சோழ மன்னர்கள் பற்றி சொல்வதற்கும் எழுதுவதற்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. வரி விதித்ததை மட்டும் எழுதி அவர்கள் ஏதோ கொடுங்கோல் ஆட்சி நடத்தியது போல் சித்தரிப்பது சரிதானா?
அய்யாசாமி.
***
***
அன்புள்ள அய்யாசாமி,
வணக்கம்
சோழர்களை கொடுங்கோலர்கள் என்று சொல்வது எனது நோக்கம் இல்லை. அப்படிச் சொல்ல்வும் முடியாது. சோழர்கள் பற்றிய குறிப்பை எழுதுவதற்கான ‘பேக்ரவுண்டை’ கொஞ்சம் கொடுத்துவிடுகிறேன்.
எங்கள் ஊரான கோபிச்செட்டிபாளையத்திற்கு முழுமையான வரலாறு என்று எதுவும் கண்ணில் பட்டதில்லை. அதை உருப்படியாகச் செய்துவிட வேண்டும் என்று நானும் குமணன் என்றொரு அண்ணனும் சில தகவல்களைத் திரட்டிய போது எங்கள் ஊரின் வயது அதிகபட்சம் இருநூறு ஆண்டுகள்தான் ஆகியிருக்கும் என்று தோன்றியது. இந்த இருநூறு ஆண்டுகளிலேயே எங்கள் ஊர் வளர்ந்து ‘டவுன்’ ஆகிவிட்டது. பிரதான சாலையில் ட்ராபிக் சிக்னல் வைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது என்றால் பாருங்கள்.
ஆனால் எங்கள் ஊரைச் சுற்றியிருக்கும் சிற்றூர்களான அளுக்குளி, குருமந்தூர், கலிங்கியம் போன்ற ஊர்கள் பல நூறாண்டு கால வரலாறு கொண்டவை. அந்தக்காலத்தில் இந்த ஊர்கள் கொங்குநாட்டில் முக்கியமான ஊர்களாக இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அவை மிகச் சிறிய ஊராட்சிகள். பெரிய மதிப்பில்லாத சிற்றூர்கள்.
ஓரிரு நூற்றாண்டுகளில் முக்கியமான ஊர்கள் சிற்றூர்களாக தேய்ந்ததும், மிகச் சமீபத்தில் உருவான ஊர்கள் ‘டவுன்’களானதும் எப்படி என்பது குறித்த வாசிப்புகளையும் தேடல்களையும் மேற்கொண்டால் வரலாறு ஒரு த்ரில் நாவலைப் போல மாறிவிடுகிறது.
இதே போலத்தான் அவிநாசிக்கும் நம்பியூருக்கும் இடையில் போத்தம்பாளையம் என்றொரு ஊர் இருக்கிறது. அங்கு ஒரு மிகச் சிறிய மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் இருக்கிறது. பழங்காலத்து கோயில் அது. இப்பொழுது கண்டுகொள்வார் யாருமில்லை. எதற்கு கொங்குதேசத்தில் மதுரையைப் போலவே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இருக்கிறது என்று தேடினால் ஒரு காலத்தில் கொங்குநாடு பாண்டியர்கள் வசமும் இருந்திருக்கிறது. பிறிதொரு சமயத்தில் சோழர்கள் வசமும் இருந்திருக்கிறது.
இப்படியே நூல் பிடித்துப் போய்த்தான் சோழர்களின் வரலாறு பற்றி ஓரளவுக்கு விரிவான வாசிப்பை நிகழ்த்தியிருக்கிறேன். சோழர்களின் வரலாறு மீது எப்பொழுதுமே எனக்கு விருப்பம் உண்டு. கோவைக்கிழார் என்றழைக்கப்பட்ட கோ.ம.ராமச்சந்திரன் செட்டியார் எழுதிய கொங்குச் சோழர்கள்(கொங்குச் சோழர்களும், தஞ்சையை ஆண்ட விஜயாலய சோழனின் வம்சமும் ஒன்றில்லை என்பது கோவைக்கிழாரின் முடிவு) என்ற பகுதியை கிட்டத்தட்ட மனனமாகச் சொல்லத் தெரியும்.
இந்த பிண்ணனியில்தான் சோழர்களின் வரிவிதிப்பு பற்றிய குறிப்பை எழுதியிருந்தேன்.
சோழர்களின் காலத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குடவோலை முறை பற்றியும், தஞ்சை பெரிய கோவில் பற்றியும், கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் நமது பள்ளிப்பருவத்தின் வரலாற்று நூல்களில் வாசித்திருப்போம். அவையெல்லாம் பாஸிடிவ். ஆனால் சோழர்களின் காலத்தில் நிகழ்ந்த எதிர்மறை நிகழ்வுகளை நமது பாடப்புத்தகங்களில் எந்தக் காலத்திலும் எழுத பிரசுரம் செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
வர்ணாசிரம முறை காலூன்றியதும், சார்புத்தன்மையுடைய வரிவிதிப்பு முறை இருந்ததும் சோழர்களின் காலத்தில்தான்.
நமது பண்பாடும், சமூக அமைப்பும் இன்றைய வடிவத்திற்கு எப்படி வந்தன என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமானால் சோழர்களை தவிர்த்துவிட்டு தமிழகத்தின் வரலாற்றை நம்மால் அணுக முடியாது. சோழர்களின் காலமான கி.பி 900 முதல் கி.பி.1300 வரை என்பது நமது வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டம். தமிழர்களின் இலக்கியம், சிற்பக்கலை, இசை, ஆடற்கலை, கட்டடக்கலை, ஆட்சிமுறை என அத்தனையும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது இந்தக் காலகட்டத்தில்தான்.
இந்த காலகட்டத்தின் சாதனைகளை மட்டும் பாராமல் அதன் முழுமையான பரிமாணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இந்த பெரும் ஆசையின் ஒரு துளிதான் நேற்று எழுதிய குறிப்பு. மற்றபடி, சோழர்களைப் பற்றி முழுமையாக ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியுமா என்ன? தொடர்ந்து அவ்வப்போது பேசலாம்.