Jan 23, 2014

துக்கம் தொண்டையை அடைக்கிறது

அன்புள்ள மணிகண்டன்,

இலக்கியத்தில் கொடூரமான விஷயம் உண்டெனில்  அது வாசிப்பு, எழுத்து என்பதை விட, வாங்கி வரும் புத்தகத்தைப் பற்றி வாசிப்பே அறியாத ரூம்-மேட்டுகளின் கேள்விகட்கு இரையாவதே என்பேன். என் நண்பன் பாரியுடன் இன்று புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். 

புத்தகங்கள் வாங்கிவிட்டு வந்தபின் அறையில் ‘எதுக்குடா இப்படி வீண் செலவு பண்ற’ என்றெல்லாம் கேட்கிறார்கள். இது போன்ற கேள்விகளால் துக்கம் தொண்டையை அடைக்கிறது. ஒருவேளை குடிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் இவர்களுக்கு நான் மூவாயிரத்துக்கு புத்தகம் வாங்கியது வீண்செலவாக ஆகிவிடுவது எப்படியென்றே தெரியவில்லை. எங்கள் அலுவலக வலைப்பூவில் எழுதிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் நாங்கள் (நாங்கள் என்பது நான், பாரி மற்றும் எங்களைப் போன்றவர்களைக் குறிக்கிறது) இதே மாதிரியான கேள்விகளை எதிர்க்கொள்ள நேர்கிறது.  ‘படிக்கறதால என்ன கிடைக்குது?’ ‘எழுதறதால என்ன கிடைக்குது?’என்ற ரீதியிலான கேள்விகள். இதை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. 

அவர்கள் கேட்கும் கேள்விகட்கு நெத்தியடியாக பதில் அளிக்கும் வண்ணம் எங்களிடம் எழுத்துச் சரக்கோ இலக்கியச் சரக்கோ இல்லை. கொஞ்சம் உதவுங்கள்

இதை இதை படிக்கவேண்டும் இதை இது சிறந்தது என கூறும் நீங்கள் இப்படியெல்லாம் எழுதலாம் என்றும் சொல்லித்தந்தால் என்ன?  உங்களைப் பார்த்தே நாங்கள் கற்றுக்கொண்டாலும் எங்களை/எங்கள் முயற்சிகளை, தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த யாருமே இல்லை. அது புதியவன் என்பதல் ‘இதையெல்லாம் எவன் படிச்சுகிட்டு என்ற ஒரு நினைப்பே’ என்பது தனிக்கதை. எங்களைப் போன்றோரை மேற்கண்ட ஏளனங்களில் சிக்கி ஓய்ந்துவிடாமல் இருக்கவும் எழுத்தாளும் முறைமைகளை எப்படிக் கற்பது என்பதையும் நீங்களும் உங்களைப் போன்றோரும் எங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோளுடன் முடிக்கிறேன்.

நன்றி,
நஸ்ருதீன் ஷா.

                                                      ***

அன்புள்ள நஸ்ருத்தீன்,

இது என்னவோ அக்கப்போரான கடிதமாகத் தெரிகிறது. துக்கம் தொண்டையை அடைப்பதெல்லாம் வேறொரு எழுத்தாளரின் கான்செப்ட். எனக்கு ஒருநாளும் துக்கம் தொண்டையை அடைத்தது இல்லை. ஏரியா மாறி வந்துவிட்டீர்களா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மட்டும் மேற்கொண்டு பேசுவோம்.

எதுக்குடா வீண் செலவு பண்ற- இந்தக் கேள்வியை உங்களிடம் அறை நண்பர்கள் எழுப்புகிறார்கள். என்னிடம் அம்மாவும், தம்பியும் கேட்கிறார்கள். மற்றபடி நம் இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. 

சென்னையில் இருந்து ஊர் திரும்பும் போதெல்லாம் விடிவதற்குள் வந்து சேர்ந்துவிட வேண்டும் என கடும் பிரயத்தனப்படுவேன். இதில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. விடிந்த பிறகு வீட்டிற்குள் வந்தால் கையில் இருக்கும் புத்தகப் பையைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதுதான் காரணம். நிறைய செலவு செய்திருப்பதாகத் தோன்றினால் யாராவது முகத்தைச் சுழிப்பார்கள். அதிலும் என் தம்பி இருக்கிறான் பாருங்கள்- கொடூரன். அம்மாவிடம் பற்ற வைத்துவிடுவான். இரண்டு பேருமாக இடிப்பார்கள். அப்பா ஒரு முனகலை மட்டுமே வெளிப்படுத்துவார். இருளுக்குள்ளேயே வந்துவிட்டால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அலமாரியில் அடுக்கிவிடுவேன். அடுக்கிவிட்டால் தப்பித்துவிடலாம். எது புதுப் புத்தகம் எது பழைய புத்தகம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இன்னமும் சொல்லப் போனால் அவர்கள் அந்தப் பக்கமே வர மாட்டார்கள். இப்படித்தான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் இதையே முயற்சித்துப் பாருங்கள். யாரும் அறையில் இல்லாத நேரமாக பார்த்து புத்தகத்தோடு உள்ளே நுழைந்துவிடுங்கள். 

உங்கள் அறையில் மொத்தம் எத்தனை தோழர்கள்? அதிகபட்சம் மூன்று பேர்கள் இருப்பார்களா? அவர்களின் கேள்விகளைச் சமாளிக்க முடியவில்லையா உங்களால்? என் நிலைமையை நினைத்துப் பாருங்கள். பெரியவர்கள் மட்டுமே ஐந்து பேர்கள் இருக்கிறார்கள்- அது போக அரை டிக்கெட்டுகள் இரண்டு. நல்லவேளையாக இன்னமும் அரை டிக்கெட்டுகள் கேள்வி கேட்க ஆரம்பிக்கவில்லை. 

அவர்கள் பார்வையில் நாம் செய்வது வீண் செலவுதான். இப்படி யாராவது குத்திக் காட்டுவதும் நல்லதுதான். புத்தகம் வாங்குவது ஒரு போதை. கையில் காசு இருக்கும் வரை வாங்கச் சொல்லும். இவர்கள் குறித்தான பயம் இருந்தால் கொஞ்சமாவது செலவைக் குறைத்துக் கொள்வோம்.

மற்றபடி வாசிப்பதால் என்ன கிடைக்கிறது, எழுதுவதால் என்ன கிடைக்கிறது என்ற கேள்விகளுக்கு என்னதான் நெற்றியில் அடிப்பது போல பதில் சொன்னாலும் இதில் விருப்பம் இல்லாதவர்களுக்கு புரியப் போவதில்லை. பைத்தியகாரன் என்பார்கள். எங்கள் உறவினர்கள் இப்பொழுது கிட்டத்தட்ட என்னை அப்படித்தான் முடிவு செய்துவிட்டார்கள். ‘வேறு உலகத்தில் இருக்கிறான்’ என்று நினைக்கிறார்கள். ஆனால் எந்தப் பைத்தியம் தன்னை பைத்தியம் என்று ஒத்துக் கொண்டிருக்கிறது? அவர்களை நான் பைத்தியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

எழுதுவதால் என்ன கிடைக்கிறது என்று கேட்டால்- சுஜாதா விருதுப் பணம் பத்தாயிரம் கிடைத்தது. இரண்டு கதைகள் பிரசுரமானதற்கு தலா இருநூற்றைம்பது கிடைத்தது. நாள் தவறாமல் இரண்டு மின்னஞ்சல்கள் வருகின்றன. வாரத்திற்கு ஒரு ஐ.எஸ்.டி அழைப்பு வருகிறது. அது போக மாதம் இரண்டு பேராவது திட்டுகிறார்கள்- அதில் ஒரு திட்டு ஆபாசமானதாக இருக்கிறது.  மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியும்படி இதுவரையிலும் இவ்வளவுதான் கிடைத்திருக்கிறது.

மற்றவர்களுக்கு இவ்வளவுதான். ஆனால் எனக்கு இதில் ஏகப்பட்ட சந்தோஷம். ஏகப்பட்ட பெருமை. ஏகப்பட்ட திருப்தி கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் எப்படி அடுத்தவர்களிடம் காட்ட முடியும் என்றுதான் தெரியவில்லை.

எழுதுவது எப்படி - இந்தக் கேள்விக்கு சத்தியமாக என்னிடமும் பதில் இல்லை. நான்கு பேர் நன்றாக இருப்பதாகச் சொல்லும் வரை ‘இந்தக் கட்டுரை போரடிக்குமோ’ என்று யோசித்துக் கொண்டேயிருப்பேன். எந்தக் கட்டுரை நல்ல வரவேற்பு பெறக் கூடும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடிந்ததில்லை. குருட்டுவாக்கில் ‘க்ளிக்’ ஆகிக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

நேற்றுத்தானே முளைத்திருக்கிறேன். நான்கைந்து வருடங்கள் ஓடட்டும். துல்லியமான பதிலைச் சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எழுத்து என்பது தொடர்ச்சியான பயிற்சி. தொடர்ந்து எழுதுவதால் மட்டுமே அந்தப் பயிற்சியில் ஓரளவு வெற்றியடைய முடிகிறது. எதையாவது எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் எழுத்தைச் சுவாரசியப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருப்பதில் ஒரு ‘த்ரில்’ இருக்கிறது. அதை யோசிப்பதற்கான மனநிலையை உருவாக்கிக் கொண்டால் போதும். பிறகு எழுதுவது வெகு சுலபமாகிவிடுகிறது. 

வெளிப்படையாகச் சொன்னால் இந்தப் பயிற்சியை நான் வெறித்தனமாக செய்கிறேன். இந்த வெறித்தனம் எனக்குப் பிடித்திருக்கிறது. அது எனக்கு ஆசுவாசமானதாகவும் இருக்கிறது. இந்த ஆசுவாசத்திற்காக மற்ற எல்லாவற்றையும் இரண்டாம்பட்சமாக மாற்றியிருக்கிறேன். இப்படி தொடர்ச்சியாக எழுதுவதற்கு கடும் உழைப்பு தேவைப்படுகிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த உழைப்பை வாசிப்பின் வழியாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன். அது தொடர்ச்சியான வாசிப்பு. அவ்வளவுதான். 

உங்களிடம் எதையாவது நான் மறைப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உண்மையாகவே என்னிடம் வேறு பெரிய சூத்திரங்கள் இல்லை. 

வாழ்த்துகள்.

0 எதிர் சப்தங்கள்: