Jan 18, 2014

குடும்பத்தை கவனிங்க

நேற்றிரவு சென்னை கிளம்பலாம் என்பதுதான் திட்டம். புத்தகக் கண்காட்சிக்கு என்றில்லை- அதுவும் ஒரு காரணம் என்றாலும் அது மட்டுமே காரணம் இல்லை. நண்பன் ஒருவனை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவனையும் பார்த்துவிட்டு வரலாம் என்பது இன்னொரு காரணம். ஆனால் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி வீட்டை விட்டுக் கிளம்புவது சங்கடமாகத்தான் இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று வாரங்களாக வார இறுதியில் வீட்டில் தங்கவே இல்லை. வருடக்கணக்கில் பிழைப்புக்காக குடும்பத்தை விட்டு தனியாக வசிப்பவர்கள் இருக்கிறார்கள்தான்; அவர்களோடு ஒப்பிட்டால் எவ்வளவோ பரவாயில்லைதான் - என்றாலும் இப்படி ஒவ்வொரு வாரமும் பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கிளம்புவதை நினைத்தால் என்னளவில் ஒருவிதமான குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது. 

அதுவுமில்லாமல் கடந்த சில நாட்களாக நாற்பது வயதைத் தாண்டியவர்களின் அறிவுரைகள் பயமுறுத்துகின்றன. பெரும்பாலானவர்கள் ‘நீ எழுதுவது சந்தோஷம்தான். ஆனால் குடும்பத்தையும் கவனி’ என்கிறார்கள். திடீரென்று ஏன் இத்தகைய அறிவுரைகள் என்று குழப்பமாக இருக்கிறது. கடந்த நான்கைந்து வருடங்களாக எப்படியிருக்கிறேனோ அதே போலத்தான் இப்பவும் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறேன். பெரியதாக எந்த மாறுதலும் இல்லை. ஆனாலும் ஒரே வாரத்தில் நான்கைந்து பேர் சொல்லி வைத்தாற்போல சொன்னதுதான் பயமாக இருக்கிறது. அத்தனை பேரும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள்.

ஏதாவது பட்சி சொல்லியிருக்கக் கூடும். திசைமாறிக் கொண்டிருக்கிறேனோ என்ற பயத்தை காட்டிவிட்டார்கள்.

வெள்ளிக்கிழமை பயணத்தை கேன்சல் செய்தாகிவிட்டது.

வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் விடவும் குடும்பம்தான் முக்கியம் என்னும் கட்சிக்காரன் நான். அதுதான் ப்ராக்டிக்கல். எழுத்து, வாசிப்பு, ஊர்சுற்றல் எல்லாமே தேவைதான். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில்லை. நல்ல உடல்நலம், சீரான வருமானம் என்று போய்க் கொண்டிருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் திடீரென்று மருத்துவச் செலவு, எதிர்பாராத சுமை என்று ஏதாவது மண்டை மீது இறங்கும் போதுதான் தெரியும். நாம் எவ்வளவு திசை மாறியிருக்கிறோம் என்பது. கூட நிற்பதற்கு ஒரு காகம், குருவி இருக்காது.

சி.மணியைப் பற்றி அப்படித்தான் சொல்வார்கள். சேலத்துக்காரர். பெரும்பணக்காரர். நல்ல வேலையிலும் இருந்திருக்கிறார். சொத்துக்களை இலக்கியத்துக்காகவே கரைத்த அந்த மனிதர் கவிதைகளுக்காகவும். சிறுபத்திரிக்கைக்காகவும் எழுத்து, இலக்கியம் என்று அத்தனை சொத்தையும் இழந்து கடைசி காலத்தில் கடும் வறுமையில் உழன்றாராம். சிறுபத்திரிக்கைகள் வாசிப்பவரைத் தவிர எத்தனை பேர் அவரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவரை புதைத்த இடத்தின் மேல் இப்பொழுது அரசாங்கம் சாலை போட்டுவிட்டது. அவ்வளவுதான். 

அந்த அளவில் சற்று தெளிவாகத்தான் இருக்கிறேன்.

இன்று கிருஷ்ணபிரபு அழைத்திருந்தார். 

காலச்சுவடு ஸ்டாலில் மழித்த முகத்தோடு நோட்டும் பேனாவுமாக ஒரு இளைஞர் நின்று கொண்டிருப்பார். கவனித்திருக்கிறீர்களா? ஐடி துறையில் பணியில் இருந்தார். இப்பொழுது பிடிக்கவில்லை என்று வேலையை விட்டுவிட்டார். இலக்கியம் சார்ந்து ஏதோ ஒரு பிஸினஸை ஆரம்பிக்கவிருக்கிறாராம். அதனால் புத்தகக்கண்காட்சிக்கு வரும் இளைஞர்களின் டேட்டா-பேஸ் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். மிகத் தீவிரமான புத்தகப் பிரியர். அதே கிருஷ்ணபிரபுதான்.

நேரில் நிறைய பேசியிருக்கிறோம். ஆனால் ஃபோனில் அதிகம் பேசியதில்லை. காலை ஏழு மணிக்கு அவர் அழைப்பது ஆச்சரியம்தான்.

நேரடியாக விஷயத்துக்குச் சென்றுவிட்டார். “நேத்து ஒருத்தர் உன் புக்கைத் தேடி வந்திருந்தாரு. வயசானவரு. நடக்கிறதுக்கு கூட சிரமப்பட்டாரு”

யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. கிருஷ்ணபிரவு அவ்வளவு சீக்கிரம் பாராட்டிவிட மாட்டார். கேட்டுக் கொண்டிருந்தேன். சந்தோஷமாக இருந்தது.  

அந்த பெரியவருக்கு டிஸ்கவரி ஸ்டாலை கைகாட்டியிருக்கிறார். லிண்ட்சே லோஹன் புத்தகத்தை வாங்கிவிட்டு திரும்பச் செல்லும் போதும் கிருஷ்ணபிரவுவிடம் வந்து நன்றி சொன்னாராம்.

“மணிகண்டன் இங்கதான் இருக்கான்..நான் ஃபோன் செய்யட்டுமா?” என்று கிருஷ்ணபிரபு கேட்டிருக்கிறார். 

“நீங்க நிசப்தம் படிப்பதில்லையா? அவர் திங்கட்கிழமையே பெங்களூர் போயாச்சு” என்று பல்ப் கொடுத்தாராம். கிருஷ்ணபிரவுக்கு ஆச்சரியத்தை மீறி சிரிப்பு வந்துவிட்டது.

“அவர் உன் புக்கை மட்டும்தான் வாங்குறதுக்கு வந்திருந்தாரு. அவ்வளவு சிரமப்பட்டு வந்து வாங்குற அளவுக்கு உன் எழுத்து நல்லா இருக்காடா?” 

சிரித்துக் கொண்டே “நிசப்தம் நல்ல ரீச்” என்றேன். 

அது உண்மைதான். நிசப்தம் மட்டும் இல்லையென்றால் ஒரு வாரத்தில் ஐந்நூறு பிரதிகள் விற்பதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிறைய பேர் தொடர்ந்து வாசிக்கிறார்கள். அதில் அறுபது வயதைத் தாண்டியவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்களின் வாழ்த்தும் ஆசியும் எப்படியும் காப்பாற்றிவிடும் என நம்புகிறேன். இதை பெருமைக்காக எழுதவில்லை. ஆனால் இது போன்ற சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை அல்லவா? கஷ்டப்பட்டு அடக்கி வைக்குமளவுக்கு நான் அவ்வளவு பெரிய தன்னடக்கவாதியும் இல்லை.

வேறு எதைச் சாதிக்கப் போகிறோம்? 

முகமே தெரியாமல் அன்பு வைத்திருக்கும் இவர்களையெல்லாம் எப்பொழுது சந்திப்பது? வருடத்தில் ஒரு நாள்தான். குடும்பத்தையும் வேலையையும் மிச்சமிருக்கும் முந்நூற்றி அறுபத்து நான்கு நாட்களுக்கு பார்த்துக் கொள்ளலாம். 

நாளை புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.

1 எதிர் சப்தங்கள்: