Jan 4, 2014

போதும்...இதோட நிறுத்திக்குவோம்

நேற்று வரை கூடுதலாக பன்னிரெண்டாயிரம் ரூபாயை பாலாஜியின் கணக்குக்கு மாற்றியிருக்கிறார்கள். முன்பு அறிவித்த எண்பத்தைந்தாயிரம் ரூபாயைச் சேர்த்தால் மொத்தமாக தொண்ணூற்றியேழாயிரம் ரூபாய்கள் சேர்ந்தாயிற்று. இதில் சில ஆயிரம் ரூபாய்களை யார் அனுப்பினார்கள் என்ற எந்தத் தகவலுமே வங்கி ஸ்டேட்மெண்டில் வரவில்லையாம். முகம் காட்டாத வள்ளல்கள். இவை போக கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உதவியிருக்கிறது. பாலாஜியைப் பொறுத்தவரைக்கும் இது அளவுக்கு மிஞ்சிய உதவி. அத்தனை பேரின் அன்புக்கும் நன்றி.

ஏற்கனவே சொன்ன விஷயம்தான். 

இதற்கு மேல் பணம் கொடுக்க வேண்டாம். தேவைக்கு மீறிய பணமும் ஒரு சுமைதான் என நினைக்கிறேன். தேவையான பணம் கிடைத்துவிட்ட தகவல் இன்னும் பலரையும் சேரவில்லை என்று நினைக்கிறேன். அதற்காக இன்னொரு முறையும் இதை எழுத வேண்டியதாகிவிட்டது.

இனி வரும் காலங்களில் நிச்சயம் உங்களின் உதவி தேவைப்படும். இப்பொழுதும் கூட சிலர் கோரிக்கைகளை அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் இவற்றில் எவை உண்மையானவை என்பதைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் இருக்கிறது. ஒரு சதவீத நம்பிக்கையின்மை இருந்தாலும் கூட உதவி கோருவது மடமை அல்லவா? அதனால் இப்போதைக்கு எந்தக் கோரிக்கையும் இல்லை.

உதவிகள் வழங்கிய, தேவைப்படும் போது தொடர்பு கொள்ளச் சொல்லி தகவல் அனுப்பியிருந்த கொண்ட அத்தனை அன்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமான நன்றி. 

0 எதிர் சப்தங்கள்: