Jan 2, 2014

யோக்கியன் மாதிரியே நடிக்கிறோம்... ஓகேவா?

நேற்று உங்களுக்கு அலுவலகம் இருந்ததா? எனக்கு வைத்துவிட்டார்கள். வருடப் பிறப்பின் போது எதைச் செய்கிறோமோ அதையேதான் வருடம் முழுவதும் செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மூட நம்பிக்கைதான். இருந்தாலும் இருபது வருட நம்பிக்கை அது. அதற்காகவே புதுவருடம் பிறக்கும் போது எனக்குப் பிடித்த காரியத்தில் பதினொன்றரை மணிவாக்கில் இறங்கிவிடுவது வழக்கம். இந்த வருடம் சென்னை பேருந்து நிலையத்தில் ஒரு புத்தகம் வாங்கி வைத்திருந்தேன். பேருந்து நிலையத்தில் புத்தகம் கிடைத்தால் அது நிச்சயம் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. கிடைக்கிற இடங்களிலெல்லாம் குவித்து வைத்திருக்கிறார்கள். கோயம்பேட்டிலும் அப்படித்தான்.

கிழக்கு தவிர மற்ற பிரசுரங்களின் புத்தகங்கள் என்றால் ‘ஆளை அசத்தும் கலைகள்’ ‘காமசூத்ரா: வண்ண விளக்கப்படங்களுடன்’ என்று குஜால் புத்தகங்களாக இருக்கின்றன அல்லது ‘புரட்சியும் போர்க்களமும்’ என்று ரத்தக்களறியாக இருக்கின்றன. மிஞ்சிப் போனால் ‘கத்தரிக்காயில் 70 வகை சமையல்’. இந்த மூன்று வகையில் எந்த வகையறாவையும் வருடம் முழுக்க வாசிக்கும் தெம்பும் திராணியும் எனக்கு இல்லை என்பதால் வெறித்தனமாக துழாவியதில் சுஜாதா சிக்கிக் கொண்டார். 

‘சிறுகதை எழுதுவது எப்படி?’- புத்தகத்தின் தலைப்பும் அதுதான், முதல் கதையின் தலைப்பும் அதுதான். தொண்ணூறு கதை எழுதியும் பிரசுரமாகமல் வருத்தத்தில் இருக்கும் ஒரு கதாசிரியர் செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை பார்த்து ஒரு லாட்ஜூக்குச் செல்வார். விளம்பரத்தில் சுஜாதாதான் இந்த வித்தையைச் சொல்லித் தரப் போவதாக இருக்கும். வாத்தியார் சுஜாதாதான் சொல்லித்தருவார் போலிருக்கிறது என நம்பிக் கொண்டு போனால் அங்கே வேறொரு சுஜாதா காத்திருப்பாள். ‘சொல்லித்தருகிறேன் சொல்லித் தருகிறேன்’ என்றே அவன் சோலி முடியும் கதை. சுஜாதாவைப் போல யோசிப்பதற்கு இன்னொரு பிறவி எடுத்து வர வேண்டும். 

இனி வருடம் முழுவது தூள் டக்கர் புத்தகங்களாக வாசிப்பேன் என நம்பிக்கை வந்தவுடன் பன்னிரெண்டு பத்துக்கு மூடி வைத்துவிட்டு தூங்கிவிட்டேன். கனவு முழுவதும் சுஜாதாவின் வித்தைகளே வந்து கொண்டிருந்தன. ‘வாத்தியாரின் வித்தைகள்’ என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் ஜவாப்தாரி ஆக முடியாது.

இதெல்லாம் ராத்திரி சமாச்சாரங்கள். விட்டுவிடலாம்.

அடுத்த நாள் காலையில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். வருடத்தின் முதல் நாளே அலுவலகம். இனி வருடம் முழுவதும் ‘வேலையே வேலையாக’ இருக்கும் போலிருக்கிறது. இந்த ஊரில் பெரும்பாலான அலுவலகங்களுக்கு விடுமுறை விட்டிருந்தார்கள். வெட்டிமுறிக்கும் எங்களை மட்டும் உள்ளே தள்ளி பட்டியில் அடைத்துவிட்டார்கள். வேலை செய்யவே தோன்றவில்லை. எத்தனை நேரம்தான் ஃபேஸ்புக்கையே வெறித்துக் கொண்டிருப்பது?

இந்த மாதிரியான சமயங்களில் எங்களை உற்சாகப்படுத்தவே ஒரு குழு இருக்கிறது. ‘மதியச் சாப்பாட்டிற்கு வெளியே போகலாம்’ என்று சொன்னார்கள். இவர்களோடு போவது பெரிய டார்ச்சர். செமத்தியான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பெரும் செலவு வைத்துவிடுவார்கள். அதேசமயம் போகாமலும் இருக்க முடியாது. ‘எப்பவாச்சும்தானே கூப்பிடுறோம்’ என்று எமோஷனலாக பேசி இழுத்துவிடுவார்கள்.

இந்திராநகரில் MTR ரெஸ்டாரண்ட் இருக்கிறது. ‘மாவல்லி டிபன் ரூம்’என்பதன் ஷார்ட் ஃபார்ம். 1924 லிலேயே இங்கே ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது வளர்ந்து ஏரியாவுக்கு ஏரியா கிளை பரப்பி ஆல மரமாகிவிட்டார்கள். அங்கே போவதாகத்தான் திட்டம். ஆனால் அங்கு ஏகப்பட்ட கூட்டம். எங்களைப் போன்று பல வெட்டி மனிதர்களால் MTR நிரம்பிக் கிடந்ததது. இன்னும் ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும் என்றார்கள். 

நாம் காத்திருக்கலாம். வயிறு காத்திருக்குமா?

பக்கத்தில் இருந்த பஞ்சாபி ரெஸ்டாரண்டுக்கு நுழைய வேண்டியதாகிவிட்டது. இத்தினியூண்டு இடம்தான். அதிலேயே இருபது பேர் அமரும்படி இடம் செய்து தொழில் நடத்திக் கொண்டிருந்தார் அந்த உருமால் கட்டிய சீக்கியர். பதினைந்து ரூபாய் கோகோ-கோலா பாட்டில் அங்கு வாங்கினால் முப்பத்தைந்து ரூபாய். கேள்வி கேட்க முடியுமா? வாடகை தருகிறேன், பணியாளர்களுக்கு சம்பளம் தருகிறேன் என்பார்கள். மீறிப் பேசினால் கிளம்பிப் போடா என்பார்கள். இந்த மாதிரியான இடங்களில் அமைதியாகிவிடுவதுதான் ராஜதந்திரம். 

சரி விற்றுத் தொலைக்கட்டும். ஆனால் இந்த இருபது ரூபாய்க்கு வரியாவது கட்டுவார்களா என்றால் அதுவும் இருக்காது. நம்மிடம் திருடி தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்கிறார்கள். இந்த சிங் மட்டுமில்லை- எல்லா முதலாளிகளுமே இப்படித்தான். 

கடந்த வருடம் நோக்கியா கம்பெனி மாட்டிக் கொண்டது ஞாபகமிருக்கிறதா? இதுவரைக்கும் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். Agility Test என்று ஏதோ ஒரு டெஸ்ட் செய்வார்களாம்- செல்போன்களில். ஐரோப்பிய நாடுகளில் இதைச் செய்பவனுக்கு மூன்றாயிரம் டாலராவது சம்பளம் தர வேண்டியிருக்குமாம். கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய். அதே வேலையை இங்கே- ஸ்ரீபெரும்புதூரில் செய்தால் மாதம் பத்தாயிரத்தில் ஏதாவது ஒரு இனாவானா பெண் சிக்கிக் கொள்வாள். அப்படித்தான் உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு நல்ல இன்கம்டாக்ஸ் அதிகாரி ‘கட்டுடா ராஜா’ என்று தீட்டிவிட்டார்.  கடந்த மார்ச் மாதத்தில் இரண்டாயிரம் கோடி ரூபாயை வரியாக கட்டச் சொன்னார்கள். கடைசியில் கட்டினார்களா என்று தெரியவில்லை. 

எவன் யோக்கியம்? நோக்கியாக்காரன் மாட்டிக் கொண்டான் மற்றவர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

தொலையட்டும். 

மதிய உணவை முடித்த போது ஆளுக்கு இருநூற்றியறுபது ரூபாய் பில் வந்தது. ‘சீப்’தான் என்றான் அருகில் இருந்த மராத்தி ஒருவன். எனக்கு காதில் புகை வந்தது. கடைசியாக ஒரு பீடா- ஸ்வீட் பீடா. பதினைந்து ரூபாய். ஆக மொத்தம் ஒருவேளை சோற்றுக்கு இருநூற்றியெழுபத்தைந்து ரூபாய். புது வருடத்தை கொண்டாடுகிறோம் என்றார்கள். சரி, கொண்டாடியாகிவிட்டது.

வெளியே வந்த போது தூக்கம் வந்தது. வயிறு முட்டத் தின்றிருந்தேன். தூக்கத்திற்கு இன்னொரு காரணம், இந்திரா நகரின் குளுமை. ஒரு சாக்குப் பை கிடைத்தால் கூட விரித்து காலை நீட்டிவிடலாம் என்று யோசித்துக் கொண்டே வந்த போது ரெஸ்டாரண்டுக்கு வெளியில் ஒருவன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். கால்கள் இரண்டும் ஊனம். கீழே அமர்ந்து கைகளை நீட்டிக் கொண்டிருந்தான். பற்கள் காவியேறிக் கிடந்தன. மொட்டைத் தலை. மணி மூன்றாகியிருந்தது. அனேகமாக அவனுக்கு இன்னமும் மதிய உணவு கிடைத்திருக்காது போலிருக்கிறது.

வயிற்றைத் தடவிக் காட்டியபடியே காசு கேட்டுக் கொண்டிருந்தான். கூட வந்தவர்கள் அவனை கவனிக்காதது போல கடந்து கொண்டிருந்தார்கள். அவனை நேருக்கு நேர் பார்த்தால் சில்லரைக் காசையாவது கொடுக்க வேண்டுமே? இருநூற்றியெழுபத்தைந்து ரூபாயை விடவும் இரண்டு ரூபாய் இப்பொழுது பாரமாகத் தெரிந்ததால் எதையோ முக்கியமாக பேசுவது போலவோ அல்லது அவனைக் காணாதது போலவே தாண்டிக் கொண்டிருந்தார்கள். அவன் பற்களைக் காட்டியபடி ‘அண்ணய்யா...குரு’ என்று கை நீட்டிக் கொண்டிருந்தான். நான் அவசர அவசரமாக கூட வந்தவர்களின் கூட்டத்திற்குள் புகுந்து கொண்டேன். கூட்டத்திற்கு மத்தியில் இருந்ததால் நல்லவேளையாக, அவன் என்னைப் பார்த்து காசு கேட்கவில்லை. இரண்டு ரூபாயை மிச்சம் பிடித்து அலுவலகத்திற்கு வந்தாகிவிட்டது. மிச்சம் பிடித்த காசுக்கு நாங்கள் ஆளுக்கு ஒரு பங்களா கட்டுவதாகவும் மேலும் வீட்டுக்கு முன்பாக ஒரு கார் வாங்கி நிறுத்துவதாகவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

0 எதிர் சப்தங்கள்: