ஓவியர்களில் எழுதுபவர்கள் மிகக் குறைவு. அதுவும் கலக்கலான மொழிநடையில் எழுதுபவர்கள் மிக அரிது. அப்படியான ஒரு எழுத்தாளர் கம் ஓவியர் சந்தோஷ். சந்தோஷை சில வருடங்களுக்கு முன்பாகவிருந்தே தெரியும். ஒரு காலத்தில் காலச்சுவடு, உயிர்மையில் வெளியான புத்தகங்களில் பலவற்றின் அட்டைப் படங்கள் சந்தோஷ் வடிவமைத்தவைதான். கல்லூரியில் ஓவியப்படிப்பை முடித்துவிட்டு ஆர்வத்தின் காரணமாக ஓவியங்களை செய்து கொண்டிருந்தவருக்கு லவ்ஸ் பூத்துவிட்டது. தமிழில் ஓவியம் வரைந்தும், இலக்கியம் எழுதியும் குடும்பம் நடத்துவது அத்தனை சுலபம் இல்லை. அது அவருக்கும் தெரியும் என்பதால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். இப்பொழுது ஓவியங்கள் வரைகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அட்டகாசமாக எழுதுகிறார். சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும் என்று ஒரு தொடர் எழுதுகிறார். வாசித்துப் பாருங்கள். ஒரு சோற்றுப் பதம்.
சந்தோஷிடம் இன்று ஃபோனில் பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வருவதற்குள் ஃபோனில் பேசி முடித்து விடுவது வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் பேச முடிவதில்லை. நிறைய restrictions. ‘ஆபிஸ் முடித்து வந்தால் கம்யூட்டர், புக்ஸ்ன்னு உக்காந்துடுறீங்க. மிச்சமிருக்கிற கொஞ்ச நேரமும் ஃபோனுக்கா?’ என்கிறார்கள். அவர்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது என்பதால் என்ன பதில் சொல்வது என்று தெரிவதில்லை. அம்மா வேறு அவ்வப்போது எரிகிற கொள்ளியில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றிவிடுகிறார் -அதனால் வீட்டிற்கு வந்தவுடன் நல்ல பிள்ளையாக ஃபோனை அமைதியாக்கிவிடுகிறேன்.
வேறு எப்பொழுதுதான் நண்பர்களிடம் பேசுவது? அலுவலகமும் தோதான இடம் இல்லை. பைக்கில் போகும் போதும் வரும் போதும் பேசலாம்தான். ஆனால் அது அபாயகரமானது. கடைசியாக பைக்கில் இருந்து விழுந்ததற்கு காரணமே ஃபோனில் பேசிக் கொண்டு வந்ததுதான். பின்னால் வந்த கான்கிரீட் லாரிக்காரனுக்கு நல்ல நேரம் என்பதால் அவனது ப்ரேக் வேலை செய்துவிட்டது. இல்லையென்றால் அவனுக்கு கோர்ட், கேஸ் என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் வந்திருக்கும். தலை தப்பியது லாரிக்காரன் புண்ணியம்.
இப்பொழுதெல்லாம் அலுவலகம் முடித்து வரும் போது ஆங்காங்கே நின்று பேசிவிடுகிறேன். வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது யாரிடமாவது பேசலாம் என்று தோன்றினால் பைக்கை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கிவிடுவதில் ஒரு சுகம் இருக்கிறது. அதுவும் நின்று பேசுவதற்காக பெலந்தூர் ஏரிக்கரை, அருலூர் ராணுவ முகாம் என்று ஆளரவம் குறைவான இடங்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் இன்னும் சுகம்.
பெலந்தூர் ஏரிப்பக்கமாக இரவு தொடங்கும் நேரத்தில் செல்ல வேண்டும். அந்த நேரத்தில்தான் லட்சக்கணக்கான வெளவால்கள் பறந்து கொண்டிருக்கும். அன்றைய தினத்திற்கான தங்களது வேட்டையை நோக்கி வெளவால்கள் பறக்கத் துவங்கும் நேரம் அது. இந்த நேரத்தில் கிளம்பி வெகுதூரம் சென்று காப்பிக்கொட்டையையோ அல்லது ஏதேனும் பழங்களையோ தின்றுவிட்டு அடுத்தநாள் அதிகாலையில் தங்களின் இருப்பிடங்களுக்கு இந்த வெளவால்கள் திரும்பிவருகின்றன. நேரமும் வாய்ப்பும் இருந்தால் நின்று பாருங்கள். இந்தக் காட்சி மிக பிரம்மாண்டமானதாகத் தெரியும். குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது வெளவால்கள் கிளம்பி வந்து கொண்டேயிருக்கும். எங்கிருந்து வருகின்றன என்பதை துல்லியமாக கணிக்க முடிந்ததில்லை. ஆனால் நெரிசல் மிகுந்த இந்நகரத்தில் இத்தனை லட்சம் வெளவால்களுக்கு இடமிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கும். வெகு நேரத்திற்கு வானம் முழுவதும் வெளவால்களால் நிரம்பியிருக்கும். அவற்றிற்கிடையேனான சிறு சிறு இடைவெளியில் புகுந்து வெளிவரும் வெளிச்சத் துணுக்குகளைப் பார்ப்பதற்கு நகரும் நட்சத்திரங்களைப் பார்ப்பது போலவே இருக்கும். இந்த இடத்தில் நின்று கவிஞர்களுடன் ஃபோனில் பேச வேண்டும். அதுவும் ரசனையாக பேசும் தேவதச்சன் போன்றவர்களிடம் பேசினால் மனதுக்குள் மழை பெய்வது போலவே இருக்கும்.
இப்படி நண்பர்களிடம் பேசுவதற்கென்றே வழிநெடுகவும் ஸ்பாட்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறேன். என்ன இருந்து என்ன பிரயோஜனம்? விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா?
இன்று சந்தோஷிடம் பேசுவதற்கு வாய்த்த இடம் மதுக்கடையின் வாசல். கர்நாடகத்தில் மதுக்கடைகள் தனியார் வசம்தான் இருக்கின்றன. மாலை நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜோடித்து வைத்திருப்பார்கள். உள்ளே ஒரு எட்டு போய் வரலாமா என்று தோன்றும். எங்கள் வீட்டிற்குச் செல்லும் வழியிலும் ஒரு மதுக்கடை இருக்கிறது. ஒரு கன்னட நடிகையின் தொப்புள் தெரியும் படத்தை வரைந்து வைத்திருப்பார்கள். படு கவர்ச்சியான படம் அது. இந்தக் கடைக்கு முன்பாக வந்து கொண்டிருந்த போது சந்தோஷின் கட்டுரை ஞாபகம் வந்துவிட்டது. அந்தச் சாலை நெரிசலானது என்பதால் பைக்கை முடிந்தவரை ஓரங்கட்டிவிட்டு அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.
அவர் ஓவியர்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். கண்கள் அந்த நடிகையின் ஓவியத்தை மேய்ந்து கொண்டிருந்தன. பிறகு ஏதோ ஒரு சுவாரசியமான விஷயத்தை அவர் ஆரம்பித்த போது காதுகளைத் தீட்டிக் கொண்டிருந்தேன். ஒன்றரை வினாடிகள்தான் இருக்கும்.
‘க்றீச்ச்ச்ச்ச்ச்ச்’- ஏதோ ஒரு வாகனத்தின் ப்ரேக் அடிக்கும் ஓசை.
அது ஒரு சிவப்பு நிறக் கார். அவன் ஒன்றும் விளையாட்டுக்காக ப்ரேக் அடிக்கவில்லை. முன்சக்கரத்தில் இரண்டு பேர் விழுந்துவிட்டார்கள். நெஞ்சுக்குழிக்குள் ஒரு பந்து அடைத்துக் கொண்டது.
சந்தோஷிடம் சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்துக் கொண்டு ஓடினேன். அதற்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மதுக்கூடத்திற்குள் இருந்து வந்தவர்கள். சக்கரத்திற்குள் விழுந்தவர்களில் ஒருவன் புன்னகைத்துக் கொண்டே எழுந்துவிட்டான். பெரிய அடி இல்லை. ஆனால் இன்னொருவனுக்கு முதுகில் பலத்த அடி போலிருந்தது. வாயிலிருந்தும் ரத்தம் வந்து கொண்டிருந்தது. சிரமப்பட்டு எழுந்தான். கால்களை உதறிக் கொண்டான். நான் மிக அருகில் நின்றிருந்தேன். இருவரும் தமிழில் பேசிக் கொண்டார்கள்.
‘இன்னா மச்சா இப்படி பண்ணிட்டியே’ என்றான் இரண்டாமவன்.
அப்பொழுதும் முதலாமவன் சிரித்துக் கொண்டிருந்தான்.
கார்க்காரன் எதுவுமே பேசவில்லை. கூட்டமும் எதையும் கேட்கவில்லை. சலசலத்தார்கள். அவ்வளவுதான்.
நமக்குத்தான் வாயில் சனி ஆயிற்றே. ‘பார்த்து வரலாம் இல்ல?’ என்றேன்.
‘கூப்ட்டோமா? போ மாமூ’ என்றான். ஏண்டா கேட்டோம் என்றாகிவிட்டது.
ஆனால் அதையெல்லாம் விட பெரிய அதிர்ச்சி அடுத்ததுதான். இரண்டாமவன் நொண்டியபடி நடந்தாலும் கையில் இருந்த சிகரெட்டை விழாமல் பிடித்திருந்தான். சரியாக நிற்கத் தொடங்கிய அடுத்த கணம் சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளியே விட்டான். ‘எனக்கு ஒன்றும் ஆகவில்லை’ என்று கூட்டத்திடம் சொல்கிறானாம். சுற்றிலும் நின்றிருந்தவர்கள் கமுக்கமாக சிரித்ததை பார்க்க முடிந்தது. இருவருக்குமே மிகுந்த போதை. அத்தனை வலியையும் மறைப்பது போல பாவ்லா காட்டிவிட்டு வண்டியை முறுக்கியபடியே அமர்ந்தார்கள். இவர்களின் செய்கையில் கூட்டமும் அதிர்ச்சியாகியிருந்தது.
‘ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ - பைக்கை முறுக்கினான். கூட்டத்தினர் ஒதுங்கி வழி கொடுத்தார்கள்.
இப்பொழுது இன்னொரு முறை விழுவது போல பாவித்துவிட்டு சீறினார்கள். சில வினாடிகள்தான். கூட்டம் கரைந்துவிட்டது.
ஏதேதோ நினைத்தபடியே பைக்கை எடுப்பதற்கு எத்தனித்த போது இன்னொரு ‘ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’. இப்பொழுது வேறு மூன்று பேர்கள் தங்களது பைக்கை நிறுத்திவிட்டு அதே மதுபானக் கூட்டத்திற்குள் நுழைந்தார்கள்.
அவர்கள் வெளியே வரும் போது இன்னொரு சிவப்பு நிறக் கார் ‘க்றீச்ச்ச்ச்’ என ப்ரேக் அடிக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்துவிட்டது.