Jan 31, 2014

என்னய்யா ஆச்சு?

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு தள்ளுவண்டிக் கடை இருக்கிறது. மாலை ஆறு மணிக்கு மேல் மட்டும் இயங்கும் கடை. சில்லி சிக்கன், ஈரல், வறுவல் போன்ற இன்ன பிற சமாச்சாரங்களை விற்பார்கள். பாய் கடை. தள்ளுவண்டிக்கடை என்றாலும் இரண்டு பேர்கள் இருப்பார்கள். ஒருவர் பணம் வாங்குவது, கறியை எடையிட்டுக் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்வார். இன்னொரு பாய் அடுப்பில் நின்று கொண்டிருப்பார். அடுப்பு என்றால் தந்தூரி அடுப்பு. இடுப்புயரமுடைய ஒரு தகர ட்ரம் (ட்ரமுக்கு பொருத்தமான தமிழ்ச்சொல் என்னவாக இருக்கும் என்று மண்டை காய்கிறது) அதன் கீழாக ஓட்டையிட்டு தீ முட்டியிருப்பார்கள். அதன் மேற்பரப்பில்தான் வெந்து கொண்டிருக்கும்- சகல ஜீவராசிகளின் அங்கங்களும்.

ஜீவ காருண்யம் பேசுபவர்களை மனதில் நினைத்துக் கொண்டு இதோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட வேண்டும். பாய் எதைக் கலக்குகிறார் என்று தெரியாது. ருசி பிரமாதமாக இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்களாவது குறைந்தபட்சம் அரை ப்ளேட் உள்ளே தள்ளிக் கொண்டுதான் வருவேன். கறி இரண்டாம் பட்சம். அவரிடம் பேசுவதற்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கும் பாயிடம் பெரிதாக பேசுவதில்லை. அவருக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் சமையல்கார பாய் அறுபதைத் தாண்டியிருப்பார். கலக்கலான மனிதர். அந்தக் காலத்தில் அவர் பஞ்சம் பிழைப்பதற்காக சொந்த ஊரிலிருந்து வந்த கதையிலிருந்து இன்றைய தனது குடும்பம் குட்டி வரை திறந்த வாயை மூடாமல் பேசிக் கொண்டிருப்பார். 

வேலூர் பக்கத்திலிருந்து வந்தவர். இப்பொழுது ஊரில் தொடர்புகள் இல்லையாம். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தவர் பெங்களூரிலேயே ஒரு இசுலாமிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். நான்கைந்து குழந்தைகள். அவர்களில் ஒருவன் மட்டும் இந்துப் பெண்ணை கூட்டிக் கொண்டு ஓடிவிட்டானாம். மற்றவர்கள் இதே ஊரில்தான் இருக்கிறார்கள். மகள்கள் ஆளாளுக்கு ஒரு ஊரில் இருக்கிறார்கள். 

இவருக்கும் மனைவிக்குமான வருமானத்தை இந்தத் தள்ளுவண்டிக்கடை தந்து கொண்டிருக்கிறது.

வெளியிடங்களில் எதைத் தின்றாலும் அது எங்கிருந்து வருகிறது என்ற சந்தேகம் அரித்துக் கொண்டே இருக்கும். காய்கறிக்கடை நடத்துபவர்களிடம் விற்பனையாகாமல் மிச்சம் மீதி ஆகும் காய்கறிகளை என்ன செய்வீர்கள் என்று கேட்டுப்பாருங்கள்- பெரும்பாலான பதில் ‘ஹோட்டலுக்கு கொடுத்துவிடுகிறோம்’ என்பதாகத்தான் இருக்கும். பாதி விலைக்குக் கிடைக்கிறது என்பதால் வாடி வதங்கிய காய்கறிகளை உணவுவிடுதிக்காரர்கள் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். 

அதே போலத்தான் கறிக்கடைகளிலும்- விற்காத கறிகளை ஹோட்டலுக்கு கொடுத்துவிடுவதாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். 

ஆரம்பத்தில் பாயிடமும் அதே சந்தேகம் இருந்தது.

முஸ்லீம்களில் சற்று வயதானவர்களைப் பார்த்தால் மாமா என்று அழைத்துவிடுவது வழக்கம். சமீபத்தில் ஏதோ ஒரு புத்தகத்தில் கூட இப்படி வாசித்தேன். அந்த எழுத்தாளரும் இஸ்லாமியர்களை மாமா என்று அழைப்பாராம். எந்தப் புத்தகம் என்று மறந்துவிட்டது. இது எனது சிறு வயது பழக்கம். அப்பாவின் நெருங்கிய நண்பர் குழாமில் ஒரு இஸ்லாமியர் உண்டு. அவர் மட்டும்  எங்களுக்கு சித்தப்பா. மற்ற இசுலாமிய பெரியவர்கள் மாமாதான். இந்தத் தள்ளுவண்டிக்கடை பாயும் அப்படித்தான். முதல் முறையாக அழைத்த போது வித்தியாசமாக பார்த்தார். பிறகு வண்டியை நிறுத்தும் போதே ‘மாப்ளே’ என்பார். பலே பாண்டியா படத்தில் எம்.ஆர்.ராதா சொல்லும் ‘மாப்ளே’தொனியில். 

இந்த மாமா-மாப்ளே உறவெல்லாம் கடையில் கூட்டம் இல்லாமல் இருந்தால்தான். கூட்டம் இருந்தால் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார். முக்கால் இஞ்சுக்கு சிரித்து வைப்பார். வாயிலிருந்து வார்த்தையும் வாங்க முடியாது. அதனால் கூட்டமாக இருந்தால் கடைக்குச் செல்வதை தவிர்த்துவிடுவவேன்.

சந்தேகம் தீராமல் ‘பழைய கறியா மாமா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்று சொல்ல மாட்டார். 

‘அதெல்லாம் மாப்ளேக்கு தர மாட்டேன்’ என்பார். அதோடு நிறுத்திக் கொள்வேன்.

உதவிக்கு நிற்கும் பாயின் சம்பளம் போக ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் வருமானம் நிற்கிறது. இதை அவர்தான் ஒரு முறை சொன்னார். வெள்ளந்தியான மனிதர். எதைக்கேட்டாலும் வெளிப்படையாகச் சொல்வார். ஒரு முறை ஏதோ ஒரு கேஸில் பிடித்துக் கொண்டு போய் மிதித்தார்களாம். இப்பொழுது வரைக்கும் மனைவியை தொடுவதில்லை- தொட முடிவதில்லை என்றார். அப்பொழுதும் கூட முகபாவனையை மாற்றிக் கொள்ளாமலே பேசிக் கொண்டிருந்தார்.

அவரோடு பேசிக் கொண்டிருப்பதே சந்தோஷமாக இருக்கும். அத்தனை கதைகளால் நிரம்பிய மனிதர் அவர். அவருக்கும் என்னோடு பழகுவதில் எந்தச் சிரமமும் இல்லை. 

இது பெரிய விஷயமே இல்லை. இன்னமும் கூட ஊர்ப்பக்கங்களில் இந்துக்களும் இசுலாமியர்களும் படு சொந்தமாக குலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நகரங்களில்தான் தாடி வைத்தவனையெல்லாம் தீவிரவாதியாக மாற்றி வைத்திருக்கிறார்கள். குல்லா அணிந்தவன் பையோடு வண்டியில் ஏறினாலே அது வெடிகுண்டாகத்தான் இருக்கும் என்று நம் புலனாய்வுக் கண்கள் விழித்துக் கொள்கின்றன. ஒரு எளிய இசுலாமியன் அருகில் வந்தால் அனிச்சையாக இடைவெளியை உருவாக்கிக் கொள்வதற்கு பழகிவிட்டோம். நமக்கு இடையிலான இந்த வேற்றுமை செயற்கையாகவும் அதே சமயத்தில் படு வேகமாகவும் உருவாக்கப்பட்ட வேற்றுமை. அதைத்தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘இந்தியா பிடிக்கவில்லையென்றால் பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள்’ என்று சர்வசாதாரணமாகச் சொல்லும் அளவிற்கு முன்னேறிவிட்டோம்.

அவ்வப்போது அலுவலக நண்பர்களோடு அவரது கடைக்குச் செல்வவோம். இப்பொழுது அந்த நண்பர்களில் பெரும்பாலானவர்கள் அவருக்கு வாடிக்கையாளர்கள் ஆகிவிட்டார்கள். ருசியும் பாயின் பேச்சும் அவர்களையும் இழுத்துக் கொண்டது.

இப்படித்தான் திங்கட்கிழமை அலுவலகத்தில் அதிக வேலை இல்லை. உடன் வேலை செய்யும் வடக்கத்திக்காரன் ஒருவனைச் சேர்த்துக் கொண்டு பாய் கடைக்குச் சென்றிருந்தோம். அவர் கடையிலும் கூட்டம் இல்லை. நெருப்பை விசிறுவது போல ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தவர் சிரித்துக் கொண்டே வரவேற்றார். அவனோடு ஹிந்தியிலும் என்னோடு தமிழிலும் பேசிக் கொண்டே ஈரல் கொடுத்தார்; பிறகு வறுவல் கொடுத்தார்; ஆளுக்கு ஒரு ஆம்லெட். இதோடு நிறுத்தியிருக்கலாம். இதே வரிசையை ரிவர்ஸில் முயன்றோம். அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. பேசிக் கொண்டே இருந்தார். அதே சமயம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். அரை மணி நேரம் ஆகியிருக்கும். கூட்டம் வர ஆரம்பித்த பிறகு கிளம்பினோம். வயிறு முட்டத் தின்றது போல இருந்தது. இருக்காதா பின்னே? ஆனால் பிரச்சினை என்னவென்றால் அதே போலத்தான் அடுத்த மூன்று நாட்களுக்கும் இருந்தது என்பதுதான். அவ்வளவுதான். எல்லாவற்றிற்கும் ப்ரேக் விழுந்துவிட்டது.

மூன்று நாட்களாக ஏன் எதுவும் எழுதவில்லை என்பதற்கான பதில் இதுதான்.

இந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டிருந்தால் சாதாரணமாக விட்டிருக்கலாம்தான். யார் கேட்டிருக்கிறார்கள் என்று கீழே இருக்கும் திரைச்சொட்டைப் பாருங்கள். பதில் சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லியாகிவிட்டது. மாரியப்பன் என்னைத் தவறாக நினைக்காமல் இருந்தால் கிடா வெட்டி பொங்கல் வைக்கிறேன் வண்ணாரக் கருப்பராயா.


1 எதிர் சப்தங்கள்:

Vikram said...

nicely built up towards the end!!:)