Dec 10, 2013

பொடியன் இல்லை..வெடிகுண்டு

சில பையன்களை பார்க்கும் போது ‘பொடியன்’ என்று நினைத்துக் கொள்வோம் அல்லவா? நம்மைவிட உருவத்திலும் வயதிலும் படு இளப்பமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே பொடியன்களாக இருப்பதில்லை. தயவு தாட்சண்யமே இல்லாமல் நம் நினைப்பில் நெருப்பு மூட்டும் வெடிகுண்டுகளாக சிலர் இருந்துவிடுகிறார்கள். அப்படியான ஒரு பொடியன் நாகப்பிரகாஷ்.

சேலத்துப் பையன். 1997இல்தான் பிறந்திருக்கிறான். இப்பொழுது பதினேழு வயது. இந்த இடத்தில் நாகப்பிரகாஷின் உருவத்தை ஓரளவு கற்பனை செய்து கொள்ளலாம். தயிர் வடியும் முகம்- ‘பால்வடியும்’க்கு அடுத்த ஸ்டேஜ் என்று பொருள் கொள்க. மீசையும் தாடியுமில்லாத இந்தப் பையனின் குரல் கூட இன்னமும் கரடு முரடு ஆகவில்லை. சுற்றி வளைக்காமல் சொல்லிவிடலாம்- அப்பாவியான ப்ளஸ் டூ பையனின் முகம்.

இந்த வருடத்தில்தான் நாகப்பிரகாஷூடன் அறிமுகம் ஏற்பட்டது சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் சந்தித்தேன். நண்பர் சாத்தப்பன்தான் அறிமுகப்படுத்தினார்.  

‘இந்தப் பையன் செம சுறுசுறுப்பு மணி..பேசிப்பாருங்க’ என்றார்.

ஆனால் அவனோடு பேசுவது அத்தனை சுலபமாக இல்லை. வெட்கப்படுவது போலவே பேசினான்.

‘படிக்கிறியா?’ என்றேன்.

‘இல்லண்ணா. வேலைக்கு போறேன்’ - மிக இயல்பாகச் சொன்னான்.

இந்த வயதில் எதற்காக வேலைக்கு போகிறான் என்று குழப்பமாக இருந்தது. 

‘ஏன் படிக்கலை?’ என்றதற்கு,

‘குடும்ப நிலைமை’ என்று இரண்டு வார்த்தையில் பதில் சொன்னான். நமக்குத்தான் குறுகுறுக்குமே. அந்த குறுகுறுப்பினால் அடுத்த கேள்வியையும் கேட்டேன்.

‘எவ்வளவு படிச்சிருக்க?’ 

‘எட்டாவதுண்ணா’

சேலத்தில் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு சென்னை வந்துவிட்டான். எட்டாவது படித்த பையனுக்கு என்ன வேலை தருவார்கள்? அதுவும் ஒரு BPO நிறுவனத்தில். அப்படித்தான் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறான். ஆனால் அதோடு அவன் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை.

திக்கித்திணறி இரவு நேரங்களில் கம்யூட்டர் கற்றுக் கொண்டு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராகிவிட்டான். பிறகு கொஞ்ச நாட்களில் டீம் லீடராகி அடுத்த சில வருடங்களில் இன்னும் சில லெவல்களையும் தாண்டிவிட்டான். இந்த ‘அண்ணாமலை’ ரஜினி கதையை நீங்கள் எப்படி நம்பவில்லையோ அதேபோல்தான் நானும் நம்பவில்லை. இதை நான் சொன்னபோது அம்மாவும் நம்பவில்லை.

‘அது எப்படி எட்டாவது படிச்ச பையனுக்கு கம்யூட்டர் கம்பெனியில் வேலை கொடுத்தாங்க’ என்றார்.

ஆனால் அதுதான் உண்மை. அது ஒன்றும் பெரிய பன்னாட்டு நிறுவனம் இல்லை. சிறிய நிறுவனம். நூற்றுக்கணக்கானவர்கள் எல்லாம் வேலை செய்யவில்லை. இருக்கும் கொஞ்சம் பேரில் பையன் மின்னியிருக்கிறான். மேலே வந்துவிட்டான். வெரி சிம்பிளான கான்செப்ட் இது. 

இனி கதையின் அடுத்த பார்ட். 

என்னிடம் ‘குடும்ப நிலைமை’ என்றான் அல்லவா? அதற்கான காரணத்தை ஓரிரு வார்த்தைகளில் சொல்லிவிட்டு அடுத்த பார்ட்டுக்கு நகர்ந்துவிடலாம். நாகப்பிரகாஷின் அப்பா ஹோட்டலில் சப்ளையராக இருக்கிறார். குடும்பத்தில் சிரமம். தனது அப்பாவுக்கு தோள்கொடுக்க எட்டாம் வகுப்பு முடிந்தும் முடியாமலும் நாகப்பிரகாஷ் களம் இறங்கிவிட்டான்.

அவனை சென்னையில் பார்த்ததற்கு பிறகு ஒரு முறை ஃபோனில் பேசினான். நிசப்தத்தில் வந்த ஏதோ ஒரு கட்டுரை ‘மோட்டிவேஷனலாக’ இருந்தது என்று தொடங்கினான். இப்படி யாராவது தொடங்கினால் - அதுவும் பொடியனாக இருந்தால் நமக்கு உச்சி முடி சிலிர்த்துக் கொள்ளும் அல்லவா? ‘சைக்காலஜி என்ன சொல்லுதுன்னா...’ என்று தொடங்கினேன். நான்கைந்து வினாடிகள்தான் பேசியிருப்பேன். என்னை நிறுத்திவிட்டு அவன் பேசத் தொடங்கிவிட்டான். வாயடைத்துப் போனது. இவனுக்கு எப்படி சைக்காலஜி தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது ப்ராங்க்பர்ட்டில் இருக்கும் Goethe-University இல் தொலை தூரக் கல்வியாக சைக்காலஜி படித்துக் கொண்டிருக்கிறானாம். 

உண்மையிலேயே பயங்கர சந்தோஷமாக இருந்தது. அவனது குடும்பச் சூழல், வெறும் எட்டாம் வகுப்போடு நின்றுவிட்ட கல்வி என எதுவுமே அவனை நிறுத்தவில்லை. அடித்து நொறுக்கிக் கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறான். அவ்வப்போடு அவனை நினைத்துக் கொள்வதுண்டு. அவனைப் பற்றி நினைப்பதே ஒரு மோட்டிவேஷனல்தான்.

ஓரிரு மாதங்கள் முன்பாக இன்னொரு முறை அழைத்திருந்தான். இப்பொழுது முன்பைவிடவும் பெரிய இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தான்.

‘அண்ணே சேலத்திலேயே BPO கம்பெனி ஆரம்பிச்சிருக்கோம். Shasha Informatics Solutionன்னு பேரு. இப்போதைக்கு ஏழு பேர் வேலை செய்யறாங்கண்ணா..’ என்றான்.

வாழ்த்துகள் மட்டும்தான் சொன்னேன். அதற்கு மட்டும்தான் எனக்கு அருகதை இருக்கிறது எனத் தோன்றியது. பதினேழு வயதில் அனாயசமாக கொடியை பறக்கவிடுகிறான். 

IEEE நிறுவனத்தின் ஏதோ ஒரு அவுட் சோர்சிங் ப்ராஜக்டை பிடித்திருக்கிறார்களாம். இப்போதைக்கு ஏழு பேருக்கான வேலை இருக்கிறது. 

‘கம்பெனி பரவாயில்லையா?’ என்றேன்

‘பரவால்லண்ணா கையைக் கடிக்காமல் ஓடுகிறது’ என்றான்.

சமீபத்தில் ஒரு முறை அழைத்து ‘உங்களுக்கு ஏதாவது ப்ராஜக்ட் இருந்தால் சொல்லுங்க...கம்பெனியை விரிவு பண்ணனும்’ என்றான். இவனைப் போன்ற நெருப்பு பொறிகளுக்கு எப்படியாவது உதவிட வேண்டும் என நினைக்கிறேன். ப்ராஜக்ட் பிடித்து தருமளவுக்கு எனக்கு Influence இல்லை. ஆனால் இதை வாசிக்கும் யாரோ ஒருவரால் நிச்சயம் செய்ய முடியும் என நம்புகிறேன். வாசிப்பவர்களின் நண்பர்களோ அல்லது உறவினர்களோ உதவக்கூடிய நிலையில் இருந்தால் இந்தத் தகவலை அவர்களுக்கு forward செய்துவிடுங்கள்.

பதினேழு வயதுதான்- எட்டாம் வகுப்புதான் படித்திருக்கிறான். எவ்வளவு துணிச்சலாக களம் இறங்கியிருக்கிறான்? இந்தக் குடும்பச் சூழலில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வருமானம் வந்தால் போதும் என்றுதானே நினைப்போம்? ஆனால் நாகப்பிரகாஷின் கனவுகளும் லட்சியங்களும் வெகு உயரமானவை. 

இவனுக்கு உதவாமல் யாருக்கு உதவப் போகிறோம்? ப்ராஜக்ட் வாங்கித் தர முடியாவிட்டாலும் பிரச்சினை இல்லை. 081246 30678 என்ற எண்ணில் அழைத்தோ அல்லது nagaprakash@outlook.com என்ற மின்னஞ்சலில் அழைத்தோ ஒரு வாழ்த்தைச் சொல்லிவிடுங்கள். அவனது வயதுக்கும், உழைப்புக்கும், வெற்றிக்குமான அங்கீகாரமாக அது இருக்கக் கூடும்.

நாகப்பிரகாஷை நினைத்தால் சிலிர்ப்பாக இருக்கிறது. வெற்றி மீதான வேட்கையுடன் வேட்டை நாயின் கண்களோடு அலையும் நாகப்பிரகாஷ் போன்றவர்கள் வெற்றிபெற்றால் நிச்சயம் அது லட்சக்கணக்கானவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கக் கூடும். படிப்பும், குடும்பச் சூழலும் ஓரமாகக் கிடக்கட்டும்- திறமையும் உழைப்பும் இருந்தால் கதவுகள் தானாக திறந்து கொள்ளும் என்பதை எனக்கும் இன்னும் பலருக்கும் நாகப்பிரகாஷ் உணர்த்திக் கொண்டேயிருக்கக் கூடும்.