கிராம நிர்வாக அலுவலர் என்றாலே சாதிச்சான்றிதழுக்கு காசு வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது என்றால் அதற்கு ஷங்கர் மட்டும் காரணமில்லை. ரியாலிட்டியும் கிட்டத்தட்ட நெருக்கம்தான். என்றாலும் இதை நான் தப்பித் தவறி கூட ஒத்துக் கொள்ள மாட்டேன். ‘மாட்டேன்’ என்பதை விடவும் ‘கூடாது’. அம்மா படு டென்ஷனாகிவிடுவார். முதலமைச்சர் அம்மா இல்லை. என் அம்மாதான். அவர் அந்த வேலையில்தான் பல வருடங்களாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக இந்த வேலையில் இருந்தவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். வயதாகிவிட்டது. சர்க்கரை உடலை பலவீனமாக்கிவிட்டது. பெங்களூர் இடம் பெயர வேண்டும் என்று ஏகப்பட்ட காரணங்கள். ஆனால் விருப்ப ஓய்வுக்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து வாங்கிச் சேர்ப்பதற்குள் மென்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்தார். உதவி கேட்டுச் சென்றால் அவர் கட்சிபேதம் எதுவும் பார்க்கமாட்டார். அவரது சிபாரிசுக்கு பிறகுதான் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
வரும் போது விட்டகுறை தொட்டகுறையாக ஒன்றை பாக்கி வைத்துவிட்டு வந்துவிட்டார். அவர் கடைசியாக பணியாற்றிய கிராமத்தில் ஒரு கொலை நடந்துவிட்டது. கணவனே மனைவியைக் கொளுத்திவிட்டான். கள்ளக்காதல் விவகாரம்தான். எக்ஸ்ட்ரா காதல் மனைவிக்கு வந்ததா அல்லது கணவனுக்கா என்று தெரியவில்லை. விவகாரம் முற்றி அடித்துக் கொண்டார்களாம். அடியோடு நிறுத்தவில்லை. அவளை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போய் ஒரு வனப்பகுதியில் கொன்று எரித்துவிட்டார்கள். தூக்கிக் கொண்டு போனவர்களில் கணவனும் ஒருவன்.
நமது காவல்துறைக்கு விஷயமே தெரியவில்லை. வெகு நாட்கள் கிடப்பிலேயே கிடந்திருக்கிறது. பக்கத்து வீட்டில் யாராவது ‘வீட்டுக்காரி எங்கே?’ என்று கேட்கும் போதெல்லாம் ‘ஊரில் இருக்கிறாள்’ என்று சொல்லியிருக்கிறான். எத்தனை நாளைக்குத்தான் சொல்ல முடியும்? யாருக்கோ சந்தேகம் வந்திருக்கிறது. பெரும்பான்மையான கொலைவழக்குகளைப் போலவே சந்தேகம் வந்தவன் போட்டுக் கொடுத்துவிட்டான். அதுவும் மொட்டைக் கடுதாசி. கடுதாசி வந்த பிறகுதான் காவல்துறைக்கு கொலை நடந்திருக்கிறது என்று தெரியுமாம்.
நேரே வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறார்கள். டிவி பார்த்துக் கொண்டிருந்தானாம் அந்தப் புண்ணியவான். தூக்கிச் சென்று லாடம் கட்டியிருக்கிறார்கள். ஒத்துக் கொண்டான்.
கடுதாசி அனுப்பியவன் காவல்துறைக்கு மட்டும் அனுப்பினால் வேலைக்காகாது என்று நினைத்தானோ என்னவோ வருவாய்த்துறைக்கும் சேர்த்து அனுப்பிவிட்டான். அதனால் அம்மாவை ஒரு சாட்சியாகச் சேர்த்துக் கொண்டார்கள். இத்தனை நாட்களுக்குப் பிறகு கோர்ட் சம்மன் வந்திருக்கிறது. ‘உடம்பு சரியில்லை என்று சொல்லிவிடுங்கள்’ என்றால் ‘அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துவிடுவார்கள்’ என்று பயந்தபடியே போயிருக்கிறார். கொளுத்தியவன் செல்வாக்கானவன் போலிருக்கிறது. ‘இப்படித்தான் நீங்கள் கோர்ட்டில் சாட்சி சொல்ல வேண்டும்’ என்று இதுவரை மூன்று நான்கு பேர் ஃபோன் செய்துவிட்டார்கள். அம்மா பதறிவிட்டார்.
‘எனக்கு எல்லாம் மறந்து போச்சு’ என்று சொல்லப்போவதாக கடைசியாக ஃபோன் செய்தவரிடம் கத்திக் கொண்டிருந்தார். ‘எல்லாம் மறந்துவிட்டது’ என்று அரசியல்வாதிகள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். இவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. செய்தித்தாள் படித்துக் கெட்டுப் போயிருக்கிறார். இப்பொழுதெல்லாம் அதுதான் வேலை. காலையில் ஒன்பது மணிக்கு எல்லோரும் அவரவர் வேலைக்குக் கிளம்பிவிடுவோம். அப்பா ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறார். அதற்கு சோறு போடுவதும், குளிப்பாட்டுவதுமாக நேரத்தை ஓட்டிவிடுகிறார். அம்மாவுக்கு தினத்தந்தி, சூப்பர் சிங்கர்தான். இந்த விஜய் டிவியில் அநியாயம் செய்கிறார்கள். ஒரேயொரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு மறு ஒளிபரப்பு செய்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களும் சலிப்பேயில்லாமல் திவாகரையும், சோனியாவையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதை விடுங்கள்.
உண்மையிலேயே அம்மாவுக்கு எல்லாம் மறந்துவிட்டது. ‘எதை எழுதி கையெழுத்து போட்டேன்’என்று கூட ஞாபகம் இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். நல்ல வக்கீலாக இருந்தால் இதை எளிதில் கண்டுபிடித்துவிடக் கூடும். இன்ஸ்பெக்டரைக் காட்டி ‘இவர்தானே அந்தக் குற்றவாளி’ என்றால் ‘ஆமாம்’ என்று தலையாட்டிவிடுவார். அத்தனை ஞாபக சக்தி.
நேற்று அவரை அனுப்பி வைப்பதற்காக பேருந்து நிற்குமிடத்திற்கு அழைத்துச் சென்றேன். இரவு பதினோரு மணி ஆகியிருந்தது. சாலையில் மனித நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. பெங்களூரில் பதினோரு மணியானால் பெரும்பாலான ட்ராபிக் சிக்னலை அணைத்துவிடுகிறார்கள். வாகனங்களின் சராசரி வேகம் அதிகரித்திருக்கும். சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும். எங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் மதுக்கடையும் மூடுகிற தருணம். எப்பவுமே மதுக்கடைகள் பெர்முடா முக்கோணங்கள். அப்படித்தான் நேற்றும் ஆகிப் போனது. ஒருவர் நடந்து கொண்டிருந்தார். அதை நான் பெரிதாக அலட்சியம் செய்யவில்லை. அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். சில வினாடிகள்தான். வண்டிக்குள் விழ வந்துவிட்டார். உச்ச போதையில் இருந்தார். இதைத் துளி கூட எதிர்பார்க்கவில்லை. அத்தனை பலத்தையும் திரட்டி ப்ரேக்கை அழுத்தினேன். மூன்று அடி கூட இடைவெளி இருந்திருக்காது. ஒரு கணம் இதயத்துடிப்பே நின்று போனது. நெஞ்சுக் குழி என்பது ஒரு குகை என்று இது போன்ற தருணங்களில்தான் தெரிகிறது. அவ்வளவு பெரிய வெற்றிடம் உருவாகியிருந்தது. அம்மாவுக்கு அதே ‘திக்’தான். அவரையும் அறியாமல் கத்திவிட்டார். அவரைப் பொறுத்தவரையிலும் இது ஒரு கெட்ட சகுனம். பாட்டிலிலிருந்து நீரை எடுத்துக் குடித்துக் கொண்டார்.
அதன்பிறகு வண்டி நாற்பது கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டவில்லை. நிறுத்தத்தை அடைந்த கால் மணி நேரத்தில் பேருந்து வந்துவிட்டது. அம்மாவை பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பும் போது இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டிருந்தேன். சோடியம் விளக்கு சாலைகளை மஞ்சள் ஒளியில் நனைத்துக் கொண்டிருந்தது. பெங்களூரின் குளிர் இதமாக இருந்தது.
பாடலைக் கேட்டுக் கொண்டே வரும் போதுதான் அந்தக் காட்சி கண்ணில்பட்டது. வீட்டிற்கு அருகில் இருக்கும் அதே மதுக்கடையினருகில் இப்பொழுது நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். அனேகமாக கடையில் வேலை செய்பவர்களாக இருக்கும். அது சாதாரணக் கூட்டம் இல்லை. சற்று பரபரப்பாக இருந்தார்கள். ஒரு ஆள் கீழே கிடந்தான். இது எதிர்பார்த்ததுதான்.
அதே ஆளா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வாகனம் செதுக்கிவிட்டு போயிருக்கிறது. மண்டையில் அடிபட்டிருந்தது.நூற்றியெட்டுக்குச் சொல்லிவிட்டார்கள். இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுமாம். கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார்கள். அது வாந்தியோடு கொப்புளித்தபடி வெளியே வந்தது. பயங்கரமான துர்நாற்றம். அவன் வெகு நேர்த்தியாக ஆடை அணிந்திருந்தான். காலில் இருந்த ஷூவை யாரோ கழட்டிக் கொண்டிருந்தார்கள். அடிபட்டுக் கிடந்தவன் ஏதோ பினாத்திக் கொண்டிருந்தான். ஒன்றும் புரியவில்லை. எதற்காக இத்தனை போதையை ஏற்றிக் கொண்டான் என்று தெரியவில்லை. அதுவும் தனியாக வந்திருக்கிறான். அவனது அலைபேசியை எடுத்து சில நெம்பர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இனி அவர்கள் பதற்றத்தோடு ஓடி வருவார்கள். அவர்களது தூக்கம், நிம்மதி அத்தனையையும் இந்த இரவு திருடிக் கொள்ளப் போகிறது.
இந்த நிகழ்வுகளுக்கிடையில் ரோந்து போலீஸ்காரர்கள் வந்துவிட்டார்கள். எனது வண்டியில் நான் ஏறிக் கொண்டேன். ஃபோனை வண்டியிலேயே வைத்திருந்தேன். அம்மா அழைத்திருக்கிறார். மிஸ்டு கால் ஆகியிருந்தது. அதுவும் ஐந்தாறு முறை. அவர் பயந்திருக்கக் கூடும். திரும்ப அழைத்து வீட்டுக்கு வந்துவிட்டதாக பொய் சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்தேன். சில கணங்களுக்கு அவன் வண்டிக்குள் விழ எத்தனித்த கணம் நினைவில் வந்து போனது. அவனது குடும்பம் பற்றியும், அவனது குழந்தைகள் பற்றியும் நானாக ஒரு கற்பனையைச் செய்து கொண்டேன். அந்தக் குழந்தைக்கு என்னையும் அறியாமல் எனது மகனின் முகம் வந்துவிட்டது. மகி ‘அப்பா வேண்டும்’ என்று அழுவதாக கற்பனை வளர்ந்த போது பதறிப்போனேன். அவசர அவசரமாக பாடலின் ஒலியைக் கூட்டினேன். அப்பொழுது இளையராஜாவும், ஜானகியும் ‘அடி ஆத்தாடி இளமனசொன்னு’ பாடிக் கொண்டிருந்தார்கள்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment