Jan 12, 2014

ஐ லவ் தமிழ்நாடு

நேற்று காலை சென்னை வந்திறங்கிய போது காலை ஏழரை மணியாகியிருந்தது. ஏழரை அல்லவா? கூடவே சனிபகவான் வந்திருப்பார் போலிருக்கிறது. அவர் போக இன்னும் பல லட்சம் பேர் சென்னைக்குள் வந்திருக்கிறார்கள் -பொங்கல் திருவிழாவை கொண்டாட வந்தவர்கள். கோயம்பேட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான பேருந்துகள் திருந்து கொண்டிருந்தன. பேருந்து நிலையத்திற்குள் இடம் இல்லை என்பதால் துளி காலி இடம் கிடைத்தாலும் செருகி நிறுத்தியிருந்தார்கள்.  ஊரிலிருந்து நான் வந்திருந்த பேருந்து கோயம்பேடு மார்க்கெட் அருகிலேயே அரை மணி நேரத்திற்கு நகராமல் நின்று கொண்டிருந்தது. எரிச்சலாக இருந்ததால் இறங்கிக் கொண்டேன்.  நடந்தே போய்விடலாம். சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த சில்லரையில் அம்மா குடிநீர் ஒன்றை வாங்கி முகம் கழுவிவிட்டு ஒரு செய்தித்தாளை வாங்கி புரட்டியபடியே வெளியே வந்தால் மண்டையில் ஒரு சுளீர்.

எடுத்து வந்திருந்த இரண்டு பைகளில் ஒன்றை பேருந்திலேயே விட்டிருக்கிறேன். அதில் மூன்று நான்கு துணிமணிகள்தான் இருந்தன. ஆனால் அவை என்னிடம் இருப்பதிலேயே காஸ்ட்லியான துணிகள். இதில்தான் எனக்கும் மனைவிக்கும் பெரும் பிரச்சினை வரும். ‘உங்ககிட்ட உருப்படியா ஒரு ட்ரெஸ் இல்லை’ என்று திட்டுவாள். அதுவும் வெளியூர் கிளம்பும் போதெல்லாம் இந்த வசையை வாங்க வேண்டியிருக்கிறது. என்னிடம் மொத்தமாக ஆறேழு துணிகள்தான் இருக்கும். அதுவே போதும் என நினைத்துக் கொள்வேன். அதைவிடவும் துணி தேர்ந்தெடுப்பதை விடவும் கொடுமையான வேலை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அத்தனை துணிகளில் ஒன்றிரண்டை தேர்ந்தெடுப்பது பெரிய டார்ச்சர். வழியே இல்லாமல் துணி எடுக்கச் சென்றால் அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் சட்டையைத் தேர்ந்தெடுத்துவிடுவதுதான் வழக்கம். அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன். தேர்ந்தெடுத்த சட்டைக்கு ‘மேட்ச்’ஆக ஒரு பேண்ட் எடுத்துக் கொடுங்கள் என்று கடைக்காரரிடமே சொல்லிவிட்டால் எனது கடமை முடிந்தது. அவ்வளவுதான். பில்லை வாங்கிவிட்டு வெளியே வந்துவிடலாம். அந்தத் துணி பழையதாகும் வரை திரும்பத் திரும்ப அணிவேன். அதனால்தான் மனைவி ஏவுகணைகளை வீசுகிறாள். இந்த ஏவுகணைகளை சமாளிப்பதற்காகவே சில மாதங்களுக்கு முன்பாக லூயி பிலிப் சட்டையும் பேண்ட்டும் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் அதையும் இதுவரை இருபது முறைக்கும் மேலாக துவைத்தாகிவிட்டது. மூன்று மாதங்களில் இருபது முறை. 

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே சன் டிவியில் இருந்து அழைத்து ‘சனிக்கிழமையன்று சென்னை வருகிறீர்கள்தானே? ஒரு விவாதத்திற்கு வந்துவிடுங்கள்’ என்று அழைத்திருந்தார்கள். சன் டிவியில் முகத்தைக் காட்டிவிட்டால் ஒரு நல்ல விஷயம் நடக்கும். அதுவும் வலைப்பதிவில் வெற்றிகரமாக எழுதுவது பற்றிய விவாதம் என்பதால் வீட்டில் இருப்பவர்கள் ‘லேப்ட்டாப்பை கட்டிட்டு இருவத்தி நாலு மணிநேரமும் அழுவாத’ என்று திட்ட முடியாது. ‘அழுவாம இருந்தால் என்னையும் மதித்து சன் டிவியில் கூப்பிடுவார்களா?’ என்று வாயை அடைத்துவிட ஒரு காரணம் கிடைத்திருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே கிளுகிளுப்புட்டன் கிளம்பியிருந்தேன். அதுக்காகத்தான் லூயி பிலிப் சட்டையும் பேண்ட்டும் எடுத்து பைக்குள் வைத்திருந்தேன். என்னையும் கேபிள் சங்கரையும் மட்டும் பேச வைத்தார்கள். எப்படி பேசினேன் என்றெல்லாம் தெரியவில்லை. டிவியில் பொம்மை தெரிந்தால் போதும்.

இந்தச் சட்டையோடு இருந்த பையைத்தான் பேருந்திலேயே மறந்திருந்தேன். அதைவிட முக்கியமான ஐட்டம் ஒன்றும் பைக்குள் இருந்தது- மணிபர்ஸ். தூங்கும் போது தொடையைக் குத்துகிறது என்று பைக்குள் போட்டு வைத்திருந்தேன். ஏ.டி.எம் கார்டு, லைசென்ஸ் இன்னபிற இத்யாதிகள் அதற்குள் இருந்தன. ‘சொம்பும் போச்சுடா கோவிந்தா’ கதை ஆகிவிடும் போலிருந்தது. கையில் வைத்திருந்த செய்தித்தாளை விசிறியடித்துவிட்டு துழாவத் துவங்கினால் பேருந்துகள் பிரமாண்ட உருவம் எடுத்து ராட்சர்களாக நின்றிருந்தன. திரும்பிய பக்கமெல்லாம் பேருந்தின் பச்சை நிறம்தான் தெரிகிறது. ‘ஓசூர்- பெங்களூர்’ என்ற பெயரைப் பார்த்த பேருந்துக்குள் எல்லாம் ஏறிப்பார்த்தேன். மார்கெட், அதன் அருகே இருக்கும் மிகப் பெரிய பார்க்கிங் மைதானம் என்று ஒரு பேருந்தை விடவில்லை. ஆனால் பை கிடைத்த பாடில்லை. இருக்கன்குடி மாரியம்மனை வேண்டிக்கொண்டே நடந்தேன். ‘என்னடா இது சென்னை வந்தும் வராததுமாக வந்த ரோதனை’ என்று நினைத்தபடியே தேடிக் கொண்டிருந்த போது வியர்வை பெருக்கெடுத்திருந்தது. அநேகமாக உடலில் இருக்கும் கெட்ட நீர் அத்தனையும் வெளியேறியிருக்கும். கடைசியாக கோயம்பேடு நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே நுழையும் இடத்திற்கு வரும்போதே ‘ஒருவேளை பை கிடைக்கவில்லையென்றால் அடுத்த திட்டம்’ ஒன்றை மனம் தயாரிக்கத் தொடங்கிவிட்டது. யாரிடமாவது கடன் வாங்க வேண்டியிருக்கும்.

ஒரு நல்ல சட்டை, பேண்ட், இரண்டு நாள் சோற்றுச் செலவு, அது போக ஊர் திரும்புவதற்கு தேவையான பணம். இழப்பை விடவும் செண்டிமெண்ட்தான் குழப்பத் தொடங்கியிருந்தது. லிண்ட்சேவும் மாரியப்பனும் குப்புற விழுந்துவிடுவார்களோ என்று பயம். இன்னும் வேகமாகத் தொடங்கியிருந்தேன். இன்னும் ஐம்பது அறுபது பேருந்துகள். இன்னும் கொஞ்சம் வியர்வை. இரண்டு மணி நேரம் அலைந்திருப்பேன்.

ஆனால் மாரியம்மன் கைவிடவில்லை. 

ஓசுரிலிருந்து என்னை இடம் மாற்றியிருந்த பேருந்தை ட்ராபிக்கினால் வெளியேற்ற முடியாமல் நிறுத்தி வைத்திருந்தார்கள். ஏறிப் பார்த்தால் பை அதே இடத்தில் இருந்தது. அடங்கியிருந்த மூச்சு திரும்பவும் இயல்பு நிலையை அடைந்தது. அத்தனை வியர்வைக் கசகசப்பும் இப்பொழுது குளிர்ச்சியாக மாறிவிட்டது. இனம்புரியாத சந்தோஷம் விரல்களில் பரவத் தொடங்கியது. இதற்கு மேல் இதை விவரிக்க முடியும் என்று தெரியவில்லை. இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமானால் திரும்பக் கிடைத்துவிடும் படி எதையாவது ஒன்றை தொலைத்து கண்டுபிடிக்க வேண்டும். இனி இந்த மாதிரியான சந்தோஷத்திற்காகவே அடிக்கடி தொலைத்துவிட்டு கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சரி எப்படியோ- பை கிடைத்துவிட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்தைச் சுற்றினால் அது சென்னையைச் சுற்றுவது போலத்தானே அல்லது தமிழ்நாட்டையே சுற்றுவது போல. விநாயகர், சிவனையும் பார்வதியையும் சுற்றிவிட்டு உலகையே சுற்றியதாக டபாய்த்த மாதிரிதான். இனி கரையேறிவிடலாம்.

சன் டிவி ரெக்கார்டிங்கை முடித்துவிட்டு புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த போது மணி மதியம் மூன்றரை ஆகியிருந்தது. ஏற்கனவே ஆன்லைனில் புத்தகங்கள் எதிர்பாராத எண்ணிக்கையில் விற்பனையாகி பேரதிர்ச்சியில் இருக்கும் பப்ளிஷருக்கும் எனக்கும் நேற்று அதைவிட இன்ப அதிர்ச்சி. நேற்றும் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் வாங்கிக் கொண்டார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ‘லிண்ட்சே செம சேல்ஸூங்க’ என்ற போது தமிழ்நாட்டைச் சுற்றியது பலிக்கிறது என நினைத்துக் கொண்டேன். இன்னொரு முறை மாரியம்மனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.

எழுதி, மார்க்கெட்டிங் செய்து என புத்தக விற்பனை தப்பித்துவிட்டது பாருங்கள். 

நேற்று முழுவதும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலிலேயே நின்றிருந்தேன். அது ஒரு சந்தோஷமான தருணம். இன்றும் அங்கேயேதான் இருக்க வேண்டும். நிறையப் பேரைப் பார்ப்பதும், பேசுவதுமாக உற்சாகமாக நேரம் கரைகிறது. 

இன்று மாலை நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’ மற்றும் ர.ராஜலிங்கத்தின் ‘சிறகு தொலைத்த ஒற்றைவால் குருவி’ என்ற கவிதைத் தொகுப்புகளின் வெளியீடு ஐந்தரை மணிக்கு அகநாழிகை புத்தக அரங்கு 666-667 இல் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு பேருந்து ஏற வேண்டும். ஏறியவுடன் துணிப்பையை காலில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் கரையேறினால் போதும். கர்நாடகாவிலும் கரையேற வேண்டியதில்லை.


‘லிண்ட்சே செம சேல்ஸூங்க’ என்று வேடியப்பன் சொன்னதிலிருந்து வேறு மாதிரியான பதற்றம் வந்துவிட்டது. விற்பனையை விடவும் ரெஸ்பான்ஸ் முக்கியம் இல்லையா? எழுதுபவனுக்கு அதுதானே முக்கியம். நேற்றிரவு தூக்கமே இல்லை. இது உண்மைதான். இத்தனை பேர் நம்பி வாங்குகிறார்கள்- பிடிக்காமல் போய்விடக் கூடாதே என புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். இந்தக் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் போது ஒரு இலக்கியவாதியையும் மனதிற்குள் நினைத்துக் கொள்ளவில்லை. எட்டாம் வகுப்பு கூடத் தாண்டாத மாமா படித்தால் புரிந்து கொள்ள வேண்டும்- அவருக்கு பிடிக்க வேண்டும். இதுதான் கான்செப்ட்.

ஐந்து மணி வரை டிவி பார்ப்பதும் சில புத்தகங்களை வாசிப்பதும் மீண்டும் படுத்துக் கொள்வதுமாக நகர்ந்து கொண்டிருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது. உதவி இயக்குநராக இருக்கும் தம்பிச்சோழன் அனுப்பியிருந்தார். அவரை நேற்றுத்தான் முதன் முதலாக பார்த்தேன். ஜேடி-ஜெர்ரியிடம் உதவி இயக்குநராக இருக்கிறாராம். அவருடைய மெசேஜ்தான்.“உங்கள் கதைகள் மொத்தமாகப் படித்தேன். அட்டகாசமான நடை. வடிவமும் அடக்கமும் அபாரம். நன்றாக அனுபவித்தேன்”. அப்பாடா! தப்பித்தாகிவிட்டது. முதல் ரியாக்‌ஷன். அதுவும் பாஸிடிவ் ரியாக்‌ஷன். மணியான் ஹேப்பி அண்ணாச்சி. அதன்பிறகு தூங்கத் தொடங்கி எட்டு மணிக்கு எழுந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

0 எதிர் சப்தங்கள்: