த போலீஸ்காரர்கள் ஏதோ கோல்மால் செய்து அவனை தப்பிக்கவிட்டதுமில்லாமல் சங்கிலி ஓனரிடம் பதின்மூன்றாயிரம் கறந்தார்களாம். எங்கள் அம்மாவுக்கும் இந்தத் தொகையில் கமிஷன் வந்துவிட்டதாக ஊருக்குள் யாரோ கிளப்பிவிட்டுவிட்டார்கள். இப்பொழுதெல்லாம் சங்கிலி பறிப்பாளர்களை போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னால் தாறுமாறாக கடுப்பாகிவிடுகிறார். ‘தர்ம அடி கொடுத்து விட்டு விட வேண்டும்; ஜென்மத்துக்கும் திருட கை நீளவே கூடாது’ என்கிறார்.

சரி, கொஞ்ச நேரம் அடித்துவிட்டு விட்டுவிடுவார்கள் என்று நினைத்தால் அது நடக்காது போலிருக்கிறது. அவனைக் கொன்றுவிடுவார்களோ என்று தோன்றியது. அவனால் எதுவுமே பேச முடியவில்லை. ஆனால் அடி விழுவது மட்டும் நிற்கவில்லை. நான்கைந்து பேர் வெறித்தனமாக அடித்தார்கள். ஜாக்கிசானிக்கு அனேகமாக பயம் வந்திருக்க வேண்டும். செத்துத் தொலைந்தான் என்றால் அவளும் சேர்ந்து சிக்கிக் கொள்வாள் அல்லவா? போலீஸ்காரர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டாள். அடுத்த சில நிமிடங்களில் ஒரு ரோந்து வண்டி வந்து சேர்ந்துவிட்டது. கடைசியான் கிட்டத்தட்ட முடிந்திருந்தான். தூக்கி போலீஸ் வண்டியின் பின்புறமாக வீசினார்கள். சுருண்டு கிடந்தான். அவனது சட்டையைக் கழட்டி கைகளைக் கட்டினார்கள்.

வண்டி கிளம்பும் போது ஜாக்கிசானியை அழைத்தார்கள். அவள் வரமுடியாது என்று சொல்லிவிட்டாள். போலீஸார் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள்-என்னென்ன சொன்னார்கள் என்று புரியவில்லை. ஆனால் எவ்வளவோ சொன்னார்கள். வெகுநேரம் பேசினார்கள். ம்ஹூம். அவள் கிளம்பிவிட்டாள். ஆஜானுபாகுவும் நகர்ந்துவிட்டார். இப்பொழுது போலீஸ்காரர்கள் வேறு யாராவது வரமாட்டார்களா என்று பார்த்தார்கள். ஒருவரையும் காணவில்லை. என்னை அழைத்துவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. ‘இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்’ என்று நினைத்திருக்கக் கூடும். கண்டு கொள்ளவே இல்லை. 

போலீஸ் வண்டி கிளம்பியது. அவன் வண்டிக்குள் அப்படியேதான் கிடந்தான். வண்டி திருப்பத்தைத் தாண்டுவதற்குள் தலையை உயர்த்திப் பார்ப்பான் என்று எதிர்பார்த்தேன். அவனிடம் அசைவே இல்லை. வண்டி திரும்பியும் விட்டது. 

அன்றைய தினம் குளிர் சற்று குறைவாகத்தான் இருந்தது.

0 எதிர் சப்தங்கள்: