Feb 8, 2014

நெருப்புக்கு என்ன வடிவம்?

அவிநாசியில் எங்களின் சித்தி வீடு இருக்கிறது. பள்ளிப்பருவத்தில் அங்கே அடிக்கடி செல்வதுண்டு. சிறுவயதில் நம்மோடு நெருக்கமாக இருந்த நிலத்தின் மீது இனம்புரியாத பாசம் இருக்கும் அல்லவா? அப்படித்தான் அவிநாசி மீதும். பாசம் அதிகம்.

கொங்கு நாட்டின் வரலாற்றை வாசித்தால் அவிநாசியைத் தவிர்த்துவிட்டு வாசிக்க முடியாது. சோழர் காலக் கோயில் இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் இந்த ஊரைப் பற்றி பாடி வைத்திருக்கிறார். அவரது பாடல்களில் திருப்புக்கொளியூர் என்று வந்தால் அது அவிநாசிதான். அந்தக் காலத்தில் அதுதான் பெயராக இருந்திருக்கிறது. பிறகு அவிநாசி ஆகிவிட்டது. சுந்தரர் சோழ நாட்டுக்காரர். அவரது நண்பராக சேர மன்னன் ஒருவர் கேரளாவில் இருந்திருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக அவிநாசி வழியாகத்தான் செல்வாராம். இன்றைக்கும் கேரளா செல்வதென்றால் அவிநாசி-பாலக்காடு ரூட்தானே. ஆன் த வேயில் அவிநாசி லிங்கேஸ்வரர் பற்றி எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார். 

அந்த லிங்கேஸ்வரருக்கு ஒரு தேர் இருந்தது. தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய தேர் அது. வெகு நாட்களுக்கு முன்பாக அதை யாரோ எரித்துவிட்டார்கள். தேர் கொழுந்துவிட்டு எரிந்த அன்றைய தினம நாங்கள் அவிநாசியில்தான் இருந்தோம். வானம் முழுமையும் செக்கச் சிவப்பாக மாறியிருந்தது. ஊரே வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தது. நாங்களும் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். தேர் எரிந்து போனதால் என்ன விபரீதங்கள் நடக்குமோ என்று பயந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது எனக்கு ஏழு வயது. ஒவ்வொருவரின் பயமும் எனக்குள் புகுந்து விரல்களை சில்லிடச் செய்து கொண்டிருந்த நாள் அது.

அடுத்த நாள் தேரைப் பார்க்க வேண்டும் என்று அழத் துவங்கினேன். போலீஸ் இருப்பதாகச் சொன்னார்கள். அடம்பிடித்தது ஞாபகம் இருக்கிறது. கூட்டிச் சென்றார்கள். எரிந்த தேர் கரிக்கட்டையாக நின்றிருந்தது. சித்திக்கு அதைப் பார்த்தவுடன் அழுகை வந்துவிட்டது. கையெடுத்து வணங்கிக் கொண்டார். யாரையும் அருகில் செல்வதற்கு விடவில்லை. அப்பொழுது அது எனக்கு வெறும் காட்சிப் பொருள்.  இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எரிக்கப்பட்டது வெறும் தேர் இல்லை என்று தோன்றுகிறது- ஒரு வரலாறு எரிக்கப்பட்டிருந்தது. 

தேர் தானாக தீப்பிடித்து எரியுமா? ஆனால் அப்படித்தான் பேசிக் கொண்டார்கள். இப்பொழுது அந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இணையத்தில் தேடிப்பார்த்தால் ஒன்றும் சிக்கவில்லை.

அவிநாசி தேர் பற்றி திடீரென்று இணையத்தில் தேடுவதற்கு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? ஒரே காரணம்தான் கே.என்.செந்தில். சிறுகதைக்காரர். அவரது ‘அரூப நெருப்பு’ தொகுப்பை சமீபத்தில்தான் வாசித்து முடித்தேன். அவர் அந்த ஊர்க்காரர்தான். தொகுப்பை வாசித்து முடித்தவுடன் அவிநாசி பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.


அவிநாசி கோவிலுக்கு பக்கத்திலேயேதான் செந்திலின் வீடு இருக்கிறது. அவரது முந்தைய தொகுப்பை(இரவுக்காட்சி) வாசித்துவிட்டு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாக அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தக் காலத்து வீடு அது. வீட்டிற்குச் சென்ற பிறகு அந்தச் சிறுகதைத் தொகுப்பைத் தவிர பிற என்னனென்னவோ பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கும் எனக்கும் ஒரே வயது. அதனால் பேசுவதற்கு எந்தச் சங்கடங்களும் இல்லை. அதன் பிறகு நேரில் பேசுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் அவரது கதைகள் எங்கேயாவது வாசிக்கக் கிடைத்துவிடும். எங்கேயாவது என்றால் வலசை, கல்குதிரை, உயிர்மை, காலச்சுவடு மாதிரியான இதழ்களில்.

செந்தில் மாதம் ஒரு கதை என்று எழுதக் கூடிய ஆள் இல்லை. முதல் தொகுப்புக்குப் பிறகு நான்கு வருடங்களில் வெறும் எட்டுக் கதைகளைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு கதை ஆறு மாதத்திற்கு வொர்த். ஏற்றிவிடுவதற்காகச் சொல்லவில்லை- தொகுப்பை வாசித்தால் புரிந்து கொள்ள முடியும்.

கதைகளின் முதல் இரண்டு பத்திகளை வாசிக்கும் போது ஒன்றுமே புரியாதது போல இருக்கிறது. ஆனால் மூடி வைக்க முடிவதில்லை. கயிற்றில் கட்டி கதைக்குள் இழுத்துவிடுகிறார். அட்டகாசமான நடை. செந்திலின் கதை சொல்லும் பாணி நேர்கோட்டில் கதை சொல்லும் பாணி இல்லை. ஆனால் அதை மிக எளிய வாசகனால் கூட புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் இந்தக் கதைகளின் மிகப்பெரிய பலம்.

தமிழில் கவிஞர்கள் எப்படியோ கவனம் பெற்றுவிடுகிறார்கள். வருடத்திற்கு இரண்டு முறையாவது கவிஞர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒரு கவிஞனைப் பற்றி இன்னொரு கவிஞன் பேசுவது சாதாரணமாக நடக்கிறது. ஆனால் சிறுகதையியலில் அப்படி இல்லை. தமிழ்ச் சிறுகதையின் மிக மூர்க்கமான பாய்ச்சலை நடத்தும் கே.என்.செந்தில் போன்றவர்களைப் பற்றி கூட அதிகம் வெளியில் தெரிவதில்லை. ஆனால் எந்த கவலையும் இல்லாமல் பாய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

செந்திலின் இரண்டு தொகுப்புகள்தான் வந்திருக்கின்றன. அரூப நெருப்பு அவரது இரண்டாவது தொகுப்பு. எட்டுக்கதைகள்தான் இருக்கின்றன. ஆனால் நூற்றியருபத்தைந்து பக்கங்கள். சற்று நீளமான சிறுகதைகள். ஆனால் அத்தனையும் மிகச் செறிவான கதைகள். ஒரு மனிதனின் உணர்வுகளை இவ்வளவு துல்லியமாக விவரிக்க முடியுமா என்று சந்தேகமடையச் செய்துவிடுகிறார். ஆசை, கோபம், காமம், உறவுகளின் சிக்கல்கள் என எதுவாக இருந்தாலும் எழுத்தில் கொண்டு வந்துவிடுகிறார். வாசிக்க வாசிக்க செமத்தியாக இருந்தது. அது ஒருவித போதை.

தொகுப்பிலிருந்து அரூப நெருப்பு கதையை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

கோவிந்தனின் அப்பா செல்வாக்கானவர். ஆனால் கோவிந்தன் மைனர் சோக்கு பார்ட்டி. ‘பொறுப்பில்லாமல் சுற்றுகிறானே’ என தனது சகோதரியின் மகளான அலமேலுவையே கோவிந்தனுக்கு கட்டி வைத்துவிடுகிறார். வங்கியில் பணியாற்றும் கோவிந்தனுக்கு அங்கு வேலை செய்யும் கணேஷின் அம்மாவோடு உறவு ஏற்படுகிறது. அவள் இறந்து போனவுடன் ‘யாரும் இல்லாதவன்’ என்று சொல்லி கணேஷை தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறான். அலமேலுவின் மகனான நாகு, கணேஷை சித்ரவதை செய்கிறான். தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறான். கணேஷ் பொறுத்துக் கொள்கிறான் என்றாலும் நாகுவின் மீது அவனுக்கு வன்மம் இருக்கிறது. கோவிந்தன் அதோடு அடங்குவதில்லை. விஜயா என்றொரு பெண்ணை இன்னொரு மனைவியாக்கிக் கொள்கிறான். அவளுக்கு பத்து வயதில் ஒரு குழந்தை இருப்பது கூட யாருக்குமே தெரிவதில்லை. கோவிந்தன் சர்க்கரை நோயின் தாக்கத்தில் தள்ளாடத் துவங்கும் போது அவளையும், அவளுக்குப் பிறந்த தனது மகனையும் வீட்டிற்கே அழைத்து வந்துவிடுகிறான். பிரளயமே நடக்கிறது. அலமேலு கடுமையாக சண்டையிடுகிறாள். ஆனால் கணேஷ் அப்படியில்லை. ஆரம்பத்தில் விஜயா மீது பரிதாபப்படுகிறான். ஆனால் விஜயா இவனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சதி செய்கிறாள். பிறகு கணேஷ் அவளை முறைக்கத் துவங்குகிறான். கோவிந்தன் படுக்கையில் விழுகிறான். நாகுவை எதிர்க்க விஜயாதான் சரியான ஆள் என்று கணேஷ் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் நாகுவுக்கும் விஜயாவுக்கும் கள்ள உறவு ஏற்பட்டு அவனது அம்மாவின் நகை பணத்தையெல்லாம் தூக்கிக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். 

மிக எளிதாக, நேர்கோட்டில், ஒற்றைப் பத்தியில் சொல்லிவிட்டேன். ஆனால் இந்தச் சிக்கலான கதையைச் சொல்ல செந்தில் கையாண்டிருக்கும் நேர்த்தியை புரிந்து கொள்ள மொத்தக் கதையையும் வாசிக்க வேண்டும். தொகுப்பை வாசியுங்கள். எவ்வளவு அற்புதமான கதையை இப்படி ஒரு பத்தியில் குதறியிருக்கிறேன் என்று அப்பொழுதுதான் புரியும். கதாப்பாத்திரங்களையும், அவர்களின் மனநிலையும், கதையின் போக்கும் என செந்தில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இந்தக் கதை என்று மட்டுமில்லை-  ஒவ்வொரு கதையுமே வாசிப்பவனை சலனப்படுத்துகின்றன. அவ்வளவு அடர்த்தியான கதைகள். அவ்வளவு அற்புதமான சித்தரிப்புகள்.

இரண்டு நாட்களாக இந்தத் தொகுப்போடு உழன்று கொண்டிருக்கிறேன்.

குறைந்தபட்சம் பதினைந்து நாட்களுக்கு நிசப்தத்தில் எதுவும் எழுதாமல் இருக்கலாம் என்றிருந்தேன்- சிறு இடைவெளி விட்டுப்பார்க்கலாமே என்றுதான். ஆனால் அப்படி நினைத்தவன் இந்தத் தொகுப்பை வாசித்திருக்கக் கூடாது. சொறிவந்தவன் கை சும்மா இருக்காது என்ற கணக்காக புத்தகத்தை மூடி வைத்தவுடன் இதை எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அதுவும் ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்று. நிசப்தம் எழுத ஆரம்பித்து நேற்றோடு எட்டு வருடங்கள் முடிகின்றன. இது ஒன்பதாவது வருடத்தின் முதல் நாள். நல்ல விஷயமம்தான். எழுதியாயிற்று,

இந்தத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ஒன்றே ஒன்றுதான் தோன்றியது- செந்தில் போல வாழ்நாளில் ஒரே ஒரு கதையாவது எழுதிவிட வேண்டும். ஆனால் அந்த ஆசை அவ்வளவு சுலபம் இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும். தொகுப்பை வாசித்தால் அதை நீங்களும் ஒத்துக் கொள்ளக் கூடும். 

ஆன்லைனில் அரூப நெருப்பு கிடைக்கிறது.

0 எதிர் சப்தங்கள்: