சுரபதி ராஜேந்தர். இந்தப் பெயர் வித்தியாசமாகத்தானே இருக்கிறது? சுரபதி என்றால் இந்திரன்- ராஜேந்திரன் என்று அர்த்தம். ராஜேந்திர ராஜேந்தர் என்றால் வித்தியாசமாகத்தானே இருக்கும். சுரபதிக்கு கமல்ஹாசனைப் போல ஆக வேண்டும் என்ற ஆசை. சினிமாதான் அவனது கனவு. இப்போதைக்கு சென்னையில் ஒரு பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருக்கிறான். ஹீரோ கனவில் இருந்தாலும் சோற்றுக்கு வழி வேண்டுமல்லவா? அதனால் பத்திரிக்கைத் தொழில். சுரபதியைப் போலவே இவனும் சினிமா ஆர்வத்தில் சுற்றிக் கொண்டிருப்பவன் தான். இருவருமே தாராபுரம் பக்கத்தில் இருந்து சினிமா வாய்ப்புத் தேடி சென்னை செல்பவர்கள். இவனது அப்பாவுக்கு ‘இவன் இப்படியே வீணாகப் போகிறான்’ என்று கவலை. இருந்தாலும் மகனை சென்னைக்கு வழியனுப்பி வைக்கிறார். மழையில் நனைந்து கொண்டே இவன் பேருந்தில் ஏறுகிறான். அந்தப் பேருந்தில் இவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவன் தான் சுரபதி. இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்கிறார்கள். பரஸ்பரம் என்று கூட சொல்ல முடியாது. சுரபதி பேசுகிறான்; இவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
சென்னை வந்து ஓரிரண்டு வாரங்கள் கழித்து ஒரு மழை நாளில் இவன் சுரபதியைத் தேடி அவனது அறைக்குப் போகிறான். அன்றிரவு சுரபதியின் அறையிலேயே தூங்கி எழுந்து அடுத்த நாள் இவனது நண்பர்களின் அறைக்குச் செல்கிறார்கள். இவனது நண்பர்களும் சினிமா வாய்ப்புத் தேடி அலைபவர்கள்தான். கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் தங்கியிருக்கிறார்கள். அறையில் இருக்கும் இவனது நண்பர்கள் சுரபதியை ‘கமல்’ என்றழைத்து நக்கலடிக்கிறார்கள். உணவும் அங்கேயே தயாராகிறது. பேச்சிலர் உணவு. நண்பர்களோடு சேர்ந்து அறையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தனது அப்பா ஆர்.ஐ ஆக இருப்பதாக சுரபதி சொல்கிறான். ஆனால் அவர் ஆர்.ஐ. இல்லை- தாசில்தார் அலுவலகத்தில் ப்யூன். இந்த உண்மை வெளிப்பட்டவுடன் சுரபதி மழையிலேயே வெளியேறுகிறான். அதன் பிறகு இவனால் சுரபதியை சென்னையில் சந்திக்கவே முடிந்ததில்லை. வேறொரு பிரச்சினையில் தனது பழைய அறையையும் காலி செய்துவிடுகிறான். அதன் பிறகு அவன் என்ன ஆனான் என்றும் தெரியவில்லை.
வெகுநாட்கள் கழித்து சுரபதியைச் சந்திக்கிறான். தாராபுரம் பேருந்து ஒன்றில்தான் இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. சுரபதி இப்பொழுது தாலுக்கா அலுவகலத்தில் வேலையில் சேர்ந்துவிட்டான். ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவுக்கு போவப் போவதாகச் சொல்கிறான். பிறகு இவன் சென்னை சென்றுவிடுகிறான். மீண்டும் ஒரு முறை சென்னையிலிருந்து ஊருக்கு வரும் போது சுரபதியை பார்த்துவிட திட்டமிட்டு தாலுக்கா அலுவலம் செல்கிறான். ஆனால் அங்கு சுரபதி இல்லை. இறந்துவிடுகிறான்.
வீட்டில் பார்த்த பெண் பிடிக்கவில்லை என்று மருந்தைக் குடித்துவிட்டானாம். பூளவாடி ரோட்டு ஓரமாக புதருக்குள் நான்கைந்து நாட்கள் கழித்துத்தான் கண்டெடுத்திருக்கிறார்கள்.
இப்படித்தான் என்.ஸ்ரீராமின் ‘மூன்று மழைக்காலங்கள்’ கதை முடிகிறது. சற்றே நீண்ட கதை. கதையில் வரும் ‘இவன்’தான் கதை நாயகன். ஆனால் யார் கதை நாயகன் என்பது முக்கியமில்லை- சிறுகதையில் நம்மையும் அறியாமல் ஒரு கேரக்டரோடு ஒன்றிவிடுவோம் அல்லவா? அந்தக் கேரக்டருக்கு என்ன ஆகிறதோ அதைப் பொறுத்துத்தான் நமக்கு அந்தக் கதையின் தாக்கம் இருக்கும். இந்தக் கதையில் சுரபதி கேரக்டரோடுதான் மனம் ஒன்றிப் போகிறது.
ஸ்ரீராமின் வேறு மிகச் சிறந்த கதைகளும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கதையைக் குறிப்பிடக் காரணம்- இது உண்மைக் கதை என்று சொன்னார். அதன் பிறகு இந்தக் கதையை இன்னொரு முறை வாசித்தேன். சுரபதி இன்னும் சற்று அழுத்தமாக பதிந்து போனார்.
ஆகட்டும்.
ஸ்ரீராம் தாராபுரத்துக்காரர். 1999 லிருந்தே எழுதுகிறார். தனக்கான பில்ட் அப் இல்லை; விளம்பரம் இல்லை. எழுதுவது மட்டுமே வேலை என்றிருக்கிறார். என்.ஸ்ரீராம் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கவனித்து பார்த்ததாக ஞாபகம் இல்லை. அதனால் வெ.ஸ்ரீராமுடன் அவ்வப்பொழுது குழப்பிக் கொள்வேன். வெ.ஸ்ரீராம் மூத்த எழுத்தாளர். நிறைய ப்ரெஞ்ச்- தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார். செவாலியே விருது வாங்கியவர். ‘செவாலியே’ விருது வாங்கிய இன்னொரு தமிழரைத்தான் நமக்குத் தெரியுமே.
என்.ஸ்ரீராமை மிக நெருக்கமாக கவனிக்க முக்கியமான காரணம் ‘நீயா நானா’ இயக்குநர் ஆண்டனி. கே.கே.நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை செல்லும் நேரத்தில் ஆண்டனியுடன் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. ஏகப்பட்ட அனுபவங்களால் நிரம்பிய மனிதர் அவர். தனது ஜெயித்த கதையை அத்தனை சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கதைகளை வளைத்து வளைத்து எழுதலாம். அத்தனை அனுபவங்களும் சுவாரசியங்களும் நிறைந்த வாழ்க்கை அது. இன்னொரு நாள் எழுத வேண்டும். அவர்தான் பேச்சுவாக்கில் என்.ஸ்ரீராமின் பெயரைச் சொன்னார். தற்காலத்தில் கொங்கு மண்ணைப் பற்றி எழுதக் கூடிய எழுத்தாளர்கள் என்று பெருமாள் முருகனையும், என்.ஸ்ரீராமையும் குறிப்பிட்டார். அப்பொழுதுதான் எப்படியும் ஸ்ரீராமை தேடிப்பிடித்து வாசித்துவிட என்று தோன்றியது.
அப்படி வாங்கிய புத்தகம்தான் ‘வெளிவாங்கும் காலம்’. வாசித்து முடித்த பிறகு ஸ்ரீராம் பற்றி சிறு குறிப்பையாவது எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. இந்தப் புத்தக கண்காட்சியில் அவரின் மற்ற அத்தனை தொகுப்புகளையும் சேகரித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். மேற்சொன்ன கதை அவரது ‘மீதமிருக்கும் வாழ்வு’ தொகுப்பில் இருக்கிறது.
இத்தனை நாட்கள் இவரை வாசிக்காமல் இருந்துவிட்டதாகத் தோன்றியது உண்மைதான். ஆனால் அது பெரிய விஷயமே இல்லை. காலம் இருக்கிறது. எப்பொழுது வாசித்தால் என்ன? வாசிப்பதுதான் முக்கியம்.
இந்த வருடக் கண்காட்சியில்தான் ஸ்ரீராமை பார்த்தேன். வெகு எளிமையான மனிதராக இருந்தார். இப்பொழுது தந்தி டிவியில் பணியாற்றுகிறாராம். சிலரோடு மட்டுமே பார்த்த மாத்திரத்தில் ‘பச்சக்’என ஒட்ட முடியும் இல்லையா? அப்படியொரு கேரக்டர்.
ஆனால் எழுத்தாளனின் கேரக்டர் எப்படியிருந்தால் நமக்கு என்ன? அவனது எழுத்துத்தானே முக்கியம்.
கவிதை எழுதிக் கொண்டிருந்த போது மனம் வறண்டு போனதாக பல சமயங்களில் தோன்றும். அப்பொழுது விருப்பமான கவிஞர்களின் சில கவிதைகளை வாசித்தால் நமக்கும் எழுதுவதற்கான மனநிலை வந்துவிடும். மனுஷ்ய புத்திரன், சுகுமாரன், ஆத்மாநாம், முகுந்த் நாகராஜன் போன்றவர்களை அந்த லிஸ்ட்டில் வைத்திருந்தேன். மனதை ஈரமாக்கும் கவிஞர்கள்.
இப்பொழுது உரைநடை எழுதும் போதும் அப்படி சில சமயங்களில் வறண்டு போகிறது. இந்தச் சமயங்களில் பெருமாள் முருகன், வா.மு.கோமு போன்ற கொங்கு எழுத்தாளர்களை வாசிக்க ஆரம்பித்தால் ட்ரவுசர் போட்டுச் சுற்றிய காலத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். மீண்டும் எழுதுவதற்கு எதையாவது கொடுத்துவிடுகிறார்கள். இப்பொழுது ஸ்ரீராமையும் அந்தப் பட்டியலில் எந்தச் சிரமமும் இல்லாமல் சேர்த்துக் கொள்கிறேன்.
அவரது சீமையோடு வேயப்பட்ட வீடுகள் கதைகளும், பொடனியில் வியர்த்தபடியே சென்னிமலையில் ஏறிக் கொண்டிருக்கும் கோமதியக்காவும் ஞாபகங்களைக் கிளறிவிடுகின்றன. வாசகனுக்கு ஞாபகங்களைக் கீறி விடுவதுதானே நல்ல எழுத்து. ஸ்ரீராமுக்கு அந்த எழுத்து வாய்த்திருக்கிறது.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment