“அவரு ரெண்டு வட்டிக்கு பணம் வாங்கியிருக்காருங்க” என்று யாரை கைகாட்டிச் சொன்னாலும் சற்று மனம் வருந்தத் தொடங்கிவிடுகிறது. அவருக்கு என்ன பிரச்சினைகளோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. மிக அதிகப்படியான அழுத்தம் இல்லையென்றால் எதற்காக வட்டி வாங்கப் போகிறார்? ஏதோ ஒரு அழுத்தம்- குடும்பச் சுமை, மருத்துவச் செலவு, திருமணம் என்று ஏதோ ஒன்று கழுத்தில் கத்தியை வைக்க வேறு வழியே இல்லாமல் கை நீட்ட வேண்டியதாக விடுகிறது. வட்டிக்கு வாங்கிய பிறகு ‘வட்டி கட்ட வேண்டும்; அசலை அடைக்க வேண்டும்’ என்று அந்த மனிதரின் மனதில் உருவாகும் அழுத்தம் கொடுமையானது. அதுவும் ஐம்பதைத் தாண்டிய மனிதராக இருந்தால் இன்னமும் சிரமமும்.
இதெல்லாம் சாமானியர்களுக்குத்தான்.
ரிலையன்ஸ் அம்பானி ஏதோ ஒரு நிறுவனம் ஆரம்பிப்பதாக பணம் வசூலிக்கத் தொடங்கினாராம். நம்மவர்கள் கொண்டு போய் கொட்டியிருக்கிறார்கள். வசூலான பணத்திற்கான வட்டி மட்டும் பல்லாயிரம் கோடிகள் தேறியிருக்கிறது. ஆனால் அறிவிக்கப்பட்ட திட்டத்திற்காக இதுவரைக்கும் ஒரு செங்கல் கூட வாங்கவில்லையாம். அவர்கள் எதிர்பார்த்த வட்டி கிடைத்தவுடன் ஒன்றரை வருடம் கழித்து பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். எப்படியெல்லாம் பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் பாருங்கள். பணக்காரனுக்கு பணம் தேவைப்படும் போது போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறோம். அதுவே இல்லாதவனுக்கு பணம் தேவைப்படும் போது அவன் ரெண்டு வட்டிக்கும் கந்துவட்டிக்கும் கடன் வாங்குகிறான்.
இப்பொழுது எதற்கு இந்த வட்டிபுராணம்?
மனோன்மணி என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிருஷ்ணகிரி பக்கம் காவேரிப்பட்டணத்துக்காரர். அந்தப் பகுதியின் குகை ஓவியங்கள், கற்கால ஆயுதங்கள், வரலாறு என அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். கிரானைட் குவாரிகளால் கிருஷ்ணகிரியின் வரலாறுகள் தரைமட்டமாகிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் தேடித் தேடி பதிவு செய்து வருகிறார். வரலாற்றின் எந்தப் பகுதியைப் பற்றியும் அவரால் பேச முடிகிறது. பெங்களூரை ஒரு காலத்தில் சோழர்கள் ஆட்சி செய்தார்களாம். எங்கள் வீடு இருக்கும் பேகூரில் கூட நடுகற்களும், சதி கற்களும் இருக்கின்றனவாம். இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்தான் சொன்னார். அவரது வரலாற்று அறிவையெல்லாம் விட முக்கியமான விஷயம் அவரது புது எழுத்து பதிப்பகம்.
பல்வேறு கஷ்டங்களுக்கும் இடையில் தொடர்ந்து சிற்றிதழை நடத்தி வருகிறார். அது போக ஒவ்வொரு வருடமும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வெளியிடுகிறார். அவர்தான் முதல் பத்தியில் சொன்ன இரண்டு வட்டிக்கு பணம் வாங்கியிருக்கும் மனிதர். குடும்பச் சுமைக்காகவோ, மருத்துவ செலவுக்காகவோ, திருமணச் செலவுக்காகவோ இல்லை- வெறும் புத்தக் வெளியீட்டுக்காக. யாரிடமாவது நல்ல கதையோ, கவிதையோ இருந்தால் போதும். ‘புது எழுத்தில் போட்டுடலாம் கொடுங்க’ என்று வாங்கி புத்தகமாக்கிவிடுவார். பிறகு கடன் வாங்கித்தான் புத்தகங்களைக் கொண்டுவருகிறார். விற்பனைக்கான நெட்வொர்க் கிடையாது. பெரிய கடைகளில் தொடர்பு கிடையாது. விற்பனை உத்திகளும் விளம்பர புரட்சிகளும் கிடையாது. கடன் வாங்கியாவது புத்தகம் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வளவுதான் அவரது நோக்கம். புத்தகங்கள் என்ன லட்சக்கணக்கிலா விற்கின்றன? அச்சடித்த புத்தகங்களில் விற்காதவற்றை விசிட்டிங் கார்ட் கொடுப்பது போல இலவசமாகக் கொடுக்கிறார். கடைசியில் நட்டம்தான் மிஞ்சுகிறது. மாதமாதம் சம்பளம் வாங்கி கடனையும் வட்டியையும் அடைப்பார். வருடக் கடைசியில் அடுத்த வருட புத்தகங்களுக்காக மீண்டும் ‘ரெண்டு வட்டிக்கு’ கடன் வாங்குகிறார். இப்படித்தான் வருடம் தாண்டி வருடமாக தேய்ந்து கொண்டிருக்கிறார்.
எதற்காக இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்றால் ‘இத்தனை வருஷம் கஷ்டப்பட்டாச்சு...இனி கொஞ்சம் வருஷம்தானே’ என்கிறார்.
கடனை வாங்கி புத்தகம் அச்சிடுவது மட்டுமில்லை- இந்த வருடம் புத்தக அச்சாக்கம் பெங்களூரில் நடைபெற்றிருக்கிறது. சனிக்கிழமை மாலையில் புத்தக வெளியீடு. சனிக்கிழமை காலை பத்து மணியளவில்தான் புத்தகம் கையில் கிடைக்கும். என்னதான் வேகமாக வந்தாலும் பேருந்தில் வந்தால் சாயந்திரம் வந்து சேர முடியாது. நேரத்துக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென ஆம்னி வண்டி ஒன்றை வாடகைக்குப் பிடித்து பறந்தடித்து வருகிறார். கவனியுங்கள்- புத்தகமே கடன் வாங்கித்தான் அச்சடிக்கிறார். அதை சென்னை கொண்டுவருவதற்காக வாடகை வண்டி பிடித்து இன்னொரு சுமையைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார். ‘தான் மட்டுமே இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வருவதாக’ எந்த நேரத்திலும் பீற்றிக் கொள்ளாமல் தனது உழைப்பையும் உயிரையும் எழுத்துக்காக உருக்கித் திரியும் மனோன்மணி எந்த இடத்திலும் தனது பிரதாபங்களை தூக்கிக் காட்டி கொடிபிடிப்பதில்லை- பிழைக்கத் தெரியாத மனிதன்.
அவரது தேர்வும் பெரும்பாலும் சோடை போவதில்லை. புது எழுத்து பதிப்பகம் என்று தெரிந்தால் ஒவ்வொரு பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.
அதே போலத்தான் பாதரசம் பதிப்பகத்தின் சரவணன். சம்பளக்காசில் புத்தகம் வெளியிடுகிறார். என்.ஸ்ரீராம், பாலசுப்பிரமணியன், தூரன் குணா, குட்டி ரேவதி என அவரது பதிப்பகத்தின் மூலமாக புத்தகம் வெளியிடும் அத்தனை பேரும் மிக முக்கியமான எழுத்தாளர்கள். ஏதோவொரு விதத்தில் இவர்களுக்கு காத்திரமான இடம் இருக்கிறது. ஆனால் இவர்கள் படு அமைதியாக இருக்கிறார்கள். எந்தவிதத்திலும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த மார்கெட்டிங் யுகத்தில் இவர்களின் அமைதி படு ஆச்சரியமானது. இதுதான் overshadow என்பது. மற்ற புத்தகங்களின் கூச்சல்களிலும் விளம்பர வெளிச்சத்திலும் இவை அடங்கி இருக்கின்றன.
பாதரசம், புது எழுத்து பதிப்பகங்களின் புத்தகங்கள் அரங்கு எண் 654 இல் கிடைக்கின்றன. நாதன் பதிப்பகம் என்பது கடையின் பெயர். சரவணனை சந்தித்தேன். ‘எப்படிங்க போகுது?’ என்ற போது அவர் அப்படியொன்றும் திருப்தியாக பதில் சொல்லவில்லை. புத்தகங்கள் வெளியீடு, புத்தகக் கண்காட்சியில் அரங்குக்கான வாடகை எல்லாம் போக நஷ்டம் வராமல் இருந்தாலே போதும் என்கிற ரீதியில் பேசினார். கஷ்டமாக இருந்தது. ‘ஒவ்வொரு புத்தகத்திலும் நூறு பிரதிகள் விற்றாலும் கூட தப்பித்துவிடுவேன்’ என்றார். லாபம் எதுவும் வராது- தப்பித்துவிடுவார். அவ்வளவுதான்.
இந்த மாதிரியான பதிப்பாளர்கள் தப்பித்தால்தான் எழுதுவது மட்டுமே தனது வேலை என்றிருக்கும் எழுத்தாளர்களுக்கான களம் கிடைக்கும். எந்தவிதமான பின்ணணியும் இல்லாத இளம் எழுத்தாளர்களுக்கான பிரசுர வாய்ப்புகள் கிடைக்கும்.
இதை இவர்களுக்கான மார்கெட்டிங்குக்காக எழுதவில்லை.
வெறும் எழுத்து, இலக்கியம் என்பதைத் தவிர வேறு எந்த பிரதிபலனையும் எதிர்பாராத இலக்கியத்தின் இத்தகைய தூண்களுக்கு ஆதரவாக சற்றேனும் நமது தோள்களை கொடுப்போம் என்பதற்காக எழுதுகிறேன். பெரிய பதிப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு கொட்டுமேளத்தோடு ‘இலக்கியத்தைக் காக்கிறேன்’ பேர்வழி என்று லட்சக்கணக்கில் கொழுத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஆயிரம் இரண்டாயிரத்துக்கு கடன் வாங்கி புத்தகங்கள் வெளியிட்டுவிட்டு அமைதியாக இருக்கும் இவர்களுக்கு ஆதரவளிப்பது நமது கடமை இல்லையா? இவர்களைப் போன்றவர்கள் தப்பித்தால் நல்ல எழுத்து தப்பித்துவிடும்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment