Jan 27, 2014

கொரவலியைக் கடிச்சுடுவேன் மாப்ளே

‘திங்கற நாள்ல தேருக்கு போறானாம்; உங்கற நாள்ல ஊருக்கு போறானாம்’ என்று அமத்தா வாயில் இருந்து அடிக்கடி வந்து விழும். எதையோ செய்யத் திட்டமிட்டு வேறு எதையோ செய்து கொண்டிருப்பதை குத்திக் காட்டுவதற்காகச் சொல்வார். இப்படித்தான்- எல்லா நேரமும் திட்டமிடுவது நடந்துவிடுவதில்லை. 

நேற்று பெங்களூரின் இலக்கியத் திருவிழாவுக்குச் செல்லலாம் என்றிருந்தேன். அங்கு ஆங்கிலத்திலேயே அளப்பார்கள்தான். கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அறிவு வளரும். அங்கு மார்க்கெட்டிங் சாதாரணமான விஷயம். கச்சடா இல்லாமல் நேர்த்தியாக விளம்பரப்படுத்துவார்கள். நம் ஆட்கள்தான் ‘நான் எழுத்துக்காகவே வாழ்கிறேன்; இலக்கியத்துக்காகவே சாகிறேன்’ என்று திரிகிறார்கள். கோடிக்கணக்கில் சம்பாதித்தவனெல்லாம் கூட பஞ்சப்பாட்டு பாடினால்தான் இங்கே இலக்கியவாதி போலிருக்கிறது.

நோ மோர் இலக்கிய பாலிடிக்ஸ்.

அறிவு வளர்வது ஓரமாக இருக்கட்டும். 

இத்தகைய இலக்கிய விழாக்களில் அழகான கல்லூரிப் பெண்கள் தலா இரண்டு மூன்று புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு திரிவதும், ‘ஹேய்..ஸீ தேர் யா’ என்று நாக்கு நுனி மட்டும் கால் இஞ்சுக்கு எட்டிப்பார்க்கும் படியாக பேசுவதும், ஆளை அசத்தும் ஃபெர்ப்யூம்களும், அறிவுக்களை கொட்டும் யுவன்கள் உலகின் அட்டகாசமான யுவதிகளை கொத்திக் கொண்டிருப்பதும்- இதையெல்லாம் சொன்னால் புரியாது. நேரில் பார்க்க வேண்டும்.

இந்த முறையும் அதையெல்லாம் பார்த்துவிடலாம் என்றுதான் மூன்று நாட்களாக யோசனை ஓடிக் கொண்டிருந்தது. தன்வந்திரிக்கு அதில் விருப்பமில்லை போலிருக்கிறது. அவர்தானே மருத்துவத்தின் கடவுள்? மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டார்.

நேற்றிலிருந்து மனைவிக்கு சளியும் காய்ச்சலும். தாலியை எடுத்து கையில் கொடுக்கும் போதே ‘அவளுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா உன் கொரவலியை கடிச்சுத் துப்பிடுவேன் மாப்ளே’ என்று சொல்லித்தான் கையில் கொடுத்தார்கள். அதனால் இந்த விவகாரத்தில் மட்டும் அசால்ட்டாக இருப்பதே இல்லை. 

வழக்கமாக பொம்மனஹள்ளியில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குத்தான் செல்வோம். ‘சிக்கு பேர்ல்’ கிரானைட் கற்கள் பதித்து மருத்துவமனை நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இவளுக்கு பிடிப்பதே இல்லை. ‘அவங்க புரொபஷனாலவே இல்லைங்க’ என்கிறாள். ஒருவேளை மாத்திரைகளிலேயே காய்ச்சல் சளி சரி ஆகிவிடும். அதனால் அந்த மருத்துவமனையில் எல்லாமே ஓவர் டோஸ் என்பாள். இந்த அளவுக்கு எனக்கு மருத்துவ அறிவு இல்லை. குளிர்நீரைத் தலைக்கு ஊற்றினாள் சளிப் பிடிக்கும்; சுடுநீரைக் குடித்தால் சரி ஆகிவிடும்- இவ்வளவுதான் எனக்குத் தெரியும். 

எதுவாக இருந்தாலும் குரல்வளை முக்கியம் அல்லவா? அதனால் இன்று வேறொரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். 

எங்கள் ஏரியாவில் குழந்தைகளுக்கு பிரச்சினை என்றால் ஒரு நல்ல மருத்துவர் இருக்கிறார். நூறு ரூபாய்தான். எடைபார்த்து, உயரம் பார்த்து கடைசியில் ஒரு மருந்தை எழுதிக் கொடுத்து மறக்காமல் ‘ஒன்றும் பிரச்சினையில்லை’ என்று சொல்லி அனுப்பி வைத்துவிடுவார். வீட்டுக்கு வரும் போது திருப்தியாக இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு என்றால்தான் அக்கப்போராக இருக்கிறது. குடும்ப டாக்டர் என்ற கான்செப்ட் எல்லாம் இல்லை. ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு பத்து நிமிடமாவது பேசலாம் என்றெல்லாம் இல்லை. முந்நூறு ரூபாய் குறைந்தபட்சம். மூணேகால் நிமிடங்களை நமக்காக ஒதுக்குவார்கள். அவ்வளவுதான். அதற்குள் வாயைத் திறந்து நாக்கை நீட்டிவிட வேண்டும். 

இன்று போன மருத்துவமனையில் நான் கேட்ட முதல் கேள்வி ‘கன்சல்டிங் ஃபீஸ் எவ்வளவுங்க?’ அந்த ரிஷப்சனிஸ்ட் தலையைக் குனிந்தபடியே ‘எண்பது ரூபாய்’ என்றார். அத்தனை உற்சாகம் அடைந்துவிட்டேன். எண்பது ரூபாய் ஃபீஸ் வாங்கும் மருத்துவமனையின் ரிஷப்சனில் பெரிய மீன் தொட்டி வைத்து மீன் எல்லாம் வளர்ப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் கூட்டமே இல்லை. 

முதல் ஆளே நாங்கதான். அந்த மருத்துவருக்கு என்னுடைய வயதுதான் இருக்கும். தொப்பை தள்ளியிருந்தது. இந்த வயதுடைய மருத்துவர் என்றால் ஒரு அந்துசாக இருக்க வேண்டாமா? கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, பளிச்சென ஷேவ் செய்த முகம். ம்ஹூம். அப்படியே எதிர்பதமாக இருந்தார். அவர் எப்படியிருந்தால் என்ன? வெறும் எண்பது ரூபாய்தான். அதுதான் முக்கியம்.

காய்ச்சல் பார்த்தார். 102 டிகிரி. 

‘டெங்கு பரவுது. ப்ளட் டெஸ்ட் எடுத்துடுங்க. அப்படியே யூரின் டெஸ்ட்டும்’.

எடுத்தவுடனே டெஸ்ட் எழுதிக் கொடுத்தவுடன் ஜெர்க் ஆகிவிட்டேன். என் மனைவிக்கு திருப்தி. ‘இது புரொபஷனல்’.

ரிசல்ட் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் கிடைத்த இடைவெளியில் ஒரு ஊசியைப் போட்டுவிட்டார். 

இப்பொழுது கணக்கைச் சொல்லிவிடுகிறேன். கன்சல்டிங் ஃபீஸ் எண்பது. ஊசி போடுவதற்கு இருபது ரூபாய். ஊசி, சிரிஞ்ச் நாற்பது ரூபாய். இரண்டு டெஸ்ட்டுக்கும் சேர்த்து இருநூற்றியெழுபது ரூபாய். ஆக மொத்தம் நானூற்றிப்பத்து கைமாறியிருந்தது. இது கார்பொரேட். இது புரொபஷனல்.

ஒன்றரை மணி நேரம் கழித்து ரிப்போர்ட் வந்தது. சிறுநீர் டெஸ்ட் முடிவுகளில் ஏதோ சிறு வித்தியாசம் இருக்கிறது என்றார்கள். நான்கு நாட்களுக்கு காலையில் ஒன்று மாலையில் ஒன்றுமாக ஊசி போட வரச் சொன்னார். அப்படியில்லையென்றால் ஒருநாள் மருத்துவமனையில் தங்க வேண்டுமாம்.

சுருக்கென்றிருந்தது. ஏதோ வார்த்தையை உதிர்த்துவிட்டேன். அதன் பிறகு அவர் எதுவுமே பேசவில்லை. என் மனைவி என்னனென்னவோ சந்தேகம் கேட்டாள். ‘உனக்கு எத்தனை தடவை சொல்வது?’ என்று கேட்டார். அவளை உடனடியாக எழச் சொல்லிவிட்டு ‘நீங்க சொல்லவே வேண்டாம்’ என்று வெளியே வந்துவிட்டோம்.

அடுத்தவர்கள் முன்பாக என்னை ஒரு வார்த்தை சொல்ல மாட்டாள். அவ்வளவு நல்லவள். ஆனால் வெளியே வந்ததும் காய்ச்சி விட்டாள். ‘உங்ககிட்ட ப்ரொபஷனலிஸமே இல்லை’ என்றாள். அது என்ன கருமமோ. ‘வெறும் காய்ச்சலுக்கு இவ்வளவு காசு புடுங்கறான்...’ என்று பேச வாயெடுத்தேன். ஆனால் அந்தச் சூழலுக்கு அது சரிப்பட்டு வராது. வேறு யாரும் வர வேண்டியதில்லை- இவளே கூட குரல்வளையைக் கடித்துவிடுவாள். 

அமைதியாக முழித்துக் கொண்டிருந்தேன்.

இப்பொழுது ஏகப்பட்ட மருத்துவமனைகள் படுபயங்கரக் கூடங்களாகியிருக்கின்றன. மிக நாசூக்காக பணம் பறிக்கிறார்கள். ‘டெஸ்ட் எடுத்துக்கிறது நல்லது. சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம். அப்புறம் உங்க இஷ்டம்’ என்கிறார்கள். உயிர் அல்லவா? தவிர்க்க முடிவதில்லை. அவர்கள் சொல்வதைச் செய்கிறோம். 

இதே போலத்தான் ஓரிரண்டு வருடங்களுக்கு முன்பாக மகிக்கு ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். அவனுக்கு இரண்டு வயது கூட பூர்த்தியடைந்திருக்கவில்லை. காய்ச்சல் என்று வேறொரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தோம். ப்ளட் டெஸ்ட்டுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். அவனைக் கட்டிலில் படுக்க வைக்கும் போது சிரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஊசி குத்தப் போகிறார்கள் என்று தெரியாது. கைகளை ஒருவர் பிடித்துக் கொண்டார். கால்களை நான் பிடித்துக் கொண்டேன். நாங்கள் அவனோடு விளையாடுகிறோம் என்று நினைத்திருப்பான் போலிருக்கிறது. சிரித்துக் கொண்டேயிருந்தான். ஊசி குத்திய போதுதான் அழவே துவங்கினான். அவனால் அசையக் கூட முடியவில்லை. கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டுகிறது. அவன் முகத்தைப் பார்ப்பதற்கான தைரியமே இல்லாமல் போயிருந்தது. பற்களைக் கடித்துக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை குத்தினார்கள். அப்பொழுதும் தேவையான ரத்தத்தை உறிஞ்ச முடியவில்லை. வெகு சிரமப்பட்டு ரத்தத்தை எடுத்தார்கள். கடைசியில் ரிப்போர்ட் நார்மல். அதன் பிறகு அந்த மருத்துவரின் பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை.

மருத்துவர்களைக் குற்றம் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எல்லா மருத்துவர்களும் இப்படி இல்லை என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளலாம்தான். ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் மெஷின்களாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நம்மைச் சுற்றிலும் அறம் என்பதே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எந்தத் துறையில் அறம் இருக்கிறது? வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாக்கெட்டுகளில் பிளேடு போடுகிறோம். ஆட்டோக்காரர்களிலிருந்து கல்லூரி முதலாளிகள் வரை பிளேடு பக்கிரிகளாகிவிட்டார்கள். அதில் மருத்துவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்களிடம் சென்றால் மருந்து கொடுப்பார்கள், பிறகு இரண்டு மூன்று நாட்களாவது பார்ப்பார்கள். தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மட்டுமே டெஸ்ட் எடுக்கச் சொல்வார்கள். இப்பொழுது ஏன் இப்படி? இன்று காலையிலிருந்துதான் காய்ச்சல் என்று சொன்னாலும் கூட உடனடியாக ஊசியில் குத்தி ரத்தம் எடுக்கிறார்கள். அந்த ரத்தத்தின் வழியாகவே பாக்கெட்டிலிருந்து பணத்தையும் உறிஞ்சி எடுக்கிறார்கள். இனியெல்லாம் நோயிலிருந்து தப்பிப்பதும் மருத்துவரிடமிருந்து தப்பிப்பதும் ஒரே அளவிலான ரிஸ்க் என்று ஆகிவிடும் போலிருக்கிறது.

பாருங்கள்.

மாத்திரையை விழுங்கிவிட்டு படுத்திருந்தாள். பிரச்சினை எதுவும் இல்லை. காலையில் வாரியெடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். குரல்வளையைக் காப்பாற்றியாகிவிட்டது. ஆனால் இனியொரு இலக்கிய விழாவுக்காக நான் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது காத்திருக்க வேண்டும். 

0 எதிர் சப்தங்கள்: