பத்து புத்தக விமர்சனங்கள் வந்து சேராது என்று நினைத்தேன். நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன? அடுத்த சில மணிநேரங்களில் வந்து சேர்ந்துவிட்டன. அனைவருக்கும் நன்றி. ‘குட்டி குட்டியான’ ஒவ்வொரு விமர்சனத்தையும் படு வேகமாக முடித்துவிடலாம். ஒரு வரியில் கூட விமர்சனம் வந்திருக்கிறது. அனுப்பியவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்கிறார் போலிருக்கிறது. மனப்பூர்வமான வாழ்த்துகள் அவருக்கு. அதைவிட அட்டகாசம் திருக்குறளுக்கான விமர்சனம். அனுப்பியிருப்பவரின் பெயரை கவனியுங்கள்.
இதில் பெரும்பாலானவர்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்பது எனது எண்ணம். இவர்கள் தொடர்ந்து எழுதி தூள் கிளப்புவார்கள் என நம்புகிறேன்.
***
1. சோளகர் தொட்டி- ச.பாலமுருகன்
ச.பாலமுருகனின் இந்த நாவலைப் பற்றி நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். ‘வீரப்பன் தேடலில் போது நடந்தது’ என்ற அந்த ஒரு வாக்கியம் மட்டும் என் மனதில் பதிந்திருந்தது.தஞ்சையில் அவ்வப்போது ஏதாவது ஒரு புத்தக கடையில் நுழைந்து 1/2 மணி நேரம் வேடிக்கை பார்ப்பது வழக்கம் (இது ஒரு வித வியாதியா என தெரியவில்லை).அப்போது தான் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது அந்த புத்தகத்தை வாங்கினேன். இரண்டு மூன்று வாரங்கள் கடந்தது. ஓர் வார இறுதி , தனிமை என இரண்டு சொர்க்கமும் சேர்ந்துக் கிடைத்தது. அப்போது தான் துவங்கினேன் சோளகர் தொட்டியை வாசிக்க...
பொதுவாக முன்னுரை வாசிப்பது எனக்கு விருப்பமில்லாத ஒன்று, ஆதலால் நேராக நாவலில் குதித்துவிட்டேன். நாவலை இரண்டு பகுதியாக பிரிக்கலாம்.
முதல் பகுதி :
சோளகர் தொட்டி மக்களின் வாழ்வியல் முறை, அவர்களின் வழிபாடு, விவசாயம், கொண்டாட்டங்கள் என நகரும்.துவக்கத்தில் கும்கி படம் பார்ப்பது போல இருந்தது. நாவலின் கதாப்பாத்திரங்கள் நம் மனதிற்கு பதிந்து விடும். கணவனின் மரணத்திற்கு பிறகு கொழுந்தனை திருமணம் செய்வது என சின்னச் சின்ன சம்பிரதாய முறைகளும், மக்களின் கஞ்சா பழக்கத்தை பற்றின தகவல்களும் கதையோடு நகரும். அரசின் சட்டத்திட்டங்கள் அறியாது நிலத்தை பறிக்கொடுத்து தவிக்கும் அவர்களின் நிலைமை சற்றே நம்மை வேதனையின் நுழைவாயில் வரை எடுத்துச் சென்று அடுத்த பகுதியில் வேதனையில் முழுமையாக தள்ளிவிடும்.
இரண்டாம் பகுதி:
நரகம் என்றதும் நமது கற்பனை எவ்வளவு தூரம் செல்ல நேரிடுமோ அதை விட பல மடங்கு கடந்து நிற்கிறது சோளகர் தொட்டி மக்களின் நிலைமை. தமிழகம், கர்நாடகம் என பாகுபாடு இல்லாது கொடுமைகள் அந்தந்த மாநில அதிகாரிகள் (வீரப்பன் தேடலின் போது ஈடுப்பட்ட சில அதிகாரிகள்) மூலம் அங்கு அரங்கேறியுள்ளது. நாம் சித்திரிக்கும் ராட்சகர்கள் நம்மிடையே வாழ்ந்தவர்கள் என்பதை நாவல் ‘பளார்’ ‘பளார்’ என முகத்தில் அறைந்தார் போல் சொல்லிக் கொண்டே நகர்கிறது.
நாவல் கொடுமையின் உச்சத்தை நம்மிடையே நகர்த்திச் செல்லும் போது, தொடர்ந்து படிக்க முடியாமல் மனம் தள்ளாடும். கரண்ட் அறை (சரியாக நினைவில் இல்லை) என ஒர் அறை இருக்கும். அங்கு மக்களை நிர்வாணமாக தொங்க விட்டு உடம்பில் மின்சாரம் பாய்ச்சி விசாரனை என்ற பேரில் நரக்த்தினை வடிவமைத்த பெருமை அந்த அதிகாரிக்களுக்கே சேரும்.இதில் ஆண்,பெண் பேதமில்லை. மாதவிடாய், கர்ப்பம் என பாகுபாடு இல்லை. கண்கள் மூடி சிறிது நேரம் அமரும் போதெல்லாம் அந்த கோரக் காட்சிகள் நம் முன் வந்து நம்மை ரணமாய் வதைத்துச் செல்லும்.
இந்த நாவலின் பாதிப்பு கண்டிப்பாக சிறிது நாட்களுக்கு நம்மை விட்டு பிரிந்துச் செல்லாது. தமிழர்கள் என அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் நாம், தமிழனின் கருப்பு சரித்திரத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
தனிமை, வார இறுதி இந்த இரண்டு சொர்க்கமும் சோளகர் தொட்டியின் நரக வேதனையை என் கண்முன்னே காட்டியது. சென்ற வருடம் நான் படித்த சிறந்த புத்தகம் மற்றும் என்னை மிகவும் பாதித்த புத்தகம் எனில் இதைத் தான் சொல்வேன்.
***
2. ராஸ லீலா- சாரு நிவேதிதா
தபால்துறையில் பணியாற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையைப் பற்றி சாரு நிவேதிதாவின் ராஸ லீலா பேசுகிறது. அதுவும் தனக்கேயுரிய தனித்த மொழியில்/நடையில். படைப்பாளியின் hypocrisy பற்றி யார் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். ஆனால் இந்த நாவலில் செய்திருப்பது போல பல வழமைகளை உடைத்து நொறுக்கிய படைப்பாளி நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும்.
ராஸலீலாவில், பெருமாள் என்ற நாவலின் முக்கிய கதாபாத்திரத்தோடு நம்மை ஒன்றச் செய்துவிடுகிறார் சாரு நிவேதிதா. அந்த கதாபாத்திரத்தோடு வாசகனால் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பயணிக்க முடிகிறது. போர்னோவிற்கும் இலக்கியத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டில் ராஸலீலா பயணிக்கிறது- பாரம்பரியமான தமிழ் இலக்கியத்தின் போக்கோடு ஒப்பிடும் போது இது நிச்சயம் கடினமானது. அதைச் சாரு எளிதாகச் செய்திருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் வழங்கிவரும் தொன்மங்களை உடைப்பதற்காகவே இந்த நாவல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த நாவல் ஒரு கணம் கூட நம்மை சலிப்படையச் செய்வதில்லை. அதுதான் சாரு. தான் எதை எழுதினாலும் வாசகனை தனது எழுத்தின் வழியாக இறுகப்பற்றிக் கொள்கிறார்.
அதனால் ராஸலீலாவை தமிழ் இலக்கியத்தின் முக்கியமான புத்தகமாகக் கருதுகிறேன் - வழமைகளை உடைத்ததற்காகவும், சாருவின் ஈர்ப்பான எழுத்து நடைக்காகவும்.
***
3. திருக்குறள்- திருவள்ளுவர்
பேரன்பு மிக்க வாசக சமூகமே(இதை நீர் மட்டும் படிப்பீர் என்றால், 'அன்பின் வா ம’ எனப் படித்து இன்புறுக),
இந்தப் புத்தகக் கண்காட்சியில் வரும் புத்தகங்களை விமர்சனம் செய்ய நாவைத் தொங்கப்போட்டவாறு உக்காந்திருந்த என்னை, மணி'யின் பதிவு இந்த விமர்சனத்தை எழுதத்தூண்டியது.
நேரே விமர்சனத்துக்குப் போய்விடலாம்.
விமர்சனம் எழுதுவது எப்படி எனப் புத்தகங்கள் வரும் இன்றைய காலகட்டத்தில், நானும் எங்க அப்பாரும் ஏன் அவரு கொள்ளுத்தாத்தா அவரோட எள்ளுத்தாத்தா....நிற்க.
அதாகப்பட்டது, வெகு காலத்துக்கு முந்தியே "அறம், பொருள், இன்பம்(காமம்)" இவற்றைப் பற்றிப் பேசிவிட்டுப் போயிச் சேர்ந்துவிட்டார், வள்ளுவனாகிய திருவள்ளுவர்.
வழமைபோல், முதலில் அட்டைப்படத்தைப் பற்றிய விமரிசனம்.
இஞ்சிப்புளி இடிக்க வைத்திருக்கும் மத்துப்போல் ஒன்றைக் கையில் வைத்தவாரு தாடி வைத்த பெரியவர் ஒருவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பேனா, அப்பொழுதெல்லாம் மத்து போல இருந்திருக்கும். பத்மாசனா (ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்ல) நிலையில் அமர்ந்த அந்தப் பெரியவருக்கு, திரிச்சலாக ஒரு கொண்டை இருந்தது. இன்றுவரை தமிழ்ச்சமூகம் இப்படியான ஒரு உருவத்தைத்தான் திருவள்ளுவராக சுவீகரித்துக்கொண்டுள்ளது. பின்னணியில், சிவப்பு வர்ணம்- போயித் தொலையுது. முன்னட்டை, பின்னட்டை விமர்சனங்களை மிலன் செய்துகொள்ளட்டும்.
நாம் நேரே விஷயத்துக்குள் செல்வோம்.
'அ' என்ற எழுத்தில் ஆரம்பித்திருந்தது அந்தச் செய்யுள் அல்லது புரதானகவி. ஆகச் சரியாய் ஏழே வார்த்தைகள். முடிந்துவிட்டது. ட்வீட்டுகள் தாங்கிய சமகால ட்வீட்தரின் புத்தகம்தான் படிக்கிறோமோ என்ற எண்ணம் எழாமலில்லை. தொலைகிறது விடுங்கள்.
அறத்துப்பால் முழுவதும் படித்தவுடன், ஒரு தீவிர அமைதி ஆட்கொண்டுவிட்டது.
அதிலும் அடக்கம், புகழ் என சகலத்தையும் கலந்துகட்டி எழுதியிருக்கிறார் எழுத்தாளர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்" -
என்ற இந்தக் கவிதையில், அடங்குடா என்பதை எளிமையாக எடுத்துக் கூறியுள்ளார்.
பொருட்பாலில் அரசியல், கல்வி எனவும் காமத்துப்பாலில் புணர்ச்சி, உவகை என வாழ்வியலை ரவுண்டு கட்டி எழுதியிருக்கிறார். நவீனத்துவ நடையிலில்லாமல் அதிரப்பழசான, மொக்கையான நடையில் நகர்கிறது இப்புத்தகம்.
நிறையப் பதிப்பகங்களில் இந்தப் புத்தகம் வெவ்வேறு விலையில் வெளிவந்துள்ளது. இது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை நண்பர்கள் வாயிலாக அறிந்தேன்.
நல்லது.
இறுதியாக, இதை வாங்கலாமா, வேண்டாமா எனக் கேட்டால் என் பதில், "ஒவ்வொருவரும் படித்து உய்வுற வேண்டிய புத்தகமிது" என்பேன்.
- வெ.
(இலக்கியச் செம்மல் வெளங்காதவன் என்ற என்பெயரின் ஷார்ட் ஃபார்ம்தான் ‘வெ’ என்பதை அறிக).
***
4. Spectrum's A Brief History of Modern India.
இந்தப் புத்தகம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெவ்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியிருக்கிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆகுபவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பயன்படும்.
- காளிரத்னம், Civil Service Aspirant
***
5. Papillon - Henri Charrière
A Real Hero
“எவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் மீண்டும்
அங்குலம், அங்குலமாக மேலே ஏறுவேன்......
என்னிடம் உள்ள கடைசி துருப்பு சீட்டு உள்ளவரை
ஆடிப் பார்க்காமல் ஓயமாட்டேன் ”
ஒரு புத்தகத்தை பற்றி எழுதவேண்டும் என்ற உடன் என் நினைவு அடுக்கில் எப்போதும் ஊறிக்கொண்டு இருக்கும் இந்த வரிகள் தான் முதலில் வந்து விழுந்தது .
குமுதம், ஆ.வி, ராணி போன்ற வார இதழ்களை தவிர வேறு புத்தகத்திற்கு வழி இல்லாத, தண்ணீர், தண்ணீர் கிராமத்தில் வாழ்ந்த எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகிய வரிகள் இவை. .
சரி இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்று தானே கேட்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது சரிதான் ....அவர் தான் ஹென்றி ஹாரியர்.
40வருடங்களுக்கு முன்பு 'பட்டாம் பூச்சி' (ஆங்கிலத்தில் PAPILLION) என்ற பெயரில் குமுதத்தில் ரா.கி.ர.வால் மொழி பெயர்ப்பு செய்து தொடராக வெளி வந்து பின் உலகம் முழுதும் பல மொழிகளிலும் புத்தககளாகவும், திரைபடமாகவும் வந்து எல்லோராலும் பேசப்பட்ட ஒரு இளைஞனின் அடங்காத சுதந்திர வேட்கையை சொல்லும் சுய சரிதை இது.
இருபது வயது இளைஞன் ஒருவன் செய்யாத குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கைதியாக சிறைக்கு செல்கிறான். சிறைக்கு சென்ற முதல் நாளில் இருந்தே தப்பிக்க திட்டமிடுகிறான் .
அங்கேயே ஆரம்பித்து விட்டது எனக்கும் அந்த தொடருக்குமான ஓட்டம். 40 வருடங்களாக தப்பிப்பதும் பின் பிடிபட்டு சிறையில் அடைக்கப் படுவதும் என்று போலீசுக்கும் அவனுக்கும் நடக்கும் கண்ணாமூச்சிதான் இந்த புத்தகத்தின் அடி நாதம்.
படித்து இத்தனை வருடங்கள் ஆனாலும் அவனுடைய காதலி சுரைமா, பிரென்ச் கயானாவின் இயற்கை அழகு, சிறை பாதுகாப்பு ஏற்பாடுகள், அதில் இருந்து அவன் தப்பிக்கச் செய்யும் முயற்சிகள் என யாவும என்னுள்ளே பசுமையாக உள்ளது. ஒவ்வொரு முறை அவன் தப்பிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, போலீசிடம் மீண்டும் மாட்டிக்கொள்ளும் போது ஏற்படும் வருத்தம் என்று தொடர் முழுதும் என்னை முழுவதுமாக உள் வாங்கி கொண்டது என்றே சொல்லலாம்.
இன்று தன்னம்பிக்கை நூல்கள் என்ற பெயரில் வெளி வரும் நூல்கள் பணம் பண்ணுவதற்கு ஒரு உத்தியாகிவிட்டது. என்னை பொருத்தவரை இன்றய இளைஞர்கள் இந்த புத்தகத்தை ஒரு முறை படித்தால் மிக பெரிய உந்துசக்தியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இந்த புத்தகத்தின் உயிரோட்டமே ரா.கி.ரங்கராஜன் அவர்களின் மொழி பெயர்ப்பில் தான் உள்ளது என்பேன். என்னே ஒரு மொழி ஆளுமை! ‘தமிழில்: ரா .கி .ரங்கராஜன்’ என்று மட்டும் குறிப்பிடப்படாமல் இருந்தால் சத்தியம் செய்தால் கூட யாரும் இதை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்ல மாட்டார்கள். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது .
********
6. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
நான் கல்லூரி சேர்ந்த முதல் வருடம் முதன் முதலாக எனக்கு (அந்த நாவலாசிரியருக்கும் அதுதான் முதல் நாவல்) ஆங்கில நாவல் ஒன்றின் அறிமுகம் கிடைத்தது. அதுவரை பாட புத்தகத்திலிருந்த ஆங்கிலத்தைத் தவிர அதிகமாக ஒரு வரி கூட அறிந்திடாதவன் நான். ஆனால் என்னாலும் கிரகித்துக் கொள்ள இயலும் வகையில் எளிய வரிகளில் புலிப்பாய்ச்சலான ஒரு நடையில் அற்புதமான ஒரு நாவல் அது அன்றைய தேதிக்கு. ஆனால் அதே எழுத்தாளரின் மிக சமீபத்திய நாவலை என்னால் அதிகபட்சமாக அரைப் புத்தகம் கூட படிக்க இயலாமல் அலமாரியில் அது உறங்குவது வேறு கதை.
இருவருக்கும் முதலான அந்த நாவல் எனக்குப் பிடித்துப் போனதுக்குக் காரணம் அதன் எளிமையும், விறுவிறுப்பும் மட்டுமல்ல, அது எழுதப்பட்ட தளமும் கூடவே. அந்த நாவலும் என்னைப் போன்று முதலாமாண்டு பொறியியல் அதுவும் "மெக்கானிக்கல் இஞ்சினியரிங்" படிக்கும் மாணவர்களைப் பற்றிய கதை என்பதே உண்மையில் என்னை படிக்கத்தூண்டிய முழுமுதற்காரணமாகும். உங்கள் யூகம் மிகச்சரியே. த்ரீ இடியட்சாக இந்தியிலும், நண்பனாகத் தமிழிலும் உருமாற்றமடைந்த ‘ஃபைப் பாய்ண்ட் சம் ஒன்’ என்ற சேத்தன் பகத்தின் நாவலே அது.
அந்த நாவலை ஏன் இங்கு "என் பெயர் ராமசேஷன்" என்ற எண்பதுகளில் வெளிவந்த ஒரு நாவலுடன் ஒப்பிடுகிறேன் என்பதற்கு இந்த இரு நாவல்கள் எழுதப்பட்ட தளம் ஒன்றே என்பது மட்டுமல்ல காரணம். இக்கதை சாதாரண, சுஜாதாவின் வார்த்தையில் சொல்லப்போனால் ஒரு மத்தியமர் பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த கல்லூரி மாணவனின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது.
நடிகனோ, சாதரணனோ, அரசியல்வாதியோ, அறிவாளியோ, அழகனோ, அவன் ஆறோ அல்லது அறுபதோ எல்லோரும் விரும்புவது அடுத்தவர்களின் அங்கீகாரத்தை மட்டுமே. நடிகனுக்கு கைத்தட்டு, அரசியல்வாதிக்கு ஓட்டு, அறிவாளிக்கு பாராட்டு என்று ஒவ்வொருவருக்கும் ஒருவிதம் ஆனால் யாரும் இதில் விதிவிலக்கல்ல. ஹார்மோன்கள் கபடியாடும் வயதில் இந்த அங்கீகாரத்தை நோக்கியே நம் எண்ணம், சொல் மற்றும் செயல் அமைவதிலேதும் ஆச்சர்யமில்லை. அதிலும் எதிர்பாலரின் அங்கீகாரம் என்றால் இன்னும் உசத்தியே. அப்படியான அங்கீகாரத்திற்காக ஏங்கும் ராமசேஷனைச் சுற்றிப் பின்னப்பட்ட நாவலே “என் பெயர் ராமசேஷன்”. ஆதவனின் எழுத்து நடைக்காகவே கட்டாயமாக வாசிக்க வேண்டிய ஒரு நாவல் இது.
***
7. இது யாருடைய வகுப்பறை - ஆயிஷா நடராசன்
ஒரு வரியில் : இந்திய கல்வி முறையின் வரலாறு, தற்போதைய நிலைமை, மற்றும் உலக கல்விமுறைகள் பற்றிய ஒரு அலசல்
‘ஆயிஷா’ புத்தகம் வாசித்து இருக்கறீர்களா? 16 பக்கங்கள் இருக்கும் அவ்வளவு தான். ஆனால் என் வாழ்வில் தீராத பாதிப்பை ஏற்படுத்திய புத்தகங்களுள் அதுவும் ஒன்று. கிட்டதட்ட ஒரு வார காலம் தூங்காமல் இருந்திருக்கிறேன் அந்த புத்தகத்தை படித்து விட்டு. என்னடா ஒவர் பில்டப் கொடுக்கிறானே என்று எண்ணி விடாதீர்கள். வாங்கிப் படியுங்கள். சரி விமர்சனம் சொல்ல வந்த புத்தகம் இது அல்ல என்று யோசிக்கிறீர்கள் தானே. அந்த ஆயிஷா புத்தகத்தை எழுதிய ஆசிரியரின் புத்தகம்தான் இதுவும். மேலும் இந்த புத்தகம் பற்றிய விவாதத்திற்கு சென்னையில் உள்ள பனுவல் புத்தக கடைக்கு இதன் ஆசிரியர் வருவதாக சொல்லி இருந்தார்கள். விடுவோமா? மாச கடைசி ஆனாலும் கடன் வாங்கி புத்தகம் வாங்கியாயிற்று.
மொத்தம் 7 கட்டுரைகள் இந்த புத்தகத்தில். இந்திய கல்வி முறையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விளக்கி இருக்கிறார் ஆசிரியர். எதற்கெடுத்தாலும் வெள்ளைக்காரனை மெச்சிக் கொள்ளும் நாம், இந்திய கல்வியில் அவன் செய்த மோசமான மாற்றங்களின் பலன்களை இன்றளவும் அனுபவித்து வருகிறோம். பிரிட்டிஷ்காரர்களுக்கு தேவைப்பட்டது யோசிக்கும் திறனுடைய இந்தியன் அல்ல. சொன்னதை செய்யும் ஒரு எழுத்தர் (கிளார்க்). அதன் தொடர்ச்சி தான் இன்றைய எழுத்து தேர்வு என்கிறார் ஆசிரியர்.
பாடப்புத்தகத்தில் அச்சான நகராத சொற்களை அப்படியே மனப்பாடம் செய்து நகல் உருவாக விடைத்தாளில் கொட்டித் தீர்ப்பது தேர்வு என்று அழைக்கப்படும் கொடுமை வேறு எந்த தேசத்திலும் கிடையாது என்கிறார் ஆசிரியர். எவ்வளவு உண்மை? ஆசிரியர் வெறும் பாடம் நடத்தும் இயந்திரம் மட்டும் அல்ல. அவருக்கு மாணவர் உளவியலும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைக்கு நமது வகுப்பறை மாணவர்கள் வெறும் கொத்தடிமைகள் போலத்தானே நடத்தப்படுகின்றனர். காலையில் 9 மணிக்கு வந்தால் சாயந்திரம் 5 மணி வரை பேசாமல் கைகட்டி வாய் பொத்தி... இதற்கு பெயர் கல்வி இல்லை என்கிறார் நடராசன்.
சரி, அப்போ எது தான் கல்வி எனும் உங்கள் கேள்விக்கு விடையையும் அவரே தந்துள்ளார். உலகின் மிகச்சிறந்த கல்விமுறை அமெரிக்காவில் அல்ல. குட்டியூண்டு நாடுகளான பின்லாந்திலும் கியூபாவிலும் தான் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் இன்றைக்கு அந்த நாடுகளுக்கு படை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாமோ... சரி விடுங்க.
கல்வி பற்றிய அக்கறை உள்ளவர்கள், மாற்று வழி கல்வியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக, அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.( புத்தகத்தின் ஆசிரியர், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பதை கவனத்தில் கொள்க). இனிமேல் ஆசிரியர் பணியில் இருக்கும் எவருக்கேனும் பரிசளிக்க ஆசைப்பட்டால் கண்ணை மூடிக்கொண்டு இந்த புத்தகத்தை கொடுக்கலாம்.
பின்குறிப்பு : பனுவலில் நடந்த விவாதத்தில் நானும் பங்கேற்று, ஆசிரியரிடம் ஒரு புத்தகத்தில் கையெழுத்து (ஆட்டோகிராஃப்) வாங்கி வந்தேன். இவரைப் போல வெகு சிலர் இருக்கும் வரை, இந்தியக் கல்வி ஐ.சி.யூ விலாவது உயிர் வாழும்
****
8. வாடிவாசல்- சி.சு.செல்லப்பா
சாமானியர்களின் கதை இது. சி.சு.செல்லப்பாவின் எழுத்து நடை மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று. மாடு பிடிப்பதன் அம்சங்களை அருமையாக உணரவைத்துள்ளார். ‘ஆடுகளம்’ படத்தின் சேவல் சண்டைக்கான தயாராதல் இதைப் போன்றதொரு உதாரணம். நாவலின் க்ளைமேக்ஸ் வர்ணனைகள் அட்டகாசம். இந்த நாவலை வாசிப்பவர்களுக்கு இது நிச்சயமாக சுகானுபவமாக இருக்கும்.
****
9. சித்திரப்பாவை - அகிலன்
சித்திரப்பாவை 1975யில் வெளி வந்த நூல். இதை சுமார் நான்கு மாதத்திற்க்கு முன்பாக வாசித்தேன். நான் நீண்ட காலமாக புத்தகங்கள் வாசிப்பவன் அல்ல. கடந்த எட்டு மாதங்களாகத்தான் வாசிக்கிறேன். இந்த பசிக்குக் காரணம் பொன்னியின் செல்வன். அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன், இப்போது பாவைப் பக்கத்தில் பார்வையைத் திருப்புவோம்.
சித்திர பாவை ஒரு கொத்தனார் தன் மகனை பொறியாளராக்க ஆசைப்படுகிறார், ஆனால் அவன் ஓவியனாகிறான். ஒவியனாகும் போதும் ஒவியனான பிறகும் அவன் படும் துன்பங்களும், மனிதர்களின் மனமற்ற செயல்கள் , பணத்திற்க்காக பிணம் போல் அலையும் மனிதர்களின் நட்பு, காதலிக்காக (காலுக்காக) ஏங்கும் மனம் ஆகியவற்றை அழகாக வரைந்திருக்கிறார் அகிலன். இந்த புத்தகத்தில் பல நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் நடந்து போலவே இருக்கும். உதரணமாக ஆடம்பரத்தை விரும்பும் துனைவி, காசை வாங்கி விட்டு ஏமாற்றியதால் இறந்த தந்தை, நண்பனின் காதலைப் பிரிப்பது. இந்த புத்தகத்தின் சிறப்பே எளிமை. இந்தப் புத்தகத்தை பத்து வயது சிறுவனே படிப்பான், அவ்வளவு எளிமை. ஒரு வரியில் சொன்னால் 'பணம் பிடியில் மனிதன் போடும் வேடத்தை வரைந்துக் காட்டிய ஒவியம்'.
இந்த புத்தகத்தில் வரும் மனிதர்கள் அப்படி இப்படி என்றெல்லாம் எழுத விருப்பமில்லை. ஆனால் இது சாதாரண மனிதனின் சரித்திரம்.
***
10. கோபல்ல கிராமம்- கி.ராஜநாராயணன்
நான் இந்த புத்தகத்தை சமீபத்தில் படித்தற்கு காரணம் இலக்கிய தாகம்னு எல்லாம் ஜல்லியடிக்க விரும்பல.இரண்டு வாரங்களுக்கு முன்னர் தூத்துக்குடிக்கு வேறு ஒரு வேலையாக நானும் அப்பாவும் சென்ற பொழுது இடைச்செவலுக்கு ஒரு சின்ன விசிட் செய்தோம். பின்னர் அது சம்பந்தமான யோசனையிலே அடுத்தடுத்த வாரங்களை கடத்துகையில் எதேச்சையாக ஏன் இந்த புத்தகத்தை படிக்காமல் விட்டோம் என்று தோன்றியது. அப்போது எடுத்ததுதான் ஒரே சிட்டிங்கில் படித்து முடித்ததும் தான் தெரிந்தது இந்த புத்தகத்தை மிஸ் செய்த அருமை. இனி புத்தகத்தினுள் செல்வோம்.
கோபல்ல கிராமம்...கோ என்றால் மாடு.பல்லம் என்றால் இடம். மாடுகள் அதிகமாக இருக்கும் இடமாதலால் கோபல்ல கிராமம் என பெயர் பெற்றதாக அறிமுகப்படுத்துகிறார். தற்போது இதைவிட நவீனமான கதை சொல்லும் உத்திகளை வாத்தியார் சுஜாதா அறிமுகப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார் என்ற போதிலும் ஒரு பழைய கிளாசிக் படத்தை பார்த்த உணர்வு.எந்த இடத்திலும் போரடிக்காமல் செல்கிறது. காலச்சுவடு சரியாகவே ‘க்ளாஸிக்’வரிசையில் சரியாகவே வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
மங்கத்தாயாரு பாட்டியின் கழுக்குப்பார்வையில் இருந்து கதை நகர்வதாக எனக்கு தோன்றுகிறது. மற்றபடி கதையின் நாயகனாக யாரையும் சொல்வதற்கில்லை. அந்த கிராமத்தையும் அதன் மாந்தர்களையும் அறிமுகப்படுத்துகிறார்.. அறிமுகப்படுத்துகிறார்.. அறிமுகப்படுத்திக்கொண்டே இறுதி வரையிலும் செல்கிறார். ஒவ்வொரு நாயக்கர்களின் கதையுமே சுவாரஸ்யமானது. ஆரம்ப பத்திகளில் அந்த பெண்மணியை அறிமுகப்படுத்துவதும் பின்னர் அதை விட்டுவிட்டு கதை எங்கோ செல்கிறது. பின்னர் புத்தகம் பாதியை கடக்கையில் அந்த கேஸ் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது. கிராமங்களை விவரிப்பதில் மனுஷன் தூள் கிளப்புகிறார். அந்த மண்ணை விவரிப்பதிலும் அந்த மக்கள் அந்த மண்ணோடு உடலோடும் உயிரோடும் கலந்து அவர்கள் வம்சம் பெருகியதும் சிறப்பான கதை சொல்லியாக அவரை நிலைநிறுத்தும் இடங்கள். சென்னா தேவி கதை நமக்குள் அவளை கண்முன் நிறுத்துகிறது. சில நாயக்கர்கள் நம் வாழ்விலும் கலந்து விட்டது போன்ற உணர்வு. நம்மை பிரதிபலிப்பது போன்ற ஒரு உணர்வும் கூட. கோழி மயிர் நாயக்கர், ராம நாம நாயக்கர் போன்றோரை நாம் வாழ்வில் வெவ்வேறு பெயர்களில் நாம் சந்திக்காமல் இருக்க முடியாது. நாம் எதிரே ஒரு கிழவர் அமர்ந்து கொண்டு பேராண்டி... என்றவாறே கதை சொல்வதை கேட்கும் உணர்வு.
புகழ்ச்சி அத்தியாயம் முடிந்தது. இனி விமர்சனம்.
விமர்சனம் என்று பார்த்தால் சில ஃபேண்டஸி பகுதிகள் உறுத்துகின்றன மரம் இறங்கி வழிவிடுதல் போன்றவை. பின்னர் கிராமத்தில் நாயக்கர்கள் தான் ஆதிக்க சாதி என்பதும் இவர்கள் சொல்வதே சட்டம் நியாயம் என்பதும் சில பத்திகளிலேயே தெரிந்து விடுகிறது. அங்கே இரண்டு பெண்களை கல்யாணம் செய்தல், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை மிக எளிதாக கடந்து செல்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அப்பட்டமான உண்மையை ஜஸ்ட் லைக் தட் சொல்கிறார். அதை பற்றிய விவரிப்புகள் அவர்கள் பக்க நியாயங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. மொத்தத்தில் கோபல்ல கிராமம் ஆதிக்க சாதியில் இருந்து ஒருவர் தயார் செய்த மிகைப்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட டாக்குமெண்டரி.
எனக்கு பிடித்த பகுதி:கும்பினிகள் சுமை தூக்க சொல்வதை தவிர்க்க கையில் ஈரக்கருப்பட்டியை கட்டிக்கொண்டு ஏமாற்றும் மக்களின் எதார்த்தமான தந்திரம்.