சில விஷயங்கள் ஏதோ கனவில் நடப்பது போலவே இருக்கும். ஆனால் கிள்ளிப் பார்த்தால் வலிக்கும். இன்றும் அப்படித்தான். காலையிலிருந்து கிள்ளிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். கை கால் என்று ஒரு இடம் பாக்கியில்லை. வலிக்கிறது. ஆக, எல்லாமே உண்மையிலேயேதான் நடக்கிறது போலிருக்கிறது.
என்ன விஷயம் என்றால், நேற்று எழுதியிருந்தேன் அல்லவா? ரோபோடிக்ஸ் பாலாஜி. அவருக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. கத்தாரில் வசிக்கும் திரு.சுப்பிரமணியம்- இவர் காரைக்குடிக்காரர்- முப்பதாயிரம் கொடுத்திருக்கிறார். இன்று காலையில் அமெரிக்காவில் இருந்து திரு.ஆனந்த் பாபு ஐம்பதாயிரம் ரூபாயை பாலாஜியின் கணக்குக்கு மாற்றியிருக்கிறார்- அக்கவுண்டுக்கு பணம் வந்து சேரவில்லை. ஆனால் மாலைக்குள் பாலாஜியின் கையில் பணம் கிடைத்துவிடும் என நினைக்கிறேன். அது போக கோயமுத்தூரிலிருந்து திரு.ராமநாதன் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். ஆக மொத்தம் எண்பத்தைந்தாயிரம் ரூபாய்.
பாலாஜி நேற்று பேசும் போது டிக்கெட் நாற்பதாயிரம் ஆகும் என்கிற மாதிரியாகச் சொன்னார். இன்றைக்கு ஐம்பதாயிரத்தைத் தாண்டுகிறதாம். ஒவ்வொரு நாள் தாமதமாகும் போது இந்த ஏரோப்ளேன்காரர்கள் விலையை ஏற்றிவிடுகிறார்கள். உடனடியாக டிக்கெட்டை ‘ப்ளாக்’ செய்வதாகச் சொல்லியிருக்கிறார். எப்படியிருந்தாலும் இந்தப் பணம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். போக்குவரத்து, தங்குமிடம், உணவு, கருத்தரங்குக்கான நுழைவுத்தொகை என அனைத்தையும் இதன் மூலம் சமாளித்துக் கொள்வார் என நம்பலாம்.
பாலாஜி கருத்தரங்கில் கலந்து கொள்வது இரண்டாம்பட்சம். இந்த உதவி அவருக்கு இது மிகப்பெரிய moral support. அடுத்த முறை பாருங்கள். இன்னும் ஒரு அடி உயரக் கால் வைத்து மேலே முயற்சிப்பார்.
நடந்து கொண்டிருப்பதை இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை.
இத்தனை பெரிய தொகையை ஒரே இரவில் புரட்டிவிட முடியும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நேற்று இந்தப் பதிவை எழுதும் போது கூட பத்தாயிரம் ரூபாய் புரட்டினாலே பெரிய விஷயம் என்றுதான் தோன்றியது. ஆனால் நல்ல காரியத்திற்காகச் செய்யும் போது எல்லாமே சரியாக நடக்கின்றன. கடவுள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த மாதிரியான கணங்களில் நம்பிக்கையை இன்னும் சற்று உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.
எழுதுவதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வதற்கு இன்னும் ஒரு காரணம் கிடைத்திருக்கிறது. அழுத்தம் திருத்தமான காரணம் இது.
இதுதானே முக்கியம்? வாசிக்கிறோம், புத்தகம் எழுதுகிறோம், மார்க்கெடிங் செய்கிறோம், நான்கு பேர் நம் எழுத்தை வாசிக்கிறார்கள் எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா என்ற அத்தனையையும் தாண்டி இது போன்ற ஓரிரண்டு காரியங்கள் காலாகாலத்துக்கும் நிம்மதியைத் தந்து கொண்டிருக்கும். அது போதும். இதில் எனக்கு எந்தக் கிரெடிட்டும் இல்லை என்பதை மனப்பூர்வமாகவே சொல்கிறேன். இருபது நிமிடத்தில் ஒரு பதிவு எழுதிய சிறு வேலையை மட்டுமே செய்திருக்கிறேன். மற்றபடி, நிசப்தத்தில் எழுதியதை நம்பி அடுத்த சில மணிநேரங்களில் மிகப்பெரிய உதவியைச் செய்த மேற்சொன்ன நண்பர்களுக்குத்தான் அத்தனை நன்றியும், வாழ்த்துகளும். இவர்களில் யாரையுமே இதுவரை நேரில் பார்த்ததில்லை என்பது முக்கியமான விஷயம்.
அத்தனை பேரின் நம்பிக்கையையும் பாலாஜி காப்பாற்ற வேண்டும். அது எல்லாவற்றையும்விட முக்கியம். காப்பாற்றுவார் என நம்புகிறேன்.
அத்தனை பேரின் நம்பிக்கையையும் பாலாஜி காப்பாற்ற வேண்டும். அது எல்லாவற்றையும்விட முக்கியம். காப்பாற்றுவார் என நம்புகிறேன்.
ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பாலாஜி அழைத்திருந்தார். மிகப்பெரிய சந்தோஷம் அவருக்கு. ‘இனி பிரச்சினை இருக்காது சார்’ என்றார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.
‘இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிடுங்க சார்’ என்றார். எதற்குச் சொல்கிறார் என்று புரியவில்லை.
‘இப்போதைக்கு இந்தப் பணம் போதும் சார். என்னை மாதிரி வேற யாராச்சும் வந்தாங்கன்னா அவங்களுக்கு தேவைப்படும்ல. அப்போ தந்துடச் சொல்லுங்க’ என்றார்.
போதும் என்ற மனம். இன்னும் டிக்கெட் எதுவும் உறுதியாகவில்லை. இருந்தாலும் ‘சரி’ என்று சொல்லிவிட்டேன்.
அவர் சொல்வதும் சரிதான். இன்னும் பல பாலாஜிகள் தமிழ்நாட்டின் வேறு ஏதாவது ஒரு மூலையில் இருப்பார்கள். தேவைப்படும் போது உதவலாம். அவசியம் வரும் போது ‘மட்டும்’ எழுதுகிறேன். அதற்குள் உங்களின் நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்கிறேன்.
ஆனந்த் பாபு ஐம்பதாயிரம் ரூபாயை அனுப்பியவுடன் ‘Very Thanks Sir' என்று பாலாஜி இன்று அதிகாலையில் மெசேஜ் அனுப்பியிருந்தார். அதையே ‘Very Thanks All' என்று அத்தனை பேருக்குமான நன்றியாக மாற்றிக் கொள்ளலாம்.