Jan 25, 2014

அவன் கேரக்டரே சரியில்லையே

“அந்தக் கவிஞர் ஆம்பளைன்னாலே எரிஞ்சு விழுவாரு; ஆனா மூணே மூணு கவிதை எழுதின பொண்ணுங்களை ஓடி ஓடி பாராட்டுறாரு. அந்த ஆளு கவிதைளை நான் படிக்கிறதே இல்லை” 

“அவனெல்லாம் ஒரு எழுத்தாளனா? கேவலமான கேரக்டர். அவன் புஸ்தகத்தை கிழிச்சு போடணும்”

“அவ எப்படிப்பட்ட கேரக்டருன்னு எனக்குத் தெரியும் பாஸ். நாவல் எழுதறேன்னு வந்துடுறாளுக”

இத்தகைய விமர்சனங்களை இப்பொழுதெல்லாம் சர்வசாதாரணமாக கேட்கிறோம் அல்லது உதிர்க்கிறோம். இல்லையா? எழுதுகிறவனின் கேரக்டர் எப்படியிருந்தால் நமக்கு என்ன? படம் எடுக்கிறவனின் கேரக்டர் என்னவாக இருந்தால் நமக்கு என்ன பிரச்சினை? எழுதுகிறவனும் இன்னபிற படைப்பாளிகளும் உத்தமபுத்திரனாக இருக்க வேண்டும் என ஏன் விரும்புகிறோம்?

கோழி குருடாக இருந்தாலும் சரி; செவிடாக இருந்தாலும் சரி- குழம்பு ருசியாக இருக்கிறதா எனக் கேட்கும் கோஷ்டியைச் சேர்ந்தவனாகவே இருக்க விரும்புகிறேன்.

வெயிட்டீஸ். 

இந்தக் கட்டுரையை ஒரு சில எழுத்தாளர்களை நினைத்துக் கொண்டு- அவர்களை ஆதரித்து எழுதப்பட்டதாக புரிந்து கொள்ள வேண்டாம். அப்படி புரிந்து கொள்வதற்கு அத்தனை சாத்தியங்களும் இருக்கிறது என்று நம்புவதால் வெளிப்படையாகவே சொல்லிவிட்டேன். அதே போல ‘கருத்துச் சொல்லக் கிளம்பிவிட்டான்; எங்கேயோ வசமாகச் சிக்கிக் கொண்டான்’ என்றும் எக்குத்தப்பாக கணித்துக் கொண்டிருக்க வேண்டாம். இப்போதைக்கு சிக்கவில்லை.

ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’ குறுநாவலை வாசித்திருக்கிறீர்கள்தானே? ஒரு பாலியல் தொழிலாளியிடம் தொடர்பு வைத்திருக்கும் அந்தக் கதையின் நாயகனே ஜி.நாகராஜன் தான் என்று  கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன? அது மிகச் சிறந்த நாவல். அவ்வளவுதான் நமக்குத் தேவை. நாவலை எழுதியவன் குடிகாரனாக இருந்தால் என்ன? ஸ்தீரிலோலனாக இருந்தால் என்ன? அப்படியானவர்கள் நம்மைச் சுற்றி ஏகப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் எழுதிக் கொண்டிருப்பதில்லை. அதையே எழுதுபவன் செய்யும் போது ஏற்றுக் கொள்வதில் ஏன் சங்கடப்படுகிறோம் என்று புரியவில்லை.

எழுத்தாளன் என்பவன் கனவானாகவும், மேதையாகவும் இருக்க வேண்டும் என நாம் விரும்புவது ‘நம்மை விட மேலே இருப்பவன் சொன்னால்தான் நாம் காது கொடுக்க வேண்டும்’ என்று நினைக்கும் உளவியல் காரணம்தான். அறிவில், வயதில், கேரக்டரில், படிப்பில்- என்று ஏதோ ஒரு காரணத்திலாவது படைப்பாளி நம்மை விட ஒரு படி உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அது தேவையே இல்லை. அவன் எவ்வளவு சில்லரையாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்; எவ்வளவு கீழ்த்தரமானவனாகவும் இருக்கட்டும். அவனது அனுபவங்களை எழுதுகிறான். அந்த எழுத்து நன்றாக இருக்கிறதா? அதோடு சரி.

இப்பொழுது நமக்கு தகவல் தொடர்புகள் பெருகிவிட்டன. எந்தப் படுக்கையறையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக நுழைந்து பார்த்துவிடுகிறோம். என்ன கிசுகிசுவாக இருந்தாலும் காதுக்கு வந்துவிடுகிறது. அதுதான் நம் பிரச்சினை. ‘அவன் கேரக்டர் சரியில்லையேப்பா’ என்று அவன் எழுதிய புத்தகத்தை தூக்கி வீசி விடுகிறோம். சங்ககாலப் புலவர்களின் கேரக்டர்கள் நமக்குத் தெரியுமா என்ன? அத்தனை பேரும் உத்தமர்களா? சங்ககாலப் புலவர்களை விடுங்கள். நாற்பது வருடங்களுக்கு முந்தைய எழுத்தாளர்களின் கேரக்டர்களை நாம் முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறோம்? அதெல்லாம் தெரியாமல்தானே வாசித்துக் கொண்டிருக்கிறோம். 

இங்கு படைப்பாளி என்று இல்லை- பொதுவாகவே அனைவரது கேரக்டர்களும் சிதைந்துதானே போய்க் கொண்டிருக்கிறது. கட்டடவேலைக்குப் செல்பவனிலிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி வரைக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுத் திரிபவர்கள்தான் அதிகம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கையைப் பிடித்து இழுப்பவர்கள்தான் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். குடியும் கும்மாளமுமாக ஒரு சமூகமே நாறிக் கொண்டிருக்கிறது; ஒரு தலைமுறையே சிதைந்து கொண்டிருக்கிறது. இதில் நாசூக்காக மறைத்துக் கொள்பவர்கள் வெளியுலகுக்கு நல்லவர்களாகத் தெரிகிறார்கள். ஸ்கீரின்ஷாட் எடுக்கப்பட்டவர்கள் அயோக்கியர்களாக பிதுங்கப் பிதுங்க முழிக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

இதில் எழுத்தாளன் நல்லவனாகவும், உத்தமனாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை.

படைப்பவனின் கேரக்டர், அவனது செயல்பாடுகள் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று சொல்லிக் கொண்டே போனால் ‘அவன் விளம்பரம் செய்தால் என்ன வந்தது? அசிங்கமான அரசியலைச் செய்தால் என்ன வந்தது? அவன் தன்னை ப்ரோமோட் செய்தால் என்ன வந்தது?’ என்றெல்லாம் யாராவது கேட்கக் கூடும் . அப்படி கேட்டால் அது மிகச் சரியான கேள்விதான். 

எழுத்தைப் பொறுத்தவரையிலும் இந்த அத்தனை அழிச்சாட்டியங்களும் அக்கப்போர்களும் தற்காலிகமானது. நாம் இருக்கும் வரை நம்மை கவனப்படுத்திக் கொள்ள உதவும். லைம்லைட்டில் நின்று நம் எழுத்தை விற்று பிழைத்துக் கொள்ள உதவும். இதெல்லாம அவன் உயிரோடு இருக்கும் வரையில்தான். அவன் மண்டையைப் போட்டவுடன் அவனைப் புதைத்த குழியின் மீது புல் முளைப்பதற்குள் அத்தனையையும் மறந்துவிடுவார்கள். எழுத்து மட்டுமே நிற்கும்- நிற்பதற்கான திராணி உடைய எழுத்தாக இருந்தால்.

0 எதிர் சப்தங்கள்: