இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டது. அப்பொழுது எங்கள் ஊர் டவுன் ஆகியிருக்கவில்லை. ஊரில் ஒன்று அல்லது இரண்டு டீக்கடைகள் இருந்தன. ஒரு மளிகைக் கடை இருந்தது. அது போக ஒரு பேக்கரியும் உண்டு. அவ்வளவுதான். ஒன்றிரண்டு பணக்கார வீடுகளைத் தவிர யாரிடமும் கார் இல்லை. நிறைய வீடுகளில் டிவி இல்லை. யாரோ ஒருவர் வீட்டில் டெலிபோன் இருந்தது. சைக்கிள்தான் பிரதானமாக இருந்தது. அதிசயமாகவே டிவிஎஸ் 50கள் ஊருக்குள் ஓடின. மாட்டுவண்டிகள் நிறைய உண்டு. எருமை மாடுகளை அதிகாலையில் சாலைகளில் ஓட்டிச் செல்வார்கள். மாலை நேரங்களில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருக்கும். சாலைகளில் பசும்புற்கட்டை தலையில் சுமந்தபடி ஆட்கள் செல்வார்கள். வாய்க்காலில் குளித்து எழுந்த ஈரம் அப்படியே ஒட்டியிருக்கும்.
அப்பொழுது அச்சு அசலான கிராமமாக இருந்தது. நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் நெஞ்சுக்குள் இனிக்கிறது.
நாங்கள் வளர வளரத்தான் கிராமமும் தனக்கான அலங்காரங்களை அழித்துக் கொண்டு நகரத்துக்கான பூச்சுகளை பூசத் துவங்கியிருந்தது. முதலில் சாலையோரங்களில் இருந்த மரங்களை வெட்டி ஏலம் விடத் துவங்கினார்கள். வெட்டப்பட்ட பெரும்பாலான மரங்கள் வேம்பு. என் தாத்தாவை விட அந்த மரங்களுக்கு வயது அதிகம் இருக்கும். அடிமரத்தை கட்டிப்பிடிக்க மூன்று பேராவது கை கோர்க்க வேண்டும். ஏலத்தில் நல்ல வருமானம் வந்திருக்கக் கூடும். அந்த மரங்களில் நிறைய கொக்குகள் இருந்தன. அவ்வப்போது நரிக்குறவர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஊருக்குள் வருவார்கள். காகிதம், வெடிமருந்து என அத்தனையையும் துப்பாக்கிக்குள் திணித்து அந்த இடத்திலேயே ‘தோட்டா’வைத் தயார் செய்வார்கள். எத்தனை உயரத்தில் இருந்தாலும் கொக்கு திருகிக் கொண்டு விழும். எடுத்து கழுத்தைத் திருகி பைக்குள் போட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்து கொள்வார்கள். அந்த வெடிச்சத்தத்துக்கு பயந்து மரத்தை விட்டு பறந்த கொக்குகள் திரும்பி வர ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் பிடிக்கும். அதுவரை வெற்றிலை பாக்கை மென்று கொண்டு குந்த வைத்து அமர்ந்திருப்பார்கள். நாங்கள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் கெட்டவார்த்தை பேசித் துரத்திவிடுவார்கள். பயப்பது போல பயந்து மீண்டும் அவர்களிடமே திரும்பச் செல்வோம்.
அந்தச் சமயத்தில் ஊருக்குள் ஒரு பிச்சைக்காரர் இருந்தார். இன்னொரு பைத்தியமும் உண்டு. பைத்தியம் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருப்பான். யார் வீட்டிலும் கை நீட்ட மாட்டான். இரவானால் தூங்குவதற்கு அவனது வீட்டிற்குச் சென்றுவிடுவான். ஆனால் பிச்சைக்காரருக்கு எந்த வீடும் இல்லை. ஏதாவதொரு வீட்டில் தட்டேந்தினால் பசியாறிவிடும். கோயிலுக்கு கீழாக கால் நீட்டிக் கொள்வார். நன்றாக ஞாபகம் இருக்கிறது- சாப்பிடாமல் தொந்தரவு செய்யும் போதெல்லாம் அவரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள். அவரது மூட்டைக்குள் குழந்தைகளை கை கால்களை கட்டிப் போட்டு உள்ளே திணித்து வைத்திருப்பதாக எப்பவும் சில கதைகள் காற்றில் பரவியிருந்தன. அவரைப் பார்க்கும் போதெல்லாம் பயமாக இருக்கும். ஆனால் என்னையொத்த நான்குபேர் கிடைத்துவிட்டால் போதும் கற்களை வீசத் தொடங்கிவிடுவோம். குச்சியைத் அசைத்தபடியே துரத்திக் கொண்டு வருவார். ஆனால் பெரும்பாலும் அவரால் எங்களை அடிக்க முடிந்ததில்லை.
ஒரு முறை அவரது மண்டையை பதம் பார்க்கும் படியாக உடன் இருந்தவன் கல்லை வீசியெறிந்தான். அது துல்லியமாக அவரது நெற்றியைப் பிளந்தது. அவர் ஒருவித கூச்சலை எழுப்பினார். அது கேவலும் இல்லாத அழுகையும் இல்லாத கூச்சல். அப்பொழுது மதிய நேரத்தின் உச்சி வெயில் காய்ந்து கொண்டிருந்தது. நாங்கள் பயந்து போனோம். அவரவர் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்ட போதும் அந்த கூச்சலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. வெகுநேரம் கத்திக் கொண்டேயிருந்தார். அவருக்கு அப்பொழுது ஐம்பதைத் தாண்டியிருக்க வேண்டும். பாதி தாடி நரைத்திருந்தது. கோவணம் கட்டியிருப்பார். தனது மூட்டையை தலை மீது சுமந்திருப்பார்.
அந்தக் காலத்தில் ஓணானை ஏன் அடிக்க வேண்டும் என்பதற்கு எங்கள் ஊரில் கதை ஒன்று சொல்வார்கள்.
ஒரு சமயம் பிள்ளையாருக்கு கடும் தாகம். அவர் ஒரு பொட்டல் காட்டில் சிக்கிக் கொண்டார். குடிப்பதற்கு தண்ணீரே இல்லை. யாராவது தண்ணீர் கொடுக்க மாட்டார்களா என வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு மரத்தின் கீழாக அமர்ந்திருக்கிறார். அப்பொழுது ஒரு அணிலும் ஓணானும் பிள்ளையாரின் அருகில் வருகின்றன. ‘கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்’என அவைகளிடம் இறைஞ்சுகிறார். அணில் வேகமாக ஓடிச் சென்று ஒரு தென்னை மரத்திலிருந்து இளநீர் ஒன்றை பறித்து வருகிறது. ஆனால் இந்த ஓணான் இருக்கிறது பாருங்கள்- ஒரு குடுவையில் தனது சிறுநீரைப் பிடித்து வருகிறது. பிள்ளையாருக்கு எதிராக சதி செய்த இந்த ஓணானை எங்கு பார்த்தாலும் அடித்துக் கொல்ல வேண்டும் என்பார்கள். அடிப்பதோடு மட்டும் இல்லை- அதன் மீது கருவேலம் முள்ளைக் குத்தி அதன் மீது சிறுநீர் கழித்துவிடுவோம். துடிதுடித்துச் சாகும். பிள்ளையாருக்காக பழிவாங்குகிய திருப்தி எங்களுக்கு.
இந்தக் கதையைப் போலவேதான் இந்த பிச்சைக்காரர்பற்றிய ஒரு கதையும் எங்கள் வயதையொத்தவர்களுக்குள் உலவிக் கொண்டிருந்தது. கிடைக்கும் குழந்தைகளையெல்லாம் மூட்டைக்கட்டி கொஞ்ச நாட்கள் தன்னுடனே வைத்திருப்பார். பிறகு வாய்க்கால் ஓரமாகவோ அல்லது ஆற்றங்கரை ஓரமாகவோ அமர்ந்து அந்தக் குழந்தையை அரிந்து தின்றுவிட்டு மிச்சம் மீதியைக் நீரில் கரைத்துவிடுவார். இந்த நம்பிக்கையினாலேயே அவரைக் கண்டபோதெல்லாம் கற்களை பொறுக்கத் துவங்கியிருந்தோம்.
அந்த மனிதனும் எத்தனை நாட்கள்தான் கல்லடி தாங்குவார்? பக்கத்து ஊருக்கு போய்விட்டார். எப்பொழுது சென்றார் என்பதெல்லாம் தெரியாது. அவர் திடீரென்று காணாமல் போயிருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு நான்கைந்து சிறுவர்களுடன் பக்கத்து ஊருக்கு வேட்டைக்கு சென்ற போதுதான் அவரை அங்கு பார்த்தோம். அந்த ஊர் எங்கள் ஊரைக் காட்டிலும் சிறியது. அந்த ஊரில் கருவேலங்காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டுக்குள்தான் வேட்டைக்கு போவோம். அந்த வேட்டையில் முயல்களும், சிட்டுக்குருவிகளும் சர்வசாதாரணமாக கிடைத்துவிடும். அரிதாக பச்சைக்கிளிகளையும் ஒரே ஒரு முறை பல வண்ணக் கிளி ஒன்றையும் பிடித்து வந்தோம்.
