Jan 1, 2014

இணையத்தில் எழுதுபவர்களை bubbles என்று சொன்னாராமே?

நேற்று எதிர்பாராத சென்னைப் பயணம். எதிர்பாராத என்றால் முந்தாநாள் இரவு ஒன்பது நாற்பது வரைக்கும் சென்னை கிளம்புவேன் என்று நினைக்கவில்லை. இரவு 9.45க்கு மின்னஞ்சலில் லிண்ட்சேவை பேக் செய்து அனுப்பியிருந்தார்கள். Final draft என்று சொல்ல முடியாது- ஆனால் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான். வாசித்துப் பார்த்தால் ஏகப்பட்ட திருத்தங்கள் கண்ணில் தென்பட்டன. போனில் ஒவ்வொரு திருத்தமாகச் சொல்வதென்றாலும் கூட போன் சார்ஜைக் கணக்குப் போட்டால் கிட்டத்தட்ட பேருந்துக் கட்டணத்தைத் தொட்டுவிடும் போலிருந்தது. ‘அப்படியே வைத்திருங்கள். காலையில் வந்துவிடுகிறேன்’ என்று ஜீவகரிகாலனிடம் சொல்லிவிட்டு பையைத் தூக்கித் தோளில் போட்டு பெங்களூரில் வண்டியேறினால் அதிகாலையில் கோயம்பேட்டில் இறக்கி விட்டுவிட்டார்கள்.

பேருந்துகளில் கூட்டமே இல்லை. நடத்துனர்கள் நம்மை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறைதான். செளகரியப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். என்னதான் அமர்ந்து என்ன பிரயோஜனம்? இப்பொழுதெல்லாம் அரசுப் பேருந்துகளில் டிவியும் இல்லை டிவிடியும் இல்லை. அவர்களும் இந்த அமெரிக்கக் கம்பெனிகளைப் பார்த்து சீரழிகிறார்கள் போலிருக்கிறது. Cost cutting என்கிறார்கள். முந்தின ஸீட்டில் சட்டியோடு ஒரு அம்மையார் அமர்ந்திருந்தார். காதில் ஹெட் போன். அந்த ஃபோனின் மறுமுனையில் வேறொருவன் சட்டியோடு அமர்ந்திருப்பான் போலிருக்கிறது. வறு வறு என வறுத்துக் கொண்டிருந்தாள். காது கொடுத்துக் கேட்டால் ஒரு சுவாரஸியமான கதை கிடைக்கும்தான். ஆனால் அடுத்த நாள் முழுவதும் வேலை இருக்கும் என்பதால் தூங்கியே தீர வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு. பற்களை இறுகக் கடித்துக் கொண்டு தூங்கிவிட்டேன்.

புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் குடும்பத்தை விட்டு சென்னைக்கு கிளம்புவது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு நம்பிக்கை உண்டு. நமது உழைப்புக்கும், compromiseக்கும் ஏற்ற விலையும் பதிலும் நிச்சயம் கிடைக்கும். அந்த விலையும் பதிலும் நேரடியானதாகவோ அல்லது உடனடியானதாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உண்டு. 

எதிர்பார்த்தது போலவே சென்னையில் கடும் வேலை இருந்தது. தொகுப்புக்கான இருபத்தைந்து கதைகளையும் பதிப்பகத்தார் தேர்ந்தெடுத்ததிலிருந்து ஒரு முறை கூட நான் வாசிக்கவே இல்லை. சோம்பேறித்தனம் என்று சொல்ல முடியாது. கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். நேற்று வடிவமைப்பாளர் வீட்டில்தான் வாசிக்கவே ஆரம்பித்தேன். மொத்தப் புத்தகமும் நூறு பக்கம்தான் என்பதால் மூன்று மணிநேரத்தில் வாசித்து திருத்தம் செய்து வேலையை முடித்துவிட்டோம். மொத்தமாக, கதைகள் எனக்கு திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றன. என்றாலும் ஓரிரு கதைகளை டிங்கரிங் செய்திருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால் இருக்கட்டும். நாம் எழுதியதை நாமே வாசித்தால் சில இடங்களில் அப்படித்தான் தோன்றும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். 

ஏற்கனவே இது ‘Proof Reading' பார்த்ததுதான். வேறொரு நண்பர் பார்த்தாராம். ‘அப்புறம் ஏன் பிழைகள் இருக்கின்றன?’ என்றால்  ‘கதைகளில் excite ஆகிவிட்டேன்’ என்கிறார் அவர். நம்பும்படியாகவா இருக்கிறது? புத்தாண்டும் அதுவுமாக ஏன் நம்பிக்கையில்லாத் தீர்மானம். நம்புவோம்.

சரி. இதை லிண்ட்சேவின் விளம்பரத்திற்காக  எழுத ஆரம்பிக்கவில்லை.

எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் ‘இணைய எழுத்தாளர்கள் எல்லாம் bubbles’ என்று பேசினாராம். அவர் பேசியதை நான் கேட்கவில்லை. ஆனால் புத்தக வேலையைச் செய்து கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் இதை சென்னையில் சொன்னார். 

திரும்ப பெங்களூர் வரும் வரைக்கும் மண்டைக்குள் இதே நினைப்புதான். இந்த எஸ்.ரா, ஜெ.மோ, சாருவுக்கெல்லாம் இதே வழக்கமாகிவிட்டது. ஒருவர் bubbles என்றால், இன்னொருவர் இணைய மொக்கைகள் என்கிறார். இன்னொருவர் நாராசமாகத் திட்டுகிறார். ஆனால் இவர்கள் அத்தனை பேருமே வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக இந்த வாசகர்களுக்காகவும், இந்த குமிழி எழுத்தாளர்களுக்காகவும் எழுதுகிறார்கள் என்று புரியவில்லை. வெறும் அச்சு ஊடகமே எங்களுக்கு போதும் என்று நிறுத்திக் கொண்டால் பல வாசகர்களுக்கும் நிம்மதியாக இருக்கும் அல்லவா?

அச்சு ஊடகத்தை பொறுத்தவரைக்கும் எழுதத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கிறது. இணையத்தில் அப்படியே எதிர்மறை. யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இங்கு ‘எழுத்துக் கலை’ வராதவர்கள் ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொள்வார்கள் அல்லது வாசகர்கள் நிராகரித்துவிடுவார்கள். பிறகு சரக்கு இருப்பது மட்டும்தான் தப்பிப்பிழைக்கும். அச்சு ஊடகத்தை ஒப்பிடும் போது இணையம்தான் பெஸ்ட். அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. திறமை இருப்பவன் ஜொலிக்கிறான்.

உண்மையில் இந்த ஊடகத்தில் போகிற போக்கில் ‘அடித்துவிட்டு போக முடியாது’. BT கத்தரிக்காயைப் பற்றி எதையாவது எழுதி வைத்தால் பயோ டெக்னாலஜி வல்லுநர் ஒருவர் கேள்வி கேட்பார். போகிற போக்கில்  ‘மானிடவியல்’ பற்றி முத்து உதிர்த்தால் anthropologist ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் வரும். எல்லாத் துறையிலும் ‘பிஸ்து’ என்று யாரும் இல்லையென்றாலும் ஒவ்வொரு துறையிலும் ‘பிஸ்தாக’ இருப்பவர்கள் இணையத்தில் வாசிக்கிறார்கள்.

நமது ‘ஓல்டு’ எழுத்தாளர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினை. அரசியல், வரலாறு, இலக்கியம், அறிவியல், சமூகம், விளையாட்டு, சினிமா என்று சகலதுறைகளிலும் தான் மட்டுமே ‘ஆல் இன் ஆல்’ என்று நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு குறுக்கே யாராவது வந்தால் எரிச்சல் வருகிறது. கேள்வி கேட்டால் கடுப்பாகிறார்கள். வெளிநாடுகளில் எழுத்தாளர்கள் இப்படித்தான் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் இது சிக்கல் என்று நினைக்கிறேன். சுஜாதாவின் ஷூவுக்குள் தங்களின் காலை நுழைத்துக் கொள்ள படாதபாடு படுவதன் வினை இது.

இந்த ‘ஓல்டு’கள்தான் அசால்ட்டாக இணையத்தை கலாய்க்கிறார்கள். 

இங்கு எவ்வளவு தூரம் எரிச்சல் உண்டாக்கும் வாசகர்கள் இருக்கிறார்களோ அதைவிடவும் நுண்மையான வாசகர்கள் அதிகம். இங்கு எவ்வளவு Egoist இருக்கிறார்களோ அதைவிடவும் அதிகமாக நல்ல எழுத்தைக் கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு அரைவேக்காடுகள் இருக்கிறார்களோ அதைவிடவும் அதிகமாக வல்லுநர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு pseudoக்கள் இருக்கிறார்களோ அதைவிடவும் அதிகமாக Intellectuals இருக்கிறார்கள். இது இந்த எழுத்தாளர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் Egoist களையும், அரைவேக்காடுகளையும், Pseudoக்களையும் மட்டுமே கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளைப் பற்றி மட்டுமே திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். அதுதான் பிரச்சினை. 

இணையத்தைப் பொறுத்தவரைக்கும் எழுத்தாளன் செய்ய வேண்டியது ஒரே ஒரு நல்ல காரியம்தான். தனது கீரிடத்தைக் கழட்டி வைக்க வேண்டும். அதைச் செய்தால் போதும். அடுத்தவர்களின் மீது இத்தனை எரிச்சல் வராது, இத்தனை கோபம் வராது. தலையில் எதற்கு தேவையில்லாமல் இத்தனை கனம்? கழட்டி வைத்துவிட்டு வாருங்கள். எல்லாமே சிம்பிளாகிவிடும்.

புதுவருடம் அதுவுமாக நமக்கு எதற்கு பெரிய மனிதர்களிடம் வம்பு? இவர்களை கலாய்க்க வேண்டும் என்றோ சண்டையிட வேண்டும் என்றோ தோன்றவில்லை. ஆனால் எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. கடைசியாக ஒன்றை மட்டும் எழுதி வைத்துவிடலாம். 

இன்னும் ஆறு வருடங்கள். 2020. இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ இணையம் என்பது அசைக்க முடியாத ஊடகம் ஆகிவிடும். கடந்த இரண்டு வருடத்தை கவனித்தால் புரியும்- கிட்டத்தட்ட பெரும்பாலான அலைபேசிகளில் இணைய வசதி வந்துவிட்டது. தொடரூர்தியில், பேருந்தில், விமானநிலையத்தில் என்று கிடைத்த இடத்தில், கிடைத்த நேரத்தில் எல்லாம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறியிருக்கிறது. வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடத்தான் போகிறது. இந்த இடத்தில் ‘கூடத்தான் போகிறது’ என்பதைவிடவும் ‘எகிறத்தான் போகிறது’ என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும். புத்தம் புதிய வாசகர்கள் உள்ளே வரவிருக்கிறார்கள். பிற எந்த ஊடகத்தை விடவும் இணையத்தின் வழியாக நடைபெறும் வாசகர்களின் ரீச் அட்டகாசமாக இருக்கும். நல்ல எழுத்தாளர்களை இதைவிடவும் கொண்டாடக் கூடிய அற்புதமான சூழல் உருவாகும்.

இந்த எக்ஸ்பிரஸ் படு வேகமான எக்ஸ்பிரஸ். முடிந்தால் வந்து ஏறிக் கொள்ளுங்கள். ‘ஏறலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்தில் கீழே நின்று பழித்துக் கொண்டும் புலம்பிக் கொண்டுமிருந்தால் எக்ஸ்பிரஸில் இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உங்களை வரலாற்றில் எழுதி வைத்துவிட்டு காலமும் எக்ஸ்பிரஸூம் ஓடிக் கொண்டேயிருக்கும். அவ்வளவுதான்.

ஹேப்பி நியூ இயர்! 

0 எதிர் சப்தங்கள்: