Dec 29, 2013

போலீஸ் இல்ல...

இந்த ஊரில் மாலை ஆறு மணிக்கெல்லாம் குளிர் ஆரம்பித்துவிடுகிறது. அதுவும் மரங்கள் நிறைந்த ஜே.பி.நகர் பக்கமெல்லாம் துளி டிகிரியாவது குறைவாகவே இருக்கிறது. அந்த ஜே.பி.நகரின் பிக் பஜார் பக்கம் நிறைய தள்ளுவண்டிகள் இருக்கும். பழங்கள், காய்கறிகள் என்று எதையாவது விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தமிழ்தான். தமிழ்க்காரர்களோ இல்லையோ தமிழ் பேசுகிறார்கள். எளிய மனிதர்கள். காலையில் ஐந்து அல்லது ஆறு மணிக்கு வியாபாரத்தை ஆரம்பித்தால் இரவு பத்தைத் தாண்டும். நின்று கொண்டேதான் இருக்கிறார்கள். கஷ்ட ஜீவனம்.

இவர்களிடம்தான் நம்மவர்கள் பேரம் பேசுவார்கள். 

‘மிஞ்சிப் போனால் ஒரு ரூபாய் அதிகம் வெச்சு விப்பானா? பேரம் பேசாமல் கொடுத்துட்டு போவோம்’ என்பது என் கட்சி. 

மனைவி அப்படியே எதிர்மறை. ‘ஆயிரம் ரூபாய் தாண்டிய வியாபாரம் வாரத்துக்கு ஒன்று கூடச் செய்ய மாட்டோம். அதுவே பத்து, இருபது ரூபாய்களில் சில்லரை வியாபாரம் தினமும் இரண்டு மூன்றாவது செய்வோம். ஒவ்வொரு முறையும் இந்தச் சில்லரை வியாபாரத்தில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் ஏமாந்தால் கூட அதுதான் பெரிய இழப்பு. கணக்குப் போட்டு பாருங்க’ என்னும் கட்சி.

இந்த மாதிரியான கணக்கு போட்டு மண்டை உடைக்கும் அளவுக்கு பொறுமை இல்லை என்பதால் ‘சரி’ என்று சரண்டர் ஆகிவிடுவேன். 

ஆனால் இந்தத் தள்ளுவண்டிக்காரர்களையும் நம்ப முடியாது. அவரைக்காய் ஜே.பி.நகரில் வாங்கினால் கிலோ முப்பது ரூபாய். வீட்டுக்கு பக்கத்தில் விசாரித்தால் அரைக்கிலோ முப்பது ரூபாய் சொல்கிறான். இருவருமே தள்ளுவண்டிக்காரர்கள்தான். வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கிறான் ஆனால் இனிமேல் அவனை எப்படி நம்புவது?

இந்தப் கணக்கு இருக்கட்டும்.

நேற்று ஒரு தள்ளுவண்டியில் ஒரு முதியவர் ரோஜாப் பூ விற்றுக் கொண்டிருந்தார். ஜே.பி.நகரில் இருக்கும் பிக் பஜாருக்கு பக்கத்தில். அவர் தள்ளுவண்டியில் இருந்த பூக்களில் பெரும்பாலானவை சிவப்பு ரோஜாக்கள். அவர் அடுக்கி வைத்திருந்ததே  அத்தனை அழகாக இருந்தது. செக்கச் சிவப்பு. பார்த்தவுடனே வாங்கலாம் என்று தோன்றியது. சிவப்பு ரோஜாக்கள் தவிர வேறு சில நிறங்களிலும் இருந்தன. ஆனால் அவை எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஒரு பூ பத்து ரூபாய் சொன்னார். நான்கு வாங்கிக் கொண்டேன். அந்த இடத்தில் தனியாகத்தான் இருந்தேன். பூவை என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை. அந்தப் பூக்களின் அழகுக்காக வாங்கியாகிவிட்டது. வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். நான்கு வாங்கிய பிறகு கூடுதலாக ஒரு குட்டிப் பூவையும் கொடுத்தார். நான் கேட்கவேயில்லை. என்ன நினைத்தாரோ. அவராகவே கொடுத்துவிட்டார்.

சனிக்கிழமை மாலை என்பதால் அந்தச் சாலையே பூக்களால் நிரம்பியிருந்தது. இரண்டு கால் முளைத்த பூக்கள் அவை. அந்தப் பூக்களை நம்பித்தான் தாத்தா இந்தப் பூக்களை வண்டியில் நிரப்பியிருக்கிறார் போலிருந்தது. அவரது நம்பிக்கை ஒன்றும் வீண் போகவில்லை. ஏகப்பட்ட பேர் கையில் ஆளுக்கொரு சிவப்பு ரோஜாவோடு சுற்றிக் கொண்டிருந்தார்கள். தலையில் வைப்பதில்லை. கையில் வைத்துக் கொண்டிருப்பது. அவர்கள் தலையில் வைத்திருந்தாலும் சரி; கையில் வைத்திருந்தாலும் சரி. வியாபாரம் ஆனால் போதும்.

சத்தியமங்கலம் பக்கத்தில் எங்கள் சொந்தக்காரர் ஒருவருக்கு ரோஜாத் தோட்டம் இருக்கிறது. பெரிய அளவிலான தோட்டம் இல்லை என்றாலும் நல்ல வருமானம் அவருக்கு. அந்தப் பூக்களை பெங்களூர்தான் அனுப்பி வைக்கிறாராம். அவரிடமிருந்து ஒரு பூ இரண்டு அல்லது மூன்று ரூபாய் என்ற  அளவில்தான் வாங்கிக் கொள்கிறார்கள். அதுவே பெரிய விஷயம்தான். இடையில் பூ வியாபாரிக்கு, மண்டிக்கு, போக்குவரத்து செலவுக்கு என ஒவ்வொரு பக்கமும் கமிஷன் தள்ளிவிட்டு கடைசியில் தள்ளுவண்டிக்காரரிடமிருந்து நமது கைக்கு வரும் போது எட்டு அல்லது பத்து ரூபாயைத் தொட்டுவிடுகிறது. விற்றாலும் பரவாயில்லை. இந்தப் பூவை நம்பித்தான் லட்சக்கணக்கானவர்கள் பிழைக்கிறார்கள். பூக்கட்டுபவர்களிலிருந்து மணவறை அமைப்பவர்கள் வரை கணக்குப் பார்த்துக் கொள்ளலாம். லட்சக்கணக்கானவர்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை இல்லை.

இந்த பூவண்டிக்காரரிடம்தான் நேற்று ஒரு ட்ராபிக் போலீஸ்காரர் வெறுப்பாகிவிட்டார். பூவை பைக்கில் வைத்துவிட்டு ஒரு வடக்கத்தியை பையனிடம் பானிபூரியை வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தேன். வேகமாக வந்த அந்த போலீஸ்காரர் இந்தப் பையனை நகரச் சொன்னார். அவனுக்கு தனது ஐட்டங்களை இடமாற்றுவது பெரிய சிரமமாக இல்லை. நட்டுவைத்த குடை மாதிரிதான் அவன் கடை இருந்தது. தின்று கொண்டிருந்த வரைக்கும் என்னிடம் காசை வாங்கிக் கொண்டு போய்விட்டான். தின்றும் தின்னாமல் பாதியில் துரத்திவிட்டுவிட்டதாக போலீஸ் மீது எரிச்சல் எனக்கு. என்ன செய்ய முடியும்? ஓரமாக நின்று கொண்டேன்.

அந்தப் போலீஸ்காரர் கையில் ஒரு கேமிராவை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தள்ளுவண்டியாக படம் எடுத்தார். எதற்கு எடுக்கிறார் என்று தெரியவில்லை.

பெரும்பாலான தள்ளுவண்டிக்காரர்கள் நகர்ந்துவிட்டார்கள். இந்தத் தாத்தாவும் நகர்ந்தார். ஆனால் பேசாமல் நகர்ந்திருக்கலாம். ‘பஜாருக்கு வர்றவங்க எல்லாம் வண்டியை இங்கேயதான் நிறுத்துறாங்க. எங்க பத்துக்கடைகள் தான் பிரச்சினையா’ என்று கன்னடத்தில் கேட்டார். அவர் கேட்டதும் சரிதான். அது ஒன்றும் முக்கிய சாலையில்லை. பிரதான சாலையோடு சேரும் இன்னொரு சாலை. ஆனால் போலீஸ்காரன் பிரச்சினை போலீஸ்காரனுக்கு. ரோந்து வண்டிகள் வந்தால் டூட்டியில் இருக்கும் போலீஸ்காரரைத்தான் கண்டபடி திட்டுவார்கள். அதுவும் நாராசமாகத் திட்டுவார்கள்.

தள்ளுவண்டிக்காரர் சொன்ன போது போலீஸ்காரன் லேசாக சிரித்த முகமாகத்தான் இருந்தான். ஆனால் என்ன நினைத்தாரோ திருப்பி அவரைத் திட்டத் தொடங்கிவிட்டான். என்ன பேசுகிறான் என்று புரியவில்லை. தாத்தாவோடு இன்னும் இரண்டு தள்ளுவண்டிக்காரர்கள் சேர்ந்துவிட்டார்கள். திட்டிக் கொண்டிருந்த போலீஸ்காரன் கான்ஸ்டபிள். ஏதோ பிரச்சினை போலிருக்கிறது என அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு வெள்ளைச் சட்டைக்காரர் வந்துவிட்டார். அவர் எஸ்.ஐ. தோள்பட்டையில் இரண்டு நட்சத்திரங்கள் இருந்தன. பிரச்சினையை விசாரித்தவர் எதுவுமே பேசவில்லை. திடீரென்று பூவண்டியைக் கீழே கவிழ்த்துவிட்டார். மொத்த ரோஜாக்களும் சிதறிவிட்டன. அரை வினாடிக்கு அந்த இடம் ஸ்தம்பித்தது. பிறகு ஆளாளுக்கு தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள்.

தாத்தாவும் உடன் இருந்த இரண்டு தள்ளுவண்டிக்காரர்களும் சிதறிய பூக்களைப் பொறுக்கினார்கள். அத்தனை பூக்களையும் அவர்களால் பொறுக்க முடியவில்லை. அந்தச் சாலையில் ஓடிக் கொண்டிருந்த சில வாகனங்கள் பூக்களை பதம் பார்த்துவிட்டன. முப்பது பூக்களாவது நசுங்கியிருக்கக் கூடும். குறைந்தபட்சம் இருநூற்றைம்பது ரூபாய் சாலையில் நசுங்கிப் போனது.

அந்தத் தாத்தா அதன் பிறகு எதுவுமே சொல்லவில்லை. அமைதியாகப் போய்விட்டார். இன்னொரு தள்ளுவண்டிக்காரர்தான்  ‘அந்த மனுஷனோட ரெண்டு நாளத்து வருமானத்தை ரோட்ல போட்டு நசுக்கிட்டானுவ. பாவம்’ என்றார். அவர் தமிழில்தான் சொன்னார். அவர் சொன்ன போது போலீஸ்காரர்கள் வேறொரு இடத்திற்கு நகர்ந்திருந்தார்கள். அந்தத் தாத்தா வண்டியைத் தள்ளிக் கொண்டு சற்று தூரம் போயிருந்தார். அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. கிளம்பினேன். வாங்கி வைத்திருந்த ரோஜாப்பூக்கள் சலனமூட்டியபடியே இருந்தன. அதுவும் அந்தக் குட்டிப் பூ கூடுதல் சுமையாகத் தெரிந்தது.