Dec 16, 2013

எதற்கு ஆடம்பர திருமணங்கள்?

இப்பொழுதெல்லாம் திருமணங்கள் ப்ரஸ்டீஜான விஷயங்கள் ஆகிவிட்டன. பெரிய அளவில் திருமணங்களை நடத்தி ‘கெத்து’ காட்டிவிடுகிறார்கள். ஒரு திருமண அழைப்பிதழை முந்நூறு ரூபாய்க்கு அச்சடிப்பது கூட சர்வசாதாரணம் ஆகிவிட்டது. எங்கள் ஊர்ப்பக்கத்தில் பெரிய மண்டபங்களை பிடிக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே கர்சீப் போட்டு வைக்கிறார்கள். ஒவ்வொரு மண்டபத்துக்கும் வாடகை மட்டுமே பல ஆயிரங்களைத் தாண்டுகிறது. ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து பிடிக்கும் மண்டபம் ‘சுமாராக’ இருக்கும் என்கிறார்கள். ‘நல்ல’ மண்டபம் என்பது பெரிய டைனிங் ஹால், நிறைய பார்க்கிங் வசதி உடைய மண்டபங்கள். பெரிய மண்டபத்தை பிடித்தால் மட்டும் போதுமா? அதற்கு ஏற்ற அளவுக்கு கூட்டத்தை திரட்ட வேண்டுமே! கண்ணில்பட்டவர்கள், எதிரே வந்தவன், குறுக்கே போனவனுக்கெல்லாம் அழைப்பிதழை கொடுக்கிறார்கள்.

வந்தவன் வெளியே சென்று ‘அந்தக் கல்யாணம் பயங்கரமா இருந்துச்சு’ என்று வாயை பிளக்க வேண்டுமல்லவா?அதற்காக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் காசை வாரி இறைக்க வேண்டியிருக்கிறது.

இப்படியாக இந்தக் காலத்தின் திருமணத்தில் குத்திக் காட்ட வேண்டுமானால் ஒவ்வொன்றையும் குத்திக் காட்டலாம். சமையல்காரனுக்கு கொடுக்கும் பணத்திலிருந்து பஃபே சிஸ்டம் வரைக்கும் எல்லாவற்றிலுமே அழிச்சாட்டியம் செய்கிறார்கள். மணவறை அமைப்பிலிருந்து தாம்பூலப்பை வரைக்கும் எல்லாவற்றிலுமே எக்கச்சக்க செலவு. ஒரு மத்தியதர குடும்பத்தின் திருமணத்தில் இரு இல்ல வரவு செலவைக் கணக்குப் பார்த்தால் மிக எளிதாக ஏழெட்டு லட்சங்களைத் தொடக் கூடும்.

அந்தக் காலத்தில் இப்படியான செலவுகள் இல்லை. அதிகபட்சம் முந்நூறு பேர்கள் வருவார்கள். வீட்டிலேயே பெரியதாக சட்டி பானை வைத்து சொந்தக்காரப் பெண்களே பருப்பு ரசம் செய்து சோறு போடுவார்கள். சமையல்காரனுக்கான செலவு இல்லை; மண்டபத்துக்கான வாடகை இல்ல- இப்படி நிறைய ‘இல்லை; இல்லை’தான். நெருங்கிய சுற்றமும் பந்தமும் மட்டுமே கலந்து கொள்ளும் என்பதால் இரண்டு மூன்று நாட்கள் திருமண வீட்டிலேயே டேரா கட்டிவிடுவார்கள். சொந்தக்காரர்களிடையே நெருக்கமும் அதிகமாகும். ஒரு மனிதன் வருடத்திற்கு ஐந்து திருமணங்களுக்குச் சென்று வந்தாலே பெரிய விஷயம். இப்பொழுது பாருங்கள்- வாரத்திற்கு ஐந்து திருமணங்களுக்கு போய் வருவது கூட சாதாரணமாகிவிட்டது. அப்படியே சென்றாலும் எந்தத் திருமணத்திலாவது யாரிடமாவது ஐந்து நிமிடங்களைத் தாண்டி பேச முடிகிறதா? தெரிந்தவன் தெரியாதவன் என அத்தனை பேருக்கும் அழைப்பு அனுப்பிவிடுகிறோம். ஆயிரக்கணக்கில் திரண்டு வருபவர்களில் தெரியாத முகங்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறது. தெரிந்த ஒவ்வொரு முகத்தையும் பார்த்து சிரித்தபடியே தாண்டி போய் அஜினோமோட்டோ கலந்த சோற்றை தின்றுவிட்டு இரண்டு நாட்களுக்கு கல்யாண ஏப்பமாக விட்டுக் கிடக்க வேண்டியிருக்கிறது.

திருமணத்தின் செலவுகளை விடுங்கள்.

ஜாதகம் பார்க்கும் வழக்கம் கூட ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்பு கிடையாதாம். தடம் வழி பார்ப்பது உண்டு. அதாவது சகுனம் பார்ப்பது. ஒரு தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார். அவரது பங்காளி பையன் ஒருவனுக்கு பெண் பார்க்க கிளம்பியிருக்கிறார்கள். நடந்துதான் போவார்களாம். மாட்டு வண்டி பூட்டிப் போவது என்பதும் கூட பிற்காலத்தில் வந்ததுதான். பத்து பேர்கள் நடந்து போகும் போது ஏதாவது சகுனம் ஆகிவிட்டால் திரும்பிவிடுவார்கள். அதே மாதிரிதான் அந்தப் பையனுக்கு பெண் பார்க்க போகும் போது ஊர்ப் பிள்ளையார் கோவிலைத் தாண்டுவதற்குள்ளாகவே யாரோ பால் கறந்து எடுத்து வந்தார்களாம். பால்காரர் வருவது, காகம் வலமிருந்து இடம் போவது, பூனை குறுக்கே போவது என்பதெல்லாம் முக்கியமான அபசகுணங்கள். அந்தப் பால்காரர் வந்ததால் சகுனம் ஆகிவிட்டது என்று திரும்பிவிட்டார்களாம். அந்தப் பையனுக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு திருமணத்தையே ஒத்தி வைத்துவிட்டு - பதினாறு வயதில்தான் திருமணத்தை நடத்தினார்கள் என்று பெருமூச்சு விட்டார். வயதை கவனியுங்கள்- அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து பதினாறு. இந்தக் கதையைச் சொன்ன தாத்தாவுக்கு பதின்மூன்று வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டதாம். பெருமையடித்துக் கொண்டார். 

‘பதிமூன்று வயதில் முடி முளைத்திருந்ததா தாத்தா?’ என்றேன். 

செமத்தியாக முறைத்தார். 

‘தப்பா நினைச்சுக்காதீங்க. மீசை தாடி எல்லாம் முளைத்திருந்துச்சான்னுதான் என்று கேட்டேன்’ என்று சமாளித்தபடியே எஸ்கேப் ஆக வேண்டியதாகப் போயிற்று.

இந்த ஜாதகப் பொருத்தம் என்ற கருமாந்திரம் உள்ளே வந்துதான் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கல்யாணக் கனவுகளில் பெருங்கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறது. அதுவும் பத்துப் பொருத்தத்தோடு நிறுத்திக் கொள்வதில்லை- ராகு, கேது, செவ்வாய் என்று ஏகப்பட்ட தோஷங்கள். அதிலும் சப்-டிவிஷன் உண்டு. இரண்டில் செவ்வாய் இருந்தால் ஒரு தோஷம்; ஏழில் செவ்வாய் இருந்தால் இன்னொரு தோஷம். எப்படி பொருத்தம் அமையும்? முப்பத்தைந்து வயதில் திருமணம் ஆகிறதோ இல்லையோ ஜாதகம் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். அதுதான் கண்ட பலன்.

ஜாதகம் பார்ப்பது நல்லதுக்குத்தானே என்று யாராவது கேட்டுவிடமாட்டீர்கள் என நம்புகிறேன்.

ஜாதகம் பார்ப்பது, ஏகப்பட்ட செலவு செய்வது, தாம் தூம் போடுவது போன்ற பந்தா கல்யாணங்கள் எல்லாம் இடையில்தான் முளைத்திருக்கிறது. 

நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு இடம் வாங்கி வைத்திருந்தார்கள். திருமணம் முடிவான பிறகு அம்மாவும் அப்பாவும் செய்த முதற்காரியம் அந்த இடத்திற்கு விலை சொன்னதுதான். திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள்தான் முடிந்திருக்கிறது. இப்பொழுது அந்த இடத்தின் மதிப்பு ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது. 

அவர்களுக்கு அது பெரிய பிரச்சினை இல்லை. ‘ஒரு தடவைதானே கல்யாணம் செய்யறோம்? மத்தவிய மாதிரியே செய்வோம்’ என்பதுதான் அவர்களின் எண்ணம். அவர்களைப் போல நாமும் செலவு செய்தால், நம்மைப் பார்த்து இன்னொருவன் செலவு செய்வான். இது ஒரு சங்கிலித் தொடர்.

பெரும்பாலான திருமணங்களில் ரிஷப்ஷன் உண்டு. வாயில் துணியைக் கவ்விக் கொண்டு களை வெட்டும் வேலைக்கு செல்பவனாக இருந்தாலும் கூட பத்தாயிரம் ரூபாய்க்கு ‘கோட் சூட்’ வாங்கி மாட்டிவிடுகிறார்கள். எனது ரிஷப்ஷனுக்கு எடுத்த துணியை அதன் பிறகு ஒரு நாள் கூட அணியவில்லை. அணிவதற்கான வாய்பே வரவில்லை.

பஃபே சிஸ்டத்தில் வீணாகப் போகும் உணவை மட்டும் கணக்குப் போட்டால் ஒரு சிற்றூரே சாப்பிட முடியும். காணாத நாய் கருவாட்டைக் கண்டமாதிரி கிடைத்ததையெல்லாம் வாங்கி தட்டில் நிரப்பிக் கொள்வோம். கவனித்துப் பார்த்தால் தட்டில் நிரப்பியதில் பாதி குப்பைத் தொட்டிக்குத்தான் போகும். இப்பொழுதெல்லாம் பந்தியில் டம்ளர் வைத்து நீர் ஊற்றுவது இல்லை. அது நாகரீகம் இல்லை என்று ‘வாட்டர் பாட்டில்’ வைத்துவிடுகிறார்கள். கேட்டால் ‘ஹை ஜீனிக்’ என்பார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு திருமணத்தின் போதும் பல்லாயிரக்கணக்கான ப்ளாஸ்டிக் பாட்டில்களை சூழலுக்கு பரிசளிக்கிறோம். 

கல்யாணங்களை குறை சொல்லவில்லை. வீண் செலவுகள், சுற்றுச்சூழல் போன்ற பல நூறு பிரச்சினைகளைப் பற்றி நாம் கொஞ்சம் கூட யோசிப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. இரண்டு மனங்கள் இணையும் நிகழ்ச்சி என்பதைவிடவும் நமது ‘பவரை’க் காட்டுவதற்கான ஒரு நிகழ்ச்சியாக திருமணத்தையும் அதன் வடிவத்தையும் தொடர்ந்து மாற்றிக் கொண்டேயிருக்கிறோம். 

இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம்- எல்லா விஷயங்களிலும் இப்படி அசால்ட்டாகவே இருந்தால் பூமாதேவி பார்த்துக் கொண்டே இருக்க மாட்டாள். கண்களை மூடிக் கொண்டு வாயைத் திறப்பாள். பெருமொத்தமாக உள்ளே போக வேண்டியதுதான்.