Jan 22, 2014

மண்டைக்குள் என்னமோ ஊர்வது மாதிரியே இருக்கு...

ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த போது வகுப்பிற்கு லீடராக இருந்தேன். அப்பொழுது பெரிய பஞ்சாயத்தெல்லாம் இல்லை. ‘யார் லீடருக்கு நிக்குறீங்க?’என்று க்ளாஸ் டீச்சர் கேட்பார். எழுந்து நிற்கும் இரண்டு மூன்று பையன்களில் அவருக்கு யாரைப் பிடிக்குமோ அவன்தான் லீடர். லீடர் ஆகிவிட்டால் சில சாதக அம்சங்கள் உண்டு. யாராவது ஒரு பையனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டால் வீட்டில் விட லீடரைத்தான் அனுப்புவார்கள். அவன் வீடுவரை செல்வதும் திரும்பி வருவதுமாக அரை நேரத்தை ஓட்டிவிடலாம். வகுப்பின் வருகைப் பதிவேடு மொத்தமும் லீடர் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால் அவ்வப்போது சாக்லெட், கம்மர்கட்டுகளாக காலம் கும்மாளமாக நகரும். அதைவிட முக்கியம் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்தால் தப்பிப்பது எளிது. இதெல்லாம் இருக்கட்டும். 

எல்லா நேரமும் நல்லதாகவே இருக்காது அல்லவா? அப்படித்தான் அத்தனை கிரகங்களும் ஜாதகத்தில் நீச்சம் அடைந்த ஒரு நாள் பெரிய கெட்டது ஒன்றும் வந்து சேர்ந்தது.

அந்தத் திருநாளில் வகுப்பிற்கு வாத்தியார் யாரும் வரவில்லை. யாருமே வரவில்லை என்றால் பெரிய அக்கப்போராக இருக்கும். ஆளாளுக்குக் கத்திக் கொண்டிருப்பார்கள். வகுப்புத்தலைவன் சத்தம் போடுபவர்களின் பெயரை குறித்து வைத்திருக்க வேண்டும். கை நமநமத்த ஒரு வாத்தியார் வந்து கேட்கும் போது அந்த லிஸ்ட்டை நீட்டினால் கும்மிவிட்டு போவார். இதுதான் வழக்கமான செயல்பாடு. இந்த லிஸ்ட்டுக்காக எப்பொழுதும் மெனக்கெட்டதில்லை. ஆகாதவன் பெயரை எல்லாம் எழுதி எப்பொழுதும் பாக்கெட்டில் ஒரு லிஸ்ட் வைத்திருப்பேன். எந்த வாத்தியார் வந்தாலும் அந்த லிஸ்ட்டை கொடுத்துவிட்டு ஜென்ம சாபல்யம் அடைந்து கொண்டிருப்பேன். ‘சார் நாங்க பேசவே இல்லை’ என்பார்கள். ஆனால் அதை எந்த வாத்தியாரும் நம்ப மாட்டார். 

குத்து வாங்கிவிட்டு தங்களின் இடத்துக்கு போகும் போது முறைத்துக் கொண்டே போவார்கள். நல்ல மூடாக இருந்தால் விட்டுவிடுவேன். கெட்ட மூடாக இருந்தால் ‘சார் முறைக்கிறான்’ என்று இன்னொரு முறை கோர்த்துவிடுவேன். மீண்டும் அந்தப் பையனை அழைத்து ஒரு கொட்டோ கிள்ளோ போடுவார்கள். கையால் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்து கடுப்பேற்றலாம். இப்படி போய்க் கொண்டிருந்த குஜாலான வாழ்க்கையில்தான் ஜாதக கிரகங்களின் நீச்சம் நடைபெற்றது. ஆசிரியர் யாருமில்லாத சமயத்தில் வேறு இரண்டு வாத்தியார்கள் வகுப்பறைக்குள் வந்தார்கள். 

ஏதோ விளையாட்டின் காரணமாக ‘டெஸ்க்’ மீது நான் நின்று கொண்டிருந்த நேரமாக பார்த்துத்தான் அவர்கள் உள்ளே வர வேண்டுமா? வந்துவிட்டார்கள். 

‘டேய்..டெஸ்க் மேல நிக்கிறவன் இங்க வாடா’ என்றார் ஒரு வாத்தியார். அவர் பெயர் குமார். 

‘இன்னைக்கு முடிச்சுருவானுக’ என்று பம்மிக் கொண்டே முன்னால் சென்றேன்.

‘யாரு லீடர்?’ என்றார். வகுப்பு அமைதியாக இருந்தது.

‘நான் தான் சார்’ என்று சத்தமே வெளியில் வராமல் பதில் சொன்னேன்.

‘நீங்கதான் அந்த சொக்கத் தங்கமா?’ என்றார் அருகில் இருந்த வாத்தியார். அவர் பெயர் கந்தசாமி.

கந்தனும் குமாரும் இன்று நம்மை குழம்பு வைக்காமல் விடமாட்டார்கள் என்று பொங்கிக் கொண்டிருந்தேன். இந்தப் பொங்கல் பயத்தில் வைக்கும் பொங்கல். ஒரு வாத்தியாரிடம் சிக்கினாலே சின்னாபின்னமாக்கிவிடுவார். இன்றைக்கு இரண்டு வாத்தியார்கள். அதுவும் சேட்டை செய்ததை கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள். பொங்காமல் இருக்குமா?

அப்பொழுது நம்பிக்கையின் நீருற்று ஒன்று துளியூண்டு எட்டிப்பார்த்தது. 

‘க்ளாஸ்ல பேசிட்டு இருந்தவன் பேர் எல்லாம் கொடு’ என்றார். வழக்கம் போல சட்டைப் பாக்கெட்டில் இருந்த பெயர்களை நீட்டிவிட்டேன். ஒவ்வொரு பெயராக சத்தம் போட்டு படிக்கும் போது அந்த பாவப்பட்ட புண்ணியவான்களின் முகத்தை பார்த்திருக்க வேண்டும். வெட்டக் கொண்டு போகும் ஆடு போலவே முழித்தார்கள். இத்தனை ரணகளத்திலும் எனக்கு கிளுகிளுப்பு. நமக்கு விழப்போவதில் பாதி அடியையாவது அவர்கள் தாங்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசைதான்.

ஆனால் எனக்குத்தான் கிரகம் கெட்டுக் கிடந்தது அல்லவா? அந்த லிஸ்ட்டில் இருந்த நான்கைந்து பேரில் இரண்டு பேர் பள்ளிக்கே வரவில்லை. சோலி சுத்தம். 

‘எங்கடா அவனுக ரெண்டு பேரும்’ என்றார்கள் சிலிர்த்துக் கொண்டிருந்த வாத்தியார் சிங்கங்கள்.

‘ஒண்ணுக்கு போயிருக்கானுக சார்’ என்று சொல்லி நான் வாய் மூடவில்லை. இடையே புகுந்த ஒரு எதிரி ‘இல்ல சார். இன்னைக்கு அவனுக லீவு’ என்று போட்டுக் கொடுத்துவிட்டான்.

லிஸ்ட் கொடுக்காமல் விட்டிருந்தால் குழம்பு வைப்பதோடு முடித்திருப்பார்கள். இனி அவ்வளவுதான். கருவாடு ஆக்கி காயப்போடப் போகிறார்கள்.

குமார் வாத்தியாருக்கு உச்சி மண்டையில் நான்கு முடி சிலிர்த்துக் கொண்டு நின்றதைப் பார்த்தேன். கந்தசாமி வாத்தியார் ரெஃப்ரி போலிருக்கிறது. சற்று ஓரமாக ஒதுங்கிக் கொண்டார். என்னையும் குமார் வாத்தியாரையும் தவிர களத்தில் வேறு யாரும் இல்லை. குமார் தனது வாட்சைக் கழட்டி முன்வரிசையில் இருந்தவனிடம் கொடுத்தார். எனக்கு கால்கள் லேசாக நடுங்கத் துவங்கின. இனி படிப்பே இல்லையென்றாலும் பரவாயில்லை ஓடிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கும் வழியில்லை. வழியை மறைத்தபடி வளைத்து நின்றிருந்தார்.

‘ஏண்டா க்ளாஸே கத்திட்டு இருக்குது..நாலு பேருதான் உனக்கு கண்ணுக்குத் தெரிஞ்சானுகளா?’ என்றபடியே குனிய வைத்து முதல் அடி விழுந்தது. முதுகில் விழுந்த அந்த ‘குப்’ சத்தத்தில் ஒன்றரை வினாடிக்கு மூச்சே நின்று போனது. கொஞ்சம் காற்றை உள்ளே இழுத்துக் கொள்ளலாம் என்று நிமிர்ந்தேன். ‘சப்’- இந்தச் சப் கன்னத்திற்கானது.

இப்படியான குப்,சப்,தப்,டப் எல்லாம் இறங்கிக் கொண்டேயிருந்தன. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தாங்கிக் கொண்டிருந்தேன். எத்தனை நேரம்தான் தாங்குவது? saturation point இருக்கிறது அல்லவா? இத்தனைக்கும் கந்தசாமி ஆரம்பிக்கவே இல்லை. குமார் வேண்டுமளவுக்கு குத்திவிட்டு ‘மாப்ள எனக்கு கை வலிக்குது நீ நாலு சாத்து சாத்து’ என்று ட்ரான்ஸ்பர் செய்துவிடுவாரோ என்ற பயம் வேறு நடுங்கச் செய்து கொண்டிருந்தது.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது திருச்செந்தூர் டூர் சென்றிருந்தோம். அப்பொழுது கந்தசாமி வாத்தியாருக்கு தட்டவடை வாங்கித் தந்திருந்தேன். அதை நினைவில் வைத்துக் கொண்டு ‘சார் திருச்செந்தூரில் உங்களுக்கு தட்டவடை வாங்கிக் கொடுத்தேன்’ என்றேன்.

கந்தசாமி சிரித்துவிட்டார். ஆனால் குமார் விடுவதாக இல்லை ‘ஏண்டா டேய்! எட்டணா தட்டவடைக்கு உன்னைய கொஞ்சோணுமா?’ என்று தனது பிரதாபங்களைக் காட்டினார்.

சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் இந்த இடி மழை நிற்பதற்கான அறிகுறியே இல்லை. உடலுக்குள் ஆங்காங்கே நெட்டி முறிந்து கொண்டிருந்தது. எப்படி தப்பிப்பது என்றே தெரியவில்லை. ஆனால் திடீரென்று கிரிமினல்த்தனம் விழித்துக் கொண்டது. ‘குதிச்சுடுடா கைப்புள்ள’ மாதிரி குபீரென்று தரையில் விழுந்துவிட்டேன். விழுந்தவுடன் சில நிமிடங்கள் மூச்சையும் இழுத்துப் பிடித்துக் கொண்டேன். 

கந்தசாமி பதறிவிட்டார். ‘நிறுத்துய்யா’ என்று கத்தினார். கண்களை மட்டும் திறந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். மூச்சையும்தான். எதிர்பார்த்தபடியே கந்தசாமி எனது மூக்கில் கை வைத்தார். ‘மூச்சு நின்னு போச்சுய்யா’ என்றார். 

‘சக்ஸஸ்’ உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். 

அவசர அவசரமாக தண்ணீரைத் தெளித்தார்கள். அது ரகுநாத் மோகனின் பாட்டில் தண்ணீர். ‘கெரகம். அவன் வாய் வைத்துக் கவ்விக் குடிப்பான். அந்த எச்சில் தண்ணீரை என் மீது தெளிக்கிறார்கள்’ ஆனால் ஆபத்துக்கு இதெல்லாம் பார்க்கக் கூடாது. வாய்க்குள் மட்டும் தண்ணீர் போகாமல் இருந்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் விதி வலியது. வாயைப் பிளந்து உள்ளுக்குள் ஊற்றினார்கள்.

இனியும் மயக்கம் தெளியாமல் இருந்தால் எவனெவன் எச்சிலையெல்லாம் குடிக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை. மயக்கம் தெளிந்துவிட்டது. 

இனி எழுந்தால் அடிக்க மாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும் நான் ஒரு கிரிமினல் அல்லவா? இவர்களை இப்படியே விடக் கூடாது என்று ‘தலையில் புழு ஊருற மாதிரியே இருக்குதே...அய்யோ’ என்று தலைமுடியை பிய்க்க ஆரம்பித்தேன். நடிப்பு தூள் கிளப்பியிருக்கும் போலிருக்கிறது. நம்பிவிட்டார்கள். 

‘என்னய்யா செஞ்ச?’ என்று கந்தசாமி தனக்கு சம்பந்தமேயில்லாதது போல பேச ஆரம்பித்தார்.

பைத்தியம் போல சில சேஷ்டைகளைச் செய்தேன்.

குமார், ‘தண்ணியக் குடி தண்ணியக் குடி..எல்லாம் சரியாய் போய்விடும்’ என்று சொல்லியபடியே அவர் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தார். 

அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கும் மயக்கம் போடுவதுமாக, தண்ணீர் தெளிப்பதுமாக, புழு ஊர்வதுமாக ஒரே கொண்டாட்டம்தான். 

‘உனக்கு என்ன வேணும்?’ என்றார் குமார்.

‘ஒண்ணுக்கு வருது சார்’

‘போய்ட்டு முகத்தை கழுவிட்டு வா’ என்றார். 

முகத்தை கழுவினாலும் முகம் வீங்கியிருந்தது. என்னையும் மீறி அழுது கொண்டிருந்தேன். அத்தனை வலி. 

திரும்ப வந்து ‘ஹெச்.எம் கிட்ட பெர்மிஷன் கேட்டுவிட்டு வீட்டுக்கு போகிறேன்’ என்றேன். 

எகிறிக் குதித்தார்கள். ‘பிரச்சினையைக் கிளப்பாமல் விடமாட்டான்’ போலிருக்கிறது என்று நினைத்திருக்கக் கூடும்.

‘நானே கொண்டு போய் விடுறேன் வா’ என்று குமார் தனது சிவப்பு நிற டிவிஎஸ் 50யில் அழைத்துச் சென்று அன்புபவனில் சாப்பாடு வாங்கித் தந்தார். அவரது பையனுக்குக் கூட வாங்கித்தந்திருப்பாரா என்று தெரியவில்லை. செமத்தியாக வயிற்றை நிரப்பிக் கொண்டு ஒரு ஏப்பம் விட்டேன். வாங்கிய அடிக்கான பரிசு அது.

அடி வாங்கிக் கொண்டே இருந்தால் நம்மை அடித்துக் கொண்டேதான் இருப்பார்கள். எதையாவது செய்து தப்பித்துவிட வேண்டும். அப்பொழுதுதான் நாம் மிச்சம் ஆவோம். இல்லையென்றால்  அடித்து துவைத்து நம்மை பைத்தியமாக்கிவிடுவார்கள்.

அன்றைக்கு குமார் வாத்தியார் என்னை இரண்டாம் நெம்பர் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அதோடு சரி. அதன்பிறகு அவரிடம் பேசியது கூட இல்லை. இப்பொழுது குமார் வாத்தியார் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ஆனால் கந்தசாமி வாத்தியார்தான் எங்கள் பள்ளியின் ஹெச்.எம்.

வெகுநாட்களுக்குப் பிறகு பார்த்த போது கூட கந்தசாமி ‘இன்னும் புழு ஊருதா?’ என்று சிரித்தார். 

நானும் சிரித்துக் கொண்டேன். அந்த சிரிப்புக்கு ஏகப்பட்ட அர்த்தங்கள் உண்டு. அவர் எப்படி புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. சிரிப்பதைத் தவிர சிறந்த பதில் வேறு என்ன நம்மிடம் இருக்கிறது?

0 எதிர் சப்தங்கள்: