Feb 3, 2014

எத்தனை பிரதிகள் விற்றன?

810..

இது என்ன கணக்கு என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்கக் கூடும். அதே கணக்குதான். விற்ற பிரதிகளின் எண்ணிக்கை.

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் தொகுப்பை ஆயிரம் பிரதிகள் அச்சடித்தார்கள். அப்பொழுது பயமாகத்தான் இருந்தது. அதிகபட்சமாக இருநூறு பிரதிகள் விற்கக் கூடும் என்று நினைத்திருந்தேன். என்னதான் பில்ட்-அப் கொடுத்தாலும் வாங்குபவர்கள் மட்டும்தான் வாங்குவார்கள் என்ற ஒரு நினைப்புதான் காரணம். விற்பனையாகவில்லை எனில் பதிப்பாளருக்கு நட்டம் என்பதைவிடவும் மீதியாகும் எந்நூறு பிரதிகளை வைத்துக் கொண்டு இவர்கள் என்ன செய்வார்கள் என்றுதான் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. ‘ஐந்நூறோடு நிறுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இன்னொருமுறை அச்சடித்துக் கொள்ளலாம்’ என்று திரும்பத் திரும்பச் சொன்னேன். ஆனால் யாவரும்.காம்காரர்கள் ஆயிரம் பிரதிகள் என்பதில் உறுதியாக இருந்தார்கள். நூலின் விற்பனை உரிமை டிஸ்கவரி புக் பேலஸூக்கு என்பதால் இந்த முடிவை எடுப்பதில் வேடியப்பனும் முக்கியமான ஆளாக இருந்திருக்கிறார்.

அச்சடித்துவிட்டார்கள். அந்த ஆயிரத்தில்தான் 810 விற்றிருக்கிறது.

இந்த விற்பனை எண்ணிக்கையில் ஆன்லைன் ஆர்டர்களும், புத்தகக் கண்காட்சி விற்பனையும் அடங்கும். இனிமேல்தான் வெளியூர்களுக்கு அனுப்பப் போகிறார்கள். ஆக, ஆயிரம் பிரதிகளும் தீர்ந்துவிடும் என நினைக்கிறேன். அவர்களது கணிப்பு சரி என்று நிரூபித்துவிட்டார்கள். நல்லதுதான். 

இணையத்தில் இயங்காமல் இருந்திருந்தால் இந்த எண்ணிக்கை சாத்தியமே இல்லை என்று தெரியும். 

நிசப்தத்தில் தொடர்ந்து எழுதத் துவங்கிய சமயத்தில் ‘எனர்ஜியை வீணாக்காமல் அச்சு ஊடகங்களில் எழுது’ என்று என் மீது அக்கறை நிரம்பியவர்கள் சொன்னது ஞாபகம் இருக்கிறது. அவர்கள் சொன்னது தவறு என்றோ அல்லது நான் செய்தது சரி என்றோ சொல்லவில்லை. அப்பொழுது எனக்கும் அதே சந்தேகம் எனக்கும் இருந்தது. நேரத்தையும் உழைப்பையும் வீணடிப்பதான சந்தேகம் அது. ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ‘இப்படியே எழுதிப் பார்ப்போம்; ஆனால் ஆகட்டும் ஆகாவிட்டால் போகட்டும்’ என்றுதான் நாட்கள் ஓடின. கொஞ்ச நாட்களுக்கு அறிவுரை சொல்லிப்பார்த்தார்கள். இவன் கேட்கமாட்டான் என்று நினைத்திருக்கக் கூடும். நிறுத்திவிட்டார்கள். 

ஃபேஸ்புக், ட்விட்டர் பற்றி எதுவும் சொல்லவிரும்பவில்லை. ஆனால் வலைப்பதிவில் எழுதுவதால் நல்லதொரு பயிற்சியைச் செய்து கொண்டிருக்கிறேன் என்று வெகு விரைவாகவே புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு வருடங்களுக்கு முந்தைய எழுத்து நடைக்கும் தற்போதைய நடைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை உணர முடிகிறது. முன்பு எழுதிய கட்டுரைகளை வாசிக்கும் போது பல சமயங்களில் வெட்கமாக இருக்கும். முதிர்ச்சியற்ற கருத்துகள்; பிழைகளுடனான வாக்கிய அமைப்பு என்று நிறையக் குறைகளை உணர முடிகிறது. நமது குறைகளை அவை குறைகள் என்று உணர்வதே நாம் வளர்ந்து கொண்டிருப்பதற்கான அத்தாட்சி என்பதால் அவற்றைப் பற்றிய எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. 

இதைச் சொல்வதால் இப்பொழுது முழுமையாக வளர்ந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துத் திரும்பிப் பார்த்தால் இப்பொழுது எழுதியவை வெட்கம் தரக் கூடியதாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். 

இணையத்தில் எழுதுவதன் இன்னொரு முக்கியமான விஷயம்- பரவலான கவனம். எப்படியும் கவனித்துவிடுகிறார்கள். மிகச் சிக்கலான விஷயங்களைத்தான் எழுத வேண்டும் என்றில்லை. எளிமையான மனிதர்கள்; மிக எளிமையான சம்பவங்களை சுவாரசியமாக்கி முடிந்தவரை நேர்மையாக எழுதிக் கொண்டிருந்தால் போதும். கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள். முந்தய வரியில் ஒரு சொல்லை மட்டும் அடிக்கோடிட்டுக் கொள்ளலாம். 

அதே சமயம் கவனம் பெறும் போது சில சிக்கல்களும் வந்து சேர்ந்துவிடுகின்றன. Flow இல் வரும் சில சாதாரண வாக்கியங்கள் கூட வசைகளை வாங்கித் தந்துவிடுகின்றன. நம்மையும் அறியாமல் நமது எழுத்து மீது நாமே கட்டுப்பாடு விதிக்கத் துவங்குகிறோம். ஆனால் என்னதான் பொறுப்பாகவும், கவனமாகவும் இருந்தாலும் நம்மையும் மீறி ஏதாவது சில வாக்கியங்களும், சொற்களும் உதிர்ந்துவிடுகின்றன. காட்டமாகிவிடுகிறார்கள். சிலர் நேருக்கு நேராகத் திட்டுவார்கள். சிலர் நமக்கே தெரியாமல் திட்டுவார்கள். 

ஒன்றும் பிரச்சினையில்லை. ‘நமது ஒவ்வொரு வார்த்தைக்கும் நம்மிடம் நேர்மையான பதில் இருக்கிறது’ என்ற நம்பிக்கை இருந்தால் போதும். எந்த விமர்சனமும் நமது கட்டுப்பாட்டை இழக்கச் செய்யாது என்பதை புரிந்து வைத்திருக்கிறேன். இதையெல்லாம் சுய பிரஸ்தாபத்திற்காகச் சொல்லவில்லை. இணையத்தில் எழுதுவதால் கிடைக்கும் அனுபவங்களை அவ்வப்போது எழுதுவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்ப்பேன். இப்பொழுது அதில் துளி எழுதியாகிவிட்டது.

வெகுவிரைவில் இணையம் என்பது மிகச் சக்தி வாய்ந்த ஊடகமாக மாறிவிடும். இன்னும் பல ஆயிரம் பேர் எழுத வருவார்கள். இணையத்தில் கை வைக்காத ஆனால் தமிழ் தெரிந்த பல லட்சம் பேர்கள் வாசிக்கத் துவங்குவார்கள். அப்படியொரு சூழல் வரும் போது ஆயிரம் என்பதெல்லாம் சொற்பமான எண்ணிக்கையாக மாறிவிடும். 

இப்பொழுதுதான் ‘ப்லாக் எழுத ஆரம்பிங்க. அது ரொம்ப முக்கியமான விஷயமா இருக்கும்’ என்று நண்பர்களிடம் சொல்லத் துவங்கியிருக்கிறேன். இதைச் சொல்வதற்கான தைரியத்தை இந்த புத்தகமும் இந்த எண்ணிக்கையும் கொடுத்திருக்கிறது. 

புத்தகத்திற்காக இணையத்தில் செய்த விளம்பரங்களை சகித்துக் கொண்டவர்கள், புத்தகத்தை வாங்கியவர்கள், இணையத்தில் புத்தகம் பற்றி எழுதிய நண்பர்கள், பிறரிடம் பரிந்துரைத்தவர்கள், ஜீவ கரிகாலன், வேல்கண்ணன், கண்ணதாசன், சாத்தப்பன், அய்யப்ப மாதவன், பாலா இளம்பிறை, அன்பு சிவம், பிரேம் மற்றும் பிற யாவரும்.காம் நண்பர்கள், வேடியப்பன், ஆரம்பத்தில் மின்னல்கதைகளை தொடர்ந்து எழுதச் சொல்லிய மனுஷ்ய புத்திரன், கதைகளைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட முகம் தெரியாத நண்பர்கள், நிசப்தம் தளத்தின் வாசகர்கள் என அத்தனை பேருக்கும் நன்றி. இது சம்பிரதாயமான நன்றி இல்லை. மனப்பூர்வமான நன்றி. உங்களால்தான் இந்தச் சிறு வெற்றி சாத்தியமாகியிருக்கிறது என்பதை உணர்ந்து சொல்லும் நன்றி.

எழுதுவதற்கான ஆற்றல் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என என் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொள்கிறேன். அதே சமயத்தில் இந்த எழுத்து யாரையும் கடுப்படிக்கக் கூடாது என்று ஒரே ஒரு கடவுளை மட்டும் வேண்டிக் கொள்கிறேன்.

0 எதிர் சப்தங்கள்: