Dec 8, 2013

ஞாயிற்றுக் கிழமையை உருப்படியாக கழித்தல்..

ஒரு ஞாயிற்றுக்கிழமையை உருப்படியாக கழிப்பது என்பது எப்போதும் வாய்ப்பதில்லை. அதிசயமாக இன்று வாய்த்தது. காலையில் ஏழு மணிக்கு பாலமுருகன் வீட்டிற்கு வந்துவிட்டார். பாலமுருகன் மலேசிய எழுத்தாளர். இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பாகவே மலேசியா போய்விட்ட குடும்பம் அவருடையது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். அப்பொழுது சந்திக்க முடியவில்லை. இப்பொழுது மீண்டும் வந்திருக்கிறார். பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் என்று சாலை வழியாகவே பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் அவருக்கு ஆட்கள் சேர்ந்துவிடுகிறார்கள். இந்த அனுபவம் எல்லோருக்கும் அவ்வளவு சீக்கிரம் கிட்டிவிடாது. ‘இந்தியாவில் மணிப்பூர் என்பது ஒரு மாநிலமா?’ என்று கேட்கும் அளவிற்குத்தான் அவருக்கும் இந்தியாவுக்குமான சம்பந்தம். ஆனால் இந்தப் பயணங்களின் மூலமாக ஊட்டியின் இருளர்களைப் பற்றியும், கர்நாடகத்தின் புராதன கோவில்களைப் பற்றியும், தமிழ்நாட்டின் புதைந்து போன வரலாற்றையும் பாலமுருகன் தோண்டி எடுத்து தோள்பையில் திணித்துக் கொண்டு போவது போலவே தெரிகிறது.

திசையும் இலக்கும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கும் போது நாம் முக்கியமான காரியத்தைச் செய்து கொண்டிருப்பது போலத் தெரியாது. ஆனால் பயணத்தின் போது நாம் கடக்கும் காட்சிகளும் மனிதர்களும் மண்டைக்குள் ஏதாவதொரு மூலையில் ஒளிந்து கொள்வார்கள். பிற்காலங்களில் இந்த மனிதர்களும் காட்சிகளும் நமக்கே தெரியாமல் மண்டைக்குள்ளிருந்து எட்டிப்பார்ப்பார்கள் பாருங்கள். அற்புதமான அனுபவமாக இருக்கும். அந்த அனுபவத்திற்காகத்தான் கோணங்கி அலைந்து கொண்டிருக்கிறார். பாலமுருகனும் அலைந்து கொண்டிருக்கிறார். 

ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பாக பாலமுருகனை மலேசியாவில் சந்தித்திருக்கிறேன். நான் தங்கியிருந்த பினாங்கு நகரத்துக்கு வந்திருந்தார். அப்பொழுது மலேசிய தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கியம் பற்றி பேசக் கூடிய இளைஞர்கள் கால் வைத்திருந்தார்கள். பாலமுருகன், நவீன், பா.சிவம் போன்ற இளைஞர்களால் Fresh blood பாயத் தொடங்கியிருந்த பருவம் அது. பாலமுருகன் மிகத் தீவிரமான சண்டைக்காரனின் மனநிலையில் இருந்தார்.  அப்பொழுது அவர்கள் மலேசிய இலக்கியத்திலிருந்த பழமைவாதிகளின் மிகப்பெரிய எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதும் கூட பல பிரச்சினைகளுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முந்தைய சண்டைக்காரனின் மனநிலையிலிருந்து மாறியிருக்கிறார். அதே வேகம் இருக்கிறது. ஆனால்  முந்தைய கோபம் இல்லை. 

வல்லினம் என்ற இணைய இதழை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. அந்தத் தளத்தை இவர்கள்தான் நடத்துகிறார்கள். சரியாகச் சொன்னால் நடத்திக் கொண்டிருந்தார்கள் - இப்பொழுது முடக்கப்பட்டுவிட்டது. இதழில் கதை ஒன்றை பிரசுரம் செய்திருக்கிறார்கள். அதில் வரம்பு மீறல் நடந்துவிட்டதாகச் சொல்லி போலீஸ் புகார், கைது முயற்சி என்றெல்லாம் நடைபெற்றிருக்கிறது. அந்தப் பிரச்சினையில்தான் வல்லினம் முடக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். ஆனால் இப்படியான அடக்குமுறைகளால் இந்த இளைஞர்கள் அடங்கிவிடுவார்கள் என்று தோன்றவில்லை. இப்பொழுது மலேசிய இலக்கியத்தின் புத்தம் புதிய முகத்திற்கு இவர்கள்தான் முக்கிய காரணகர்த்தாக்கள். அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

இருக்கட்டும்.

பாலமுருகன் பெங்களூரில் தமிழவனைச் சந்திக்க வேண்டும் என விரும்பினார். அவரை அழைத்துப் பார்த்தோம். தமிழவன் அலைபேசியை எடுப்பதாகவே தெரியவில்லை. எழுத்தாளர் பாவண்ணன் உடனும் பேச முடியவில்லை. வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. சற்று நேரம் லால்பாக் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் காதலர்களாகத் திரிந்தார்கள். அவர்களை தொந்தரவு செய்யாமல் எங்களது இலக்கியக் காதலை இதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினோம்.

அடுத்து? 

இன்று ஆதவன் தீட்சண்யா பெங்களூரில் இருந்தார். பெங்களூரில் நிகழ்வுகளுக்கா பஞ்சம்? சாகித்ய அகாதெமியின் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மற்றும் தென்னிந்திய மொழிக் கவிதை வாசிப்பு. தமிழில் இருந்து ஆதவன் தீட்சண்யா கவிதை வாசிக்கிறார்.

சாகித்ய அகாதெமியிடம் ஏகப்பட்ட நிதி இருக்கும் போலிருக்கிறது. ஏ.சி. அரங்கு, வந்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு, கவிஞர்களுக்கு ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணமுடிப்பு, தங்கும் வசதி அது போக Travel allowance- விமானத்தில் வேண்டுமானாலும் வந்து போகலாம். காசு கொடுத்துவிடுவார்கள். இந்த இரண்டு நாட்கள் நிகழ்வுக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் குறைவில்லாமல் செலவுக் கணக்கு காட்டுவார்கள். செலவு ஆனாலும் இது போன்ற நிகழ்வுகளினால் ஏதோ ஒரு நல்ல காரியம் நடப்பதாகவே தெரிகிறது. 

பன்மொழிக் கவிதைகளையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். உருது, மலையாளக் கவிஞர்கள் எல்லாம் கவிதையை ராகம் போட்டு பாடுகிறார்கள். உண்மையில் கவிதையை இப்படியும் கொண்டாடலாம். ஆனால் தமிழ் கவிதைகளை நம்மவர்கள் வாசிப்பதை கேட்க வேண்டுமே! ஏதோ சண்டை போடப் போவது போல பற்களைக் கடித்துக் கொண்டு முகத்தை இறுக்கிக் கொண்டே வாசிப்போம். சிரித்தால் கவிதை dilute ஆகிவிடும் என்று கண்டுபிடித்த பிரகஸ்பதியைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்படியான நிகழ்வுகள் ஒரு புதிய ஐடியாக்களை உருவாக்குகின்றன. நம் மொழியிலும் இது போன்ற ஏதாவது வித்தியாசங்களைச் செய்ய இயலுமா என யோசிக்கச் செய்கிறது.

நிகழ்வில் வாசிப்பதற்காக ஆதவன் தீட்சண்யா  அட்டகாசமான கவிதைகளைக் கையில் வைத்திருந்தார். ஆதவனின்  எழுத்துக்களில் ஒரு நக்கல் இருக்கும். சமூகத்தை, நம்மை நாமே நக்கலடித்துக் கொள்ளும் தொனி அது. கவிதையிலும் அந்த எள்ளலை கொண்டு வந்துவிடுகிறார். ‘குடுங்க சார் வாசிச்சுட்டு தர்றேன்’ என்று வாங்கி வாசித்துவிட்டு எனக்கு நானே சிரித்துக் கொண்டிருந்தேன்.  அதிலும் ஒரு கவிதை செம நக்கல் ரகம். 

அந்தக் கவிதையைச் சொல்வதற்கு முன்பாக- பெங்களூரில் சாகித்ய அகாதெமிக்கு மிகப்பெரிய நூலகம் இருக்கிறது. தமிழ் உட்பட பல்லாயிரம் நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. வாசிப்பில் விருப்பம் இருப்பவர்கள் ஒரு மெம்பர்ஷிப் போட்டுக் கொள்ளலாம்.

இன்றைய நிலவரம்

காலுக்குத் தொப்பியும் தலைக்கு செருப்பும் அணியுமாறு
இந்த நிமிடம்வரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை

கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும்
காதிருக்கும் இடத்தில் காதுமே இருந்துவிட்டுப்போகட்டுமென்று
மாட்சிமை தங்கிய அரசு 
குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது கருணையுடன்

தொடர்ந்தும் வாய்வழியாகவே உண்பதை மாற்றுவது குறித்து 
இன்றைய அமைச்சரவைக்கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்

ஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும் 
மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்
நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது 

உலகிலேயே முதன்முறையாக
தண்டவாளத்தில் பேருந்து தார்ரோட்டில் ரயில்
துறைமுகத்தில் விமானம் விமானநிலையத்தில் கப்பல் என்று 
அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு
குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்

பிரசவ ஆஸ்பத்திரியை சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
நாட்டையே சுடுகாடாக மாற்றும் திட்டம் படிப்படியாக நிறைவற்றப்படும் 

கோன் எவ்வாறோ குடிக்களும் அவ்வாறேயானபடியால்
அவர்களும்
எதையும் எப்போதும் 
ஒரே இடத்தில் நீடித்திருக்கவிடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.