அந்தக் கருவேலங்காட்டு ஓரத்தில் கோவில் ஒன்றிருந்தது. சுண்ணாம்புக்காரைகள் உதிர்ந்து கிடந்த அந்தப் பழங்கோவிலின் நடுவில் ஒரு அரச மரமும் உண்டு. அந்த அரச மரத்தில் எப்படியாவது ஒரு நாள் ஏறிவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அந்த மரத்தின் பொந்துகளுக்குள் நிறைய பச்சைக் கிளிகள் இருந்தன. அதற்காகத்தான் குறி வைத்திருந்தோம். ஆனால் மரத்தை நெருங்கும் போதெல்லாம் எப்படியும் பெரியவர்கள் கண்களில் பட்டுவிடுவோம். துரத்திவிடுவார்கள். எங்களின் கனவு நிறைவேறவே இல்லை.
பிச்சைக்காரர் ஊரைவிட்டு போன அதே வருடத்தின் ஒரு விடுமுறை நாளில் கடும் மழை பெய்தது. அது ஒரு மதிய நேரம். வெறும் மழை மட்டும் இல்லை- காற்றுடன் கூடிய மழை. எங்கள் வீட்டு பந்தலை சூறாவளி தூக்கிக் கொண்டு சென்றதைப் பார்த்து பயந்து கொண்டிருந்தோம். ஓரிரண்டு மணி நேரம் அடித்துப் பெய்து மழை ஓய்ந்த போது ஊரே சுத்தமாகியிருந்தது. கூரைகளில் இருந்து தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தது. மழை முற்றாக நின்றுவிட்டது என்று சொல்ல முடியாது. சாரல் மிச்சம் இருந்தது.
அப்பொழுது பக்கத்து ஊரில் அரச மரம் விழுந்துவிட்டதாகவும் ஓடினால் சில கிளிக்குஞ்சுகளையாவது அள்ளிக் கொள்ளலாம் என்று தகவல் வந்தது. அப்பொழுது செருப்பணியாத கால்களோடு ஓடியது நினைவில் இருக்கிறது. கூடவே ஏழெட்டு சிறுவர்கள் ஓடி வந்தார்கள். இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் இருக்கும். மேலாகக் கிடந்த மண்ணை மழை அடித்துச் சென்றுவிட கற்கள் துருத்திக் கொண்டு நின்றன. பாதங்களை அவை பதம் பார்த்த போதும் கிளிக்குஞ்சுகள் தங்கள் அழகிய அலகினால் எங்களை அழைத்துக் கொண்டிருந்தன. பக்கத்து ஊரை அடைவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அத்தனை வேகமாக ஓடினோம். மிகுந்த ஆசையுடன் அரச மரத்தை நெருங்கிய போது கூட்டமாக இருந்தது. அந்தப் பழங்கால மரம் கிழவனைப் போல சரிந்து கிடந்தது.
அரச மரம் சாய்ந்திருந்தது மட்டும் இல்லாமல் அந்தக் கோவிலை தரைமட்டமாக்கியிருந்தது. அதனால்தான் கூட்டம் சேர்ந்திருக்கிறது என நினைத்தோம். ஆனால் அதே தரைமட்டத்திற்குள்தான் அந்த பிச்சைக்காரரும் சிக்கியிருந்தார்- எங்கள் ஊரை விட்டுப் போன பிச்சைக்காரர். அன்றைய தினத்தின் மழைக்கும் காற்றுக்கும் பயந்து கோவிலுக்குள் ஒதுங்கியிருப்பார் போலிருக்கிறது. விதி அவரை முடிந்துவிட்டது. அவர் முகம் கோரமாக இருப்பதால் சிறுவர்களை பக்கத்தில் அனுமதிக்கவில்லை. மரத்திலிருந்த கிளிக்குஞ்சுகள் கீழே விழுந்தனவா என்று தெரியவில்லை. ஆனால் தங்களின் வாழிடம் சிதைந்தது போனதைப் பார்த்து சில கிளிகள் கத்திக் கொண்டிருந்தன. ஒருவேளை அவை அந்த பிச்சைக்காரரின் மரணத்திற்காகவும் கூட கத்தியிருக்கலாம். எங்களுக்கு புரியவில்லை. வீட்டிற்கு திரும்பிச் செல்வதைத் தவிர எங்களுக்கு அங்கு வேலை இல்லை. கிளம்பும் போது அவரது துணி மூட்டைக்குள் ஏதேனும் குழந்தை இருக்கிறதா என பார்த்துவிட எத்தனித்தேன். மூட்டை தனியாகக் கிடந்தது. மழை நனைத்திருந்த அந்தப் பைக்குள்ளிருந்து சில பழைய துணிகள் அசைந்து கொண்டிருந்தன. அது, குழந்தையொன்று கை கால்களை அசைப்பது போலவே இருந்தது.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment