Dec 12, 2013

அம்மா என்றால் எப்பொழுதுமே தெய்வீகமா?

அம்மா- மகனுக்கு இடையே கடும் பிரச்சினை நிலவுகிறது. இவனோடு அவள் எப்பொழுதுமே முறைத்துக் கொண்டு நிற்கிறாள். ஆபாசமாகவும் திட்டுகிறாள். இப்பொழுது அப்பா உயிரோடு இல்லை. ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே போய்ச் சேர்ந்துவிட்டார். ஆனால் போவதற்கு முன்பாக பெண்கள் ஐந்தும் ஆண்கள் ஐந்துமாக பத்து பிள்ளைகளுக்கு வதவதவென வழி செய்துவிட்டார். அவர் உயிரோடு இருக்கும் போது அம்மா-அப்பாவுக்கு இடையில் கடும் சண்டை நடைபெறும். அவர் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிப்பார். இவள் பற்களை கறுவிக் கொண்டு அவரைப் கடித்து வைத்துவிடுவாள். உடலின் இந்தப் பாகம்தான் என்றில்லை. பற்களுக்கு எது சிக்குகிறதோ அதில் கடி விழும். அதற்கு வாகான பற்கள் அம்மாவுக்கு உண்டு- முன்பற்கள் துருத்திக் கொண்டு நிற்கும்.

அப்பா இருக்கும் வரையில் எலி மாதிரிதான் இருந்தாள். சற்றேனும் பயம் இருந்தது. ஆனால் அவர் ரத்தவாந்தியெடுத்து போய்ச் சேர்ந்த பிறகு இவள் பெருச்சாளி ஆகி பிறகு ராட்சசியும் ஆகிவிட்டாள். தான் பெற்ற பிள்ளைகள் எல்லாரும் தனக்கு சம்பாதித்து போட வேண்டும் என நினைக்கிறாள். பிள்ளைகள் சிக்கிக் கொண்டார்கள். மூன்று பெண்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவன் தான் கடன்பட்டு அவர்களது திருமணத்தை செய்து வைத்தான். இன்னும் இரண்டு பெண்கள் மிச்சமிருக்கிறார்கள்.

மற்ற பையன்கள் யாரும் வீட்டில் தங்குவதில்லை. வெளியே வேலைக்கு போகிறார்கள். அவ்வப்போது அம்மாவுக்கு காசு கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் இவன் வெளியில் தங்குவதில்லை. அம்மாவோடுதான் தங்கியிருக்கிறான். இன்னும் இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டிய பொறுப்பை இவன் எடுத்துக் கொண்டான். அதுதான் பிரச்சினை. வீட்டோடு தங்க வேண்டியதாகிவிட்டது. அதனால் அம்மாவிடம் சிக்கிக் கொண்டான். கிட்டத்தட்ட சகதி மாதிரிதான். தப்பிக்க முடியாத சகதி.

பெரும்பாலும் அம்மா என்றால் தெய்வம், புனிதம் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? ஆனால் அது எல்லாச் சூழலிலும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை அல்லவா? அப்படித்தான் இங்கு- எதிர்மறையான அம்மா. ஆபாசம், வன்முறை, பொறாமை, வயிற்றெரிச்சல் ஆகியவைகளால் நிறைந்த உருவம். அவனது வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்- பீடை, ராட்சசி. அவ்வளவு ஏன்? விடியும் போது அவள் முகத்தில் விழிக்கக் கூட இவன் விரும்புவதில்லை- இதையெல்லாம் கதைகளில் துல்லியமாகச் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் ரசாபாசம் ஆகிவிடும். ஆனால் எம்.வி.வி யிடம் இந்தத் திறமை உண்டு. 

கதையைப் பற்றி இதற்குமேல் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். சிறுகதைதான். பைத்தியக்காரப்பிள்ளை என்ற அந்தக் கதையை வாசித்துப் பாருங்கள்.

கதையோ, நாவலோ, கவிதையோ- எழுதியவரைப் பற்றி தெரிந்து கொள்வது ஒருவித சந்தோஷத்தை தருமல்லவா? அப்படித்தான் எம்.வி.வி பற்றித் தெரிந்து கொள்வதும். அவரது சில சிறுகதைகள் கைவசம் இருந்தன. சில நாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. மனிதர்களின் மனவோட்டத்தை தெளிவாகக் கதைப்படுத்தும் அத்தனை இயல்பான எழுத்து அது.

எம்.வி.வி 1920-ல் பிறந்துவிட்டார். கும்பகோணத்தில் செளராஷ்ட்ரா குடும்பம். அம்மா, அப்பாவுக்கு கடும் வறுமை. ஏதோ காரணங்களால் எம்.வி.வியின் சொந்த அத்தை மாமாவுக்கு தத்துக் கொடுத்துவிட்டார்கள். அங்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. என்னதான் சொத்து இருந்தாலும், என்னதான் சொந்தமாக இருந்தாலும் அவர்களை அம்மா அப்பா என்று அழைக்க இவருக்கு வாய் வரவில்லை. அத்தையும் மாமாவும் தண்டிக்கிறார்கள். அனேகமாக இது அவரை மனதளவில் பாதித்திருக்கும் போலிருக்கிறது.

பிறகு படித்து பி.ஏ முடிக்கிறார். அந்தக் காலத்திய டிகிரி. எல்லாம் சரியாக இருந்திருந்தால் நல்ல உத்தியோகத்தில் சேர்ந்து செட்டில் ஆகியிருக்கக் கூடும். ஆனால் இவருக்கு எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம். பட்டு நெசவை சொந்தமாகச் செய்கிறார். எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவோடு சேர்ந்து ஏதோ ஒரு சிற்றிதழ் நடத்தினாராம். கடும் நஷ்டம். நஷ்டமென்றால் அந்தக் காலத்திலேயே முப்பதாயிரம் ரூபாய். அதோடு சரி. மீள முடியாத கடன். தொழிலும் முடங்கிவிடுகிறது. அதன் பிறகு தனது வாழ்வின் இறுதி வரையிலும் வறுமைதான். 

இந்தக் காலகட்டத்தில் எம்.வி.விக்கு ஒரு பிரச்சினை வருகிறது. தனது காதில் யாரோ ஆபாசமாக பேசுவது போல கேட்கத் தொடங்கியதாம். தனது காதுக்குள் யாரோ அமர்ந்திருப்பது போன்றே பிரமை அவருக்கு. ஒருவகையான மனநலம் சார்ந்த பிரச்சினை போலிருக்கிறது. இந்தப் பிரச்சினையை வைத்து அவர் எழுதிய நாவலான ‘காதுகள்’. இந்த நாவல் சாகித்ய அகாதெமி விருது வாங்கிருக்கிறது. அந்த நாவலுக்கு இன்னொரு சுவாரசியமான கதை இருக்கிறது. தனது கையெழுத்து பிரதியை ஒரு அச்சகத்தில் கொடுத்து வைக்க ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகும் புத்தகமாக வெளிவராமல் காணாமலே போய்விட்டதாம். பிறகு அதை கண்டுபிடித்து அன்னம் பதிப்பகத்தின் வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதுதான் விருது வாங்கியிருக்கிறது. இப்பொழுது இந்தப் புத்தகம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

எம்.வி.வி போன்றவர்களிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது. 

எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் அவற்றிற்குரிய அளவான மரியாதையைக் கொடுத்தால் போதும். அதீத ஆர்வத்தினால் எழுத்துக்காக நம் வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்ள வேண்டியதில்லை. எம்.வி.வி போன்றவர்கள் எழுத்துக்காக தங்கள் வாழ்க்கையைத் துறந்தவர்கள். எந்த படைப்பாளியையும் இந்தச் சமூகம் அவனது எழுத்துக்காக தூக்கி கொண்டாடிவிடப் போவதில்லை. குடும்பமும், வாழ்க்கையும் மிக முக்கியம். அதைத் தாண்டி நேரமும் வாய்ப்பும் இருந்தால் எழுத்தையும் இலக்கியத்தையும் தொடரலாம். 

அதைவிடவும் முக்கியமாக வாசகர்கள், விமர்சகர்கள் பற்றி எம்.வி.வி சொல்லியிருப்பது-

“வாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக்கியப் படைப்பாளி நான். என்னைப் புரிந்துகொண்டு, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, என் படைப்புகளைச் சுவைத்துப் போற்றுகிற ரசிகர்களை நான் போற்றுகிறேன். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப்பணி வளரவில்லை. ஒரு சில ரசிகர்களால் என் படைப்பாற்றல் வலுப்பெறுகிறது.” என்று தனது சாகித்ய அகாதெமி விருது ஏற்புரையில் பேசியிருக்கிறார். 

இந்த ஒரு பத்தி போதும். வாசித்தவுடன் மிக ஆசுவாசமாக இருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு முப்பது பக்கங்கள் எழுதிய மனிதர் அவர். அவரே அமைதியாக இருந்திருக்கிறார். எந்த அலட்டலும் இல்லை. எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்பது பற்றிய கவலை இல்லை. ‘எனக்கு பிடிக்கிறது. எழுதுகிறேன். உங்களுக்கு பிடித்தால் வாசியுங்கள். இல்லையென்றாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்று இருந்திருக்கிறார்.

ஆனால் இப்பொழுது பாருங்கள். 

அதுவும் புத்தகக் கண்காட்சிக்கு முந்தைய நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்தால் போதும். இரண்டே முக்கால் பக்கம் எழுதியவர்கள் எல்லாம் பதட்டப்படத் தொடங்கிவிடுகிறோம். பேனர் கட்டுகிறோம், கொடி பிடிக்கிறோம், கூட்டம் சேர்க்கிறோம். நமது புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்றுவிட வேண்டும் என்றும். நமது எழுத்துக்கு நூறாயிரம் விசில்கள் காதுகளைக் கிழிக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனைக் குதிரைகள் றெக்கை கட்டத் தொடங்கிவிடுங்கின்றன. பிப்ரவரிக்கு மேல் பாருங்கள்- ஒரு சத்தம் இருக்காது. அமைதியாகிவிடுவோம். புத்தகக்கண்காட்சி கலாச்சாரம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்குகிறதோ இல்லையோ- எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களின் மார்கெட்டிங் திறமையை வளர்த்துவிடுகிறது. இதையெல்லாம் குறை சொல்ல நான் மட்டும் யோக்கியமா? விடுங்கள். கற்றுக் கொள்வதற்காகவேனும் மூத்த படைப்பாளிகளின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எழுத்துக்காக வாழ்ந்தவர்கள் மார்கெட்டிங் பற்றி கவலைப்படவில்லை. மார்கெட்டிங்குக்காக எழுதுகிறவர்கள் எழுத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.