Feb 12, 2014

வாத்தியார் என்றாலே குச்சியும் சாக்பீஸூம்தானா?

வாத்தியார் என்றால் கையில் குச்சியோடும், சாக்பீஸோடும்தான் சுற்றுவார்களா?  முளைத்து மூன்று இலை விடுவதற்குள்ளாகவே இந்த மூடநம்பிக்கையை நாங்கள் உடைத்துக் கொண்டோம். அதற்கு காரணம் கனகு வாத்தியார். கனக சபாபதி என்ற பெயர் சற்று நீளமாக இருப்பதால் ஊருக்குள் அவரை கனகு வாத்தியார் என்றுதான் அழைப்பார்கள். நெடு நெடுவென்றிருப்பார். ஆனால் நான்கு நல்லி எலும்புகளைச் சேர்த்துக் கட்டியது போல ஒடிசலான தேகம். நடுவிரலையும், கட்டைவிரலையும் சேர்த்து வேகமாகச் சுண்டினால் கீழே விழுந்துவிடுவார். அப்படியொரு பலசாலி.

அவர் எப்பொழுதும் வேட்டி சட்டைதான். பக்கத்து ஊரில் ஏதோவொரு கிராமப்பள்ளியில் ஆசிரியராக இருந்தார். ஆனால் எந்தப் பள்ளியென்றெல்லாம் ஞாபகம் இல்லை. அவருக்கே ஞாபகம் இருந்திருக்குமா என்றும் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பார். இல்லையென்றால் ஏதாவது மரத்தில் குருவி அடித்துக் கொண்டிருப்பார். பிறகு எப்படி அவருக்கு ஞாபகம் இருக்கும்? 

வேட்டைக்கு தனியாகவும் செல்ல மாட்டார். எப்பொழுதும் இரண்டு பையன்களைச் சேர்த்துக் கொள்வார். அந்தக் காலத்தில் வாத்தியார் சரியில்லையென்றால் கல்வித் துறைக்கு எல்லாம் புகார் எதுவும் அனுப்பமாட்டார்கள் அல்லவா? அதுவுமில்லாமல் எல்லோருக்கும் தெரிந்த முகமாக இருந்தார். ‘தொலைந்து போகட்டும்’ என்று விட்டுவிடுவார்கள். ஆனால் தனது மகன் கெட்டுப்போவதாக நினைத்து புலம்பும் பெற்றோர்கள் ‘இனிமே அந்த வாத்தியார் கூட சேர்ந்தீன்னா காலை முறிச்சுப் போடுவேன்’ என்று தங்கள் மகனை மிரட்டி வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு வாத்திக்கு உள்ளூரில் புகழ்.

கனகு வாத்தியார் ஒன்றும் பெற்றோர்களின் கவலையைப் புரிந்து கொள்ளாத ஜடம் இல்லை. பையன்களை மாற்றிக் கொண்டே இருப்பார். ‘தெரியாம போய்ட்டு வந்துரலாம் வாங்கடா’ என்று வேட்டைக்கு அழைத்துக் கொள்வார். நேற்று தன்னோடு வந்தப் பையனை விட்டுவிட்டு இன்றைக்கு புதிதாக இரண்டு பேர். நாளைக்கு வேறு இரண்டு பேர் என்று ‘ரொட்டேஷன் பேஸிஸில்’அவருடன் செல்வார்கள். அவருக்கு எந்த மாதத்தில் எந்தக் குருவி ஊருக்குள் வரும் என்று தெரியும். வாய்க்காலில் தண்ணீர் ஓடும் காலத்தில் எந்த மரங்களில் குருவிகள் இருக்கும், தண்ணீர் இல்லாத காலங்களில் எந்த பகுதிக்கு போனால் கொக்குகள் மேய்ந்து கொண்டிருக்கும் என்பதை துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பார்.

அது மட்டும் இல்லை-  குறி வைத்து வில்லால் அடிப்பதிலும் படு கில்லாடி. ஒரு முறை அவரோடு குருவியடித்திருக்கிறேன். 

அது நடவுக் காலம். வயல்களில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். யாராவது இவரோடு சுற்றுவதைப் பார்த்து அம்மாவிடம் போட்டுக் கொடுத்துவிடுவார்கள் என்று பயந்து கொண்டே அவருக்கருகில் நின்று கொண்டிருந்தேன். அவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். எங்கள் தலைக்கு மேலாக கொக்குகள் கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. அவை ஒரு வயலிலிருந்து இன்னொரு வயலுக்கு இடம் மாறிக் கொண்டிருந்தன. தூண்டிலைக் கீழே வைத்தவர் ‘அந்த வில்லை எட்றா’ என்று வாங்கி கல்லை ஏற்றினார். வலது கண்ணை மூடிக் கொண்டு இடது கண் பக்கமாக உண்டிவில்லை வைத்து ஒரே அடிதான்.  கூட்டத்திலிருந்த ஒரு கொக்கு நடு வயலில் திருகிக் கொண்டு விழுந்தது. ‘போய் எடுத்துட்டு வாடா’ என்று என்னை அனுப்பினார். நான் அருகில் ஓடுவதற்குள் அதன் துடிப்பு அடங்கியிருந்தது. சகதிக்குள் கிடந்தது. கையில் எடுத்த போது துள்ளவில்லை என்றாலும் அதன் இதயத் துடிப்பை உணர முடிந்தது. அதன் பிறகு அவரோடு சுற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

வாத்தியாரோடு சேர்ந்து குருவியடிக்க எந்தப் பையனுக்குத்தான் பிடிக்காது? அவர் அழைத்தால் போதும் என்று காத்திருப்பார்கள். சிக்னல் கிடைத்தவுடன் சோற்றுப் போசியை எடுத்துக் கொண்டு அவரது டிவிஎஸ் 50 இல் தாண்டுக்கால் போட்டு ஏறிக் கொள்வார்கள். தடம் வழியில் பையனுடைய அம்மாவோ அப்பாவோ பார்த்துவிட்டால் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே சிரிப்பார்.

‘படிச்சவன்தான் உருப்புடுவான்னு இல்ல அம்மிணி..நானுந்தேன் படிச்சேன்..இப்போ உருப்பட்டனா? படிக்காம சுத்துனாலும் உம்பையன் சூட்டிப்பு. பொழச்சுக்குவான் போ’ என்று மடக்கிவிடுவார். வீட்டிற்கு திரும்பிய பிறகு அவனுக்கு நான்கு மொத்துக்கள் அல்லது சில பல குத்துக்கள் காத்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

குருவியடிப்பதற்கும் மீன் பிடிப்பதற்கும் எதற்கு குச்சியும் சாக்பீஸூம்? அவருக்கு சாக்பீஸ் பிடித்து எழுதுவது கூட மறந்திருக்கக் கூடும். அவரது டிவிஎஸ் 50ன் பெட்டிக்குள் எப்பொழுதும் உண்டி வில் இருக்கும். அதன் கேரியரில் மீன் தூண்டில் இருக்கும். அவ்வளவுதான் கனகு வாத்தியார்.

அவருக்கு ஒரு பேரன் இருந்தான். என்னை விட இரண்டு வயது இளையவன். நாங்கள் படித்த அதே பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தான். பள்ளி முடிந்தவுடன் பேருந்தில் நாங்கள் வீட்டுக்கு வந்துவிடுவோம். ஆனால் அவரது பேரனுக்கு படு செல்லம். தினமும் கனகு வாத்தியார்தான் தனது டிவிஎஸ் 50ல் அழைத்துச் செல்வார். பள்ளி விடுவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்து நின்று கொள்வார். பெரும்பாலும் கொக்கு அல்லது குருவியை வண்டியின் முன்புறமாக தொங்கவிட்டிருப்பார். சில சமயங்களில் ஆறாமீன்களை ஊணாங்கொடித் தாவரத்தில் கோர்த்து தொங்கவிட்டிருப்பார். தினமும் வேட்டையின் அடையாளமாக அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்வார் என்று சொல்ல முடியாது. யாராவது கேட்டால் கொடுத்துவிடுவார் ஆனால் பேரனுக்கு அளவாக எடுத்து வைத்து விட்டுத்தான் கொடுப்பார்.

அவர் நேரத்திலேயே பள்ளிக்கு முன்பாக வந்து நின்றாலும் பேரன் சீக்கிரம் வெளியே வர மாட்டான். தன்னுடன் சில சேக்காளிகளைச் சேர்த்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பான். கனகு வாத்தியாரின் பேரனல்லவா? பிறகு எப்படி இருப்பான்? ஆனால் அதற்காக கனகு வாத்தியார் சலித்துக் கொள்பவரில்லை. வெளியே பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும் எங்களோடு பேசிக் கொண்டிருப்பார்.

அந்தக் காலத்தில் அவரிடம் ஒரு வாக்மேன் இருந்தது. அதை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார். அவர் மட்டும் கேட்கமாட்டார். தன்னைச் சுற்றிலும் நிற்கும் பையன்களுக்கும் காதில் மாட்டிவிடுவார். ஆனால் துளியூண்டு நேரம்தான் ஒவ்வொருத்தனுக்கும் கிடைக்கும். ‘பூ...’‘ங்கா’‘ற்று’‘புதி’‘ரானது’ என்று ஒவ்வொரு பையனும் இரண்டு எழுத்துக்கான ஒலியை மட்டுமே கேட்க முடியும். பாடலின் மூன்றாவது வரி வரும் போது கனகு வாத்தியாரின் தலையில் ஹெட்போன் இருக்கும். ஆனால் ஒரு பையனுக்கு மிஸ் ஆகாது. அருகில் இருக்கும் அத்தனை பேரின் காதுகளிலும் ஒரு மாத்திரை கால அளவில் மாட்டி எடுத்துவிடுவார். அதுவே எங்களுக்கு சொர்க்கம் மாதிரிதான்.

பேரன் வரும் வரைக்கும் எங்களைக் கூட்டி வைத்து கதை சொல்வார். எங்கள் வீட்டிலும் அந்த வாத்தியாரோடு சேரக் கூடாது என்று சொல்லி வைத்திருந்தார்கள் என்பதால் அவரது கதைகளைக் கேட்டால் நமது படிப்பு கெட்டுவிடும் என்று பயமாக இருக்கும். அதற்கேற்றாற்போல அவரது கதைகளும் வேட்டையைப் பற்றித்தான் இருக்கும். எலி வங்கு, பெருக்கான் வங்கிலிருந்து அத்தனை உயிரினங்கள்  பற்றியும் துல்லியமாகச் சொல்வார். கீரிப்பிள்ளை எதை உண்ணும், பாம்பு கடித்தால் எந்தச் செடி உதவும், இப்பொழுது காணாமல் போன தாவரங்கள் எவை எவை என்று சகட்டு மேனிக்கு கதையோடு சேர்த்துச் சொல்வார். இப்பொழுது நாம் சூழலியல் என்று பேசுகிறோம் அல்லவா? அதன் பேச்சு வடிவம்.  

ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் எங்கள் ஆயா வேகமாக வீட்டிற்குள் வந்தார். உள்ளே நுழைந்தவுடனேயே கனகு வாத்தியார் இறந்துவிட்டதாகச் சொன்னார். அப்பா ‘எப்படி’ என்றதற்கு ‘லாரி அடிச்சுடுச்சு...வா’ என்றார். அப்பா வந்தாரா என்று ஞாபகம் இல்லை ஆனால் நான் ஆயா பின்னாலேயே ஓடினேன். ஊரே கூடியிருந்தது. அப்பொழுது ஊரில் இவ்வளவு ஜனநெரிசல் இல்லை. ஆனால் இருந்தவர்களில் பெரும்பாலானோர் கூடியிருந்தார்கள்.

டிவிஎஸ் 50 இல் வரும் போது வாக்மேனை காதில் மாட்டிக் கொண்டு வந்திருக்கிறார். அந்தக்காலத்தில் மூக்கு லாரி ஒன்று இருக்குமே. மஞ்சள் நிற எமன். அந்த லாரிக்காரன்தான் ஒருவன் அடித்துவிட்டான். அதை அடித்துவிட்டான் என்று சொல்ல முடியாது. லாரியின் பின்சக்கரத்தில் கனகுவாத்தியாரின் தலை சிக்கிக் கொண்டது. மூளை மூன்று பாகங்களாகச் சிதறிக் கிடந்தது. நாங்கள் போகும் போது அவரது வேட்டியை எடுத்து தலை மீது போர்த்தியிருந்தார்கள். அவரது மனைவி ‘மூளை மட்டும் தனியா துடிச்சத பார்த்தேனே...என் கண்ணு அவிஞ்சு போகட்டுமே’ என்று கதறிக் கொண்டிருந்தார். 

அப்பொழுது 108 வசதி இல்லை. வெகுநேரத்திற்கு பிறகே ஆம்புலன்ஸ் வந்தது. அவரது உடலை எடுக்க எத்தனித்தார்கள். அது அவ்வளவு சுலபமாக இல்லை. அவரது தலை தார்ச்சாலையோடு ஒட்டி இறுகிக் கிடந்தது. கால்களைப் பிடித்து இழுத்தார்கள். ரத்தம் காய்ந்து கிடந்தது. வெகு சிரமத்திற்கு பிறகே பிரிக்க முடிந்தது. ஒரு பாலித்தீன் பையில் மூளைச் சிதறல்களை சுரண்டி எடுத்துக் கொண்டார்கள். அப்பொழுது பெரும்பாலான பெண்கள் அழுதார்கள். அந்தச் சத்தம் எங்களைப் போன்ற சிறுவர்களை பயமூட்டியது. பாலித்தீன் கவரோடு ஆம்புலன்ஸூக்குள் ஏறியவர் கதவை மூடிக் கொண்டார். பின்னாலேயே ஊர்க்காரர்களின் வண்டிகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்தன. நாங்கள் அங்கேயே நின்று கொண்டோம். ஒரு துளி மூளை அதே இடத்தில் கிடந்தது. எங்கள் ஊரின் சூழலியலைத் தெரிந்திருந்த கடைசி மூளைத் துளி அது. ஆனால் அது அப்பொழுது துடிக்கவில்லை.

0 எதிர் சப்தங்கள்: