Dec 21, 2013

நாய் வாலை நிமிர்த்த முடியாதுல்ல?

நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லை. படு காய்ச்சல். இந்தக் காய்ச்சல் ஊரின் குளிரினால் ஒட்டிக் கொண்டதில்லை. பெங்களூரில் ஓரிரு மாதங்களாகவே குளிர்தான். ஊரையே யாரோ ஒட்டுமொத்தமாக தூக்கி பனிப்பெட்டிக்குள் வைத்துவிட்டது போன்ற குளிர். இந்தக் காய்ச்சலுக்கு வேறொரு காரணம் இருக்கிறது. செவ்வாய்கிழமையன்று அலுவலகத்திற்குள் நுழைந்தவன் தான். வியாழன் மதியவாக்கில்தான் வெளியே வர முடிந்தது. ஐம்பது மணிநேரங்கள் உள்ளேயே கிடக்க வேண்டியதாகப் போய்விட்டது. ‘செண்ட்ரல் மினிஸ்டராலேயே முடியவில்லை’என்கிற ரேஞ்சில் உசுப்பேற்றியிருந்தார்கள். ‘நான் இருக்கேன்’ என்று சிக்கிக் கொண்டேன்.

நானும் எனது அடிப்பொடிகள் இரண்டு பேருமாக உரலுக்குள் தலையை விட்டுவிட்ட பிறகு ஒரு பக்கமாக அமெரிக்காக்காரன் நின்று கொண்டான்; இன்னொரு பக்கமாக ஜப்பான்காரன் நின்று கொண்டான். மாற்றி மாற்றி உலக்கையை வைத்து இடித்துக் கொண்டிருந்தார்கள். ஜப்பான்காரர்களுக்கு இரவு என்றால் அமெரிக்காக்காரனுக்கு பகல்; அமெரிக்காரனுக்கு இரவு என்றால் ஜப்பான்க்காரனுக்கு பகல். ஒருத்தன் பகல் முழுவதும் இடித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு இரவு ஆகும் போது அடுத்தவன் வந்துவிடுவான். ‘மாப்ள, இவனுக நல்ல பீஸூ, நீ இடிச்சுட்டு இரு. நான் போய் தூங்கிட்டு நாளைக்கு வந்துடுறேன்’ என்று உலக்கையை கைமாற்றிவிட்டுச் சென்றுவிடுவான். வந்தவன் தெளிவாக இடிப்பான். நமக்குத்தான் என்ன நடக்கிறது என்றே தெரியாது. தூக்கமும் இல்லை; நல்ல சோறும் இல்லை. எப்படித் தெரியும்?

அதுவும் இந்த அடிப்பொடிகள் இருக்கிறார்கள் பாருங்கள். சினிமா பார்த்து கெட்டழிந்த வர்க்கம்- ஒருத்தன் தமிழ்தான். பிரியாணி சாப்பிடலாம் என்றால் பீட்ஸாதான் வேண்டும் என்பார்கள். சப்பாத்தியோ தோசையோ அடிக்கலாம் என்றால் பர்கர்தான் வேண்டும் என்பார்கள். வீட்டில் கூட இரவு எதைத் தின்றாலும் அதன் மேலாக கொஞ்சம் ரசத்தோடு அல்லது தயிரோடு ஒன்றிரண்டு கவளங்களை உள்ளே தள்ளினால்தான் பசி அடங்கிய மாதிரி இருக்கும். ஆனால் இந்த பர்கரையும் பீட்ஸாவையும் என்னதான் தின்றாலும் பசி அடங்கியது மாதிரியே தெரிவதில்லை. ‘இத்துனூண்டு நூத்தம்பது ரூபாயா?’ என்ற நினைப்பிலேயே செரிமானம் ஆவதில்லை.

அதெல்லாம் கூட தொலையட்டும் என்று விட்டுவிடலாம். இந்த ஜெனிலியாவைப் பார்த்து சீரழிந்து கிடக்கிறார்கள் பாருங்கள். அதுதான் டூ மச். ஏதோ வேலையை செய்து கொண்டிருக்கும் போது- மணி இரவு ஒன்றரை இருக்கும் ‘சின்ன ரவுண்ட் போகலாமா’ என்றார்கள். அதுவும் நல்லதுதான். நடந்துவிட்டு வந்தால் தூக்கம் கலைந்து விடும். சரி என்று கிளம்பினால் வெளியே வந்தவுடன் நடுங்குகிறது. பற்களுக்கிடையில் வெள்ளைத்தாளை நீட்டினால் நினைத்ததையெல்லாம் தட்டச்சிக் கொள்ளலாம். டகடகடடகடடடக ஓசைதான். பற்களைக் கடித்துக் கொண்டே நடந்தால் அந்த நேரத்திலும் குஃல்பி விற்பவன் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஜெனிலியா குரூப்புக்கு வேண்டி சுற்றுகிறான் போலிருக்கிறது. எங்களுக்கு வாயும் கையும் சும்மா இருக்குமா? அவனுக்கு மூன்று குல்ஃபி விற்பனையாகிவிட்டது. அவ்வளவுதான். அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தொண்டை கமற, தும்மல் இரண்டு அடிக்க, மூக்கு சிவக்க எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா.

இது அத்தனையும் நடந்தது செவ்வாய்க்கிழமை இரவில். அடுத்த நாள் இதே நிலைமையில்தான் அலுவலகத்திற்குள் இருக்க வேண்டியிருந்தது. நிலைமை இன்னமும் கூட சீரியஸாகியிருந்தது. தலை கனத்திருந்தது. மூக்கடைப்பு. வேலையை பாதியில் விட்டு போக முடியாது. இடையில் அதை வேறொரு ஆள் எடுத்துச் செய்வது அத்தனை சுலபமில்லை. அதைவிடவும், உண்மையிலேயே அந்த வேலையைச் செய்வதில் ஒரு ‘த்ரில்’ இருந்தது. பிடிக்காமலோ அல்லது யாரோ சொன்னார்கள் என்பதற்காகவோ செய்யவில்லை. நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்மை நிரூபித்துவிட வேண்டும். தலையைச் சிலுப்பிக் கொண்டு கிடந்தேன். வாயைக் கட்டிக் கொண்டிருந்திருந்தால் வேலை மட்டும்தான் கவனத்தில் இருந்திருக்கும். குஃல்பிதான் வினை செய்துவிட்டது.

மிகச் சிக்கலான வேலைதான். மண்டை வலியை மீறி செய்தாகிவிட்டது. ‘யாரடி நீ மோகினி’ தனுஷ் மாதிரி. ஆனால் எங்கள் அலுவலகத்தில் நயன்தாராவெல்லாம் இல்லை. ஆல் இன் ஆல் கழுமுண்டராயன்ஸ்தான். வேலையை முடித்த பிறகு வியாழக்கிழமை வீட்டுக்கு வந்து அடித்து போட்டது போல தூங்கியிருக்கிறேன். விழித்துப் பார்த்த போது வெள்ளிக்கிழமை காலை ஏழு மணி ஆகியிருந்தது. ‘Appreciated' என்று ஒரு வரி மின்னஞ்சலை எக்ஸிகியூடிவ் டைரக்டர் அனுப்பியிருந்தார். அவ்வளவுதான். உற்சாகத்துக்கு பெட்ரோல் ஊற்றியாகிவிட்டது. வழக்கம் போல அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்தேன். 

‘இன்னைக்கு மகிக்கு ஆண்டு விழா. நீங்க வரலயா?’ இந்தக் கேள்வியை யார் கேட்பார்கள். அவரேதான்.

‘இல்லை...இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு..முடிச்சுட்டு வந்துடுறேன்’. 

வெள்ளிக்கிழமை பெரிய வேலை எதுவும் இல்லை. ஆனால் ஆண்டுவிழாவுக்கு போக வேண்டாம் என்றிருந்தது. முன்பொரு முறை அவர்களின் பள்ளிக்குச் சென்றிருந்தேன். பெற்றோர்கள் ஆளாளுக்கு கேமராவை எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். படம் எடுப்பதும், பெருமையடிப்பதுமாக ஒரே அலர்ஜியாக இருந்தது. மேடையில் நிற்கும் குழந்தைகளை நோக்கி ‘ம்ம்ம்...செய்..செய்’ என்பது மாதிரியான செய்ககளைச் செய்து கொண்டிருந்தார்கள். குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்கும் அவர்களின் மீதான நமது எதிர்பார்ப்பை சுமத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலானவர்கள் இரண்டாவதைத்தான் செய்கிறோம் என நினைக்கிறேன். நமது கண்கள் அவர்கள் மீது இருக்கின்றன என்பதை நம் குழந்தைகள் உணர்வதே கூட அவர்களுக்கு ஒருவிதமான அசெளரியம்தான். அவர்களை அவர்களாகவே விட்டுவிட்டால் நாம் எதிர்பார்ப்பதைவிடவும் அதிகமாக செய்துவிடுவார்கள் என நம்புகிறேன். 

மற்ற குழந்தைகளின் பெற்றவர்கள் நிகழ்ச்சியில் இருக்கும் போது நாம் மட்டும் இல்லையென்றால் நம் பையன் வருத்தப்பட மாட்டானா என்று யோசிக்கலாம்தான். ஆனால் ஓரிரு நிகழ்ச்சிக்கு அந்த எதிர்பார்ப்பு இருக்கக் கூடும். ஆனால் பழகிவிடும். உண்மையில் அது ஒருவிதமான சுதந்திரம் அவர்களுக்கு. பெற்றவர்கள் எப்பொழுதுமே பின்ணணியில் இருந்து உற்சாகப்படுத்தினால் போதும் என நினைக்கிறேன். 

‘பையன் ஃபங்ஷனுக்குக் கூட வராம வேலை அவ்வளவு முக்கியமா?’ அடுத்த கேள்வி விழுந்தது.

இந்தக் கேள்வியை எப்படி சமாளிப்பது என்று தெரியும். ‘சச்சின் டெண்டுல்கரோட அம்மா அவரோட கடைசி மேட்சை மட்டும்தான் க்ரவுண்டில் பார்த்தாங்க தெரியுமா? பையன் ஃப்ரீயா இருக்கட்டும்’ என்றேன். அதன் பிறகு பதிலைக் காணவில்லை.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று நினைத்திருக்கக் கூடும்.