Feb 1, 2014

ஒரு செம லவ்வும் சுமார் எதிரியும்

பத்து வருடங்களுக்கு முன்பாகக் கூட இந்த இடம் பொட்டல் காடாகத்தான் இருந்திருக்கும்.இப்பொழுது பாருங்கள்- நெடு நெடுவென வளர்ந்த மூன்று நான்கு பனைமரங்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக நட்டுவைத்த உயரத்திற்கு கட்டடங்கள். அதுவும் துளி இடைவெளி இல்லாமல் வதவதவென கட்டி வைத்திருக்கிறார்கள். இங்கு ஒவ்வொரு சதுர அடியுமே காசுதான். மூன்றுக்கு மூன்று இடத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்தால் கூட சிகரெட்டும், ப்ளாஸ்க்கில் டீயும் விற்று வெகு சுலபமாக பிழைத்துக் கொள்ளலாம். பிறகு எப்படி இடைவெளி விடுவார்கள்? சந்து பாக்கியில்லாமல் வளைத்துவிட்டார்கள். இதெல்லாம் பாக்மெனி டெக் பார்க் வரும் வரைக்கும்தான். இருங்கள். எந்த ஊர், எந்த ஏரியா என்ற எந்தத் தகவலுமே சொல்லாமல் நான் பாட்டுக்கு அளந்து கொண்டிருக்கிறேன். ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததில் இருந்தே இப்படி ஆகிவிட்டேன். நான் மட்டுமில்லை- கூட வேலை செய்யும் பல பேரும் இப்படித்தான். பேச வருவதை சுத்தபத்தமாக பேசுவதில்லை. எங்கள் அமத்தா, ஆயாவெல்லாம் ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பித்தால் அதன் ஹிஸ்டரி, ஜியாகரபி மட்டும் இல்லாமல் அதன் பிசிக்ஸ், மேத்தமெடிக்ஸ் பற்றியும் சொல்லிவிட்டுத்தான் விஷயத்துக்கு வருவார்கள். ‘உங்க அப்பிச்சிக்கு தல நோவு வந்த பொரட்டாசி மாசம் வெறும் ஒன்றரையணாவ எடுத்துட்டு வடக்கால போனன்னா ரெண்டு கூறு வெள்ளாட்டுக்கறியும் பத்து மொட்டும் வாங்கிட்டு வருவேனப்புன்னு’- இந்த வாக்கியத்தில் மேற்சொன்ன நான்கு சப்ஜெக்ட்டும் இருக்கும். கவனியுங்கள்.

ஆனால் அவர்களைப் போலவே நாமும் இருக்க முடியுமா? அதுவும் ஐடியில் இருந்து கொண்டு. இந்த க்ளையண்ட்கள் பெரும் அக்கப்போர் செய்கிறார்கள். அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ அமர்ந்து கொண்டு ‘மாப்ள, இன்னைக்கு என்ன வேலைடா செஞ்ச?’ என்பார்கள். நீட்டி முழக்கினால் ‘என்ன வேலை செஞ்சேன்னு மட்டும்தான் கேட்டேன்’ என்று பொடனி அடியாக அடிப்பார்கள். வெள்ளைக்காரன்கிட்ட எதுக்குடா வம்பு என்று நறுக்கடித்து நறுக்கடித்து பழகியாகிவிட்டது. அதே பழக்கத்தில் இந்தக் கதையைச் சொல்லும் போது கூட நறுக்கடித்துவிடுவேன் போலிருக்கிறது. 

சற்று விரிவாகவே சொல்லிவிடுகிறேன். 

பெங்களூரில் சி.வி.ராமன் நகர் தெரியுமா உங்களுக்கு? கிழக்கு பெங்களூரில் இருக்கிறது. எங்கள் நிறுவனம் இந்த சி.வி.ராமன் நகரில்தான் இருக்கிறது. இந்திரா நகருக்கு வெகு பக்கம். இந்திரா நகர் பெங்களூரில் முக்கியமான இடம். இதுவரை கேள்விப்பட்டிருக்காவிட்டாலும் கூட கூகிளிடம் கேளுங்கள். தகவல்களைக் கொண்டு வந்து கொட்டும். ஏகப்பட்ட ‘பப்’கள் உண்டு. ஒரே ஒரு முறை உள்ளே போயிருக்கிறேன். அது சிறிய பப்தான். லேசர் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக நகரும் லேசர் ஒளி தோலைக் கிழித்துவிடுமோ என்று சில வினாடிகள் பயந்து கொண்டிருந்தேன். ஒரு சிறிய மேடை போட்டு அதில் ஒருவள் சகட்டுமேனிக்கு இடுப்பை அசைத்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பக்கத்தில் பெரிய பானைகளை வைத்து பிராந்தி, விஸ்கியை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். குடித்துவிட்டு கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். அந்தக் குழாமோடு சேர்ந்து குத்தாட்டம் போடுவது லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. அப்படி ஆடினால் ஒன்று இடுப்பை முறித்துக் கொள்ள வேண்டும் அல்லது முட்டியை பெயர்த்துக் கொள்ள வேண்டும். அத்தனை வேகம். அத்தனை சத்தம். அதனால் ஓரத்தில் அமர்ந்து இடுப்புகளையும் இன்னபிற சாமச்சாரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தபடியே அந்தப் பொழுதை மிடறு மிடறாக குடிக்க வேண்டியிருந்தது. இப்படித்தான் - ஒவ்வொரு நாளும் இரவானால் போதும். இந்திரா நகரின் சாலைகள் துள்ளத் துவங்கிவிடுகின்றன. சிட்டுகளும், குமரன்களுமாகத் திரிவார்கள். தலைக்கு பின்பாக இரண்டு கண்கள் கூடுதலாக இருந்தால் செளகரியமாக இருக்கும் என நினைத்துக் கொள்ளும் தருணங்கள் அவை.

அந்த இளமை ப்ளஸ் ஏரியாவில்தான் குடியிருக்கிறேன். எங்கள் அபார்ட்மெண்டுக்கு  ‘நெஸ்ட்’ என்று பெயர். பெயருக்கு ஏற்றபடியே குருவிக் கூடு மாதிரிதான் இருக்கும். ஆனால் வாடகைதான் கடுசு. தொள்ளாயிரம் சதுர அடி ப்ளாட்டுக்கு பதினேழாயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது போக மெய்டெனென்ஸ், மின்சாரம், குடிநீர் என்று மிளகாய் அரைப்பார்கள். இப்பொழுது என்னைப் பற்றிய பிரஸ்தாபம் அவசியமில்லை. அதே அபாட்மெண்டின் இரண்டாவது தளத்தில் இருக்கும் ஒரு ப்ளாட்டுக்கு ஒண்ணேமுக்கால் லட்சம் அட்வான்ஸாகக் கொடுத்து தீபிகா குடி வந்தாள். அது முக்கியமான செய்தி. அவள் கோயமுத்தூர்க்காரியாம். இதுவும் முக்கியான செய்திதான். இதையெல்லாம் விடவும் முக்கியமான விஷயம் தீபிகா எங்கள் நிறுவனத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள். நல்லவேளையாக எங்கள் டீமில் சேரவில்லை. ‘நல்லவேளை’ என்று சொல்வதற்கு காரணமிருக்கிறது. இத்தனை அழகுடைய ஒரு பெண் கூடவே இருந்தால் வேலை செய்ய மனமே வராது. அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அலுவலகத்தில் விடுவார்களா? மூன்று மாதத்தில் ஃபயர் செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

அவள் தேவாவின் டீமில் சேர்ந்திருக்கிறாள். தேவராஜன் ருத்ரமூர்த்தி. சுருக்கமாக தேவா. அவனோடு எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவ்வப்போது இரண்டு பேருமாகச் சேர்ந்து டீ குடிக்கச் செல்வோம். அவனும் தமிழ்தான். சேலத்துக்காரன். படித்து முடித்ததிலிருந்தே இந்தக் கம்பெனியில்தான் வேலைக்கு இருக்கிறான். இரண்டு வருடத்தில் மூன்று நிறுவனங்களை மாற்றும் ஐடிக்காரர்கள் மத்தியில் பத்துவருடம் இங்கேயே தேய்த்துக் கொண்டிருக்கும் அவனுக்கு நல்ல பெயர் உண்டு. அதுவுமில்லாமல் நல்ல வேலைக்காரன் என்று பெயர் எடுத்தவன். வருடத்தில் ஒருமுறையோ இருமுறையோ ஏதாவது ‘அவார்ட்’ வாங்கிவிடுவான். அதனால் எப்படியும் வருடம் தவறாமல் சம்பள உயர்வும் உண்டு. இன்றைய தேதிக்கு- காதைக் கொடுங்கள்- வருடச் சம்பளமாக இருபத்தைந்து லட்சம் வாங்குகிறான். மிகச் சமீபமாக ஒரு ஹோண்டா சி.ஆர்.வி கார் வாங்கியிருக்கிறான். 

தீபிகாவின் கடைசிச் சுற்று இண்டர்வியூவை தேவாதான் எடுத்தானாம். இதற்கு முன்பு அவள் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு இருந்திருக்கிறாள். அங்கு வாங்கும் சம்பளத்தைவிடவும் முப்பது சதவீதம் கூடுதலாகத் தருவதாகச் சொல்லி இங்கே இழுத்துக் கொண்டார்கள். கொண்டார்கள் என்ன கொண்டார்கள்? கொண்டான். தேவாதானே அவளைத் தனது டீமுக்காகத் தேர்ந்தெடுத்தவன். அவள் வந்த புதிதில் அலுவலகமே அல்லோகலப்பட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள். அவள் லிஃப்ட் ஏறும் சமயமாக ஓடிப் போய் நுழைந்து கொள்பவர்களின் எண்ணிக்கைத் தாறுமாறாக உயர்ந்திருந்தது. ஒரே வினாடிதான். லிஃப்ட்டுக்குள் ஒரு மணம் பரவும். எங்கிருந்துதான் இந்த பெர்யூம்களை பிடிக்கிறாளோ? தலைவலி வராமல், அடுத்தவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல்- அது ஒரு சுகந்தம். நக்கீரன் இப்போது இருந்திருந்தால் ‘பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறது’ என்று நம்பி கருகாமல் தப்பித்திருக்கலாம். பாவம். போய்ச் சேர்ந்துவிட்டார். தீபிகா பெரும்பாலும் ஜீன்ஸ்தான் அணிந்து வருவாள். வெள்ளிக்கிழமைகளில் அவளது டீ-ஷர்ட் வாசகங்கள் பெரும் பிரசித்தி. ‘போய் தீபிகா டீஷர்ட்டில் என்ன எழுதியிருக்குன்னு பாரு’ என்று அடுத்தவனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் அளவுக்கு அவளது டி.ஆர்.பி ரேட் எகிறியிருந்தது.

வழக்கமாக நான் ஒன்பதரை மணிக்குத்தான் அலுவலகத்திற்கு கிளம்புவேன். அவள் ஆரம்பத்தில் பத்து மணிக்கு மேலாக கிளம்பிக் கொண்டிருந்தாள். ஒரே அபார்ட்மெண்ட்தான்- ஒரே அலுவலகம்தான் என்றாலும் பேசிக் கொண்டதில்லை. சைட் அடிப்பதோடு சரி. அவள் அழகுக்கும் எனது லட்சணத்திற்கும் பார்ப்பது மட்டும்தான் சரியாக இருக்க முடியும் என நினைத்துக் கொள்வேன் என்று தன்னடக்கமாக பேசினாலும் வீட்டம்மா குக்கர் மூடியால் மண்டையை உடைத்துவிடுவதற்கான எந்த வாய்ப்பையும் கொடுத்துவிடக் கூடாது என்ற பயம்தான் அதி முக்கியமான காரணம். ஏற்கனவே என் மீது ஏகப்பட்ட சந்தேகக் கேஸுகள். அதை இன்னொரு நாளைக்குத் தனியாகச் சொல்கிறேன்.

ஆரம்பத்தில் தீபிகா பத்து மணிக்கு மேலாக கிளம்பினாள் அல்லவா? பிறகு ஒன்பதரை மணிக்கெல்லாம் கிளம்பத் துவங்கினாள். பிறகு ஒன்பது மணிக்கே வீட்டை விட்டு வெளியேறிவிடுவாள். இப்படியே அரை அரை மணியாகக் குறைந்து எட்டு மணிக்கு வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்திருந்தாள். அவளிடம் ஹீரோ ஹோண்டா ஆக்டிவா வண்டி இருக்கிறது. கொடுத்து வைத்த வண்டி என்று உடன் வேலை செய்யும் செல்வக்க்குமார் ஒரு முறை சொன்னான். இறுகிய ஜீன்ஸூம் அதற்கேற்ற செருப்பும் பொருத்தமான நகப்பூச்சுமாக அவள் கிளம்பிப் போகும் போதெல்லாம் பல பேர் ஒன்றரை செகண்டுக்கு பைத்தியமாகி தெளிவடைகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். ஒன்றரை செகண்ட் பார்ப்பதற்கே பைத்தியமாகிறார்கள் என்றால் நாள் முழுவதும் அருகிலேயே அமரவைத்து பார்த்துக் கொண்டிருக்கும் தேவாவை நினைத்த போது பரிதாபமாகத்தான் இருந்தது.

ஆனால் நானும் நீங்களும் நினைப்பது போல அவன் பாவம் இல்லை. இருவருமே நெருக்கமாகிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் இந்த அரை மணி நேரக் குறைப்பு படிப்படியாக அமலுக்கு வந்திருக்கிறது. இவள் சொல்படி அவன் கேட்கிறானோ அல்லது அவன் சொல்படி இவள் கேட்கிறாளோ தெரியாது. இரண்டு பேரும் ஒரே நேரத்திற்கு அலுவலகம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதை மோப்பம் பிடிப்பதொன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை. அலுவலகம் முழுவதும் இல்லையென்றாலும் கூட எங்கள் தளத்தில் இருந்த அத்தனை பேருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. எனக்கெல்லாம் காதுக்குள் கருங்கல்லைக் கூட்டி விறகு மூட்டிய கதைதான். அத்தனை புகை வந்து கொண்டிருந்தது. வாய்ப்பு வரும் போது அவள் வீட்டில் மூட்டிவிட்டுவிடலாம் என்று மனசுக்குள் கரையான் கூடு கட்டி அரித்துக் கொண்டிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் தேவாவின் நிழல் ஆகிவிட்டாள் தீபிகா. இரண்டு பேரும்தான் ஒன்றாக டீ குடிக்கச் செல்கிறார்கள். மதிய உணவும் அப்படியேதான். தின்ற உணவு செரிக்க வேண்டுமில்லையா? மதியம் ஒரு நடையும் உண்டு. அலுவலகத்தைச் சுற்றி ஆடி அசைந்து ஒரு நடை போய் வருவார்கள். ஏ.சியில் குளிர்ந்து கிடக்கும் தோலுக்கு சூரிய வெளிச்சம் இதமாக இருக்கும். அரை மணிநேரமாவது நடக்கிறார்கள். பிறகு மதியம் ஒரு டீ. இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு க்ளையண்ட் மீட்டிங் இரவு வரை நீளும் போலிருக்கிறது. இரண்டு பேரும் அலுவலகத்திலேயே வெகு நேரம் தங்கிக் கொள்கிறார்கள். காதல் பற்றியெரிகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு வயிறு எரிகிறது.

ஆனால் சும்மா சொல்லக் கூடாது. அட்டகாசமான ஜோடி அது. தேவாவை வர்ணிக்க மறந்துவிட்டேன். எந்தக் கதையிலாவது ஆண்மகனை வர்ணிப்பார்களா? அதனால் சூர்யாவையும் அஜீத்தையும் மிக்ஸ் அடித்து நீங்களாகவே ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள். இதை ஓவர் பில்ட் அப் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அவன் அப்படித்தான் இருப்பான். அந்த அழகிக்கு ஏற்ற அழகன்.  

பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுதான் இவர்களுக்கு க்ளையண்ட். அது விமானத்திற்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். அவர்களுக்குத் தேவையான மென்பொருளை இங்கிருந்தே பராமரித்துக் கொண்டிருந்தார்கள் தேவா & கோ. இந்த ‘கோ’வில் தான் அந்த அழகுக்கிளியும் இருந்தது. இந்தியாவில் மதியம் இரண்டு மணி ஆகும் போதுதான் பிரான்ஸ்காரர்களின் வேலை நேரமே தொடங்கும். அதுவரைக்கும் இந்தியாவில் பெரிய வேலை இருக்காது. துணை இல்லாதவன் இண்டர்நெட்டில் மேய்ந்து கொண்டிருப்பான் அல்லது யாரையாவது கூட்டிக் கொண்டு கேண்டீன் போய்வருவான். தேவாவுக்குத்தான் அது பிரச்சினையே இல்லை. தீபிகாவும் அவனும் மீட்டிங் அறைக்குள் சென்றுவிடுவார்கள். என்னதான் பேசுவார்களோ தெரியாது- சிரித்துக் கொண்டே இருப்பார்கள். இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு சனி, ஞாயிறு கூட வேலை இருக்கும் போலிருக்கிறது. அலுவலகத்திற்கு வந்துவிடுகிறார்கள். அநேகமாக அவர்கள் இரண்டு பேர் மட்டும்தான் அலுவலகத்தில் இருப்பார்கள் அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இருப்பார்கள். மதியத்திற்கு மெக்டொனால்டிலிருந்து பீட்ஸா அல்லது கே.எஃப்.சியிலிருந்து சிக்கன் ஆர்டர் செய்து கொள்வார்கள்.

இப்படியே ஓடிக் கொண்டிருந்த காதல் எக்ஸ்பிரஸூக்கு ஒரு சிக்னல் விழுந்தது. அந்த சிக்னலை நானும் பார்த்தேன். அது ஒரு புதன்கிழமை காலை. மழை போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. காலை ஏழரை மணி இருக்கும். ஊரிலிருந்து எங்கள் சொந்தக்காரப் பையன் வந்திருந்தான்- அவன் யார் என்ன என்ற விவரமெல்லாம் கதைக்கு அவசியமில்லை- டிராவிட் வீட்டை பார்த்தே தீர வேண்டும் என்று சொல்லிவிட்டான். வெளியே நின்று பார்த்தால் கூட போதுமாம். கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் வீட்டைதான் சொல்கிறான். அவர் பிறந்து வளர்ந்த வீடு இந்திரா நகரில்தான் இருக்கிறது. வீட்டுக்கு முன்பாக ‘ட்ராவிட்’ என்று கடப்பா கல்லில் எழுதி பதித்திருப்பார்கள். டிராவிடின் அப்பாவும் அம்மாவும் இன்னமும் அங்குதான் வசிக்கிறார்கள். அந்த வீட்டுக்கு நான்கு வீதி தள்ளித்தான் எங்கள் ‘நெஸ்ட்’ இருக்கிறது. நெஸ்ட்டிலிருந்து சொந்தக்காரனோடு கிளம்பி டிராவிட் வீட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த நடைபாதையில்தான் தேவாவையும் தீபிகாவையும் பார்த்தேன்.

என்ன விவகாரமோ தெரியவில்லை. அந்த நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். அலுவலகமும் போகாமல் வீட்டிலும் பேசாமல் எதற்காக நடுசாலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. பைக் பெவிலியனில் அமர்ந்திருந்த சொந்தக்காரன் ‘தொனதொன’ என்றான். அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. எனது மொத்தக் கவனமும் காதல் பறவைகளின் மீதுதான் இருந்தது. தூரத்தில் இருந்து பார்த்த போது அவர்கள் சண்டையிடுவது போலத் தெரியவில்லை. அருகில் நெருங்கும் போது அவர்கள் ‘சும்மா’ பேசிக் கொண்டிருப்பது போலத் தெரியவில்லை. அது நிச்சயம் சண்டைதான். ஏதோ பெரிய பிரச்சினை போலிருக்கிறது. ஆனால் அதை அருகில் நின்று பார்க்க சங்கடமாக இருந்தது. ஹெல்மெட் அணிந்திருந்தேன். அவர்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்காது. வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தேன். இருவரின் கைகளும் வேகவேகமாக அசைந்து கொண்டிருந்தன. டிராவிட்டின் வீட்டை பார்த்துவிட்டுத் திரும்பும் போது அவர்களைக் காணவில்லை.

அன்று அலுவலகத்தில் பெரிய பூகம்பம் நிகழ்ந்திருக்கும் போலிருக்கிறது. சற்று தாமதமாகத்தான் அலுவலகத்தில் நுழைந்தேன். ரோட்டுச் சண்டையை அலுவலகம் வரை வளர்த்தியிருக்கிறார்கள். நீண்டு கொண்டிருந்த சண்டையின் ஒரு கட்டத்தில் கையில் வைத்திருந்த காபி அல்லது டீயை தேவாவின் மீது தீபிகா ஊற்றியிருக்கிறாள். வெண்டிங் மெஷின் சூடு. தோலைக் கருக்காது என்றாலும் சுள்ளென்று கவ்வும். அப்படித்தான் தேவாவைக் கவ்வியிருக்கிறது. என்னதான் காதல் என்றாலும் அவனுக்கும் கோபம் வரும் அல்லவா? சூடு பொறுக்கமாட்டாமல் அவன் ஓங்கி அறைந்திருக்கிறான். இவ்வளவுதான் விவகாரம். ஆனால் எங்கள் அலுவலகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் காமிராக்கள் உண்டு. ஊடல் வேகத்தில் கவனிக்காமல் சண்டையிட அது காமிராவில் சிக்கி பிறகு செக்யூரிட்டியிடம் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.  விவகாரம் ஹெச்.ஆருக்கு சென்றது. அதோடு நிற்கவில்லை- இவர்கள் என்னதான் சமாளித்தாலும் அவர்கள் நம்புவதாக இல்லை. இவர்களின் உறவு பற்றி நாள், மணி, நிமிடம் வாரியாக அத்தனையும் சேகரித்து வைத்திருந்தார்கள்.

‘நீங்களாக போகிறீர்களா? நாங்களாக அனுப்பட்டுமா?’ என்பதுதான் ஒரே கேள்வி. முடிவு என்ன ஆனது என்பதற்கு முன்பாக இன்னொரு விவகாரத்தைச் சொல்லிவிடுகிறேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக அந்த பிரான்ஸ் கம்பெனிக்காரனின் சாஃப்ட்வேரில் ஏதோ ஒரு சிக்கல் வந்துவிட்டது. இரண்டு ஆட்களை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறான். இப்படி அவர்களாக ‘ஆட்கள் வேண்டும்’ என்று கேட்டால் நம்மவர்கள் ‘பில் தீட்டிவிடுவார்கள்’. மணிக்கு ‘இத்தனை டாலர்’ என்று மொட்டையடிப்பார்கள். அப்படி பிரான்ஸ்காரனைத் தீட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்டு தேவாவையும், தீபிகாவையும் அனுப்பி வைத்தார்கள். பதினைந்து நாட்கள் பிரான்ஸில் தங்கியிருந்தார்கள். இந்த பதினைந்து நாட்களை தேவாவும் தீபிகாவும் எப்படி கொண்டாடினார்கள் என்பதை பிரான்ஸ் கம்பெனிக்காரனிடம் கேட்டு எழுதிவிடலாம்தான். ஆனால் கத்தரி போட்டு சென்சார் செய்ய வேண்டும். அத்தனை சமாச்சாரங்கள் நடந்திருக்கின்றன.

இந்த பிரான்ஸ் விவகாரம் பற்றியெல்லாம் கூட ஹெச்.ஆர் பெருமக்கள் கேள்வி கேட்டதாகவும் அதற்கு இரண்டு பேருமே ‘அது எங்களின் பெர்சனல்’ என்று சொல்லி வாயை அடைத்ததாகவும் கேள்வி. இதில் கடுப்பான ஹெச்.ஆர் பெருமக்கள் உடனடியாகக் கேட்ட கேள்விதான் இரண்டு பத்திக்கு மேல் இருக்கும் ‘நீங்களாக......’

இரண்டு பேரும் உடனடியாக வெளியே அனுப்பப்பட்டார்கள். அதன் பிறகு இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்று நீங்கள் கேட்பீர்கள் என்று தெரியும். பதில் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லிவிடுகிறேன். ‘நெஸ்ட்’டில் இந்த விவகாரத்தை மெலிதாக கசியவிட்டது என் வேலைதான். அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமாக செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டேன். அவன் ஒரு ஓட்டைவாய். எப்படியோ தீபிகாவின் கணவனுக்கு தகவல் போய்ச் சேர்ந்துவிட்டது. பிறகு அவனும் விசாரித்திருக்கிறான். இது வெறும் வதந்தி இல்லை என்று அவன் புரிந்து கொண்டது பற்றி எனக்கு பரம திருப்தி. ஆமாம், இதைச் சொல்ல மறந்துவிட்டேன். தீபிகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. இரண்டு குழந்தைகளும் உண்டு. ஒரு பையன், ஒரு பெண். பையன் மூத்தவன். அவளது கணவன் ஒரு வங்கியில் வேலையில் இருந்தான். அவளைப் பார்த்தால் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொல்லவே முடியாது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லியிருக்க வேண்டும். இப்பொழுதும் ஒன்று குறைந்துவிடவில்லை. இதுதான் விவகாரமே.

தேவாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்று உண்டு. அவன் குடும்பத்தோடு கே.ஆர்.புரத்தில் வசித்துவந்தான். அவனது வீட்டில் விவகாரம் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் தீபிகாவின் வீட்டில் எனது புண்ணியத்தால் கணவன் - மனைவிக்கு இடையே பெரும் பிரச்சினை வெடித்தது.  ‘எவளோ எப்படியோ போனால் நமக்கென்ன வந்தது...நீங்க வாயை வெச்சுட்டு சும்மா இருகக் வேண்டியதுதானே’ என்று மனைவிக்கு என் மீது கடும் கோபம். அவர்கள் வீட்டில் கொலை நடந்தாலோ அல்லது தற்கொலை எதுவும் நிகழ்ந்தாலோ விசாரணையின் போது என்னையும் அழைத்துச் செல்வார்கள் என்று அவள் சொன்னபோதுதான் எனக்கு விரல்கள் நடுங்கத் துவங்கின. போலீஸ் ஸ்டேஷன் என்றாலே எனக்கு பயம்தான். பாஸ்போர்ட் விசாரணைக்கு போகும் போது ஒருவனை ஜட்டியோடு அமர வைத்திருந்ததைப் பார்த்தேன். அந்தக் கைதி என்னை முறைத்தான். அவசர அவசரமாக பார்வையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டேன். அந்த ‘போஸில்’ என்னால் ஐந்து நிமிடங்கள் கூட அமர முடியாது. கால்கள் வலிக்கத் துவங்கிவிடும். எதற்கும் பயிற்சி செய்து கொள்ளலாம் என்று கடந்த ஒருவாரமாக அதே ‘போஸில்’ அமர்ந்து பழகுகிறேன். இப்பொழுது பத்து நிமிடங்கள் வரை அமர முடிகிறது. இருந்தாலும் அடி விழுமே என்று நடுக்கம்தான். ஆனால் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. 

தீபிகாவின் குழந்தைகள்தான் பாவம். வராண்டாவில் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்கும் போது மட்டும்தான் எனக்கு வருத்தமாக இருக்கும். தீபிகாவை விடவும் பெரிய பாவத்தை நான் செய்திருப்பதாகத் தோன்றும். ஒரு வாரம் இப்படியே போய்க் கொண்டிருந்தது. தீடிரென்று ஒரு நாள் பேக்கர்ஸ் & மூவர்ஸ்க்காரன் லாரியோடு வந்து வீடு முழுவதையும் காலி செய்து அள்ளியெடுத்துக் கொண்டான். தீபிகாவோ அவரது கணவனோ நெஸ்ட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. இந்த ஒரு வாரத்தில் நெஸ்டில் எல்லோருமே இதை ‘கிசுகிசுவாக’ ஒன்றுக்கு மேற்பட்ட முறையாவது அடுத்தவர்களிடம் பேசிவிட்டார்கள் என்பதுதான் அவர்களது தயக்கத்துக்கு காரணம். செக்யூரிட்டியிடம் மட்டும் புனே போவதாகச் சொன்னார்களாம். குடும்பத்தோடு இடம் மாறுகிறார்கள். போகட்டும்.

எனக்கும்தான் வருத்தம். தீபிகாவை இனிமேல் பார்க்கவே முடியாது. இனி அவள் வேறொருவனோடு பழகக் கூடும் அல்லது தேவாவை மீண்டும் விரும்பக் கூடும் அல்லது கணவனே போதும் என நினைத்துக் கொள்ளக் கூடும் அல்லது தற்கொலை கூட செய்து கொள்ளக் கூடும். இனி தீபிகாவை ஒரு போதும் நான் பார்க்கப் போவதில்லை. அந்த வருத்தம்தான். தேவாதான் தப்பித்துவிட்டான். அவனைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. விசாரித்துக் கொண்டிருக்கிறேன். தகவல் கிடைத்தவுடன் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். உங்களுக்குச் சொல்வதற்கு முன்பாகவே அவனது மனைவியிடம் விவகாரத்தைச் சொல்லிவிடப் போகிறேன். அப்பொழுதுதான் காதுக்குள் மூட்டிய புகை சற்று அடங்கும்.

(புனைவு)

0 எதிர் சப்தங்கள்: