புத்தகங்களுக்கான மார்க்கெட்டிங் குறித்து ஒன்றரை பத்தி எழுதியதற்கு பொங்கி பிரவாகம் எடுத்துவிட்டார்கள் புகழ்பெற்ற எழுத்தாளப் பெருமக்கள். அந்த வரிகளை எழுதும் போது யாரையும் குறிப்பாக குறி வைக்கவில்லை. ஆனால் யாருக்கெல்லாம் குத்தியதோ அவர்கள் எல்லோரும் கத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. அது சரி. நெஞ்சு குறுகுறுக்கும்தானே? இவர்களின் விளம்பர யுக்திகள் பற்றியெல்லாம் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எம்.வி.வி பற்றி வாசிக்கும் போது இப்படியும் கூட எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தோன்றியது. மனம் ஒரு குரங்கு. ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளும் போது அதற்கு முற்றும் எதிரான இன்னொரு விஷயத்தை தேடுகிறது. அப்படித் தேடியதால்தான் அந்த ஒன்றரை பத்தி. சில பேர்களின் வயிற்றெரிச்சலை வாரிக் கொட்டியாகிவிட்டது.
அவர்கள் எப்படியோ போகட்டும். எம்.வி.வி மாதிரியான ஆட்கள் இந்தக் காலத்தில் இல்லையா என்று கேட்டால் ‘இல்லை’ என்றெல்லாம் சொல்ல முடியாது. ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ தொகுப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அட்டகாசமன கவிதைத் தொகுப்பு. சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது இந்த வருடம் அந்தத் தொகுப்புக்குத்தான் கிடைத்திருக்கிறது. எழுதிய கதிர்பாரதி அலட்டிக் கொண்டிருக்கிறாரா என்ன?
இசை, இளங்கோ கிருஷ்ணன், கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், நரன் என்று இளம் எழுத்தாளர்களின் பெரும்பட்டியலை நீட்டிவிடலாம். இது ஒரு சாம்பிள் பட்டியல்தான். இப்படியான எழுத்தாளர்கள் சிறு வட்டத்தைத் தாண்டி தங்களை எந்தவிதத்திலும் வெளிப்படுத்திக் கொள்ளாத எழுத்தாளர்கள். ஆனால் சலிப்பில்லாமல் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைக்கு இல்லாவிட்டாலும் ஏதாவதொரு காலத்தில் ஒரு வாசகன் தங்களைப் பற்றி பேசுவான் என்று நம்பிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் இவர்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களின் நம்பிக்கை எந்தவிதத்திலும் பொய்க்காது.
இன்றைக்கும் ந.பிச்சமூர்த்தி பற்றி யாராவது பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; இன்றைக்கும் கரிச்சான் குஞ்சுவையும், கோபிகிருஷ்ணனையும், தஞ்சை பிரகாஷையும் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடுங்கள்.
இந்த ‘கச்சடா’ பற்றி நிறைய பேசலாம். சினிமாவையும், புத்தகத்தையும் ஒப்பிடுவதில் இருக்கும் அபத்தங்கள், ‘விளம்பரம் செய்து கொள்ளாத எழுத்தாளனின் புத்தகங்கள் விற்பதேயில்லை’ என்பதில் இருக்கும் நகைச்சுவை ஆகியன குறித்தெல்லாம் பேசலாம். ஆனால் பேசி என்ன பயன்? இவன் ஒன்றுக்கடித்துவிட்டு போகிறான் என்று எழுதிய அதே கைகள் சுயமைதுனம் செய்கிறான் என்று அடுத்த முறை எழுதும். யாருக்கு என்ன இலாபம்? விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாத வேறு எதையாவது பேசலாம்.
சோழர்களின் வரலாறு குறித்த ஒரு புத்தகம் கிடைத்தது.
தமிழக அரசு வெளியிட்ட புத்தகம் இது. விஜயாலய சோழனின் காலம் ஆரம்பித்து மூன்றாம் இராஜேந்தி சோழன் காலம் வரையிலான நானூறு ஆண்டுகளின் வரலாற்றுத் தொகுப்பு இது. கி.பி.848 ஆம் ஆண்டு முதல் 1279 வரை. கிட்டத்தட்ட நானூறு வருடங்கள். அதற்கு முன்பு சங்ககாலத்திலிருந்தே சோழர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சங்ககாலத்திற்கு பிறகு கி.பி.848 வரைக்குமான காலத்தின் வரலாறு எதுவும் கிடைக்கவில்லை. ‘இருண்ட காலம்’ என்கிறார்கள்.
தமிழக அரசு வெளியிட்ட புத்தகம் இது. விஜயாலய சோழனின் காலம் ஆரம்பித்து மூன்றாம் இராஜேந்தி சோழன் காலம் வரையிலான நானூறு ஆண்டுகளின் வரலாற்றுத் தொகுப்பு இது. கி.பி.848 ஆம் ஆண்டு முதல் 1279 வரை. கிட்டத்தட்ட நானூறு வருடங்கள். அதற்கு முன்பு சங்ககாலத்திலிருந்தே சோழர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சங்ககாலத்திற்கு பிறகு கி.பி.848 வரைக்குமான காலத்தின் வரலாறு எதுவும் கிடைக்கவில்லை. ‘இருண்ட காலம்’ என்கிறார்கள்.
கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்து காலவரிசைப்படி வாசிக்க முடிந்தால் வரலாறு போல இண்ட்ரஸ்டிங் சப்ஜெக்ட் வேறு இருக்க முடியாது என நினைக்கிறேன்.
இந்த நானூறு வருடங்களில்தான் நமது ஒட்டுமொத்த கலாச்சாரமும் மாற்றியமைப்பட்டிருக்கிறது என நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம். சோழ மன்னர்கள் வடநாட்டுக்குச் சென்று வென்று வந்ததில் ஆரம்பித்து கடல்கடந்த போர்கள், கட்டிய கோவில்கள், கங்கைக் கரையில் வாழ்ந்த பிராமணர்களை சோழ நாட்டிற்கு அழைத்து வந்தது, ஈழத்தை வென்றது, மாலத்தீவை இணைத்தது என சகலமும் இந்தக் காலகட்டத்தில்தான் நடந்திருக்கிறது.
சோழர் காலத்தில் பிராமணர்கள், அரசகுடும்பத்தினர் மற்றும் பெரும் தலைவர்களின் குடும்பங்களுக்கு மட்டும்தான் சுட்ட ஓடுகளால் வேயப்பட்ட வீடுகள். மற்றவர்களுக்கு எல்லாம் குடிசைதான். அதெல்லாம் கூட சரிதான். அவர்களின் காலத்தில் எதற்கெல்லாம் வரி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால்தான் நடுங்குகிறது.
விவசாயிகளுக்குத்தான் ஏகப்பட்ட வரிகள் என்றால் தொழில் வரிகளும் தாறுமாறு. நெசவாளர்களுக்கு ‘தறிக்கூறை’, எண்ணெய் ஆட்டுபவர்களுக்கு ‘செக்குக் கடமை’, குயவர்களுக்கு ‘குசக்காணம்’ என எல்லோருக்கும் வரி என்றால் வண்ணார், நாவிதர்கள் கூட தப்பவில்லை. துவைப்பவன் பாறைக்கு வரி கட்ட வேண்டும்; சிரைப்பவன் கத்திக்கு வரி கட்ட வேண்டும். அது போக உப்புக்கு வரி, ஓடம் தயாரிப்பவனுக்கு வரி என்று ஒவ்வொன்றுக்குமே வரி உண்டு. பிழிந்து எடுத்திருக்கிறார்கள்.
பிறகு ஏன் அத்தனை கோவில்களைக் கட்ட முடியாது?
இந்த வரிப் பணத்தில் மட்டும்தான் கோவில்களைக் கட்டினார்கள் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பணமும் அந்தக் கட்டடங்களில் ஒட்டியிருக்கிறது என்பதுதான் உண்மை.