Dec 29, 2013

இந்த ஈரல் ஆட்டு ஈரல்தானே?

நேற்று ரங்கஷங்கரா நாடக அரங்குக்கு செல்லலாம் என்று தோன்றியது. பெங்களூரின் பிரசித்தி பெற்ற நாடக அரங்கு. நாடகம் பார்ப்பதெல்லாம் நோக்கமில்லை. சும்மா ஒரு ரவுண்ட். அங்கு நாடகம் பார்க்கிறோமோ இல்லையோ- ஒரு சுற்று போய் வரலாம். அந்த ஏரியாவே ஜெகஜ்ஜோதியாக இருக்கும். ஜெகஜ்ஜோதி என்றால் ஜெகஜ்ஜோதிதான். 

போகிற வழியில் வெங்கடாஜலபதிக்கு ஒரு கோவில் கட்டி வைத்திருக்கிறார்கள். தங்கக் கருடகம்பம் வெளியே தெரியும் படி தகதகக்கும். என்னதான் சாமி என்றாலும் நம் ஆட்களை கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் அல்லவா? ராத்தியில் யாரும் சுரண்டிவிடாதபடி கம்பிவேலி போட்டு வைத்திருப்பார்கள். 

இப்பொழுது வெங்கடாஜலபதி முக்கியமா? காரைக்குடிக்காரரின் மீன் வறுவல் முக்கியமா என்ற குழப்பம் வந்துவிட்டது. ரங்கஷங்கராவுக்கு பக்கத்தில் ஒரு ஆம்னி வேனில் நம் தமிழ் ஆட்கள்  ஃபாஸ்ட் புட் கடை நடத்துகிறார்கள். மீன் வறுவல், ஈரல், சிக்கன் கபாப் என்றெல்லாம் கிடைக்கும். கோவிலுக்குச் சென்றுவிட்டு மீன் தின்னக் கூடாது என்பார்கள். யார் சொன்னது என்றெல்லாம் தெரியாது. ஆனால் போகக் கூடாதுதானே? அதனால் இப்போதைக்கு நாக்குதான் முக்கியம் என்று பாலாஜியிடம் இன்னொரு நாளைக்கு வருவதாகச் சொல்லியாகிவிட்டது.

மீன்காரரிடம் ஒரு பீஸ் குறைந்தபட்சம் முப்பது ரூபாய். நல்ல பீஸ் என்றால் ஐம்பது ரூபாய்க்கும் கூட விற்கிறார். காஸ்ட்லிதான். ஆனால் எப்போதோ ஒரு நாள்தானே. நன்றாக இருக்கும். அந்தப் பக்கம் போனால் முயற்சி செய்து பாருங்கள்.

மீன் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் ஈரல் தின்பதில் ஒரு குழப்பம். ஆட்டு ஈரலாகத்தான் இருக்குமா என்று.

தின்பது என்று முடிவான பிறகு ஆடு என்ன மாடு என்ன? பன்றி என்ன? இந்தக் குழப்பம் மண்டைக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த போது நாமக்கல் கவிஞரின் ஞாபகம் வந்துவிட்டது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் ‘என் கதை’ நூலில் ஒரு இடம் வரும். அவரும் இப்படித்தான் - ஆடு கோழி எல்லாம் தின்னலாம் ஆனால் மாடு பாவம் என்கிற மாதிரியான மனநிலையில் இருந்தவர். அதைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.

அந்தக் காலத்தில் திருச்சி ஜில்லாவின் பொதுப்பணித்துறையில் எக்ஸிகியூடிவ் எஞ்சினியராக இருந்தவர் மாணிக்கம் நாய்க்கர். இவர் பெரிய படிப்பாளி. நல்ல சிந்தனையாளர். இந்த மாணிக்கம் நாய்க்கர் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாய்க்கருக்கு ஏதோ ஒருவகையில் நெருக்கம். எந்த ராமசாமி நாய்க்கர் என்று தெரிகிறதுதானே? அவரேதான். பெரியார். இருவரும் ஒரே ஜாதிதான் என்றாலும் இருவருக்குமிடையில் சொந்தம் இல்லை. மாணிக்கம் நாய்க்கர் வேளாளர். பெரியார் கன்னட தேசத்திலிருந்து வந்த நாய்க்கர் பரம்பரை. ஆனால் இருவருக்குமிடையில் நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது.

மாணிக்கம் நாய்க்கர், ராமசாமி நாய்க்கர் மற்றும் ராமலிங்கம் பிள்ளை மூவரும் அந்தக் காலத்தில் நிறைய விவாதிப்பது உண்டாம். அநேகமாக ஆரியர்xதிராவிடர், கம்பராமாயணம், இதிகாசம் என்றெல்லாம்தான் விவாதிப்பார்கள் போலிருக்கிறது. கம்பராமாயணத்தை பற்றி பேசும் போது பெரும்பாலும் பிள்ளையும், மாணிக்கம் நாய்க்கரும் கருத்துச் சண்டை போட்டுக் கொள்வார்களாம். அப்போதெல்லாம் ராமசாமி நாய்க்கர் நடுநிலை வகிப்பாராம். 

மாணிக்கம் நாய்க்கரைப் பொறுத்தவரைக்கும் ராமாயணம் என்பதன் பெயரே ‘ராவணாயனம்’ என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பது விருப்பம். இதை அவர் ஒன்றும் போகிற போக்கில் சொல்லவில்லை. நாய்க்கருக்கு கம்பராமாயணம் அத்துப்படி. தானே ‘ராவணாயனம்’ எழுதப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாராம். குறிப்புகள் கூட நிறைய வைத்திருந்தாராம். ஆனால் எழுதினாரா என்று தெரியாது. இதெல்லாம் 1910 வாக்கில் நடந்திருக்கும் போலிருக்கிறது. அப்படியே அவர் எழுதியிருந்தாலும் கூட இப்பொழுது காணாமல் போயிருக்கக் கூடும்.

பிற்காலத்தில் பெரியார் ‘கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா? அந்த எண்ணமே கூட அவருக்கு மாணிக்கம் நாய்க்கரிடம் உரையாடியதால்தான் உருவாகியிருக்கக் கூடும் என்று நாமக்கல் கவிஞர் சொல்லியிருக்கிறார். பெரியாரைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம்.

இந்த மாணிக்கம் நாய்க்கர் அரசாங்கத்தின் பெரிய உத்யோஸ்தர் அல்லவா? அந்தச் சமயத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பதவியேற்பு விழா ஒன்று டெல்லி தர்பாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அந்தக் காலத்தில் திருச்சியிலிருந்து டெல்லி போவது என்றால் சுலபமான காரியமா? ராமலிங்கம் பிள்ளையையும் பேச்சுத் துணைக்கு கூட்டிக் கொண்டார்.

இவர்கள் இரண்டு பேர் போக ஒரு ப்யூன், ஒரு சமையல்காரன் இந்த நான்கு பேருக்கும் ஆறுமாதத்திற்கு தேவையான சமையல் சாமான்கள் அது போக ‘சைட் காருடன்’ ஒரு மோட்டார் சைக்கிள், குளிருக்கு தேவையான ‘சரக்கு’ பாட்டில்கள். இத்தனையும் தூக்கிப் போட்டுக் கொண்டு ரயில் ஏறியிருக்கிறார்கள். டெல்லி சென்றால் உடனே திரும்புவதில்லை. வடநாடு மொத்தமும் ஆறுமாதம் சுற்றிப் பார்க்கும் திட்டத்தோடு. அரசு அதிகாரிக்கு ஆறுமாதம் எல்லாம் விடுப்பு கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

இத்தனை ஏற்பாடு செய்தவர்கள் டெல்லியில் தங்குவதற்கான இடத்தை ஏற்பாடு செய்யாமல் விட்டுவிட்டார்களாம். ரயில் நிலையத்தில் இறங்கி நின்றால் எங்கே போவது என்று தெரியவில்லை. விடுதிகள் பெரும்பாலும் நிரம்பி வழிகின்றன. நவம்பர்/டிசம்பர் மாதக் குளிர் வேறு பின்னியெடுக்கிறது. வேறு வழியே இல்லாமல் டில்லி சாந்தினிசெளக்கில் ஒரு மாட்டுக்காரரின் வீட்டில் அசுத்தமான பத்துக்கு பத்து அறை ஒன்றை வாடகைக்கு பிடிக்கிறார்கள். வாடகை மாதம் நூற்றைம்பது ரூபாய். இது ‘சீப்’ வாடகை எல்லாம் கிடையாது. அந்தக் காலத்தில் ஒரு வாத்தியாருக்கும், அரசாங்க கிளார்க்குக்கும் சம்பளம் மாதம் பதினைந்து ரூபாய்தான். அப்படியானால் மாதம் நூற்றைம்பது என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.

அத்தனை வாடகை கொடுத்தாலும் சமைக்க இடம் இல்லை. அதனால் கடைக்குச் சென்று வாங்கி வருவதுதான் உணவு. ஒவ்வொரு முறையும் நல்லி எலும்பு பெரியதாகவே இருந்திருக்கிறது. நான்கைந்து நாள் கழிந்த பிறகு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராமலிங்கம் பிள்ளை ‘இந்த ஊர் ஆடுகளுக்கு எலும்பு உறுதியா இருக்கு பாருங்க’ என்றாராம். 

நாய்க்கருக்கு சிரிப்பு வந்து வாயில் இருந்த சோற்றைப் பூராவும் ‘குபீர்’ என்று துப்பிவிட்டாராம். பிள்ளைக்கு புரியவே இல்லை. ஆனால் உங்களுக்கு புரிந்திருக்குமே. அதேதான். 

அந்த ப்யூன் வாங்கி வந்தது ஒரு பாய் கடையில். பிரியாணியில் கிடந்தது மாட்டுக் கறி. இதைத்தான் நான்கைந்து நாட்களாக உச்சுக் கொட்டியபடியே தின்றிருக்கிறார்கள். நாய்க்கருக்கு அது பற்றிய பிரச்சினை இல்லை. எதுவாக இருந்தாலும் தின்றுகொள்ளும் வகையறா. ஆனால் ராமலிங்கம் பிள்ளை அப்படியில்லை. முந்தைய ஐந்து நாட்கள் தின்றதும் குமட்டிக் கொண்டு வந்திருக்கிறது. அவ்வளவுதான். அதிலிருந்தே அவருக்கு அசைவம் என்றால் வெறுப்பு வந்துவிட்டது.

இந்த ‘என் கதை’ படு சுவாரஸியமான புத்தகம். இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சிக்கு லிஸ்ட் போடுவதாக இருந்தால் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

ரங்கஷங்கரா ஃபாஸ்புட் கடையில் ஒரு பீஸ் ஈரல் தின்பதில் உருவான குழப்பத்தில் டெல்லி வரைக்கும் போய் வந்தாகிவிட்டது. உண்மையில் அந்த ஏரியாவில் சில டிராஃபிக் போலீஸ்காரர்கள் செய்து கொண்டிருந்த அட்டகாசத்தை எழுதத்தான் நினைத்தேன். ஆனால் காற்று திசைமாறிவிட்டது. ஒன்றும் பிரச்சினையில்லை. ராமலிங்கம் பிள்ளை பற்றி பேசியாகிவிட்டது. வெண்சட்டை மாமாக்களைப் பற்றி இன்னொரு நாள் பேசுவோம்.