Jan 1, 2014

ஏன் ஒரு சாதியை மட்டும் விமர்சிக்கணும்?

மின்னல் கதைகள் short and crisp. அதிலொரு விஷயம், உங்க ‘மின்னல் கதைகள்’-இல் பெரும்பாலும் ‘கவுண்டர்’ சமுதாயம் சாதி வெறியோட நடந்ததை பற்றியே சொல்லி(ட்டு) இருக்கீங்க. சமகாலத்துல  என்ன நடக்குதுன்னும் கொஞ்சம் எழுதலாமே..PCR -னு ஒரு சட்டம் இருக்கு, அது எந்த அளவுக்கு தவறா உபயோகப்படுத்தப்படுதுன்னும் இப்போ வெள்ளாளன் ஆள் கெடைக்காமயும் தண்ணி இல்லாமையும் எத்தனை சீரழியரான்னும் எழுதலாமேங்க..இப்படி ஒரு குறிப்பிட்டவங்களை போட்டு தாக்கி தள்றீங்களே.. ஞாயமா??

தொடர்ந்து  ஒரு சமுதாய மக்களையே தாக்கி எழுதும் போது கொஞ்சம் வேதனையா இருக்குன்னு தான் சொல்லணும்..உலகத்துல எவன் வேணும்னாலும் ஹிந்துக்களை என்ன வேணும்னாலும் சொல்றான் அந்த மாதிரி இருக்கு நீங்க குறிப்பிட்டு சொல்றது. ஜாதி ஏற்றத்தாழ்வு எல்லாமே நிஜம் தான் நான் இல்லைன்னு சொல்லலைங்க. நான் உங்களோட முரண்படல.  அதே சமயம் அதிகமான பதிவு அது சார்ந்து வரும்போது சகிப்பு தன்மைய மீறி ஒரு சின்ன வருத்தம், கோவம் முளைவிட்றதை தவிர்க்க முடியலனு சொல்ல வரேன்.

இது உங்க தளம் உங்க மனம்போல எழுதலாம், அதுக்கு உங்களுக்குத்தான் எல்லா உரிமையும் இருக்கு.ஒத்துக்கறேன் ஆனா திரும்ப திரும்ப குத்தி கிழிபடற பல கவுண்டமாருங்களையும் நெனச்சு பாருங்க.

உங்க பதிவுகள் எல்லாமே ரொம்ப அருமைங்க. எழுத்து நடை இயல்பா, படிக்கும் ஆர்வம் குறையாத விதத்தில இருக்கு.

உங்க எழுத்துப்பணி வளர்ந்து மேன்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நன்றி,
மஞ்சு.

அன்புள்ள மஞ்சு,

வணக்கம்.

நீங்கள் இந்தக் கடிதத்தில் திட்டியிருக்கீறீர்களா அல்லது பாராட்டியிருக்கிறீர்களா என்று வெகு நேரம் புரியவில்லை. இரண்டு மூன்று முறை வாசித்துவிட்டேன். எப்படியிருந்தாலும்- இப்படி புரியாமல் இருக்கும் கடிதங்களில் ஒரு சுவாரஸியம் இருக்கிறது.

கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களை விமர்சிப்பதால் எங்கோ இருக்கும் உங்களுக்கு மட்டுமில்லை- என்னைச் சுற்றியிருப்பவர்கள், உள்ளூர்க்காரர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று பலருக்கும் என் மீது கோபம் தான். ஃபேஸ்புக்கில் முகம் தெரியாதவர்கள் திட்டுகிறார்கள். ‘இவன் மூஞ்சியப் பாரு. ரெண்டு நாளைக்குத் தூக்கம் வராது’ என்று ஒரு கொங்குச் சிங்கம் எழுதியிருந்தது. மிதமிஞ்சிய வேளைகளில் தொலைபேசி வசைகளும் கூட உண்டு. முகம் தெரியாத மனிதர்களின் கோபத்தை சமாளிப்பது கூட எளிது. தெரிந்தவர்கள் முகத்தைச் சுளித்துக் கொள்ளும் போது சற்று சிரமப்பட வேண்டியிருக்கிறது.

உண்மையில் கவுண்டர்கள் மீது எந்தத் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் எனக்குக் கிடையாது. அதே போல கொங்குப் பகுதியின் ஆதிக்க சாதியினரைத் விமர்சிப்பதால் முற்போக்கு சிந்தனையாளன் என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றும் அர்த்தமில்லை. ஆனால் இவையெல்லாம் அவ்வப்போது எதிர்கொள்ளும் விமர்சனங்கள்.

எதனால் கவுண்டர்களை விமர்சிக்கிறேன் என்று யோசித்தால் மிக எளிமையான பதில்தான் கிடைக்கிறது.

ஒரு சூழலில் வளர்கிறோம். அந்தச் சூழலின் கதைகளைக் கேட்கிறோம். அந்த மனிதர்களைப் பார்க்கிறோம். பிறகு எழுதுகிறோம். எழுதுவதற்கு முன்பாக நமது  சாதி, இனம் போன்ற அத்தனை அடையாளங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு நேர்மையாக எழுதினால் விளிம்பு நிலை மக்களைப் பற்றித்தானே எழுத முடியும்? அதுதானே சரி. இல்லை, ஆதிக்க சாதியின் பிரதாபங்களை எழுத வேண்டுமா? பல நூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தைத்தான் எழுத முடியும். அதைத்தான் நான் செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

அதை மட்டுமே எழுத வேண்டியதில்லைதான். நீங்கள் கேட்பது போல சமகாலப் பிரச்சினைகளான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றியெல்லாம் ஏன் எழுதக் கூடாது? தாழ்த்தப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனில்  ‘என்னை சாதிப்பெயரைச் சொல்லித் திட்டினான்’ என்று பொய்ப் புகார் கொடுத்தாலும் கூட கவுண்டர்களைத் தூக்கிக் கொண்டு போய் உள்ளே வைத்துவிடுகிறார்களே. அதைப் பற்றி ஏன் எழுதுவதில்லை?

எழுதலாம்தான். 

ஆனால், இப்போதைக்கு- நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மிதிபட்டவர்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோம் என்றுதான் மனம் நினைக்கிறது. 

எத்தனையோ தலைமுறைகளாக அவர்கள் அடிமைகளாகக் கிடந்திருக்கிறார்கள். இன்னமும் கூட அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. இன்னமும் அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவு கிடைக்கிறது என்று சொல்ல முடிவதில்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களது வாழ்கை முறையில் பெரிய முன்னேற்றம் இல்லை. இதற்கெல்லாம் யார் காரணம்? இந்தச் சமூக அமைப்பை இப்படி உருவாக்கி வைத்திருப்பது யார்? கொஞ்சம் புரிந்து கொள்வதற்காகவேனும் பேசுவோமே என்று நினைக்கிறேன். 

கொங்குதேசத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகத்தான் சற்று மேடு ஏறியிருக்கிறார்கள். அதுவும் இரண்டாயிரத்திற்கு பிறகாகத்தான் துள்ளுகிறார்கள்- PCR ஐ பயன்படுத்துகிறார்கள். அவர்கள் செய்வது அத்து மீறல்தான் என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர்களும் கொஞ்ச நாட்களுக்குத் துள்ளித்தான் பார்க்கட்டுமே என்றுதான் நினைக்கிறேன். 

எனது முன்னோர்கள் அவர்களை வதைத்தார்கள் என்பதற்காக எதற்காக இந்தத் தலைமுறை குடியானவனை அவர்கள் சிக்க வைக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கக் கூடும். இந்தத் தலைமுறை குடியானவன் எந்தச் சாதிய உணர்வும் இல்லாமல் முற்றான மனிதத் தன்மையுடன் இருக்கிறானா? அப்படி அவனுக்கு எந்தச் சாதிய வெறியும் இல்லையென்றால் தலித்துகள் செய்வது அக்கிரமம். ஆனால் அப்படித்தான் கவுண்டன் இருக்கிறானா? ‘ஆமாம்’ என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். 

தாழ்த்தப்பட்டவர்களை உய்விக்க வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் எப்படி அவர்களைத் தூண்டிவிடுகிறார்களோ அதைவிடவும் கவுண்டர்கள் கடுப்போடு இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். 

நம்பியூர் என்ற ஊரில் திருமண மண்டபத்தை  ‘எங்களுக்கும் வாடகைக்கு விட வேண்டும்’  என்று அருந்ததியர்கள் என்று கேட்டார்கள்.

‘நாங்களும் காசு கொடுக்கிறோம். உரிமை கொடுங்கள்’ என்பது அருந்ததியரின் வாதம். 

‘இது கவுண்டர்களின் மண்டபம். இது எங்களின் உரிமை. இவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும்’ என்பது கவுண்டர்களின் வாதம். 

இது பெரிய பிரச்சினை ஆனது. PCR முதல் குண்டர் தடுப்புச் சட்டம் வரை அத்தனை சட்டங்களும் புரட்டப்பட்டன. லாஜிக்கலாக கவுண்டர்களின் வாதம் சரி. ஆனால் மனிதாபிமானத்தின் படி அவர்களின் தரப்பு தவறு என  நினைக்கிறேன். என்ன இருந்தாலும் கடைசியில் தலித்துகளால் அந்தப் போராட்டத்தில் வெற்றியடை முடியவில்லை என்பதுதான் உண்மை. 

இதே பிரச்சினையை கவுண்டர்கள் ஒருவிதமாகச் சொல்வார்கள். சக்கிலியர்கள் ஒருவிதமாகச் சொல்வார்கள்- விருமாண்டி போல. இரண்டையும் கேட்டு  நான் எப்படி புரிந்து கொள்கிறேன் என்பதில் ஒரு கதை உருவாகிறது. இப்படி எழுதப்பட்டதுதான் நீங்கள் குறிப்பிடும் இந்த ‘கொங்குமண் சார்ந்த’ சில மின்னல்கதைகள். 

நீங்கள் படித்து முடித்துவிட்டு வெளியூரில் இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் கடிதத்தில் இருக்கும் ‘வேலை செய்ய ஆட்களே கிடைப்பதில்லை’ என்ற உங்களின் ஏக்கத்தை எப்படி புரிந்து கொள்வது? ‘இப்பொழுதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் விவசாய வேலை செய்ய வருவதே இல்லை’ என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்? ஏன் இப்படி எதிர்பார்க்கிறோம்? 

தலைமுறை தலைமுறையாக அவர்கள் விவசாயக் கூலியாகத்தானே இருந்தார்கள்? இனியும் அப்படியே தொடர்வதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது என்றுதானே நம் ஆழ் மனம் விரும்புகிறது. இதுதான் பிரச்சினை. அவர்கள் இதுவரை எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்கட்டும் என கவுண்டர்களின் ஆழ்மனம் விரும்புகிறது.  ‘இல்லை, நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்’ என தலித்துகளின் ஆழ்மனம் விரும்புகிறது.

அடுத்தவர்களின் மனம் கோணாமல் இருக்க வேண்டுமானால் இது போன்ற சென்சிடிவ்வான பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிப் போவதுதான் நல்லது. ஆனால் எழுதுபவன் அப்படி ‘எல்லோருக்கும் நல்லவனாக’ இருக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். மனதுக்கு பட்டதை நேர்மையாகவும் வேறெந்த பிரதியுபகாரமும் பார்க்காமல் எழுதிவிடுவதுதான் அவனது கடமையாக இருக்க முடியும். அதை என்னளவில் மிக நேர்மையாகச் செய்து கொண்டிருக்கிறேன்.  மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

தங்களின் கடிதத்திற்கு மிக்க நன்றி.

0 எதிர் சப்தங்கள்: