Dec 11, 2013

பூட்ஸ்கால் மிதிக்கு தப்பித்த மூட்டைப்பூச்சி

இன்று அலுவலகத்திற்குச் செல்லவில்லை. கண்ணில் ஏதோ உறுத்தல். மெட்ராஸ் ஐ போலிருக்கிறது. வீட்டிலேயே இருந்துகொண்டேன். பொழுது போக வேண்டும் இல்லையா? டெல்லியில் யார் ஆட்சியமைக்கிறார்கள் என்று துழாவிக் கொண்டிருந்த போது இந்தப் படம் கண்ணில் பட்டது. ஏதோ ஒரு போராட்டம் இது. டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடந்த போராட்டம். வியர்வை வழிய அர்விந்த் கேஜ்ரிவாலை கைத்தாங்கலாக இழுத்து வருகிறார்கள். நைந்து போய் கிடக்கிறார்.

இப்பொழுது அர்விந்த் கேஜ்ரிவால் மீது ஆயிரத்தெட்டு விமர்சனங்களை வைக்கிறார்கள்.
  • அவரது கட்சிக்கு வெளிநாட்டு நிதி குவிகிறது
  • ஏதோ ஒரு பெரும்கட்சியின் பினாமியாக செயல்படுகிறார்
  • மத்திய தர மக்களை மட்டுமே குறி வைத்துச் செயல்படும் ‘முதல்வன்’ பட பாணி அரசியல்வாதி
  • தீவிரமான பிரச்சினைகளான சாதி, வறுமை போன்றவற்றை பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை
  • போலியான செயற்பாட்டாளர் (Pseudo activist)
  • etc., etc.,
அவர் மீதான  இத்தகைய விமர்சனங்களை பட்டியல் எடுத்தால் அது நீண்டு கொண்டே போகும் என நினைக்கிறேன். 

இதுவரைக்கும் அர்விந்த் கேஜரிவால் பற்றியும், ஆம் ஆத்மி பற்றியும் எந்தவிதமான பிம்பத்தையும் உருவாக்கிக் கொள்ள முடிந்ததில்லை. தென்னிந்தியாவில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இதுதான் நிலைமையாக இருக்கக் கூடும். என்னிடம் கேள்வி கேட்டால் ஒபாமாவின் குடியரசுக் கட்சி பற்றி சொல்ல முடியும் அளவுக்குக் கூட ஆம் ஆத்மி பற்றிச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை.

பெங்களூரிலும், தமிழ்நாட்டிலும் கேஜ்ரிவால் பற்றியும், ஆம் ஆத்மி பற்றியும் பெரிய செய்தி எதுவும் வந்ததாக ஞாபகம் இல்லை. எதற்கு செய்தி வரப் போகிறது? அண்ணா ஹசாரே போன்று இவரையும் வெற்றுச் சவடால் என்றுதானே நினைத்திருந்தோம். அப்படியே துடப்பத்தை தூக்கிக் கொண்டு டெல்லியில் களமிறங்கிய போதும் ஜெயிப்பார் என்றும் நினைத்திருக்க மாட்டோம். தேர்தலுக்கு முந்தைய ஷீலா தீட்சித்தின் நேர்காணலை வாசித்துப் பார்க்க வேண்டும். ‘யார் இந்த அர்விந்த் கேஜ்ரிவால்? அவரது கட்சியை நீங்கள் எப்படி காங்கிரஸுடனும், பா.ஜவுடன் ஒப்பிடலாம்?’ என்று ஒரு மூட்டைப் பூச்சி ரேஞ்சில் வைத்துத்தான் பேசியிருந்தார். அதே மனநிலைதானே நம் பெரும்பாலானோருக்கும்?

இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. டெல்லியில் வென்றுவிட்டார்கள். தன்னை சிங்கம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஷீலா தீட்சித்தை அவரது குகையிலேயே தோற்கடித்து மூக்கை உடைத்திருக்கிறது இந்த மூட்டை பூச்சி. அடுத்த நாள் கிட்டத்தட்ட அத்தனை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியும் இந்த மூட்டைப் பூச்சியைப் பற்றித்தான் இருந்தது. ஒவ்வொரு செய்திச் சேனல்களிலும் குல்லா அணிந்த கேஜ்ரிவாலைத்தான் காட்டிக் கொண்டிருந்தார்கள். 

இது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. இரு பெரும் கட்சிகளுடன் சரிக்குச் சமமாக மல்லுக்கட்டியிருக்கிறார். தனது இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் பதவியை துறந்துவிட்டு துடப்பத்தை ஏந்திய மனிதருக்கு சரியான அங்கீகாரத்தை மக்கள் கொடுத்துவிட்டார்கள். 

இந்த வெற்றி சர்வசாதாரணமாக வந்தது என்று சொல்லிவிட முடியாது. அர்விந்த் கேஜ்ரிவாலிடம் சிறந்த டீம் ஒன்று இருக்கிறது. திட்டமிடுதலில் இருந்து செயல்படுத்துவது வரை ஒவ்வொரு வேலையையும்  professional ஆகச் செய்யக் கூடிய டீம் அது. ஆளாளுக்கு வேலையை பிரித்துக் கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள். டீம் வொர்க். இந்த நல்ல டீமை சரியாகப் பயன்படுத்தி தங்களுக்கான வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

வெற்றி இருக்கட்டும். வெற்றி மட்டுமே நல்ல ஆட்சியாளர்களை உருவாக்கிவிடுவதில்லை. அசாமில் பிரஃபுல குமார் மஹந்தா 1985 ஆண்டில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட போது அவருக்கு வயது முப்பத்தியிரண்டு வயதுதான். மாணவராக இருந்த போது தான் தலைமையேற்று நடத்திய போராட்டத்தின் வழியாக ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் ஒரு போதும் வெற்றிகரமான ஆட்சியாளராக இருக்க முடிந்ததில்லை. மஹந்தாவுடன் ஒப்பிட வேண்டியதில்லைதான் என்றாலும் இருவருமே தங்களின் போராட்டக் குணத்தால் மக்களின் பேராதரவினால் தேர்தலில் வென்றவர்கள். கேஜ்ரிவாலும் மஹந்தாவைப் போல தோல்வியுற்ற ஆட்சியாளர் ஆகிவிடக் கூடாது என விரும்புகிறேன்.

அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சியினர் பாராளுமன்றத் தேர்தலிலும் கால் வைக்கப் போகிறோம் என்று சொல்லியிருப்பது மோடியின் ஆதரவாளர்களுக்குத்தான் வயிற்றில் புளியைக் கரைக்கும். காங்கிரஸின் எதிர்ப்பு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றுவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தவர்களுக்கு இது அடிதான். கணிசமான anti-congress வாக்குகள் ஆம் ஆத்மிக்குச் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியைப் போலவே தொங்கு பாராளுமன்றத்திற்கு வழி கோலினால் அதுதான் பிரச்சினை. மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி என்ற பெயரில் மீண்டும் காங்கிரஸ் வந்து தொலைந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஆனால் அரசியல் கணக்குகளை விட முக்கியமானதாகத் தெரிவது- மூன்றாவது சக்தி என்பதுதான். காங்கிரஸை விட்டால் பா.ஜ.கதான் அல்லது பா.ஜ.கவைவிட்டால் காங்கிரஸ்தான் என்ற Bi-polar நிலைமையை ஆம் ஆத்மி கட்சியினால் தகர்க்க முடியும் என்றால் அது முக்கியமான விஷயம். மோடிXராகுல் தாண்டி இன்னொரு முகத்தை நம்மால் பார்க்க முடியும் என்றால் அது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் தேசிய அளவில் மூன்றாவது முகமாக உருவெடுப்பது ஒன்றும் அத்தனை சுலபமான காரியமாகத் தெரியவில்லை. பழம் தின்று கொட்டை போட்ட பெருசுகள் இவர் போன்ற மூட்டைப் பூச்சிகளை அவ்வளவு சீக்கிரம் நிலைபெற்றுவிட விடமாட்டார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது பூட்ஸ் கால்களால் நசுக்கவே முயற்சிப்பார்கள். சரி அது அவர்கள் பாடு. Survival of the fittest தானே! 

இந்தப்படத்தை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்குத் தோன்றியதை ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன்.

“நமக்கு விழும் ஒவ்வொரு அடிக்கும் வெகுவிரைவிலேயே காலம் பதில் சொல்லிவிடும். ஆனால் அந்த பதிலை பெற்றுக் கொள்வதற்கான தகுதியை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்”

கேஜ்ரிவால் தகுதியை உருவாக்கிக் கொண்டார் ஆனால் தக்கவைத்துக் கொள்வாரா என்று எதிர்பார்க்கிறேன்.