Jan 21, 2014

பேசுவதற்கு என்ன இருக்கிறது?

புத்தகக் கண்காட்சியில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் ஒரு கடையில் இருப்பதாகச் சொன்னார்கள். பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்ற போது அவரிடம் பேசுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. 

எதைக் கேட்பது? 

அவரிடம் ‘நல்லா இருக்கீங்களா?’ என்பதை விடவும் அபத்தமான கேள்வி எதுவும் இருக்க முடியாது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தனது மகனின் விடுதலைக்காக தேய்ந்து கொண்டிருக்கிறார். ‘கவலைப் படாதீங்க’ என்று சொல்லுமளவுக்கு நம்பிக்கை என்னிடம் இல்லை. வணக்கம் மட்டும் சொன்னேன். அனேகமாக புத்தகக் கண்காட்சியில் மனதார ஒரு வணக்கம் சொன்னேன் என்றால் அது அவருக்குத்தான். இங்கு பெரும்பாலான வணக்கங்கள் சம்பிரதாயமானவைதானே?

இங்கு எல்லோருமே சிரிக்கிறார்கள். மனதுக்குள் எத்தனைதான் கோபம் இருந்தாலும் எதிர்படும் போது சிரித்து வைக்கிறார்கள். இந்தப் பக்கம் சிரித்துவிட்டு அந்தப்பக்கம் நாறடிப்பவர்கள்தான் அதிகம்.  முகத்துக்கு நேராக ஓங்கிக் குத்துபவர்களை சமாளிப்பது எளிது. ஆனால் இப்படி சிரிப்பவர்களை சமாளிப்பதுதான் கடினம். ஆனால் உலகமே நாசூக்காக மாறிவிட்டது. என்னதான் பிரச்சினை என்றாலும் நேரில் பார்க்கும் போது சிரித்துவிட வேண்டும். அதுதான் நாகரிகம் என்கிறார்கள். உலகமே இப்படி இருக்கும் போது நாம் மட்டும் விதிவிலக்காக இருக்கக் கூடாதல்லவா? சாருவை முகத்துக்கு நேராக பார்த்த போது ‘நான் மணிகண்டன்’ என்று கை கொடுத்தேன். சிரித்துக் கொண்டே ‘தெரியுமே’ என்றார். மனதுக்குள் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. திட்டாமல் இருக்கக் கடவது. 

அதே போலத்தான் மனுஷ்ய புத்திரனுக்கும். கை நீட்டினேன். கை நீட்டாமல் இருந்திருக்கலாம்தான். ஆனால் நேருக்கு நேராக பார்க்கும் போது எப்படித் தவிர்ப்பது? என்னோடு பேசுவது அவருக்குத்தான் சங்கடம் போலிருக்கிறது. மூன்று விரலின் நுனி படும் அளவுக்கு மட்டும் கையை நீட்டினார். அதற்கு மேல் என்ன பேசுவது? அடுத்த முறை கவனமாக இருக்க வேண்டும் - நேர் எதிரில் வந்தால் முகம் காணாமல் விலகிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இத்தகைய சம்பிரதாயங்களுக்கிடையில்தான் அற்புதம்மாளைப் பார்த்தேன். புன்னகை வறண்ட முகமாக அமர்ந்திருந்தார். ஒன்றரை வினாடி மட்டும் முகத்தை பார்த்துவிட்டு கடைக்குள் நுழைந்துவிட்டேன். பேரறிவாளனின் சில புத்தகங்களும், சசி வாரியர் எழுதிய ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ என்ற புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு பில் போடும் போது இன்னொரு முறை அவரது முகத்தை பார்த்தேன். அதே முக பாவனையோடுதான் அமர்ந்திருந்தார். எத்தனை சிரமம்? எவ்வளவு வேதனையை அந்த முகம் தாங்கிக் கொண்டிருக்கிறது.

நமக்கு நிகழாதவரை இத்தகைய துன்பங்களின் வலியை நம்மால் முழுமையாக உணர முடியும் என்று தெரியவில்லை. 

சில மாதங்களுக்கு முன்பு மகி பைக் சைலன்ஸரில் சூடு வைத்துக் கொண்டான் என்று ஃபோனில் அழைத்துச் சொன்னார்கள். அப்பொழுது அலுவலகத்தில் இருந்தேன். வேறு எந்தக் குழந்தையாக இருந்தாலும் ‘இதெல்லாம் குழந்தைக்கான அனுபவம்’ என்று நான் தத்துவம் பேசியிருக்கக் கூடும் . ஆனால் அன்று பதறிவிட்டேன். பெரிய சூடு இல்லைதான். ஆனால் அதற்கு மேல் அலுவலகத்தில் அமர முடியவில்லை. மனம் எதை எதையோ யோசிக்கத் துவங்கிவிட்டது.

சில வருடங்களுக்கு முன்பாக நண்பரின் குழந்தை ஒன்று சுடு ரசத்தை மேலே கொட்டிக் கொள்ள தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். இவர்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போன போது மருத்துவர் இல்லை. நர்ஸ் ஏதேதோ முதல் உதவி செய்திருக்கிறார். காயத்துக்கு மருந்து பூசிவிட்டு மருத்துவருக்கு அழைத்து விஷயத்தை நர்ஸ் சொன்ன போது அவர் ஒரு ஊசியை பரிந்துரை செய்திருக்கிறார். நர்ஸூம் ஊசி போட்டிருக்கிறார். என்ன குளறுபடி என்று தெரியவில்லை- ஒருவேளை மருந்து மாறியிருக்கலாம் அல்லது டோஸ் மாறியிருக்கலாம்- ஏதோ ஒன்று. அந்த மருந்தினால் குழந்தையின் மனவளர்ச்சியின் வேகம் தட்டுப்பட்டுவிட்டது. அதற்கு பிறகு எந்த வைத்தியத்தாலும் ஒரு பலனும் இல்லை. இப்பொழுது அந்தப் பையன் அவனது வயதையொத்த பையன்களைப் போல் இல்லை.

மகி சைலன்சரில் சூடு வைத்துக் கொண்டான் என்று கேள்விப்பட்டு திரும்பி வரும் வழியெங்கும் இதையெல்லாம் மனது நினைத்து குழப்பிக் கொண்டது. கடைசியில் ஒன்றுமில்லை என்னும் போதுதான் அமைதியானது. ஒரு சாதாரண சூடு காயத்துக்குத்தான் இத்தனை அலட்டல். 

இத்தகைய நம் அனுபவத்தோடு இணைத்துத்தான் அற்புதம்மாளின் வலியை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.

நம் குழந்தையின் சிறு வலியைக் கூட தாங்கிக் கொள்ளாத நம்மால் அற்புதம்மாளின் வலி/வேதனையின் அளவைக் கூட நினைத்துப் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் தனது மகனின் சடலம் வீடு சேரும் என்று மனநிலையில் இத்தனை ஆண்டுகாலம் எப்படி கழித்திருப்பார்? சட்டம், நீதிமன்றம், சிறைச்சாலை, வழக்கறிஞர்கள் என்று இந்த வாழ்க்கையின் கரும்பக்கங்கள் அவரை அலை கழித்துக் கொண்டிருக்கின்றன. இதே அலைகழித்தலோடுதான் மரண தண்டனைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்.

அந்த அம்மையார் அமர்ந்திருந்த கடையிலிருந்துதான் ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ என்ற புத்தகத்தை வாங்கி வந்தேன். சசி வாரியர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை தமிழில் இரா.முருகவேள் மொழிபெயர்த்திருக்கிறார். முருகவேளின் மொழியாக்கம் என்றால் கண்களை மூடிக் கொண்டு வாங்கிவிடலாம். இதற்கு முன்பாக முருகவேளின் மொழிபெயர்ப்பில்  ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ மற்றும் ‘எரியும் பனிக்காடு’ ஆகிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.

இந்த ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ஜனார்த்தன பிள்ளை என்ற தூக்கிலிடுபவரின் குறிப்புகளிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. ஜனார்த்தன பிள்ளை தமிழர்தான். அவர் தனது வாழ்நாளில் 117 மனிதர்களைத் தூக்கிலிட்டிருக்கிறார்.  சசி வாரியரின் கேள்விகளுக்கு ஜனார்த்தன பிள்ளை எழுதிக் கொடுத்த குறிப்புகளிலிருந்து இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் தயாராகியிருக்கிறது. Hangman's Journal என்ற அதே புத்தகம்தான் இப்பொழுது விடியல் பதிப்பகத்திலிருந்து தமிழில் வந்திருக்கிறது.

பெங்களூருக்கான பேருந்தில் அமர்ந்து பின்னட்டை வாசகத்தை வாசிக்கத் துவங்கினேன். உயிரே கசங்கிப் போனது.

“லிவரை அழுத்துகிறேன்......பொறிக்கதவு படாரென்று கீழே திறந்து இருபுறம் உள்ள தூண்களில் மோதிக் கொள்ளும் ஓசை. அந்த மனிதர் குழிக்குள் மறைகிறார்.....எல்லா முகங்களும் அந்த விநாடியில் மாறிப் போய்விட்டன. அவர்கள் எதை கவனிக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன். அது உதறுகிறது, உதறுகிறது. உதறிக் கொண்டேயிருக்கிறது. கடவுளே....ஏன் இப்படி உதறுகிறது? கீழிருந்து அந்த மனிதர் தனக்குள் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றும் சத்தங்கள் வருகின்றன. முதலில் சிறுநீர்ப்பை பின்பு குடல்கள். அந்த மெல்லிய சத்தங்களாலும், திறந்திருந்த பொறிக்கதவு வழியாக மிதந்து வந்த மெல்லிய நாற்றத்தாலும் நான் குறுகிப் போகிறேன்...நீண்ட...நீண்ட நேரத்திற்குப் பின்பு இறுதியாக கயிறு உதறுவது நிற்கிறது. அவர் இறந்துவிட்டார்”

இதற்கு மேல் எப்படி வாசிப்பது? மூடி வைத்துவிட்டேன். ஆனால் வாசிக்காமலும் இருக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக ஆங்காங்கே பத்து பத்து பக்கங்களாக இதுவரை பல முறை வாசித்தாகிவிட்டது. முழுமையான வாசிப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் வாழ்நாளின் மிக முக்கியமான புத்தகம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. 

0 எதிர் சப்தங்கள்: