Jan 7, 2014

அவனா நீ?

சேலத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. வழக்கம் போலவே சனிக்கிழமையன்று வகுப்புகள் முடிந்தவுடன் தோளில் பையைத் தூக்கி போட்டுக் கொண்டு பேருந்தில் இடம் தேடிக் கொண்டிருந்த போது படு பாந்தமான ஒரு ஆசாமி சிரித்துக் கொண்டே நகர்ந்து அமர்ந்தார். பேருந்துகளில் சிரித்துக் கொண்டு இடம் தருவது ஆச்சரியமான செயல். என்னமோ அவர்களின் வயல் வரப்புக்குள் நாம் காலை வைத்துவிட்டது போலவே வேண்டா வெறுப்பாக நகர்பவர்கள்தான் அதிகம். அதிலும் சிலர் ‘போனால் போகட்டும்’ என்ற பாவனையில் ஒன்றரை ஸீட்டில் தான் அமர்ந்து கொண்டு அரை ஸீட்டை நமக்கு பிச்சை போடுவார்கள். ஒரு தொடையை கீழே தொங்கப்போட்ட படியே வர வேண்டியிருக்கும். அதுவும் பிச்சை போட்டவன் ஆஜானுபாகுவான ஆள் என்றால் ‘கொஞ்சம் தள்ளிக்குங்க’ என்று கூட கேட்க முடியாது. கிடைத்த இடத்திற்கு சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

டிவியில் ஏதோ படம் ஓடிக் கொண்டிருந்தது. பக்கத்து ஆசாமி தூங்கிவிட்டார். சிரித்துக் கொண்டே இடம் கொடுத்த நல்ல மனிதர் என்பதால் முடிந்த வரை அவருக்கு இடம் கொடுத்து படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் ஆகியிருக்கும். அவரது கை எனது கால் முட்டியைத் தொட்டது. அது ஒன்றும் பெரிய பிரச்சினையாக இல்லை. ஆனால் அந்தக் கை பாம்பு வடிவமெடுத்து மேல் நோக்கி நகரத் துவங்கிய போதுதான் உள்ளங்கால் வரைக்கும் கூசியது. எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கை, எனது தொடையைத் தொட்டவுடன் கையை நகர்த்திவிட்டேன். எடுத்துக் கொண்டார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறை நடுத்தொடைக்கு அரை இஞ்ச் மேலாக கை விழுந்தது. முதல் முறையைக் காட்டிலும் இப்பொழுது நகரும் வேகம் அதிகமாக இருந்தது. அதையும் தடுத்த போது ‘ஸாரி’ என்றார். மீண்டும் இன்னொரு முயற்சி. அப்பொழுது தைரியமாக பேச மாட்டேன். வயதும் குறைவு. உடல் பலமும் குறைவு. எழுந்து பேருந்தின் பின்புறமாகச் சென்றுவிட்டேன். அதே ஸீட்டில் இன்னொரு மாணவன் அமர்ந்தான். பாம்பு என்ன ஆனது என்று தெரியவில்லை.

நகர்ந்து வந்துவிட்டாலும் வெகுநேரம் படபடப்பாக இருந்தது. நினைவு தெரிந்த பிறகு நடக்கும் எதிர்பாராத முதல் தாக்குதல்- பாலியல் தாக்குதல். அருவெருப்பாகவும் பயமாகவும் இருந்தது. சங்ககிரியில் இறங்கி வேறு பேருந்தில் ஏறிக் கொண்டேன். ஆனால் இந்த அலர்ஜி பல மாதங்களுக்குத் தொடர்ந்தது. பேருந்தில் யார் பக்கத்திலும் இயல்பாக அமர முடியாமல் தவித்தேன்.

ஒரு ஆண் இன்னொரு ஆண்மகனை பாலியல் உறவுக்கு அழைப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் என்னை இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கக் கூட முடிந்ததில்லை.  ‘ஒரு பாலின உறவு’ பற்றி எனக்கு பெரிய புரிதல் இல்லை. அதைப் பற்றி அதிகம் யோசித்ததும் இல்லை. எப்பவாவது பொதுக் கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்கும் போது ஏதோ ‘புதையலைப் பார்ப்பது போல’ எட்டிப்பார்க்கும் சில மனிதர்கள்தான் அவ்வப்போது இந்தச் சிந்தனையைக் கிளறிவிடுவார்கள். நள்ளிரவில் பேருந்து நிலையங்களில் இத்தகைய மனிதர்களை சர்வசாதாரணமாக பார்க்கலாம். எதற்காக இப்படிப் பார்க்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பதுண்டு.

இதே போன்ற இன்னொரு சம்பவம் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் ஊர் டவுன்பஸ்ஸில் நிகழ்ந்தது. பேருந்தில் வெகு கூட்டம். பேருந்து நிலையத்திலிருந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் நிற்க இடம் இல்லை. பேருந்து நகரத் தொடங்கி பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்தவனை- அவன் இளைஞன் - வேஷ்டி கட்டிய மனிதர் ஒருவர் ‘சப் சப்’ என்று அறைந்தார். இளைஞனிடம் முகம் சிவந்து போயிற்று. பேருந்தில் இருந்த அத்தனை பேரும் அடி வாங்கியவனை பார்த்தார்கள். அவன் என்னவோ சொல்ல முயற்சித்தான். ‘வெளியே எடுத்துக் கொடுத்துடுறேன். கைல புடிச்சு ஆட்டிட்டு இரு’ என்று வேஷ்டிக்காரர் சொன்ன போதுதான் விவகாரம் புரிந்தது. மீண்டும் ‘சப் சப்’. பெண்கள் வேறு எங்கோ பார்ப்பது போல முகத்தை திருப்பிக் கொண்டார்கள். மற்ற ஆண்களும் வேஷ்டிக்காரர்களுடன் சேர்ந்து கொள்வார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவனுக்கு நல்ல நேரம். யாரும் கூட்டு சேரவில்லை. அடுத்து வந்த ‘மார்கெட்’ பஸ் ஸ்டாப்பில் அவசர அவசரமாக இறங்கிய பிற்குதான் பேருந்து இயல்பு நிலைக்கு வந்தது. அப்பொழுதும் கூட அதை இயல்பு நிலை என்று சொல்ல முடியாது. வேஷ்டி கட்டியவர் அவன் மீதான வசைகளை உதிர்த்துக் கொண்டேயிருந்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு இப்பவும் அப்படியொரு அனுபவம். 

ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து திரும்பி சேலத்தில் பேருந்து ஏறினேன். ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் அமர இடம் கிடைக்காது. இந்த முறையும் அப்படித்தான். ஆனால் சிறு அலைச்சலுக்கு பிறகு கிடைத்துவிட்டது. மூன்று பேர் அமரும் ஸீட் அது. பேருந்தின் நடுவில் இருக்கும் பாதையின் ஓரமாக இருந்த ஸீட்டில் அமர்ந்து கொண்டேன். நடுவில் இருந்த பையன் காதில் ஹெட் போன் மாட்டியிருந்தான்.  இப்பொழுதுதான் கல்லூரி முடித்திருக்க வேண்டும். மீசை அரும்பியிருந்தது. அவனிடம் எதுவும் பேசவில்லை. கையில் இருந்த புத்தகம் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்து அப்படியே தூங்கியும் போனேன். சற்று வாகாக நடைபாதையில் இருந்த கம்பியின் மீது சாய்ந்தவாறு உறங்கியிருந்தேன். குளிர் வாட்டிக் கொண்டிருந்தது. முன்பக்க படியின் வழியாக உள்ளே புகுந்த காற்று நேரடியாக முகத்தில் விசிறிக் கொண்டிருந்தது. ஆனால் குளிரையும் மீறி நல்ல தூக்கம். எப்பொழுது என்று தெரியவில்லை- ஆனால், எனது தொடைகள் மீது வேறொரு கை ஊர்ந்து கொண்டிருந்தது- தொடை என்றால் இந்த இடத்தில் தொடை இல்லை.

முதலில் அது கனவாக இருக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இது எவ்வளவு நேரமாக நடக்கிறது என்று தெரியவில்லை. திடீரென்று விழித்தால் அவனது கைகள் முழுச் சுதந்திரத்தையும் எடுத்துக் கொண்டிருந்தன. அலர்ஜியாகவும்  சங்கடமாகவும் இருந்தது.

கடுங் கோபத்துடன் அவனைத் தட்டினேன். தூங்குவது போல நடித்தான். மிக வேகமாகத் தட்டிய போது ‘என்ன சார்?’ என்று ஒன்றுமே தெரியாதவன் போல கேட்டான். ‘என்ன பண்ணுற?’ என்ற போது ‘ஒண்ணுமில்லையே சார்’ என்றவன் சில கடுமையான கேள்விகளுக்குப் பிறகு ‘ஓ சாரி ஸார்..தெரியாமத் தொட்டுட்டேன்’ என்றான். அது எப்படி தெரியாமல் தொடுவான் என்று தெரியவில்லை. ஆனால் அவனை அவமானப்படுத்த வேண்டும் என்று எந்த உந்துதலும் இல்லை. வறண்டு கிடக்கும் சமூகத்தில் இவன் ஒருவனை அவமானப்படுத்தி என்ன நடக்கப் போகிறது? ஒரு பாலின விருப்பம் என்பது அவனது உரிமை என்றே இருக்கட்டும். ஆனால் இப்படி மட்டமாக வலைவீசுவதுதான் எரிச்சலை உண்டாக்குகிறது.

லேப்டாப் பையை எடுத்து மடி மீது வைத்துக் கொண்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை.

முன்பொரு முறை பேராசிரியை ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது ‘கூட்டங்களில் பெண்களை உரசுவதாலும் கிள்ளுவதாலும் எதை அடைகிறார்கள்?’ என்கிற ரீதியில் பேசினார். எனக்கு அருகில் இருந்த நபர் ‘அவனவன் பிரச்சினை அவனுக்கு. அதுவாவது கிடைத்ததே என்று அவன் திருப்திப்பட்டிருக்கக் கூடும்’ என்றார். அவர் சொன்னதிலும் உண்மை இருக்கிறது. தனிமனிதனின் பாலியல் விருப்பம் என்பது அப்படித்தான். அது ஒரு புதிர். சில விஷயங்களை எதற்காகச் செய்கிறோம்/செய்கிறார்கள் என்று யோசித்தால் விடை கிடைப்பதில்லை. எனது விருப்பங்கள் உங்களுக்கு இருக்க வேண்டியதில்லை. உங்களின் அருவெறுப்புகள் எனக்கும் அருவெறுப்பாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் உண்டு. எந்த விருப்பம் எப்படி துளிர்த்தது என்பதையெல்லாம் கண்டுபிடிக்க அவர்களின் குழந்தைப் பருவம் வரைக்கும் ஆராய வேண்டியிருக்கும். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

ஆனால் நம் நாட்டில் தனது பாலியல் விருப்பத்தை அடைவதற்கான approach தான் மிகக் குரூரமானதாகவும், அபாயகரமானதாகவும் இருக்கிறது. பெண்களை கிள்ளுவது, அவர்களை உரசுவது, வன்புணர்வது என்பதில் மட்டும் பாலியல் சிக்கல்கள் இல்லை. ஒரு ஆண்மகனை பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்குவதும் கூட சமூகப் பிரச்சினைதான். சில வேஷ்டிக்காரர்கள் துணிந்துவிடுகிறார்கள். மற்றவர்கள் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். இது போன்ற பிரச்சினைகள் சமூகத்தின் உளவியலை மாற்றுவதன் மூலமாகவே தீர்க்க முடியும். ஆனால் நம் அரசாங்கம் சட்டங்களை மட்டுமே இயற்றிக் கொண்டிருக்கிறார்கள்- இன்னொரு பக்கம் ‘கலாச்சாரம்’ பற்றி பேசிக் கொண்டே பொதுவெளியில் ஆடை அவிழ்ப்பை ரசித்துக் கொண்டிருக்கிறோம். பிறகு எப்படி சமூக உளவியல் மாறும்?

0 எதிர் சப்தங்கள்: