Jan 17, 2014

ராயல்டி பற்றி கருத்து இல்லையா அல்லது பயமா?

நலமா?

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ராயல்டி, பிடிஃஎப் பிரச்சினை குறித்து ஏன் எதுவுமே எழுதவில்லை? கருத்து இல்லையா அல்லது பயமா? இதே போலத்தான் தேவயானி கோபர்கடே விவகாரத்திலும் நீங்கள் எதுவுமே சொல்லவில்லை.

- ரவீந்திரன்.


வணக்கம்.

உங்களின் மின்னஞ்சல் வந்து சேர்ந்ததிலிருந்து இதுவரைக்கும் நலமாகத்தான் இருக்கிறேன் என்றே பதிலை ஆரம்பிக்கிறேன். 

இப்பொழுதுதான் திரும்பிய பக்கமெல்லாம் கருத்துச் சொல்ல ஆட்கள் இருக்கிறார்களே. அவர்களை ஆட்கள் என்று சிறுமைப்படுத்த முடியாது-அறிஞர்கள். சோனியா காந்திக்கு இத்தாலி பாஸ்போர்ட் இன்னமும் தேவையா என்பதில் ஆரம்பித்து வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது வரை எந்தக் கேள்வியைக் கேட்டாலும் பதில் சொல்வார்கள். வேலுநாய்க்கன்பட்டியில் பஞ்சாயத்து போர்டு தண்ணீர் இரண்டு நாளாக வரவில்லை என்று சொல்லிப் பாருங்கள்- உள்ளாட்சி நிர்வாகம் எப்படி நடக்க வேண்டும் என்று நான்-ஸ்டாப்பாக பொங்குவார்கள்.

இந்த அறிஞர்களின் லிஸ்ட்டில் இன்னுமொரு அரை டிக்கெட்டையும் சேர்த்தாக வேண்டும் என்ற உங்களின் அதீத ஆர்வம் மெய்சிலிர்க்கச் செய்கிறது. 

கண்ணில்படும் விஷயங்களுக்கு எல்லாம் கருத்துச் சொல்ல வேண்டுமா என்ன? கருத்துச் சொல்கிறேன் என்று காமெடி செய்யாமல் இருந்தால் அதுவே பெரும் புண்ணியம்தான். 

வெகு சில விஷயங்களோடு மட்டும் எமோஷனலாக அட்டாச் ஆவோம் அல்லவா? அந்த விஷயங்களில் மட்டும் நமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கலாம். அது கூட அவசியமானது என்று தோன்றவில்லை. இங்கு அத்தனை விஷயங்களிலும் ஆளாளுக்கு ஒரு கருத்து உண்டு. இவன் நல்லவனா, அவன் கெட்டவனா, இது தவறா, அது சரியா என எல்லாவற்றிலும் ஒவ்வொருவருக்கும் முன் தீர்மானங்கள் உண்டு. நாம் சொல்வதால் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள் என நம்புகிறீர்களா? நமது கருத்தை கேட்டுவிட்டு சண்டைக்கு வருவார்கள் அல்லது அமைதியாக போய்விடுவார்கள். இரண்டிலும் சேராத இன்னொரு க்ரூப் உண்டு அவர்கள் அந்தப் பக்கமாகச் சென்று நம்மைப் பார்த்து சிரிப்பார்கள். அதிகபட்சமாக இதில் ஒன்றுதான் நடக்கும். 

நமது கருத்துக் கணைகளால் எந்தவிதத்திலும் யாரையும் மாற்றிவிட முடியாது என நம்புகிறேன். குறைந்தபட்சம் என்னால் முடியாது. அடுத்தவர்களை விடுங்கள்- வீட்டில் அம்மாவின் கருத்தையோ, மனைவியின் கருத்தையோ கூட என்னால் மாற்றிவிட முடிவதில்லை என்பதுதான் உண்மை. அவ்வளவு ஏன்? என் ஐந்து வயது பையனுக்குக் கூட முடிவுகள் இருக்கின்றன. அவன் நினைத்ததை அழுதும் கொஞ்சியும் சாதித்துக் கொள்கிறான்.

அதனால் கருத்துச் சொல்வதெல்லாம் வேண்டாம். வாழ்வில் சந்திக்கும் மனிதர்களை, எதிர்கொள்ளும் அனுபவங்களை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக மட்டும் இருந்தால் போதும் என நினைக்கிறேன். அப்படியே பிரதிபலித்தால் அதில் என்ன சுவாரசியம் இருந்துவிடப் போகிறது? வேண்டுமானால் ‘கலர் கண்ணாடி’ என்று வைத்துக் கொள்வோம். கிடைக்கும் மனிதர்களுக்கும் அனுபவங்களுக்கும் கொஞ்சம் வர்ணம் பூசி- சற்று சுவாரஸியமூட்டி வாசிப்பவர்களிடம் கொடுத்துவிடுவோம். அவ்வளவுதான்.

இதுவே நன்றாகத்தான் இருக்கிறது.

கருத்துச் சொல்வதில் இருந்து ‘எஸ்கேப்’ ஆவதால் எதிரில் இருப்பவர்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை; உலகத்தில் எனக்குத் தெரியாத விஷயமே இல்லை என்று மார்தட்டிக் கொள்ள வேண்டியதில்லை; நான் பிடித்த முயலுக்கு மூணேமுக்கால் கால்கள் என்று அடுத்தவர்களோடு சிலிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதில்லை. இப்படி சகட்டுமேனிக்கு ப்ளஸ்கள் உண்டு.

நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயமென்றால்- ஒருவேளை, சொல்லியே தீர வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் மட்டும் கருத்துச் சொல்ல வாயைத் திறக்கலாம் என நினைக்கிறேன். இந்த விவகாரத்தை வேறொரு கோணத்திலும் பார்க்க முடியும் என்பதற்காக மட்டுமே அதைச் செய்யலாம்.

சரி எதற்கு வழவழா கொழகொழா என்று- ராயல்டி பிரச்சினையில் நான் என்ன நினைக்கிறேன்? இதுதானே உங்கள் கேள்வி? அந்தப் பிரச்சினையே கச்சடவாகத் தெரிகிறது. ஒருவர் செருப்பில் அடிப்பேன் என்கிறார்; இன்னொருவர் அடுத்தவருடைய அம்மாவின் கற்பைக் கேள்விக் கேட்கிறார். கேட்டால் இலக்கியவாதிகள் என்பார்கள். இவர்களுக்கு இடையில் தலையைச் செருகினால் நம் வீட்டுப் பெண்களின் கற்புக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் அல்லது நாமும் செருப்பைத் தூக்க வேண்டியிருக்கும். அமைதியாக இருந்துவிட்டால் நம் தலையா போகப் போகிறது? எப்படியோ போகட்டும்.

இன்னொரு விஷயம்- தேவயானி. இந்த விஷயம் பற்றி எனக்கு முழுமையான புரிதல் இல்லை. பக்காவான அரசியல் என்று நம்பிக் கொண்டிருந்தேன். நம்பியது சரிதான் போலிருக்கிறது. பாருங்கள் அவரது அப்பா தேர்தலில் நிற்கப் போகிறாராம். எந்தக் கட்சி  என்று இப்போதைக்குச் சொல்ல மாட்டேன் என ட்விஸ்ட் வைக்கிறார். எந்தக் கட்சி என்று நம்மால் யூகிக்க முடியாதா என்ன?

இது போன்ற விஷயங்களில் கருத்துச் சொல்லி எதை நிலைநாட்டப் போகிறோம்?

நமக்கு பேசுவதற்கு விஷயமா இல்லை? ஊரின் மனிதர்களும், பெங்களூரில் என்னோடு மாரடிப்பவர்களும் எப்போதும் இருக்கிறார்கள். இந்த மனிதர்களும் அனுபவங்களும் தீர்ந்த பிறகு, சுவாரஸியமாக எதுவுமே எழுத முடியாது என்ற நிலை வரும் போது - கண்டது, கேட்டதுக்கெல்லாம் கருத்துச் சொல்வோம். அது ரிடையர்ட்மெண்டுக்கு பிறகாகச் செய்ய வேண்டிய தொழில். இப்பொழுது இல்லை.

0 எதிர் சப்தங்கள்: