Jan 17, 2014

பெண்கள் சைட் அடிப்பார்கள்தானே?

இப்பொழுதெல்லாம் எந்தப் புத்தகத்திலும் பெண்களைப் பற்றியும் காமத்தை பற்றியும் எழுதியிருந்தால் ஒரே மாதிரியாக இருப்பது போலவே தெரிகிறது. ‘இறுக்கமான ஜீன்ஸூம், ஏற்றாற் போன்ற கவர்ச்சியான டீ-சர்ட்டும் அணிந்திருந்தாள்’ என்பது போன்ற மொன்னையான வர்ணிப்புகள். இதையெல்லாம்தான்  சுஜாதா காலத்திலேயே செய்துவிட்டு போய்விட்டார்களே. ஆனால் இன்னமும் அதையேதான் வெவ்வேறு தொனிகளில் செய்து கொண்டிருக்கிறோம் என்கிற சோக ஃபீலிங் உள்ளுக்குள்ளிருந்து பொங்கிப் பிரவாகம் எடுக்கிறது. இதை சோகம் என்று சொன்னால் அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். 

இத்தகைய ஈயடிச்சான் காப்பி வர்ணிப்புகளில் பெரிய கிளர்ச்சி எதுவும் இல்லை. கிட்டத்தட்ட அத்தனை ஆண்களின் கற்பனையும் பார்வையும் ஒரே மாதிரிதான். சஹாராவில் கூட ஒன்றரை மிடறு தண்ணீர் கிடைக்கிறதாம். நாம்தான் செமத்தியாக வறண்டு கிடக்கிறோம். நாவலிலோ சிறுகதையிலோ பெண்களை வர்ணிக்கிறேன் அல்லது பாலியலை பேசுகிறேன் என்று ஆரம்பித்தால் போரடிக்கிறது. எட்டிக்குதித்து அடுத்த பத்திக்கு ஓடிவிடலாம். எதற்கு அத்தனை சிரமப்பட்டு மண்டை காய வேண்டும்? இண்டர்நெட்டைத் திறந்தால் தீனி போட்டுவிடுகிறது.

பதினெட்டு வயதுக்கு குறைவானர்கள் பின்வரும் ஒரு வரியை மட்டும் படிக்காதீர்கள்-

என்னதான் எழுதினாலும் ‘மாலதி டீச்சரை’ விடவா தூள் டக்கராக எழுதிவிடப் போகிறார்கள்?.அது யார் ‘மாலதி டீச்சர்’ ? Google சரணம்.

சென்சார் செய்யப்பட்ட வரி முடிந்தது. இனி தொடர்ந்து வாசிக்கலாம்.

வெறும் இறுக்கமான டீசர்ட்டிலும், ஜீன்ஸிலும் மட்டும்தானா காமத்தின் சிக்கல்கள் அடங்கியிருக்கின்றன? அது ஒரு கடல். இங்கு கடல் என்பது கூட ‘க்ளிஷே’தான். அதற்காக ‘காமம் என்பது மலை’ என்றெல்லாம் எழுதினால் ஆபாசமாக எழுதுகிறான் என்ற அவப்பெயர் வந்துவிட வாய்ப்புகள் அதிகம்.

இருக்கட்டும். 

இந்த முறை சென்னை கிளம்பும் போதுதான் கவனித்தேன். கவிதைத் தொகுப்புகள் இருக்கும் அளவிற்கு என்னிடம் சிறுகதைத் தொகுப்புகள் இல்லை. நாவல்களின் எண்ணிக்கைக் கூட மரியாதையாக இருக்கிறது. சிறுகதைகள் மட்டும் மிகக் குறைவு. கொஞ்சம் புஷ்டி கொடுக்கலாம் என்று புத்தகக் கண்காட்சியில் ‘சிறுகதைகள்’ என்று கண்ணில் படுவதையெல்லாம் வாங்கிக் கொண்டேன். அப்படி அள்ளிக் கொண்ட தொகுப்புகளில் ஒன்றுதான் குட்டி ரேவதியின் ‘நிறைய அறைகள் உள்ள வீடு’. குட்டிரேவதி கவிதைகள்தானே எழுதிக் கொண்டிருந்தார்? இது ரேவதியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

குட்டி ரேவதி தெரியும் அல்லவா? பூனையைப் போல அலையும் வெளிச்சம், தனிமையின் ஆயிரம் இறக்கைகள், முலைகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். மூன்றாவது தொகுப்பின் பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லை. அதேதான். அவர் சித்த மருத்துவரும் கூட.

இலக்கியம் என்றாலே அலர்ஜி என்பவர்கள் ஒரு க்ளூ. ‘மரியான்’படம் பார்த்தீர்களா? அல்லது படத்தின் பாடல்களையாவது கேட்டீர்களா? ‘எங்க போன ராசா’ எழுதிய அதே பாடலாசிரியர்தான்.

அந்தப் பாடலையும் கேட்டதில்லை என்றால் வேறு வழியே இல்லை. யாரென்றே தெரியாமல்தான் நீங்கள் இதைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

தொகுப்பில் மொத்தம் பதின்மூன்று கதைகள். என்னிடம் இருக்கும் பிரதியின் அச்சாக்கத்தில் ஏதோ சொதப்பல் போலிருக்கிறது. ஒரு கதையை பிரிண்டர் அபேஸ் செய்துவிட்டார். மீதமிருக்கும் பன்னிரெண்டு கதைகளையும் வாசித்துவிட்டேன் - ஒரே ராத்திரியில். ஒற்றை வார்த்தையில் சொன்னால் ‘செம’. பெரும்பாலும் காமம் சார்ந்த கதைகள்தான். ஒரு பெண்ணை இன்னொரு பெண் எப்படி பார்க்கிறாள்? ஒரு ஆண்மகனை பெண் எப்படி பார்க்கிறாள் என்பதையெல்லாம் வாசிப்பதற்கு பயங்கர ‘த்ரில்’ஆக இருக்கிறது.

இது ஒன்றும் திடீரென்று முளைத்த  ‘த்ரில்’ இல்லை. பதின்ம வயது தேடல்களின் விட்டகுறை தொட்டகுறைதான். 

ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஒரு சந்தேகம் இருந்து வந்தது. பெண்களை ‘சைட்’ அடிக்கும் போது ஆண்கள் எதையெல்லாம் பார்ப்பார்கள் என்று தெரியும். அதுவே ஆண்களை சைட் அடிக்கும் போது பெண்கள் எதை கவனிப்பார்கள்? இந்த பெரும் சந்தேகத்தோடு குறுகுறுப்பாகத் திரிந்திருக்கிறேன். ஆனால் அந்த வயதில் ஒரு கேர்ள் ப்ரெண்ட் கூட இல்லை. அநியாயத்துக்கு என்னை ஆண்கள் பள்ளியில் திணித்து வைத்திருந்தார்கள். கூட படித்தவர்களும் மொக்களத்தான்கள்தான். யாருக்கும் பதில் தெரியாது. இதே சந்தேகம்தான் ‘டெவலப்’ ஆகி காமத்தை ஒரு பெண் எப்படிப் பார்ப்பாள்? பாலியல் என்பது பெண்ணின் பார்வையில் என்ன என்றெல்லாம் கற்பனைக் குதிரை தாறுமாறாக தறி கெட்டு ஓடியிருக்கிறது. 

உண்மையில் இது கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்குமான சந்தேகம் என நினைக்கிறேன். ‘நானெல்லாம் அப்படிக் கிடையாது பாஸ்’ என்று யாராவது குரலை உயர்த்தினால் ‘ஸாரி’ சொல்லி ஒரு எட்டு பின்னுக்கு போய்விடுகிறேன். வம்புக்கு வரவில்லை.

இந்தக் குதிரையை இழுத்துப் பிடிக்க அவ்வப்போது முயற்சி செய்வது உண்டு. ம்ஹூம். காலையும் இன்னபிற சமாச்சாரங்களையும் கருணையே இல்லாமல் மிதித்துவிட்டு ஓடிவிடும். நமது சூழல் அப்படி. எழுதப்படுகிற புத்தகங்களில் எல்லாம் ஆண்களால் எழுதப்படும் எழுத்துக்கள். எடுக்கப்படுகிற சினிமாக்கள் எல்லாம் ஆண்களால் எடுக்கப்படும் சினிமாக்கள். எங்கு பார்த்தாலும் பெண்ணை ஒரே மாதிரிதான் காட்டுகிறார்கள். ஒரே மாதிரிதான் புரிய வைக்கிறார்கள். ஆண்களின் அழிச்சாட்டியம் or அக்கப்போர்.

சினிமாவும், கலையும், இலக்கியமும் ஆண்களால் வளைத்து வளைத்து ஆளப்படுகிறது. பிறகு எப்படி தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் குதிரைக்கு ‘அடே இதுதான் மேட்டர்’ என்று கடிவாளம் போடுவது? அதுபாட்டுக்கு மிதித்துக் கொண்டுதான் ஓடும். 

குட்டிரேவதி போன்றவர்களின் எழுத்துக்கள் இந்தச் சமூகத்தின் ஒருபக்கச் சார்பான புரிதல்களை களைத்துப் போட்டுவிடக் கூடும் என தைரியமாக நம்பலாம். லெஸ்பியன்,பெண்ணுக்கு ஆண்களுடனான உறவுகள், ஆண்களின் அத்துமீறல்கள், பெண்ணின் பாலியல் வேட்கைகள், அவளின் பார்வையில் இந்த உலகம் என ஒரு கலக்கலான சிறுகதைத் தொகுப்பு இது. ஒரு வெண்ணைக் கட்டியை கதுமையான கத்தி ஒன்றில் கீறிக் கொண்டு போவது போன்ற எழுத்து மொத்த புத்தகத்தையும் முழுமூச்சில் முடித்துவிடச் செய்கிறது. இந்தச் சிறுகதைகளை வாசிப்பதில் எந்தத் தடையும் இல்லை. ரேவதிக்கு நல்ல நடை வாய்த்திருக்கிறது. அடிப்படையில் அவர் ஒரு கவிஞர் அல்லவா? கதையிலும் ‘பொயட்டிக்’ நடை தூள் கிளப்புகிறது.

‘எல்லா ஆண்களும் ஒரே மாதிரி; ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு மாதிரி’ என்று ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு இருந்தது. அதையும் கூட அநியாயத்துக்கு ரேவதி உடைத்துவிட்டார். கிட்டத்தட்ட எல்லாப் பெண்களும் ஒரே மாதிரிதானாம். குட்டிரேவதிதான் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லும் விதத்தையும் தொனியையும் பார்த்தால் சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. அவர் சொல்வதை முழுமையாக நம்பத் துவங்கியிருக்கிறேன்.

(பாதரசம் பதிப்பகம்; விலை: ரூ.130; தொடர்புக்கு: creator.saravanan@gmail.com; 95512 50786)

0 எதிர் சப்தங்கள்: